Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | நிர்வாகம் - விஜயநகர அரசுகள்

வரலாறு - நிர்வாகம் - விஜயநகர அரசுகள் | 11th History : Chapter 12 : Bahmani and Vijayanagar Kingdoms

   Posted On :  18.05.2022 05:45 am

11 வது வகுப்பு வரலாறு : அலகு 12 : பாமினி மற்றும் விஜயநகர அரசுகள்

நிர்வாகம் - விஜயநகர அரசுகள்

அரசரே அனைத்து அதிகாரங்களையும் பெற்றவராவார். அவரே படைத்தளபதியும் ஆவார்.

நிர்வாகம்

அரசரே அனைத்து அதிகாரங்களையும் பெற்றவராவார். அவரே படைத்தளபதியும் ஆவார். அவருக்குப் பல உயர்மட்ட அதிகாரிகள் உதவி செய்தனர். முதலமைச்சர் மகாபிரதானி என்றழைக்கப்பட்டார். தளவாய் (தளபதி), வாசல் (அரண்மனைப் பாதுகாவலர்), ராயசம் (செயலர் கணக்கர்), அடைப்பம் (தனி உதவியாளர்), காரிய கர்த்தா (செயல் முகவர்) போன்ற கீழ்நிலை அதிகாரிகளுக்கு இவரே தலைமையாவார். முதலாம் ஹரிஹரரும் அவரைத் தொடர்ந்து ஆட்சி செய்தவர்களும் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை ஒருங்கிணைத்து அவற்றில் நிர்வாக அமைப்புகளை உருவாக்க முயன்றனர். ராஜ்யா என்னும் மண்டலங்களாக நாடு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு ராஜ்யத்திற்கும் ஒரு பிரதானி (ஆளுநர்) நியமிக்கப்பட்டார். ஹொய்சாள, ராஜ்யா, அரகா, பரகூர், மங்களூர், முளுவாய் ஆகியன முக்கியமான ராஜ்யாக்களாகும். புதிய பகுதிகள் கைப்பற்றப்பட்டு இணைக்கப்பட்ட போது புதிய ராஜ்யாக்கள் உருவாயின. 1400இல் தமிழகப் பகுதிகளில் சந்திரகிரி, படைவீடு, வலுதலம்பட்டு, திருச்சிராப்பள்ளி, திருவாரூர் என ஐந்து ராஜ்யங்கள் இருந்தன. பிரதானி அரசவை உறுப்பினராகவோ அல்லது ராணுவ அதிகாரியாகவோ இருப்பார். இவர் அரச குடும்பத்திற்கு உறவினர் அல்ல. நிர்வாகத்தில் அவருக்கு உதவி செய்யக் கணக்கர்களும் ராணுவ அதிகாரிகளும் பணியமர்த்தப்பட்டிருந்தனர். ஒவ்வொரு ராஜ்யமும் நாடு, சீமை, ஸ்தலம், கம்பனா எனும் சிறிய நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. மிகச்சிறிய நிர்வாக அலகு கிராமமாகும். துளுவ வம்சத்தைச் சேர்ந்த கிருஷ்ணதேவராயரால் நாயக்கர் முறை அறிமுகமானபோது ராஜ்யங்கள் தங்களது நிர்வாக, வருவாய் முக்கியத்துவத்தை இழந்தன.

நாயக்க முறை

நாயக்க என்னும் சொல் தெலுங்கு, கன்னடப் பகுதிகளில் பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இராணுவத்தலைவர், அல்லது இராணுவவீரர் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டில் காகத்திய அரசில் ஒரு நாயக்கின் இராணுவ சேவைக்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட பகுதியின் வருவாயை வழங்கும் முறை நடைமுறையில் இருந்தது. இது தில்லி சுல்தானியத்தில் பின்பற்றப்பட்ட இக்தா முறையைப் போன்றதாகும். ஆனால் விஜயநகர அரசில் இராணுவ சேவைக்குப் பதிலாக வருவாய் ஈட்டித்தரும் நிலப்பகுதிகளை வழங்கும் முறை 1500 அல்லது அதற்குச் சற்று முன்னதாகவே தொடங்கிற்று. கல்வெட்டுகள் இம்முறையைத் தமிழில் நாயக்கட்டணம் எனவும், நாயக்தானம் என கன்னடத்திலும், நாயன்கரமு எனத் தெலுங்கிலும் குறிப்பிடுகின்றன. இம்முறையானது கிருஷ்ணதேவராயர், அச்சுததேவராயர் ஆகியோரின் ஆட்சியின் போது நிறுவன வடிவம் பெற்றது.

கல்வெட்டுச் சான்றுகளும் நூனிஸ், பயஸ் போன்ற வெளிநாட்டவரின் பயணக் குறிப்புகளும் இதை உறுதி செய்கின்றன. விஜயநகர அரசு இருநூறுக்கும் மேற்பட்ட நாயக்குகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததாகவும் அந்நாயக்குகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் குதிரை, காலாட்படை வீரர்களைப் பராமரித்து தேவைப்படும் நேரத்தில் அரசருக்கு இராணுவச் சேவை செய்ய வற்புறுத்தப்பட்டார்கள் எனவும் நூனிஸ் குறிப்பிடுகின்றார். மேலும் அவர்கள் ஒவ்வொரு ஆண்டிலும் சில குறிப்பிட்ட ஒன்பது நாள் இராம நவமித் திருவிழா போன்ற சமயங்களில் அரசருக்குக் குறிப்பிட்ட அளவு வருவாயை வழங்க வேண்டும். நூனிஸின் கூற்றைராயவாசகமுஎன்னும் தெலுங்கு நூல் உறுதிப்படுத்துகிறது. இந்நூல் கிருஷ்ணதேவராயரின் காலத்தில் இம்முறை நடைமுறையில் இருந்ததைக் கூறுகிறது. பிற்காலத்தைச் சேர்ந்த பாளையக்காரர்களின் வம்சாவளிகள் (அவர்களில் பெரும்பாலோர் பழைய நாயக்கர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்) இந்நாயக்க முறையானது கிருஷ்ணதேவராயர் காலத்தில் நிறைவு பெற்றது எனக் குறிப்பிடுகின்றன. பெரும்பாலான நாயக்கர்கள் கன்னடம், தெலுங்கு பேசுபவர்கள். இவர்கள் போர்த்தளபதிகளாகவும் இருந்தனர். உள்ளூர்த் தலைவர்களாகவும் பணியமர்த்தப்பட்டிருந்தனர். நாயக்குகள் பிராமண, பிராமணர் அல்லாத பல சாதிகளைச் சேர்ந்தவர்களாயிருந்தனர். பிராமணரல்லாத நாயக்குகள் பல்வேறு சமூகப் பின்னணியைக் கொண்டிருந்தனர். போர்புரியும் மரபினைச் சார்ந்தவர்களாகவும், மேய்ச்சல் தொழில் செய்பவர்களாகவும், வனங்களில் வாழும் குலத்தோராகவும் (யாதவர், பில்லமர்), விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்களாகவும் (ரெட்டி) வணிகர்களாகவும் (பலிஜா) இருந்தனர். கிருஷ்ணதேவராயரிடம் பணிபுரிந்த செல்லப்பா போன்ற மிகச்சிறந்த நாயக்குகள் பிராமணர்கள் ஆவர்.

இராமநாதபுரம், புதுக்கோட்டை சிற்றரசுகள்: இராமநாதபுரம் சிற்றரசுமதுரை நாயக்க அரசர் முத்துகிருஷ்ணப்ப நாயக்கரால் பதினேழாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் துவங்கிவைக்கப்பட்டது. போர் புரியும் மரபினைக் கொண்டிருந்த இப்பகுதி வாழ் மக்கள் பாண்டிய சோழ விஜயநகர அரசர்களிடம் படை வீரர்களாகப் பணியாற்றினர். மேலும் திருநெல்வேலி, தென் தமிழகப் பகுதி ஆகியவற்றிலும் பரவினர். நாயக்க மன்னர்களின் படைகளிலும் பணியாற்றிய இவர்கள், பரம்பரைக் காவல்காரர்களாக கிராமங்கள், கோவில்கள் ஏனைய நிறுவனங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் பணியையும் செய்து வந்தனர். இராமேஸ்வரம் கோவில், உடையான் சேதுபதி (இராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நீர் இணைப்பின் அல்லது பாலத்தின் தலைவர் என்று பொருள்) என்பவரின் பாதுகாப்பின் கீழிருந்தது.

புதுக்கோட்டை ஒரு சிறிய சிற்றரசாக மதுரை மற்றும் தஞ்சாவூர் நாயக்க அரசுகளின் இடையில் அமைந்திருந்தது. முந்தைய காலத்தில் சோழ பாண்டிய அரசுகளுக்கிடையே இடைப்படு நாடாக இருந்துள்ளது. இராமநாதபுரம் பகுதி வாழ் மக்களைப் போலவே புதுக்கோட்டை பகுதி வாழ் மக்களும் போர் புரியும் மரபை சார்ந்தவர்களாவர். இதன் காரணமாகவே தொண்டைமான்களின் தலைமையில் இப்பகுதி ஒரு சிற்றரசு என்னும் மதிப்பைப் பெற்றது. இத்தொண்டைமான்கள் சேதுபதி, மதுரை, தஞ்சை நாயக்க அரசர்களின் அரண்மனைகளில் முக்கியப் பணிகளில் பணியாற்றினர்.

கிருஷ்ணதேவராயரைப் போன்ற வலிமையான அரசர்கள் இருந்தவரை இம்முறை சிறப்பாகச் செயல்பட்டது. இந்நாயக்குகள் நாயக்தானம் எனப்பட்ட தங்களின் பகுதிகளில் உற்பத்தியைக் கட்டுப்படுத்தினர். 'பேட்டைஎனும் வணிக மையங்களை நிறுவினர். விவசாயிகளையும் கைவினைஞர்களையும் தங்கள் பகுதிகளில் குடியேற ஊக்குவித்து வரிச் சலுகைகள் வழங்கினர். நீர்ப்பாசன வசதிகளை உருவாக்கிப் பராமரித்தனர். அவர்களில் பலர் உயர்மட்டப் பணிகளில் (ஆளுநர், படைத்தளபதி, கணக்கர்) அமர்த்தப்பட்டு அரசரின் பிரதிநிதிகளாகச் செயல்பட்டனர். தலைக்கோட்டை போருக்குப் பின்னர் பெரும்பாலான நாயக்குகள் சுதந்திரமாகச் செயல்படத் துவங்கினர். அவர்களில் மதுரை, தஞ்சாவூர், இக்கேரி போன்ற நாயக்குகள் வலுவான அரசுகளை உருவாக்கிக் குறுநிலத்தலைவர்களைக் கட்டுப்படுத்தினர். பதினேழாம் நூற்றாண்டு பெரும் நாயக்க அரசுகளின் நூற்றாண்டாகும்.

Tags : History வரலாறு.
11th History : Chapter 12 : Bahmani and Vijayanagar Kingdoms : Administration of Vijayanagar Kingdoms History in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 12 : பாமினி மற்றும் விஜயநகர அரசுகள் : நிர்வாகம் - விஜயநகர அரசுகள் - வரலாறு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 12 : பாமினி மற்றும் விஜயநகர அரசுகள்