Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | வேற்றிட வேர் உருமாற்றம்

தாவரவியல் - வேற்றிட வேர் உருமாற்றம் | 11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm

   Posted On :  05.07.2022 11:48 pm

11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல்

வேற்றிட வேர் உருமாற்றம்

முளைவேர் அல்லாமல் தாவரத்தின் மற்ற பகுதிகளிலிருந்து உருவாகும் வேர்களுக்கு வேற்றிட வேர் அமைவு என்று பெயர்.

வேற்றிட வேர் உருமாற்றம் (Adventitious root modification)



அ. சேமிப்பு வேர்கள் (Storage roots)

1. கிழங்கு வேர்கள் (Tuberous roots): இவ்வகை வேர்கள் குறிப்பிட்ட வடிவமற்று பருத்துக் காணப்படும். கிழங்கு வேர்கள் கொத்தாக அல்லாமல் தனித்தே உருவாகின்றன. எடுத்துக்காட்டு: ஐப்போமியா படாடஸ் (சர்க்கரைவள்ளிக் கிழங்கு).

2. தொகுப்பு வேர்கள் (Fasciculated roots): இவை தண்டின் அடிப்பகுதியிலிருந்து கொத்தாக உருவாகும் வேர்களாகும். எடுத்துக்காட்டு: டாலியா, அஸ்பராகஸ் (தண்ணீர் விட்டான் கிழங்கு).

3. முடிச்சு வேர்கள் (Nodulose roots): இவ்வகை வேர்களில் நுனிப்பகுதி மட்டும் பருத்துக் காணப்படும். எடுத்துக்காட்டு: மரான்டா (ஆரோரூட் கிழங்கு), குர்குமா அமாடா (மா இஞ்சி), குர்குமா லாங்கா (மஞ்சள்).

4. மணிமாலை வடிவ வேர்கள் (Moniliform or beaded roots): இவ்வகை வேர்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் பருத்தும் சுருங்கியும் மணி மாலை வடிவில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு: வைடிஸ் (திராட்சை), போர்டுலகா (பருப்புக்கீரை), மொமார்டிகா (பாகற்காய்).

5. வளைய வேர்கள் (Annulated roots): இவ்வகை வேர்கள் சீரான இடைவெளிகளில் தம் மேற்பரப்பில் தொடர் வளையங்களாகப் பருத்துக் காணப்படும். எடுத்துக்காட்டு: சைகோட்ரியா.



ஆ. தாங்கு வேர்கள் (Mechanical roots)

1. தூண் வேர்கள் (Prop or Pillar roots): இவை பக்கக்கிளைகளிலிருந்து கீழ்நோக்கி நேராக வளர்ந்து மண்ணுக்குள் செல்லும். எடுத்துக்காட்டு: ஃபைகஸ் பெங்காலென்சிஸ் (ஆலமரம்), இந்திய ரப்பர் மரம்.

2. முட்டு வேர்கள் (Stilt or Brace roots): இவை தண்டின் அடிப்பகுதி கணுக்களிலிருந்து சாய்வாக வளரும் தடித்த வேர்களாகும். இவ்வகை வேர்கள் தாவரத்திற்கு ஆதார வலிமையைத் தருகின்றன. எடுத்துக்காட்டு: சக்காரம் அஃபிஸினாரம் (கரும்பு), ஜியா மேஸ் (மக்காச்சோளம்), பண்டானஸ், ரைசோஃபோரா (கண்டல்).


3. ஏறு வேர்கள் (Climbing roots): இவை தண்டின் கணுக்களிலிருந்து உருவாகி ஆதாரத்தைப் பற்றிக் கொண்டு ஏறுவதற்கு உதவும் வேர்களாகும். பற்றிக்கொள்வதற்கு ஏதுவாகக் காற்றில் காயும் ஒட்டுத் திரவத்தை இவை சுரக்கின்றன. எடுத்துக்காட்டு: எப்பிபிரிம்னம் பின்னேட்டம், பைப்பர் பீடல் (வெற்றிலைக்கொடி).

4. பலகைவேர்கள் (Buttress roots): சிலவகைமரங்களில் அகலமான பலகை போன்ற புற வளர்ச்சியானது தண்டைச் சுற்றி கீழ்நோக்கி வளரும். இவை சாய்வாகக் கீழ் நோக்கி வளர்ந்து பெரும் மரங்களுக்கு வலிமை சேர்க்க உதவுகின்றன. இது மழைக்காடுகளில் நெடிதுயர்ந்து வளரும் மரங்களுக்கான தகவமைப்பாகும். எடுத்துக்காட்டு: பாம்பாக்ஸ் செய்பா (செவ்விலவம் பஞ்சு), செய்பா பென்ட்டான்ரா (வெள்ளிலவம் பஞ்சு), டெலோனிக்ஸ் ரீஜியா (நெருப்புக் கொன்றை), டெரிகோட்டா அலாட்டா.


இ. இன்றியமையா பணி வேர்கள் (Vital function root)

1. தொற்று அல்லது வெலாெமன் வேர்கள் (Epiphytic roots): சில தொற்றுவாழ் ஆர்க்கிடுகள் சிறப்பு வகை தொங்கும் தரைமேல் வேர்களை உருவாக்குகின்றன. இவ்வகை வேர்கள் வெலாமென் என்கின்ற மென்மையான திசுவைக் கொண்டிருக்கின்றன. இத்திசு காற்றிலிருந்து ஈரத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. எடுத்துக்காட்டு: வாண்டா, டென்ட்ரோபியம்.

2. இலை வேர்கள் (Foliar or Reproductive roots): இலை நரம்புகளிலிருந்தோ அல்லது இலைப்பரப்பிலிருந்தோ வேர்கள் உருவாகி புதிய தாவரங்களை உருவாக்குகின்றன. எடுத்துக்காட்டு: பிரையோஃபில்லம், பெகோனியா

3. உறிஞ்சு அல்லது ஒட்டுண்ணி வேர்கள் (Sucking or Haustorial roots): இவ்வேர்கள் ஒட்டுண்ணித் தாவரங்களில் காணப்படுகின்றன. தண்டிலிருந்து ஓம்புயிரித் திசுவிற்குள் துளைத்துச் சென்று சத்துக்களை உறிஞ்சும் வேற்றிட வேர்களை ஒட்டுண்ணித் தாவரங்கள் தோற்றுவிக்கின்றன. எடுத்துக்காட்டு: கஸ்கியூட்டா, கசிதா, ஒரோபாங்கி, விஸ்கம், டென்ரோப்தே (புல்லுருவி).

4. ஒளிச்சேர்க்கை வேர்கள் (Photosynthetic or Assimilatory roots): சிலவகை ஏறு மற்றும் தொற்றுத் தாவரங்களின் வேர்கள் பசுங்கணிகங்களைத் தோற்றுவித்து பசுமை நிறமாக மாறி ஒளிச்சேர்க்கைக்கு உதவுகின்றன. எடுத்துக்காட்டு: டைனோஸ்போரா (சீந்தில் கொடி), ட்ராபா நாடன்ஸ், டீனியோஃபில்லம். 


Tags : தாவரவியல்.
11th Botany : Chapter 3 : Vegetative Morphology of Angiosperm : Adventitious root modification in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல் : வேற்றிட வேர் உருமாற்றம் - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 3 : உடலப் புற அமைப்பியல்