Posted On :  04.04.2022 04:27 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 11 : சர்வதேச அமைப்புகள்

ஆசிய வளர்ச்சி வங்கி

சர்வதேச நிதி நிறுவனமானது பெரும்பாலும் சுயநிதியினை சார்ந்தது. ஆனால் பல்தேசிய வளர்ச்சி வங்கிகள் தங்கள் சேவைகளுக்கு பெரும்பாலும் பங்குதாரர்களின் பங்களிப்பைச் சார்ந்தே செயல்படுகின்றன. குறிப்பாக, தங்கள் நிதி நடவடிக்கையான வட்டி குறைவான கடன்களை வழங்குதல், மானியம் அளித்தல் மற்றும் மிகவும் ஏழை நாடுகளுக்கான வட்டியில்லா கடன்கள் போன்றவையாகும்.

ஆசிய வளர்ச்சி வங்கி

சர்வதேச நிதி நிறுவனமானது பெரும்பாலும் சுயநிதியினை சார்ந்தது. ஆனால் பல்தேசிய வளர்ச்சி வங்கிகள் தங்கள் சேவைகளுக்கு பெரும்பாலும் பங்குதாரர்களின் பங்களிப்பைச் சார்ந்தே செயல்படுகின்றன. குறிப்பாக, தங்கள் நிதி நடவடிக்கையான வட்டி குறைவான கடன்களை வழங்குதல், மானியம் அளித்தல் மற்றும் மிகவும் ஏழை நாடுகளுக்கான வட்டியில்லா கடன்கள் போன்றவையாகும்.

பல்தேசிய வளர்ச்சி வங்கிகளை மூன்று வகைகளாக பிரிக்கலாம். (i) உலக அளவில் (ii) மண்டல அளவில் மற்றும் (iii) துணைமண்டலங்கள் என மூன்றாக பிரிக்கலாம் இதன் மூலம் அவற்றின் ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை எளிதில் கண்டறியலாம்.

பல பல்தேசிய வளர்ச்சி வங்கிகள் மேலே குறிப்பிட்ட மூன்று வித பிரிவுகளையும் உள்ளடக்கியதாகக் குறிப்பிட்ட ஓர் கண்டத்தினை மட்டுமே நேரடியாகக் கொண்டு செயல்படுகின்றன. அவை, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டுமான மற்றும் முதலீட்டு வங்கி, புதிய வளர்ச்சி வங்கி, அமெரிக்க வளர்ச்சி வங்கி, இஸ்லாமிய வளர்ச்சி வங்கி, ஜரோப்பிய முதலீட்டு வங்கி போன்றவையாகும். 1930களின் பிற்பகுதியில் மற்றும் 1940-களின் முற்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் தற்கால பொருளாதார வளர்ச்சிக்கான பல் தேசிய வங்கிகள் தோன்றின. இது முக்கியமாக ஆங்கிலேய பொருளாதார அறிஞர் ஜான்மேயார்டு கியின்ஸ் குறிப்பிட்டதுபோல போருக்கு பிந்தைய கால பொருளாதார மற்றும் சமூக தேவையாக உருவாகியது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் அமெரிக்க பொருளாதார அறிஞரான ஹரிடெக்ஸ்டர் ஒயிட் தொலைநோக்கு பார்வையில் சில நிறுவனங்களை ஏற்படுத்தினார்.

ஒயிட் 1942 ஆம் ஆண்டு இதற்கான பாதையை அமைக்கும் வகையில் வளர்ச்சியை அடிப்படைக் கொள்கையாக கொண்டு ஓர் கோரிக்கையை ஐ.நா-விற்கு அளித்தார். ஐக்கிய மற்றும் துணை நாடுகளுக்கான சர்வதேச நிதியத்தையும், மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான வங்கியையும் உருவாக்க கோரினார். இது போருக்குப் பிந்தைய சர்வதேச பணவியல் சீர்திருத்தங்களுக்கான அடிப்படைகளை வழங்கியது. இந்த கோரிக்கையானது போருக்குப் பிந்தைய பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வகையில் இரண்டு நிறுவனங்களையும் அதிகாரம், வளங்கள் மற்றும் கட்டமைப்பை கொண்டதாக உருவாக்க கோரியது.

பல்தேசிய வங்கிகள் உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிகள் போலவே பொதுவான நிதி நிறுவன உறுப்பு நாடுகளின் வளர்ச்சிக்கான பொறுப்புமிக்க அமைப்பாகும். கியூபா மற்றும் வட கொரியாவை தவிர உலகில் பெரும்பான்மையான நாடுகள் பல்தேசிய வளர்ச்சி வங்கியின் உறுப்பினர் ஆகின. பல்தேசிய வளர்ச்சி வங்கியின் உறுப்பினரான எல்லா நாடுகளும் தங்கள் பங்களிப்பை அளித்து |

வங்கியானது அங்கீகரிக்கப்பட்டதிலிருந்து கடன்களை அவர்களுக்கு அளித்து வருகிறது. பல்தேசிய வளர்ச்சி வங்கிகள் பெரும் அளவிலான வளர்ச்சி திட்டங்கள் குறிப்பாக நீர்மின் நிலையங்களுக்கான அணைகள், பாசனத் திட்டங்கள், போக்குவரத்து வளர்ச்சிகள், எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்கள், வறுமையை குறைத்து, பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்க செய்து வளர்ச்சிக்கு வித்திடுவதாக இருந்தன.

இருந்தபோதும் இவற்றிற்கு எதிராக பிரச்சனைகள் எழுந்தன. வங்கி கூறுவது போல இல்லாமல் இந்த திட்டங்கள் சுற்றுச்சூழலை மற்றும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையை அழிப்பதாக எதிர்ப்புகள் எழுந்தன. பலரும் இதன் திட்டங்கள் அம்மக்களின் நலன்களை மட்டுமல்ல சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல்களை பாதித்து எதிர்மறையான பலன்களைத் தந்ததாக வாதிட்டனர்.

ஆசிய வளர்ச்சி வங்கி ஓர் மண்டலப் பல்தேசிய நிதி நிறுவனமாகும். இது பொறுப்பு உணர்வுடன் ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளில் வறுமையை குறைப்பதற்கான பணியினை மேற்கொள்கிறது. 1966இல் உருவாக்கப்பட்ட இவ்வங்கியில் 66 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இவற்றில் பெரும்பான்மை ஆசிய பகுதியை சார்ந்தவை. வங்கியின் பங்கு முதலீடாக 44 பில்லியன் அமெரிக்க டாலரையும் மற்றும் இருப்பாக 7.9 பில்லியன் அமெரிக்க டாலரையும் கொண்டு உள்ளது. இது தோற்றுவிக்கப்பட்ட 1966 ஆம் ஆண்டிலிருந்து 2002 ஆம் ஆண்டு வரை வங்கியானது பொது மற்றும் தனியார் துறையினருக்கு 98.831 பில்லியன் தொகையை கடனாக வழங்கி உள்ளது. மேலும் ஐந்து பில்லியன் கடன்களை பல்வேறு திட்டங்களுக்கு மண்டலத்திற்கு வெளியிலும் வழங்கி உள்ளது. இதன் ஆண்டு வருவாய் 500 பில்லியன் ஆகும்.

ஆசிய வளர்ச்சி வங்கியின் "வறுமை குறைப்பு செயல்திட்டம் (PRS)" ஆனது மைய பொருளாக கொண்டு நீண்டகால செயல்திட்ட கட்டமைப்பு (LIST 2001 - 2015) அமைந்துள்ளது. இந்த பதினைந்து ஆண்டு கால திட்டமானது ஆசிய வளர்ச்சி வங்கி ஐ.நா-வின் நூற்றாண்டு வளர்ச்சியின் வெற்றியாக கொண்டு உலக அளவில் வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கையை நோக்கமாக கொண்டு மேற்கொள்கிறது. வங்கி குறிப்பிடுவதைபோல இதன் வளர்ச்சி திட்டங்கள் ஆசிய மற்றும் பசிபிக் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி உள்ளது. மேலும் குறிப்பாக 900 மில்லியன் ஆசிய மக்கள் ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் கீழான வருவாயில் வறுமையில் வாழ்கின்றனர். வங்கியின் முதன்மை நோக்கமாக பொருளாதார வளர்ச்சி, மனித வளர்ச்சி, பெண்கள், நல்ல அரசாங்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தனியார்துறை வளர்ச்சி மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாகும். ஆசிய வளர்ச்சி வங்கியானது தற்பொழுது ஐந்து புவியில் பகுதியாக நாடுகளை பிரித்து அதற்கு ஏற்ப துறை ரீதியாக பணிகளை கொண்டு செயல்படுகிறது. அவை,

1. கிழக்கு மற்றும் மத்திய ஆசியா 

2. தி மெக்காங் 

3. பசிபிக் 

4. தெற்கு ஆசியா 

5. தென்கிழக்கு ஆசியா

ஒவ்வொரு மண்டல துறைகளும் அதன் நாடுகளுக்கான திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளையும் மேற்கொள்கின்றன. துணை மண்டலங்கள் குறிப்பிட்ட நாட்டிற்கான உதவிகள் என்பதாக பணிகளை மேற்கொள்கின்றன. பிற வங்கிகளை போலவே ஆசிய வளர்ச்சி வங்கியும் தனக்கான நிதியினை பங்குதாரர்களிடமிருந்து பெறுகிறது. ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் பங்களிப்பு இதன் 62 உறுப்பு நாடுகளைவிட மிக அதிகமாக 15.9 சதவிகிதமாகும்.


ஷாங்காய் கூட்டமைப்பு (SCO) 

குயிண்டாஓ தீர்மானம் 

• சீனாவின் விருப்பமான "பட்டு சாலை முன்னெடுப்பில்" இந்தியா இணைவதற்கு மறுத்துவிட்டது. 

• ஷாங்காய் கூட்டமைப்பு பகுதியின் முழுமையான பாதுகாப்பிற்கான செயல் யுத்திகளை இந்தியா வகுத்துள்ளது.


ஷாங்காய் கூட்டமைப்பு 

• இது ஓர் ஐரோப்பிய ஆசிய அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு அமைப்பாக 2001 துவக்கப்பட்டது. இதன் தலைமையகம் பீஜிங்கில் உள்ளது.

• இதன் துவக்கத்திற்கு காரணமாக ஷாங்காய் ஐந்து எனப்படும் ஐந்து நாடுகள் அமைந்திருந்தது (1996 இல் சீனா, ரஷ்யா, கஜகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜகிஸ்தான் கொண்ட பல்தேசிய அமைப்பாக இது ஷாங்காய் நகரத்தில் துவக்கப்பட்டது).

• இதன் தத்துவமானது "ஷாங்காய் உற்சாகம்" என அறியப்படுகிறது. இது நல்லிணக்கம், நற்சிந்தனையான பணி, பிறகலாசாரங்களை மதித்தல், பிற நாட்டு உள்விவாகரங்களில் தலையிடாமல் இருத்தல் மற்றும் அணி சேராமை ஆகும்.

• ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு எட்டு உறுப்பினர்களை கொண்டுள்ளது, அவை இந்தியா, கஜகிஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜ்கிஸ்தான் மற்றும் உஸ்பெக்கிஸ்தான் ஆகும்.

• 2018 ஆம் ஆண்டில் நடந்த இதன் கூட்டத்தில் இந்தியா அதன் முழுநேர உறுப்பினராக முதல் முறையாக கலந்து கொண்டது. இந்தியாவுடன், பாகிஸ்தானும் 2017இல் கஜகிஸ்தானில் நடந்த அஸ்டானா உச்சி மாநாட்டில் முழுநேர உறுப்பினராக இணைந்தன.

• இவ்வமைப்பின் கீழ் நான்கு அரசுகள் இதன் பார்வையாளராகவும் மற்றும் ஆறு அரசுகள் விவாத பங்கேற்பு உறுப்பினர்களாகவும் உள்ளனர்.


பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (OPEC) 

ஆசிய பிரிமீயம் 

• இது ஆசிய நாடுகளுக்கான எண்ணெய் விற்பனையில் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் மேல் அதிக கட்டணத்தை வசூலிப்பதாகும். 

• இது 1986இல் இருந்து சந்தை நிலைக்கு ஏற்ப கச்சா எண்ணெய் விலையை தீர்மானிக்கும் முறையிலிருந்து துவங்குகிறது. 

• உலக சந்தையில் ஆசிய பகுதிக்கான எண்ணெய் விலையை தீர்மானிப்பதில் மூன்று முக்கிய சந்தைகள் திகழ்கின்றன. அவை; 

• ஐரோப்பிய சந்தையின் லயிட் சுவிட் எண்ணெய் நிறுவனமான ப்ரென்ட். 

• அமெரிக்க சந்தையின் பிரதிநிதியாக ஃவெஸ்ட் டாக்ஸ் இடைநிலையாளர்கள் (WTI).

• மத்திய கிழக்கு மற்றும் ஆசிய சந்தைக்கான துபாய்/ஓமன் நாடுகள் ஆகும். 

• கச்சா எண்ணெய்யின் எந்த ஓர் நிலையையும் அதன் வருங்கால வர்த்தக நிலையை அடிப்படையாகக் கொண்டு அதற்கான சந்தை மற்றும் விலையை தீர்மானிப்பதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவானது முன்நிலை வகிக்கின்றன. ஆசிய பிரதிநிதிகளான துபாய்/ஓமன் நாடுகளின் வர்த்தக பங்கு நிலையானது இதன் முடிவை தீர்மானிப்பதாக இல்லை. 

• இதனால் ஐரோப்பிய மற்றும் அமெரிக்காவை காட்டிலும் ஆசிய நாடுகள் ஒன்றில் இருந்து இரண்டு டாலர் வரை அதிக விலை கொடுக்க நேரிடுகிறது. இந்த விலை வேறுபாடே "ஆசிய பிரிமீயம்" என அழைக்கப்படுகிறது.


ஒபெக் (OPEC) கூட்டமைப்பு 

• இது ஓர் அரசுகளுக்கு இடையிலான அமைப்பு இதன் நோக்கம் உறுப்பு நாடுகளுக்கு இடையே ஒரே விதமான பெட்ரோலிய கொள்கையை உருவாக்குவதற்கான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதாகும், இதன் அடிப்படையில் பெட்ரோலிய நுகர்வு நாடுகளுக்கு பெட்ரோலிய பொருட்களின் விலையை நிலையானதாக மற்றும் பாதுகாப்பானதாக பொருளாதார திறன்பட்டதாக தொடர்ந்து வழங்குவதாகும். மேலும் இந்த தொழிலில் முதலீடு செய்துள்ள மூலதனத்திற்கு சிறந்த பலனைத் திரும்ப பெறச் செய்வதாகும்.

• இதன் தலைமையகம் ஆஸ்டிரியாவின் - வியன்னா நகரில் அமைந்துள்ளது.

• இது 1960-ஆம் ஆண்டு நடந்த பாக்தாத் மாநாட்டில் ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா மற்றும் வெனிசூலா நாடுகளை உறுப்பினராகக் கொண்டு துவக்கப்பட்டது.

• இந்நாடுகள் உலக எண்ணெய் உற்பத்தியில் 44 சதவீதத்தையும், மற்றும் உலகின் 81.5 சதவீத எண்ணெய் வளத்தையும் கொண்டுள்ளன.


சர்வதேச அணுசக்தி கழகம் (IAEA) 

• இது அணு சக்திக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஒருங்கிணைப்பாக அரசுகளுக்கு இடையிலான உலகம் தழுவிய அமைப்பாகும்.

• இது 1957இல் ஐ.நா-வால் சர்வதேச தன்னாட்சி நிறுவனமாக உருவாக்கப்பட்டது. அணுசக்தி கழகமானது தனது நிலையை நிலைநிறுத்துவதற்கான தனி சர்வதேச ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளது.

• அணுசக்தி கழகமானது ஐ.நா-வின் பொதுச்சபை மற்றும் பாதுகாப்புச் சபை ஆகிய இரண்டிற்கும் தனது அறிக்கையை அளிக்கிறது.

• இது அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பானதாக மற்றும் அமைதியான வழியில் பயன்படுத்துவதற்கான பணியை மேற்கொள்கிறது.

• இது மேலும் ஐ.நா-வின் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான நிலையான - வளர்ச்சிக்கான இலக்குகளை அடைய தனது பங்களிப்பைச் செய்கிறது.

• இதன் தலைமையகம் ஆஸ்டிரியாவின், வியன்னாவில் அமைந்துள்ளது. இதில் இந்தியா உறுப்பினராக உள்ளது.

• சர்வதேச அணுசக்தி கழகமானது அணு ஆயுத பரவலை தடுத்து பாதுகாக்கிறது. மேலும், அணுசக்தி சார்ந்த பொருட்கள் மற்றும் தொழில்நுட்பத்தினை தவறாக பயன்படுத்துவதை முன்னறிந்து தடுக்கிறது.

• 2009 ஆம் ஆண்டு இந்திய அரசு மற்றும் அணுசக்தி கழகத்தின் இடையே "பாதுகாப்பான சிவில் அணுசக்தி வாய்ப்பிற்கான" ஒப்பந்தமானது கையெழுத்தானது. பிறகு 2014இல் இந்தியா இதனை மாற்றி கூடுதல் நெறிமுறையாக (அமெரிக்க இந்திய அணு ஒப்பந்தத்தில் ஓர் பகுதியாக) ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை அணுசக்தி கழகத்துடன் ஏற்படுத்திக்கொண்டது.

• கூடுதல் நெறிமுறை என்பது சர்வதேச அணுசக்தி கழகத்தின் மிக முக்கிய கருவியாகும். பாதுகாப்பு ஒப்பந்த விதிமுறைகளின்படி, அந்த நாட்டின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் அனைத்து அணுசக்தி பொருட்களின் பயன்பாட்டை சோதித்தறிவதற்கான அதிகாரத்தை அணுசக்தி கழகத்திற்கு வழங்குகிறது.


வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டமைப்பு (BIMSTEC) 

• பிம்ஸ்டெக் (BIMSTEC) ஓர் மண்டலக் கூட்டமைப்பாகும். இதன் உறுப்பு நாடுகளான ஏழு நாடுகள் நிலவியல் ரீதியாக நெருங்கிய மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் அமைந்துள்ள பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், ஸ்ரீலங்கா, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகும். 

• இது ஓர் துணை மண்டலக் கூட்டமைப்பாக 1997 ஆம் ஆண்டு ஜூன் 6 இல் பாங்காக் தீர்மானத்தின்படி தோற்றுவிக்கப்பட்டது.

• இதன் செயலகம் டாக்காவில் உள்ளது.


தெற்கு - தெற்கு ஒத்துழைப்பு (SSC) 

• தெற்கு-தெற்கு ஒத்துழைப்பானது உலகின் தென்பகுதியில் உள்ள நாடுகள் தங்களிடையே வளர்ச்சிக்கான தொழில்நுட்பங்களை பரிமாறிக் கொள்வதாகும். 

• 1955இல் நடந்த பாண்டுங் மாநாடானது தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு ஏற்படுவதற்கான காரணமாக அமைந்தது.


இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா கூட்டமைப்பு (IBSA) 

• இது ஓர் சர்வதேச முத்தரப்பு அமைப்பாக இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா நாடுகள் இடையே சர்வதேச ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவதற்காக உருவானதாகும்.

• இது முறையே இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர்களால் 2003 ஜூன் 6-இல் பிரேசிலியா தீர்மானத்தின்படி உருவாக்கப்பட்டது 

• இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா கூட்டமைப்பு (IBSA) ஆனது வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த செயற்பொறியாக வறுமை மற்றும் பட்டினியை ஒழிப்பதற்கான நிதியைக் கொண்டு செயல்படுகிறது. 

• இது தனது நோக்கமாக நவீன முறையிலான மனித வளர்ச்சிக்கான திட்டங்களை வளரும் நாடுகளில் நடைமுறைப்படுத்தி வறுமை மற்றும் பட்டினிக்கு எதிராக போரிட்டு வருகிறது. 

• இதற்கான நிதியாக இதன் உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் வருடத்திற்கு ஒரு மில்லியன் டாலரை வழங்கிவருகின்றன. 

• இந்த நிதியை ஐ.நா-வில் அமைந்துள்ள தெற்கு - தெற்கு கூட்டமைப்பின் அலுவலகம் (UNOSSC) ஆனது நிர்வகித்து வருகிறது.


வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகளின் கூட்டமைப்பு (NATO-1949)

வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகளின் கூட்டமைப்பானது 1949இல் அமெரிக்கா, கனடா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் சோவியத் யூனியனுக்கு எதிரான கூட்டு பாதுகாப்பு அமைப்பாக ஏற்படுத்தப்பட்டது. 


இது மேற்கு உலக நாடுகளுடன் போரில்லாத அமைதி காலத்தில் அமெரிக்கா ஏற்படுத்திக் கொண்ட முதல் ராணுவ ஒப்பந்தமாகும். ஒப்பந்தத்திற்கு பிறகு மேற்கு ஹம்பிரிஸின் புறம்பகுதி வழியாக அமெரிக்கா நுழைந்தது. தாக்குதல் ஏதேனும் ஏற்பட்டால் அமெரிக்கா தானாகவே அதில் தலையிடும் என்ற உறுதியை அமெரிக்காவிடம் இருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகள் விரும்பின.இதன் விளைவாக 1949இல் வட அட்லாண்டிக் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா, பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் குறிப்பாக அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகளில் யார் ஒருவர் தாக்கப்பட்டாலும் அனைவரும் கலந்தாலோசித்து கூட்டாக தாக்குவது என்பதை ஏற்றுக்கொண்டன. இந்த ராணுவக் கூட்டுப் பாதுகாப்பு ஏற்பாட்டின்படி நேட்டோவானது மேற்கு ஐரோப்பிய பகுதி முழுவதையும் அமெரிக்காவின் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தது. இருந்தபோதும் இது பனிப் போரை தோற்றுவித்தது. இந்த பிரச்சனை முடிந்தபோது பல முன்னாள் சோவியத் நாடுகளையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு நேட்டோ விரிவுபடுத்தப்பட்டது. தற்போது இதுவே உலகின் அமைதிக்கான மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பாக திகழ்கிறது. 


ஐ.நா-வின் உலக தீவிரவாத தடுப்பு ஒருங்கிணைப்பு நடவடிக்கை 

• இது ஒரு முப்பத்தி ஆறு அமைப்புகள், இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்பு மற்றும் உலக சுங்க அமைப்பு ஆகியவை ஐ.நா-வின் தலைமையின் கீழ் சர்வதேச தீவிரவாதத்தை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு உதவுவதற்காக ஏற்படுத்திக் கொண்ட கூட்டணி ஆகும்.


நோக்கம் 

• ஐ.நா-வின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஐ.நா-வின் உலக தீவிரவாத எதிர்ப்பு செயல் உத்திகள் மற்றும் இவை சார்ந்த பிற தீர்மானங்களின்படி உறுப்பு நாடுகள் இடையே ஒருங்கிணையும் திறனை வளர்த்துக் கொள்வதற்கான வழி முறைகளையும் நடைமுறைப்படுத்துகிறது. 

• பாதுகாப்புச் சபையின் முக்கிய அமைப்புகள் மற்றும் பிற ஐ.நா-வின் அமைப்புகள் இடையே விரிவான நெருங்கிய கூட்டினைவை ஏற்படுத்துகிறது. 

• ஐ.நா-வின் உலக தீவிரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒருங்கிணைப்பு குழுவானது தனது மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஐ.நாவின் தீவிரவாத தடுப்பு துணை பொதுச் செயலாளரின் கீழ் மேற்கொண்டு வருகிறது. 

• இது 2005இல் உருவாக்கப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு படைக்கு மாற்றாக எற்படுத்தப்பட்டது. 


சர்வதேச ஒப்பந்தங்கள்

முழுமையான அணு சோதனை தடை உடன்படிக்கை (CTBT)

அணு சோதனை தடை உடன்படிக்கை என்றால் என்ன ?

• இது எல்லாவிதமான ராணுவ மற்றும் சிவில் சார்ந்த அணு வெடிப்பு பரிசோதனைகளையும் தடை செய்யும் ஓர் பல்தேசிய உடன்படிக்கையாகும். 

• இது ஜெனிவாவில் நடந்த ஆயுத குறைப்பு மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1996இல் செப்டம்பர் 24 ஆம் தேதி ஐ.நாவின் பொதுச்சபையில் கையெழுத்திடப்பட்டது. 

• இவ்உடன்படிக்கையானது 183 நாடுகளின் கையெழுத்து மற்றும் 163 ஒப்புதல்களை மிகப் பெரும் ஆதரவுடன் பெற்ற ஆயுதக் குறைப்பிற்கான உடன்படிக்கையாகும். 

• இது அணு தொழில்நுட்ப ஆற்றலைக் கொண்ட எட்டு நாடுகளான சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், இஸ்ரேல், வட கொரியா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவின் ஒப்புதல் பெற்ற பின்பே நடைமுறைக்கு வந்தது.

• இந்த உடன்படிக்கையானது முழுமையான அணு ஆயுத சோதனை தடை (CTBTO) அமைப்பை ஏற்படுத்தியது. ஆஸ்திரியாவின் வியன்னாவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இவ்வமைப்பு இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளை உறுப்பு நாடுகள் பின்பற்றுவதை உறுதி செய்கிறது.


CTBT இல் இந்தியாவின் நிலை

• இவ்உடன்படிக்கைக்கு 1996இல் இந்தியா ஆதரவளிக்கவில்லை . பின்வரும் காரணங்களால், இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்காமலே உள்ளது. இந்த உடன்படிக்கை ஆயுதக்குறைப்பை முழுமையாக தடுக்கும் நோக்கில் இல்லை மற்றும் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்களுக்கு ஆதரவாக அவர்களின் ஆயுதக்குவிப்பை பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பதாகும். 

• மற்றோர் பிரச்சனையான கட்டாயமாக உள்நுழைதல் (EIF) என்பதை இந்தியா உரிமை மீறலாக கருதுவதால் இந்த சர்வதேச உடன்படிக்கையில் இருந்து தனது பங்கேற்பைதானாகவேவிலகிக்கொண்டது. நாடுகளின் ஒப்புதலைப் பெற்று இந்த உடன்படிக்கை உருவாக்கப்பட்ட போதே அதன் ஒரு பகுதியாக சர்வதேச கண்காணிப்பு முறையின் (IMS) முக்கிய விதியாக கட்டாயமாக உள்நுழைதல் (EIF) ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் காரணமாகவே இந்தியா சர்வதேச கண்காணிப்பு முறையில் (IMS) இருந்து தனது பங்கேற்பை திரும்பப் பெற்றுக் கொண்டது. 


அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் (NPT) 1968

• இதன் நோக்கமானது அணு ஆயுதம் மற்றும் ஆயுத தொழில்நுட்பம் பரவாமல் தடுப்பதாகும். மேலும் அணுசக்தியை அமைதியான வழியில் பயன்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது என்பதுடன் தனது எதிர்கால இலக்காக அணு ஆயுத குறைப்பு மற்றும் முழுமையான பொது ஆயுத குறைப்பை கொண்டுள்ளது. 

• இந்த ஒப்பந்தத்தில் இந்தியா, இஸ்ரேல், வடகொரியா, பாகிஸ்தான் மற்றும் தெற்கு சூடான் பங்கேற்கவில்லை. 


12th Political Science : Chapter 11 : International Organisations : Asian Development Bank in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 11 : சர்வதேச அமைப்புகள் : ஆசிய வளர்ச்சி வங்கி - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 11 : சர்வதேச அமைப்புகள்