Home | 12 ஆம் வகுப்பு | 12வது வேதியியல் | பரப்பு கவர்தலின் பயன்கள்
   Posted On :  05.08.2022 01:49 am

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 10 : புறப்பரப்பு வேதியியல்

பரப்பு கவர்தலின் பயன்கள்

பரப்பு கவர்தலானது எண்ணிலடங்கா பயன்பாடுகளை கொண்டுள்ள போதிலும், அவற்றுள் சிலவற்றை நாம் கருதுவோம்

பரப்பு கவர்தலின் பயன்கள்

பரப்பு கவர்தலானது எண்ணிலடங்கா பயன்பாடுகளை கொண்டுள்ள போதிலும், அவற்றுள் சிலவற்றை நாம் கருதுவோம் 


1. வளிமக் கவசங்கள்: முதல் உலகப்போர் சமயத்தில் கரிபுகைபடலம் முகமூடிகள் பிரிட்டீஷ்காரர்களாலும் அமெரிக்கர்களாலும் பயன்படுத்தப்பட்டது. கிளர்வுறுத்தப்பட்ட கரியானது சிறந்த பரப்புப் பொருட்களில் ஒன்றாக விளங்குவது கண்டறியப்பட்டுள்ளது


2. டெய்ல் மற்றும் தீவார் ஆகியோர் கலன்களில் அதிகபட்ச வெற்றிடத்தை உருவாக்க கிளர்வுறுத்தப்பட்ட கரியை பயன்படுத்தினர். நீர்நீக்கவும், CO2, N2, Cl2, O2 மற்றும் He போன்ற வாயுக்களை தூய்மையாக்கவும் அலுமினா மற்றும் சிலிக்கா பயன்படுத்தப்பட்டன. ஊது உலையில் காற்றை உலர்த்துவதற்கு சிலிக்கா ஜெல்லும் பயன்படுத்தப்படுகிறது


3. பரப்பு கவர்தலின் அதி முக்கிய பயன்பாடுகளில் ஒன்று கடினநீரை மென்னீராக மாற்றுவதாகும். இந்த செயல்முறைக்கு பெர்மூடீட் எனும் அயனி பரிமாற்ற பிசின் பயன்படுத்தப்படுகிறது. இது தன்னுடைய புறப்பரப்பில் Ca2+ மற்றும் Mg2+ அயனிகளை பரப்புகவர்கின்றன. கீழே காண்பிக்கப்பட்ட படி பெர்மூடீட் புறப்பரப்பில் அயனிப் பரிமாற்றம் நிகழ்கிறது.

Na2 Al2 Si4 O12 + CaCl 2 → CaAl2 Si4 O12 + 2NaCl

சாதாரண உப்புக்கரைசலை சேர்ப்பதன் மூலம், தீர்ந்துபோன பெர்மூடீட் திரும்பக் கிடைக்கிறது.

CaAl2 Si4O12 + 2NaCl → Na2 Al2 Si4 O12 + CaCl2


4. அயனிப் பரிமாற்ற பிசின்கள்

அயனிப் பரிமாற்ற பிசின்கள் பரப்பு கவர்தல் செயல்முறையை அடிப்படையாக கொண்டு செயல்படுகின்றன. இவை நீரை கனிம நீக்கம் செய்யப் பயன்படுகின்றன. நேரயனி மற்றும் எதிரயனி பரிமாற்ற பிசின்களைக் கொண்ட இரண்டு குழாய்கள் வழியே நீரை செலுத்தி இச்செயல்முறையானது நிகழ்த்தப்படுகிறது.

2RSO3H + Ca2+ (Mg2+) → (RSO3)2 Ca(Mg) + 2H+ 

பிசின்    நீரில் உள்ள கனிமங்கள்       பிசின்ல் உள்ள கனிமங்கள்



5. பெட்ரோலியம் மற்றும் சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு:

புல்லர் மண் (fuller's earth- முல்தானி மட்டி)மற்றும் சிலிக்கா ஜெல் ஆகியன சுத்திகரிப்பு செயல்முறையில் பயன்படுகின்றன.


6. சர்க்கரையை நிறமிழக்கச் செய்தல்:

சர்க்கரைப் பாகிலிருந்து பெறப்படும் சர்க்கரையில் கலந்துள்ள நிறமுள்ள மாசுக்கள், விலங்கு கரியை சேர்ப்பதன் மூலம் நீக்கப்படுகின்றன. இங்கு விலங்கு கரியானது நிறமிழக்கச் செய்யும் பொருளாக பயன்படுகிறது.


7. வண்ணப்பிரிகை முறை:

ஒரு கலவையிலுள்ள கூறுகளை தனித்தனியாக பிரிக்க வண்ணப்பிரிகை முறை பயன்படுகிறது. இது, பரப்புப் பொருளின் பரப்பின் மீது, கலவையிலுள்ள கூறுகள் பரப்பு கவரப்படுதலை, அடிப்படையாக கொண்டு நிகழ்கிறது. இது மிகத் திறனுள்ள முறையாகும், மேலும் கலவையில் உள்ள உட்கூறுகள் நுண்ணிய அளவுகளில் இருந்தாலும் அவற்றை கண்டறிவதற்கும், இனம்காணுவதற்கும், அளவிடுவதற்கும் இம்முறை பயன்படுகிறது.


8. வினைவேகமாற்றவினை

வினைவேக மாற்றயியல் என்பது புறப்பரப்பு வேதியியலின் முக்கிய பிரிவாகும், இது வினைவேக மாற்றிகளின் புறப்பரப்பில் பொருட்கள் பரப்பு கவரப்படுதல் நிகழ்வை அடிப்படையாக கொண்டுள்ளது. எடுத்துக்காட்டுகள் :

ஹேபர் முறையில், பின்வரும் வினையில் காட்டியவாறு, N2 மற்றும் H2 ஆகியவற்றிலிருந்து அம்மோனியா தயாரிக்கப்படுகிறது.

N2 + 3H2 → 2NH3 

இச்செயல்முறையில், Fe வினைவேக மாற்றியாகவும், Mo உயர்த்தியாகவும் செயல்படுகின்றன. இரும்பின் புறப்பரப்பில் வினை நிகழ்கிறது.எண்ணெய்களை ஹைட்ரஜனேற்றம் அடையச் செய்து வனஸ்பதி தயாரித்தலில் நிக்கல் வினைவேகமாற்றியாக பயன்படுகிறது. நிக்கலின் புறப்பரப்பில் வினை நிகழ்கிறது



9. பண்பறி பகுப்பாய்வு:

Al3+ அயனிக்கரைசலுடன் லிட்மஸ் கரைசலை சேர்க்கும்போது, கரைசலின் அமிலத்தன்மை காரணமாக அது சிவப்பு நிறமாக மாறுகிறது. அதனுடன் அம்மோனியம் ஹைட்ராக்சைடை சேர்க்கும்போது நீல நிற செதில்கள் உருவாகின்றன. NH4OH சேர்ப்பதால் உருவாகும் Al(OH)3 இன் புறப்பரப்பில் நீல நிற லிட்மஸ் சேர்மம் பரப்பு கவரப்படுதலே இதற்கு காரணம் ஆகும்.


10. மருந்துகள்:

மருந்துகள், உடல் திசுக்களின் மீது பரப்பு கவரப்படுவதால் நோய்களை தீர்க்கின்றன.


11. உலோக தாதுக்களை அடர்பித்தல்:

சல்பைடு தாதுக்கள், நுரை மிதப்பு முறையில் அடர்பிக்கப்படுகின்றன. இதில் லேசான தாதுத் துகள்கள் பைன் எண்ணெயால் நனைக்கப்படுகின்றன.


12. சாயநிறுத்திகள் மற்றும் சாயங்கள்

பெரும்பாலான சாயங்கள் துணிகளின் மீது பரப்புகவரப்படுகின்றன. சாயநிறுத்திகள் என்பவை துணிகளின் மீது சாயத்தை நிலைநிறுத்தும் சேர்மங்களாகும்.


13. பரப்பு கவர்தல் நிறங்காட்டுகள்

வீழ்படிவாக்கல் தரம்பார்த்தல்களில், வெளியிலிருந்து சேர்க்கப்படும் நிறங்காட்டியானது முடிவு நிலை அறிய பயன்படுகிறது. இந்த நிறங்காட்டியானது, வீழ்படிவின் புறப்பரப்பில் பரப்பு கவர்ப்பட்டவுடன் அதன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது. இது தரம் பார்த்தலின் முடிவுநிலையை சுட்டிக்காட்ட பயன்படுகிறது.


12th Chemistry : UNIT 10 : Surface Chemistry : Applications of adsorption in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 10 : புறப்பரப்பு வேதியியல் : பரப்பு கவர்தலின் பயன்கள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 10 : புறப்பரப்பு வேதியியல்