வரலாறு - ஆசீவகர்கள் | 11th History : Chapter 3 : Rise of Territorial Kingdoms and New Religious Sects

   Posted On :  14.05.2022 06:04 am

11 வது வகுப்பு : அலகு 3 : பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

ஆசீவகர்கள்

அக்காலத்தில் துறவிகள் குழுக்களாகச் செயல்பட்டனர். அவ்வாறான குழுக்கள் ஒன்றிலிருந்து ஆசீவகம் உருவானதாக நம்பப்படுகிறது.

ஆசீவகர்கள்

அக்காலத்தில் துறவிகள் குழுக்களாகச் செயல்பட்டனர். அவ்வாறான குழுக்கள் ஒன்றிலிருந்து ஆசீவகம் உருவானதாக நம்பப்படுகிறது. பௌத்த ஆவணங்களின்படி, ஆசீவகம் என்ற பிரிவைத் தோற்றுவித்தவர்நந்த வாச்சாஎன்பவர் என்று கருதப்படுகிறது. இவருக்குப் பின் வந்தவர் கிஸா சம்கிக்கா. ஆசீவகர்களில் தலைசிறந்தவரும், மூன்றாவது தலைவராக இருந்தவரும் மக்காலி கோசலர் ஆவார். கோசலர் மகாவீரரை நாளந்தாவில் முதன்முறையாகச் சந்தித்தார். இவர்களது நட்பு ஆறாண்டு நீடித்தது. இவர்கள் பின்னர் கோட்பாட்டு வேற்றுமை காரணமாகப்பிரிந்தனர். பின்னர் கோசலர் சிராவஸ்தி சென்றார். அங்கு ஹலாஹலா என்ற வசதிமிக்க குயவர் பெண்ணால் ஆதரிக்கப்பட்டார். இவர் புத்துயிர்ப்பு என்ற கோட்பாட்டை நம்பினார். வேதத் துறவிகளின் பல்வேறு கடும் தவங்களைக் கேலி செய்து, விமர்சித்தார். எதிர்ப்பிரிவுகள் என்பதால் பௌத்த, சமண நூல்கள் கோசலரைக் கெட்ட குணம் உள்ளவராகச் சித்தரிக்கின்றன. ஆசீவகப் பிரிவின் தலைமையகமாக சிராவஸ்தி இருந்தது. ஆசீவகர்கள் நிர்வாணத் துறவிகள். ஊழ்வினைக் கோட்பாட்டை நம்பியவர்கள். ஆசீவகர்களின் அடிப்படைக் கொள்கை நியதி அல்லது விதி என்பதாகும். இதுஎல்லாமே ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டவை என்பதால் இவ்வுலகில் எதையும் மாற்ற முடியாது; துக்கத்தைத் தீர்ப்பதற்கு ஒருவர் பல்வேறு பிறவிகளை எடுக்க நேரிடும்என்று கருதுவதாகும். ஆசீவகத்தின்படி, வாழ்வில் தவிர்க்க முடியாத ஆறு அம்சங்கள் இருக்கின்றன. அவை லாபம், நஷ்டம், இன்பம், துன்பம், வாழ்வு, மரணம் ஆகியன ஆகும். கோசலரின் மரணத்திற்குப் பிறகு, புராண கஸ்ஸபர், பகுத கச்சாயனர் என்ற இரு பரப்புரையாளர்கள் ஆசீவகர்களோடு இணைந்து, அதற்குப் புத்துயிர் கொடுத்தனர்.

தமிழ்நாட்டில் ஆசீவகர்கள்: மணிமேகலை, நீலகேசி, சிவஞானசித்தியார் ஆகியவை ஆசீவகக் கொள்கை குறித்து குறிப்பிடுகின்றன. நீலகேசியின் உண்மைக்கான தேடல் அவளை புத்தரிடமும், புராணனிடமும் இட்டுச் செல்கிறது. புராணன் ஆசீவகர்களின் தலைவர். சோழர்கள் ஆசீவகர்கள் மீது வரி விதித்ததாகக் கூறப்படுகிறது.

செயல்களுக்கு நற்கூறுகள், தீய கூறுகள் எதுவும் கிடையாது என்று புராண கஸ்ஸபர் கருதினார். சித்திரவதை, காயம் இழைத்தல், கொலை ஆகியவற்றால் எந்தத் தீமையும் நேர்ந்து விடாது என்று கருதினார். அதேபோல ஈகை, சுயக்கட்டுப்பாடு, உண்மையான பேச்சு ஆகியவற்றாலும் எந்த நன்மையும் கிட்டாது. ஏனென்றால், எல்லாமே முன்னரே முடிவுசெய்யப்பட்டவை என்பதால் மனிதர்கள் எதையும் தமது செயல்களால் மாற்ற முடியாது. இருக்கும் ஒரே வழி செயலின்மைதான் என்பது அவரது கருத்து. பகுத கச்சாயனர் இந்த உலகம் ஏழு பொருட்களால் உருவாக்கப்பட்டதாக நம்பினார். அவைஉருவாக்கப்படாதவை, குறைக்க முடியாதவை, படைக்கப்படாதவை, விளைவுகள் அற்றவை, மலைச் சிகரத்தைப் போல நிலையானவை, ஒரு தூணைப் போல உறுதியாக நிற்பவை, வடிவங்கள், வேறொன்றாக மாறாதவை, ஒன்றில் ஒன்று தலையிடாதவை, ஒன்றிற்கு ஒன்று மகிழ்ச்சியோ, வேதனையோ அல்லது மகிழ்ச்சி, வேதனை இரண்டையுமோ தர இயலாதவை.

குயவர்கள், வங்கியாளர்கள் போன்ற செல்வமிக்க துறவறம் பூணாத சீடர்கள் ஆசீவகத்திற்கு இருந்தார்கள். பெளத்தம், சமணம் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது, ஆசீவகத்தின் செல்வாக்கு குறைவுதான் என்றாலும், நாடு முழுவதும் பரவியிருந்தது.

அஜித கேசகம்பளி (கேசத்தாலான கம்பளியணிந்த அஜிதன்) ஒரு பொருள்முதல்வாதி. அவர் ஒவ்வொரு மனிதனும் நெருப்பு, நீர், காற்று, உணர்வு ஆகிய நான்கு அடிப்படைப் பொருட்களால் உருவாக்கப்பட்டவன் என்று கருதினார். மரணத்திற்குப் பிறகு இந்த மூலப் பொருட்கள் பூமிக்குத் திரும்பிவிடும். மரணத்திற்குப் பிறகு வாழ்வில்லை. “பெருந்தன்மை மூடர்களால் கற்றுத்தரப்படுவதாகும். மரணத்திற்குப் பிறகான வாழ்க்கையைப் பற்றிப் பேசுபவர்களின் பேச்சு பொய்யும் வெற்று அரட்டையுமாகும். உடல் அழியும் போது புத்திசாலி, முட்டாள் எல்லோருமே முற்றிலுமாக அழிந்து போகிறார்கள். மரணத்திற்குப் பிறகு அவர்கள் வாழ்வதில்லைஎன்றார் அவர்.

லோகாயதமும் சார்வாகமும்

"லோகாயதம்" என்ற சொல் பொருள் முதல் வாதத்தைக் குறிக்கிறது. இந்தியப் பொருள்முதல்வாதம் இந்தச் சிந்தனைப் போக்கை உருவாக்கிய இருவரில் ஒருவரான சார்வாகரின் பெயரால் சார்வாகம் என்றும் அழைக்கப்படுகிறது. சார்வாகரும் அஜித கேசகம்பளியும் இந்தியப் பொருள் முதல் வாதத்தை ஒரு முறையான தத்துவ முறையாக நிறுவியவர்கள் என்று சொல்லப்படுகிறது. சார்வாகர் ஐயுறுவாதம் என்ற சிந்தனையை மேம்படுத்தினார். அனுபவங்களின் மூலமே அறிவைத் தேட முடியுமென அவர் நம்பினார். மேலும், அவர் வேதங்களின் அதிகாரத்தைக் கேள்விக்கு உட்படுத்தினார்.

அவைதீக மதங்களிடையே மோதல்

பல்வேறு அவைதீக மதங்களுக்கிடையே கடும் மோதல்கள் நிலவின. இது அக்காலத்தின் பல்வேறு மதக் குறிப்புகள் மூலம் தெரியவருகிறது. பெளத்த, சமண நூல்கள் அவைதீக மதப் பிரிவுகள் பற்றிச் சொல்வதோடு அல்லாமல், அவற்றை சிறுமையும் படுத்துகின்றன. பகவதி சூத்திரம் எனும் சமணநூலில் மக்காலி கோசலர் தரக் குறைவாகப் பேசப்படுகிறார். புத்தகோஷரும் தனது நூலில் இவரை ஏளனம் செய்கிறார். ஒரு பெளத்த ஜாதகக் கதை இந்த துறவிகளை மின்மினிப் பூச்சிகளோடு ஒப்பிட்டு, இவர்களின் மெல்லிய ஒளி, சூரியனின் பிரகாசத்திற்கு முன், அதாவது புத்தரின் பிரகாசத்திற்கு முன் மங்கிப் போனதாக வர்ணிக்கிறது

Tags : History வரலாறு.
11th History : Chapter 3 : Rise of Territorial Kingdoms and New Religious Sects : Ajivikas History in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு : அலகு 3 : பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் : ஆசீவகர்கள் - வரலாறு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு : அலகு 3 : பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்