Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | புத்தக வினாக்கள் விடைகள்

மரபியல் | அறிவியல் - புத்தக வினாக்கள் விடைகள் | 10th Science : Chapter 18 : Heredity

   Posted On :  29.07.2022 06:18 pm

10வது அறிவியல் : அலகு 18 : மரபியல்

புத்தக வினாக்கள் விடைகள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க. II. கோடிட்ட இடங்களை நிரப்புக. III. சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக. IV. பொருத்துக: V. ஒரிரு வாக்கியத்தில் விடையளி: VIII. குறு வினாக்கள் : VII. நெடு வினாக்கள்: VIII. உயர் சிந்தனைக்கான வினாக்கள்: (HOTS) IX. விழுமிய அடிப்படையிலான வினாக்கள்:

மரபியல் (அறிவியல்)

 

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

 

1. மெண்டலின் கருத்துப்படி அல்லீல்கள் கீழ்க்கண்ட பண்புகளைப் பெற்றுள்ளன.

அ) ஒரு ஜோடி ஜீன்கள்

ஆ) பண்புகளை நிர்ணயிப்பது

இ) மரபணுக்களை (ஜீன்) உருவாக்குவது

ஈ) ஒடுங்கு காரணிகள்

 

2. எந்நிகழ்ச்சியின் காரணமாக 9:3:3:1 உருவாகிறது?

அ) பிரிதல்

ஆ) குறுக்கே கலத்தல்

இ) சார்பின்றி ஒதுங்குதல்

ஈ) ஒடுங்கு தன்மை

 

3. செல் பகுப்படையும் போது, ஸ்பின்டில் நார்கள் குரோமோசோமுடன் இணையும் பகுதி.

அ) குரோமோமியர்

ஆ) சென்ட்ரோசோம்

இ) சென்ட்ரோமியர்

ஈ) குரோமோனீமா

 

4. சென்ட்ரோமியர் மையத்தில் காணப்படுவது ________________ வகை குரோமோசோம்.

அ) டீலோ சென்ட்ரிக்

ஆ) மெட்டா சென்ட்ரிக்

இ) சப்-மெட்டா சென்ட்ரிக்

ஈ) அக்ரோ சென்ட்ரிக்

 

5. டி.என்.ஏ வின் முதுகெலும்பாக ________________ உள்ளது.

அ) டீ ஆக்ஸி ரைபோஸ் சர்க்கரை

ஆ) பாஸ்பேட்

இ) நைட்ரஜன் காரங்கள்

ஈ) சர்க்கரை பாஸ்பேட்

 

6. ஒகசாகி துண்டுகளை ஒன்றாக இணைப்பது ________________.

அ) ஹெலிகேஸ்

ஆ) டி.என்.ஏ பாலிமெரேஸ்

இ) ஆர்.என்.ஏ பிரைமர்

ஈ) டி.என்.ஏ லிகேஸ்

 

7. மனிதனில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை ________________.

அ) 22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள்

ஆ) 22 ஆட்டோசோம்கள் மற்றும் 1 அல்லோசோம்

இ) 46 ஆட்டோசோம்கள்

ஈ) 46 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்கள்

 

8. பன்மய நிலையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம்களை இழத்தல் ________________ என அழைக்கப்படுகிறது.

அ) நான்மய நிலை

ஆ) அன்யூபிளாய்டி

இ) யூபிளாய்டி

ஈ) பல பன்மய நிலை

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

 

1. மெண்டலின் ஒரு ஜோடி வேறுபட்ட பண்புகள் அல்லீல்கள் என அழைக்கப்படுகின்றது.

2. ஒரு குறிப்பிட்ட பண்பின் (ஜீனின்) வெளித்தோற்றம் புறத்தோற்ற பண்பு எனப்படும்.

3. ஒவ்வொரு செல்லின் உட்கருவில் காணப்படும் மெல்லிய நூல் போன்ற அமைப்புகள் குரோமோசோம்கள் என அழைக்கப்படுகின்றன.

4. ஒரு டி.என்.ஏ இரண்டு பாலிநியூக்ளியோடைடு இழைகளால் ஆனது.

5. ஒரு ஜீன் அல்லது குரோமோசோம் ஆகியவற்றின் அமைப்பு அல்லது அளவுகளில் ஏற்படக்கூடிய பரம்பரையாகத் தொடரக்கூடிய மாற்றங்கள் சடுதி மாற்றம் என அழைக்கப்படுகிறது.

 

III. சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக.

 

1. மெண்டலின் இரு பண்பு கலப்பு விகிதம் F2 தலைமுறையில் 3:1 ஆகும்.

விடை: தவறு

மெண்டலின் இரு பண்பு கலப்பு விகிதம் F2 தலைமுறையில் 9:3:3:1.

2. ஒடுங்கு பண்பானது ஓங்கு பண்பினால் மாற்றப்படுகிறது.

விடை: சரி

3. ஒவ்வொரு கேமீட்டும் ஜீனின் ஒரே ஒரு அல்லீலைக் கொண்டுள்ளது.

விடை: சரி

4. ஜீன் அமைப்பில் வேறுபட்ட இரண்டு தாவரங்களைக் கலப்பினம் செய்து பெறப்பட்ட சந்ததி கலப்புயிரி ஆகும்.

விடை: சரி

5. சில குரோமோசோம்களில் டீலோமியர் எனப்படும் நீண்ட குமிழ் போன்ற இணையுறுப்பு காணப்படுகிறது.

விடை: தவறு

சில குரோமோசோம்களில் சாட்டிலைட் எனப்படும் நீண்ட குமிழ் போன்ற இணையுறுப்பு காணப்படுகிறது.

6. டி.என்.ஏ பாலிமெரேஸ் நொதியின் உதவியுடன் புதிய நியூக்ளியோடைடுகள் சேர்க்கப்பட்டு புதிய நிரப்பு டி.என்.ஏ இழை உருவாகிறது.

விடை: சரி

7. டவுன் நோய்க் கூட்டு அறிகுறி என்பது 45 குரோமோசோம்கள் உள்ள மரபியல் நிலை.

விடை: தவறு

டவுன் நோய்க் கூட்டு அறிகுறி என்பது 47 குரோமோசோம்கள் உள்ள மரபியல் நிலை.

 

IV. பொருத்துக:

 

1. ஆட்டோசோம்கள் - டிரைசோமி 21

2. இருமய நிலை - 9:3:3:1

3. அல்லோசோம்கள் 22 ஜோடி குரோமோசோம்கள்

4. டவுன் நோய்க் கூட்டு அறிகுறி - 2n

5. இருபண்புக் கலப்பு - 23வது ஜோடி குரோமோசோம்கள்

விடை:

1. ஆட்டோசோம்கள் 22 ஜோடி குரோமோசோம்கள்

2. இருமய நிலை - 2n

3. அல்லோசோம்கள் - 23வது ஜோடி குரோமோசோம்கள்

4. டவுன் நோய்க் கூட்டு அறிகுறி - டிரைசோமி 21

5. இருபண்புக் கலப்பு - 9:3:3:1

 

V. ஒரிரு வாக்கியத்தில் விடையளி:

 

1. ஈரிணை வேறுபட்ட பண்புகளைக் கொண்ட உயிரிகளில் கலப்பினம் செய்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஈரிணை வேறுபட்ட பண்புகளைக் கொண்ட உயிரினங்களில் கலப்பினம் செய்வது இருபண்பு கலப்பு எனப்படும்.

2. எந்தச் சூழ்நிலையில் இரண்டு அல்லீல்களும் ஒத்த நிலையில் இருக்கும்?

ஹோமோசைகள் சூழ்நிலையில் இரண்டு அல்லீல்களும் ஒத்த நிலையில் இருக்கும்.

3. ஒரு தோட்டப் பட்டாணிச் செடி இலைக் கோணத்தில் மலர்களைத் தோற்றுவிக்கிறது. மற்றொரு செடி நுனியில் மலர்களைத் தோற்றுவிக்கிறது. இவற்றுள் எது ஓங்கு பண்பைப் பெற்றிருக்கும்?

இலைக் கோணத்தில் மலர்களைத் தோற்றுவிப்பது ஓங்கு பண்பைப் பெற்றிருக்கும்.

4. மரபுவழியாக ஒரு குறிப்பிட்ட பண்பினைக் கடத்தும் டி.என்.ஏவின் பகுதிக்கு என்ன பெயர்?

மரபு வழியாக ஒரு குறிப்பிட்ட பண்பினைக் கடத்தும் டி.என்.ஏவின் பகுதி ஜீன் ஆகும்.

5. டி.என்.ஏவில் நியூக்ளியோடைடுகளை இணைக்கும் பிணைப்பின் பெயரை எழுதுக.

டி.என்.ஏவின் நியூக்ஸியோடைடுகள் இணைக்கும் பிணைப்பின் பெயர் பாஸ்போ-டை-எஸ்டர் பிணைப்பு ஆகும்.

 

VI. குறு வினாக்கள் :

 

1. மென்டல் தன் ஆய்விற்கு ஏன் தோட்டப் பட்டாணிச் செடியைத் தேர்ந்தெடுத்தார்?

1. இதில் இயற்கையாகவே தன் மகரந்தச்சேர்க்கை நடைபெறுவதால், தூய தாவரங்களைப் பெருக்கம் செய்வது எளிது.

2. இது ஓராண்டு (ஒரு பருவ) தாவரமாக இருப்பதால் வாழ்க்கைக் காலம் மிகக் குறுகியது. எனவே குறுகிய காலத்தில் பல தலைமுறைகளை விரைவில் அறிந்து கொள்ளலாம்.

3. இதில் அயல் மகரந்தச் சேர்க்கை செய்வது மிகவும் எளிது.

4. ஆழமாக வரையறுக்கப்பட்ட பல வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளது.

5. மலர்கள் அனைத்தும் இருபால் தன்மை கொண்டவை.

 

2. பீனோடைப் ஜீனோடைப் பற்றி நீவிர் அறிவது என்ன?

பீனோடைப்: ஒரு குறிப்பிட்ட பண்பின் வெளித் தோற்றம் பீனோடைப் எனப்படுகிறது.

ஜீனோடைப்: தாவரங்களின் ஜீன் ஆக்கமானது ஜீனோடைப் எனப்படுகிறது.

 

3. அல்லோசோம்கள் என்றால் என்ன?

மனிதனில் உள்ள குரோமோசோம்களில் 23வது ஜோடி குரோமோசோம் அல்லோசோம்கள் எனப்படுகிறது. இவை பால் குரோமோசோம்கள் என்றும் அழைக்கப்படுகிறது. பெண் இனச் செல்களில் 22+xx அமைப்பைப் பெற்றிருக்கும். ஆண் இனச் செல்களில் 22+xy அமைப்பைப் பெற்றிருக்கும்.

 

4. ஒகசாகி துண்டுகள் என்றால் என்ன?

டி.என்.ஏ இரட்டிப்பாதலில் பெற்றோர் இழையிலிருந்து உருவாக்கப்படும் டி.என்.ஏவின் சிறிய பகுதிகள் ஒகசாகி துண்டுகள் என அழைக்கப்படுகிறது.

 

5. தாவரங்கள் மற்றும் விலங்குகளில் யூபிளாய்டி நிலை சாதகமானதாக ஏன் கருதப்படுகிறது?

உயிரிகள் வழக்கமான இருமய (2n) குரோமோசோம்களை விட அதிக எண்ணிக்கையில் பெற்றுள்ள நிலை யூபிளாய்டி எனப்படும். நான்மய நிலையான உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் நன்மை பயக்கக்கூடியவை. ஏனெனில் நான்மய நிலை தாவரங்கள் பெரும்பாலும் அளவில் பெரிய பழம் மற்றும் பூக்களை விளைவிக்கும். எனவே தாவரங்கள் மற்றும் விலங்குகள் யூபிளாய்டி நிலை சாதகமாக கருதப்படுகிறது.

 

6. ஒரு தூய நெட்டைத் தாவரமானது (TT) தூய குட்டைத் தாவரத்துடன் கலப்பு செய்யப்படுகிறது. இதில் தோன்றும் F1 மற்றும் F2 தலைமுறை தாவரங்கள் எவ்வகை தன்மையுடையன என்பதை விளக்குக.


பெற்றோர் தலைமுறை (p) :

மெண்டல் தனது ஆய்விற்கு ஒரு தூய நெட்டைத் தாவரத்தையும் தூய குட்டைத் தாவரத்தையும் தேர்ந்தெடுத்தார்.

முதல் சந்ததி (F1) பெற்றோர்:

 தூய பெற்றோர் கலப்பின் மூலம் பெறப்பட்ட விதைகளிலிருந்து தோன்றும் தாவரங்கள் முதல் சந்ததி தாவரங்கள் ஆகும். அனைத்துத் தாவரங்களும் நெட்டைத் தன்மைக் கொண்ட ஒரு பண்புக் கலப்புயிரிகள்.

இரண்டாம் சந்ததி (தலைமுறை) F2:

 F1 சந்ததியின் ஒரு பண்புக் கலப்புயிரிகளைத் தன் மகரந்தச்சேர்க்கைக்கு உட்படுத்தும் போது நெட்டை மற்றும் குட்டைத் தாவரங்கள் 3:1 என்ற விகிதத்தில் தோன்றின. அவை 784 நெட்டைத் தாவரங்களும் 277 குட்டைத் தாவரங்களும் ஆகும். ஒரு குறிப்பிட்ட பண்பின் வெளித்தோற்றத்தைப் புறத்தோற்றம் (பீனோடைப்) என்கிறோம். எனவே புறத்தோற்ற விகிதம் 3:1 ஆகும்.

F2 சந்ததியில் மூன்று வகையான தாவரங்கள் தோன்றின.

கலப்பற்ற நெட்டை (ஹோமோசைகஸ்) TT-1  

கலப்பின நெட்டை (ஹெட்டிரோசைகஸ்) Tt -2

கலப்பற்ற குட்டை tt-1

தாரங்களின் ஜீனாக்கம் ஜீனோடைப் எனப்படும். எனவே ஒரு பண்புக் கலப்பின் ஜீனாக்க விகிதம் 1:2:1 

 

7. குரோமோசோமின் அமைப்பை விவரிக்கவும்.


சகோதரி குரோமேட்டிடுகள் என்று அழைக்கப்படும் இரண்டு ஒத்த இழைகளை உள்ளடக்கிய மெல்லிய, நீண்ட மற்றும் நூல் போன்ற அமைப்புகள், குரோமோசோம்கள் எனப்படும். சென்ட்ரோமியர், இரண்டு குரோமேட்டிடுகளையும் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் ஒன்றாக இணைக்கிறது. ஒவ்வொரு குரோமேட்டிடும், திருகு போல் சுருட்டப்பட்ட மெல்லிய குரோமோனீமா என்ற அமைப்பால் ஆனது. குரோமோனீமா தன் முழு நீளத்திற்கும் எண்ணற்ற மணி போன்ற குரோமோமியர்களைக் கொண்டுள்ளது. குரோமோசோம்கள் டி. என்.ஏ, ஆர்.என்.ஏ, குரோமோசோம் புரதங்கள் (ஹிஸ்டோன் மற்றும் ஹிஸ்டோன் அல்லாதவை) மற்றும் சில உலோக அயனிகள் ஆகியவற்றைக் கொண்டது. இந்தப் புரதங்கள் குரோமோசோம் கட்டமைப்பிற்கு ஆதாரமாக விளங்குகின்றன. ஒரு குரோமோசோம் கீழ்க்கண்ட பகுதிகளை உள்ளடக்கியது.

முதன்மைச் சுருக்கம்:

குரோமோசோமின் இரண்டு கரங்களும் இணையும் புள்ளி, முதன்மைச் சுருக்கம் அல்லது சென்ட்ரோமியர் ஆகும். செல் பிரிதலின் போது, ஸ்பின்டில் நார்கள் குரோமோசோம்களுடன் இணையும் பகுதி சென்ட்ரோமியர் ஆகும்.

இரண்டாம் நிலைச் சுருக்கம்:

சில குரோமோசோம்கள் ஏதேனும் சில பகுதிகளில் இரண்டாம் நிலைச் சுருக்கங்களையும் பெற்றிருக்கும் இந்தப் பகுதி உட்கருப் பகுதி அல்லது உட்கருமணி உருவாக்கும் பகுதி (உட்கருவில் உட்கருமணி உருவாக்கம்) என அழைக்கப்படுகிறது.

டீலோமியர்:

குரோமோசோமின் இறுதிப் பகுதி டீலோமியர் என அழைக்கப்படுகிறது. குரோமோசோமின் இரண்டு நுனிகளும் எதிரெதிர்த் தன்மை உடையன. இது அருகில் உள்ள குரோமோசோம்கள் ஒன்றுடன் ஒன்று சேருவதைத் தடுக்கிறது. டீலோமியர் குரோமோசோம்களுக்கு நிலைப்புத் தன்மையை அளித்துப் பராமரிக்கிறது.

சாட்டிலைட்

சில குரோமோசோம்களின் ஒரு முனையில் நீண்ட குமிழ் போன்ற இணையுறுப்பு காணப்படுகிறது. இந்த இணையுறுப்பு சாட்டிலைட் என அழைக்கப்படுகிறது. சாட்டிலைட்டைப் பெற்றுள்ள குரோமோசோம்கள், சாட் - குரோமோசோம்கள் (sat - chromosomes) என அழைக்கப்படுகின்றன.

 

8. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் டி.என்.ஏவின் பாகங்களைக் குறிக்கவும் அதன் அமைப்பை சுருக்கமாக விவரிக்கவும்.


1. டி.என்.ஏ மூலக்கூறு இரண்டு பாலிநியூக்ளியோடைடு இழைகளால் ஆனது.

2. இந்த இழைகள் இரட்டைச் சுருள் அமைப்பை உருவாக்குகின்றன. இவ்விழைகள் ஒன்றுக்கொன்று எதிர் இணை இயல்புடன் எதிரெதிர் திசைகளில் செல்கின்றன.

3. மையத்தில் உள்ள நைட்ரஜன் காரங்கள், சர்க்கரை - பாஸ்பேட் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகள் டி.என்.ஏவின் முதுகெலும்பாக உள்ளன.

4. நைட்ரஜன் காரங்கள் இணைவுறுதல், எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட விதத்திலேயே அமைகிறது. அவை எப்பொழுதும் ஹைட்ரஜன் பிணைப்புகளால் இணைக்கப்படுகின்றன.

* அடினைன் (A) தைமினுடன் (T) இரண்டு ஹைட்ரஜன் பிணைப்புகளால்

இணைக்கப்பட்டுள்ளது (A=T)

* சைட்டோசின் (C) குவானைனுடன் (G) மூன்று ஹைட்ரஜன் பிணைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளது. (C G)

இத்தகைய இணைவுறுதல் நிரப்பு கார இணைவுறுதல் என்று அழைக்கப்படுகிறது.

5. நைட்ரஜன் காரங்களுக்கு இடையேயான ஹைட்ரஜன் பிணைப்பு டி.என்.ஏவிற்கு நிலைப்புத் தன்மையைத் தருகிறது.

6. இரட்டைச் சுருள் அமைப்பின் ஒவ்வொரு சுற்றும் 34A° (3.4nm) அளவிலானது. ஒரு முழு சுற்றில் பத்து கார இணைகள் உள்ளன.

7. இரட்டைச் சுருளில் உள்ள நியூக்ளியோடைடுகள் பாஸ்போ டை எஸ்டர் பிணைப்புகளால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.


 

IX. நெடு வினாக்கள்:

 

1. தகுந்த எடுத்துக்காட்டுடன் இரு பண்புக் கலப்பை விளக்குக. இது ஒரு பண்புக் கலப்பிலிருந்து எவ்வகையில் வேறுபடுகிறது.

விடை:

இரண்டு இணை எதிரெதிரான பண்புகளைப் பற்றிய இனக் கலப்பு இருபண்பு கலப்பு எனப்படும். மெண்டல், விதையின் நிறம் மற்றும் வடிவத்தைத் தன் ஆய்வுக்குக் தேர்ந்தெடுத்தார். (விதையின் நிறம் - மஞ்சள் மற்றும் பச்சை விதையின் வடிவம் - உருண்டை மற்றும் சுருங்கியது.)

• மெண்டல் உருண்டை வடிவம் மற்றும் மஞ்சள் நிற விதையுடைய தாவரத்தை சுருங்கிய வடிவம் மற்றும் பச்சை நிற விதையுடைய தாவரத்துடன் கலப்பினம் செய்து கீழ்க்கண்ட முடிவுகளைக் கண்டறிந்தார்.

• மெண்டல், முதலில் தூய உருண்டை வடிவம் மற்றும் மஞ்சள் நிற விதையுடைய தாவரத்தை தூய சுருங்கிய வடிவம் மற்றும் பச்சை நிற விதையுடைய தாவரத்துடன் கலப்பு செய்யும்போது F1 சந்ததியில் கிடைத்த அனைத்துத் தாவரங்களும் உருண்டை மற்றும் மஞ்சள் நிற விதையுடைய தாவரங்களாகக் காணப்பட்டன. சுருங்கிய பச்சை நிற விதையுடைய தாவரங்கள் F1 ல் தோன்றவில்லை. இதிலிருந்து அவர் உருண்டை மற்றும் நிற விதையுடைய தாவரங்கள் ஓங்கு பண்புத் தாவரங்கள் எனவும் சுருங்கிய பச்சை நிற விதையுடைய தாவரங்கள் ஒடுங்கு பண்புத் தாவரங்கள் எனவும் கண்டறிந்தார்.

• முதல் சந்ததியில் தோன்றிய இரு பண்புக் கலப்புயிரியான உருண்டை வடிவ மஞ்சள் நிற விதைகளைத் தன் மகரந்தச் சேர்க்கைக்குட்படுத்தும் போது நான்கு விதமான தாவரங்கள் தோன்றின. அவை முறையே உருண்டை மஞ்சள் (9), உருண்டை பச்சை (3), சுருங்கிய மஞ்சள் (3), சுருங்கிய பச்சை (1), நிற விதைகளுடைய தாவரங்கள் எனவே இரு பண்புக் கலப்பின் புறத்தோற்ற விகிதம் 9:3:3:1 ஆகும்.

மேற்கண்ட ஆய்வின் அடிப்படையில் பண்புகளுக்கான காரணிகள் தனித்தன்மையுடனும் சார்பின்றியும் கேமீட்டுகளில் காணப்படுகின்றன. இக்காரணிகள் ஒவ்வொன்றும் சார்பின்றி தனித்தன்மை இழக்காமல் அடுத்த சந்ததிக்குச் செல்லும்.


ஒருபண்பு கலப்பு

ஒரு பண்புகளில் இரு மாற்றுத் தோற்றங்களை தனித்தனியாகப் பெற்ற இரு தாவரங்களை கலவியுறச் செய்வது.

எ.கா: தண்டின் உயரம்.

இருபண்பு கலப்பு

இரண்டு இணை எதிரெதிரான பண்புகளைப் பற்றிய இனக் கலப்பு செய்வது.

எ.கா: விதையின் நிறம் மற்றும் விதையின் வடிவம்.

 

2. டி.என்.ஏ அமைப்பு எவ்வாறு உருவாகியுள்ளது? டி.என்.ஏவின் உயிரியல் முக்கியத்துவம் யாது?

விடை:

டி.என்.ஏ என்பது மில்லியன் கணக்கான நியூக்ளியோடைடுகளை உள்ளடக்கிய மிகப் பெரிய மூலக்கூறு ஆகும். எனவே இது பாலி நியூக்ளியோடைடு (poly - பல) எனவும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நியூக்ளியோடைடுகளும் மூன்று கூறுகளை உள்ளடக்கியது.

1. ஒரு சர்க்கரை மூலக்கூறு - டீ ஆக்சிரைபோஸ் சர்க்கரை

2. ஒரு நைட்ரஜன் காரம்

டி.என்.ஏவில் உள்ள நைட்ரஜன் காரங்கள் இருவகைப்படும் அவை

அ) பியூரின்கள் (அடினைன் மற்றும் குவானைன்)

ஆ) பிரிமிடின்கள் (சைட்டோசின் மற்றும் தைமின்)

3. ஒரு பாஸ்பேட் தொகுதி

நியூக்ளியோசைடு மற்றும் நியூக்ளியோடைடு

நியூக்ளியோசைடு = நைட்ரஜன் + சர்க்கரை

நியூக்ளியோடைடு = நியூக்ளியோசைடு + பாஸ்பேட்

இடம்பெற்றுள்ள பியூரின்கள் மற்றும் பிரிமிடின்களுக்கு ஏற்ப நியூக்ளியோடைடுகள் உருவாகின்றன.  

1. டி.என்.ஏ மூலக்கூறு இரண்டு பாலிநியூக்ளியோடைடு இழைகளால் ஆனது.

2. இந்த இழைகள் இரட்டைச் சுருள் அமைப்பை உருவாக்குகின்றன. இவ்விழைகள் ஒன்றுக்கொன்று எதிர் இணை இயல்புடன் எதிரெதிர் திசைகளில் செல்கின்றன.

3. மையத்தில் உள்ள நைட்ரஜன் காரங்கள், சர்க்கரை - பாஸ்பேட் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகள் டி.என்.ஏவின் முதுகெலும்பாக உள்ளன.

4. நைட்ரஜன் காரங்கள் இணைவுறுதல், எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட

விதத்திலேயே அமைகிறது. அவை எப்பொழுதும் ஹைட்ரஜன் பிணைப்புகளால் இணைக்கப்படுகின்றன.

* அடினைன் (A) தைமினுடன் (T) இரண்டு ஹைட்ரஜன் பிணைப்புகளால்

இணைக்கப்பட்டுள்ளது (A=T)

* சைட்டோசின் (C) குவானைனுடன் (G) மூன்று ஹைட்ரஜன் பிணைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளது. (C G)

இத்தகைய இணைவுறுதல் நிரப்பு கார இணைவுறுதல் என்று அழைக்கப்படுகிறது.

                

5. நைட்ரஜன் காரங்களுக்கு இடையேயான ஹைட்ரஜன் பிணைப்பு டி.என்.ஏவிற்கு நிலைப்புத் தன்மையைத் தருகிறது.  

6. இரட்டைச் சுருள் அமைப்பின் ஒவ்வொரு சுற்றும் 34A° (3.4nm) அளவிலானது. ஒரு முழு சுற்றில் பத்து கார இணைகள் உள்ளன.  

7. இரட்டைச் சுருளில் உள்ள நியூக்ளியோடைடுகள் பாஸ்போ டை எஸ்டர் பிணைப்புகளால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

டி.என்.ஏ வின் முக்கியத்துவம்:

* இது மரபியல் தகவல்களை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறது.  

* இது புரதங்கள் உருவாக்கத்திற்குத் தேவையான தகவல்களைப் பெற்றுள்ளது.

* ஒரு உயிரினத்தின் வளர்ச்சி சார் மற்றும் வாழ்வியல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது.

 

3. புதிதாகப் பிறந்த குழந்தையின் பாலின நிர்ணயம் ஒரு தற்செயல் நிகழ்வு. தாயோ  தந்தையோ இதற்குப் பொறுப்பாக கருத முடியாது. குழந்தையின் பாலினத்தை எத்தகைய இன செல் இணைவு முடிவு செய்கிறது?

விடை:


மனிதனில் உள்ள 23 ஜோடி குரோமோசோம்களில் 22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி (23வது ஜோடி) பால் குரோமோசோம்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பெண் கேமீட்டுகள் அல்லது அண்ட செல்கள் ஒரே மாதிரியான குரோமோசோம் அமைப்பைப் (22+x) பெற்றுள்ளன ஆகவே, மனித இனத்தில் பெண் உயிரிகள் ஹோமோகேமீட்டிக் ஆகும்.

ஆண் கேமீட்டுகள் அல்லது விந்தணுக்கள் இரண்டு வகைப்படும். இரண்டு வகைகளும் சம விகிதத்தில் உருவாகின்றன. அவை (22+x) குரோமோசோம்களை உடைய விந்தணுக்கள் மற்றும் (22+y) குரோமோசோம்களை உடைய விந்தணுக்கள் மனித இனத்தில் ஆண்கள் ஹெட்டிரோகேமீட்டிக் என அழைக்கப்படுகின்றனர்.

அண்டம் (X). X - குரோமோசோம் கொண்ட விந்தணுவோடு இணைந்தால், XX உயிரி (பெண்) உருவாகிறது. அண்டம் (X). Y - குரோமோசோம் கொண்ட விந்தணுவோடு இணைந்தால் XY - உயிரி (ஆண்) உருவாகிறது. தந்தை உருவாக்கும் விந்தணுவே, குழந்தையின் பாலினத்தை நிர்ணயிக்கிறது. குழந்தையின் பாலினத்தை நிர்ணயிப்பதில் தாய்க்கு எவ்விதப் பங்கும் இல்லை.

எவ்வாறு குரோமோசோம்கள் பாலின நிர்ணயித்தலில் பங்கு கொள்கின்றன என்பதைப் பார்ப்போம். (22 + X) அண்டம் (22 + X) விந்தணுவுடன் கருவுறும் பொழுது பெண் குழந்தை (44 + XX) உருவாகிறது. (22 + X) அண்டம், (22 + Y) விந்தணுவுடன் கருவுறும் பொழுது ஆண் குழந்தை (44 + XY) உருவாகிறது.

 

X. உயர் சிந்தனைக்கான வினாக்கள்: (HOTS)

 

1. தோட்டப் பட்டாணிச் செடியிலுள்ள மலர்கள் அனைத்தும் தன் மகரந்த சேர்க்கை நடைபெறும் இரு பால் மலர்கள். ஆகவே அவற்றில் குறுக்கே கலத்தல் மூலம் கலப்பினம் செய்வது கடினம். இவ்வகைப் பட்டாணிச் செடியில் எவ்வாறு ஒரு பண்பு கலப்பை மெண்டல் மேற்கொண்டார்?

மெண்டல் 34 வகைக்குட்பட்ட 10,000 தாவரங்களைத் தனது சோதனைக்கு உட்படுத்தினார். ஒவ்வொரு தாவரமும் மற்ற தாவரத்திலிருந்து பல வகைகளில் வேறுபட்டிருப்பதைக் கண்டறிந்தார். இவ்வாறு அவர் ஏழு ஜோடி பண்புகளில் வேறுபட்ட தாவரங்களைத் தனது ஆய்வுக்கு தேர்ந்தெடுத்தார்.

மெண்டல் பயன்படுத்திய பட்டாணி தாவரத்தின் வேறுபட்ட பண்புகள்:


மெண்டல் இந்த வேறுபட்ட ஏழு பண்புகளிலிருந்து தன்னுடைய ஒருபண்பு கலப்பு சோதனையில் தண்டின் உயரப் பண்பினை தேர்ந்தெடுத்து ஆய்வு நடத்தினார். இரு பண்பு கலப்பு சோதனையில் விதையின் நிறம் மற்றும் விதையின் வடிவம் என்ற இரண்டு பண்புகளையும் தேர்வு செய்து ஆய்வினை மேற்கொண்டார்.

 

2. தூய நெட்டைப் பட்டாணிச் செடியானது தூய குட்டைப் பட்டாணிச் செடியுடன் கலப்பினம் செய்யப்பட்டது. இதன் மூலம் கிடைத்த F1 (முதல் சந்ததி) தாவரம் கலப்பினம் செய்யப்பட்டு F2(இரண்டாம் சந்ததி) தாவரங்களை உருவாக்கியது.

அ) F1 தாவரங்கள் எவற்றை ஒத்து இருந்தன?

F1 தாவரங்கள் அனைத்தும் நெட்டைத் தன்மை கொண்டவைகளாக காணப்பட்டன.

ஆ) F2 சந்ததியில் தோன்றிய நெட்டை மற்றும் குட்டைத் தாவரங்களின் விகிதம் என்ன?

F2 சந்ததியில் 3 நெட்டையான தாவரங்களும் 1 குட்டையான தாவரமும் தோன்றின அவற்றின் விகிதம் 3:1.

இ) எவ்வகைத் தாவரம் F1 மறைக்கப்பட்டு F2 சந்ததியில் மீண்டும் உருவானது?

குட்டை இனத்தாவரம் F1 தலைமுறையில் மறைக்கப்பட்டு F2 சந்ததியில் மீண்டும் உருவானது.

 

3. கவிதா ஒருபெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ‘அவரின் குடும்ப மரபினால் அவர் பெண் குழந்தைகளை மட்டும் பெற்றெடுக்க முடியும்' என அவாட குடும்ப உறுப்பினர்கள் கூறினர். அவரின் குடும்ப உறுப்பினர்களின் கூற்று உண்மையா? உங்கள் விடையை நியாயப்படுத்துக.

கவிதாவின் குடும்ப உறுப்பினர்கள் கூறிய கூற்று தவறானது. ஏனெனில் பெண்கேமிட்டுகள் அல்லது அண்ட செல்கள் ஒரே மாதிரியான குரோமோசோம் அமைப்பை (22 + x) அமைப்பைப் பெற்றுள்ளன. ஆண் கேமீட்டுகள் (22 + x) மற்றும் (22 + y) குரோமோசோம்கள் உள்ளடக்கியது அண்டம் (x) ஆனது X குரோமோசேம் கொண்ட விந்தணுவோடு இணைந்தால் xx உயிரி (பெண்) உருவாகிறது. அண்டம் (x) ஆனது y குரோமோசோம் கொண்ட விந்தணுவோடு இணைந்தால் xy உயிரி (ஆண்) உருவாகிறது. தந்தை உருவாக்கும் விந்தணுவே குழந்தையின் பாலினத்தை நிர்ணயிக்கிறது. குழந்தையின் பாலினத்தை நிர்ணயிப்பதில் தாய்க்கு எவ்வித பங்கும் இல்லை.(22+x) அண்டம் (22+x) விந்தணுவுடன் கருவுறும் போது பெண் குழந்தை (44+xx) உருவாகிறது. (22+x) அண்டம் (22+y) விந்தணுவுடன் கருவுறும் போது ஆண்குழந்தை (44+xy) உருவாகிறது. எனவே கவிதாவின் குடும்ப உறுப்பினர்களின் கூற்று தவறானது.

 

IX. விழுமிய அடிப்படையிலான வினாக்கள்:

 

1. எச்சூழலில் சார்பின்றி ஒதுங்குதல் விதியானது நல்ல முடிவைத் தரும்? ஏன்?

இரு வகையான காரணிகள் ஒரு ஜோடி பண்புகள் தோன்றுவதற்குக் காரணமாக உள்ளன. அவை அல்லீல்கள் அல்லது அல்லீலோ மார்புகள் எனப்படும்.

1. மெண்டல், முதலில் தூய உருண்டை வடிவம் மற்றும் மஞ்சள் நிற விதையுடைய தாவரத்தை தூய சுருங்கிய வடிவம் மற்றும் பச்சை நிற விதையுடைய தாவரத்துடன் கலப்பு செய்யும் போது F1 சந்ததியில் கிடைத்த அனைத்துத் தாவரங்களும் உருண்டை மற்றும் மஞ்சள் நிற விதையுடைய தாவரங்களாகக் காணப்பட்டன. சுருங்கிய பச்சை நிற விதையுடைய தாவரங்கள் F1ல் தோன்றவில்லை. இதிலிருந்து அவர் உருண்டை மற்றும் மஞ்சள் நிற விதையுடைய தாவரங்கள் ஓங்கு பண்புத் தாவரங்கள் எனவும் சுருங்கிய பச்சை நிற விதையுடைய தாவரங்கள் ஒடுங்கு பண்புத் தாவரங்கள் எனவும் கண்டறிந்தார்.

2. முதல் சந்ததியில் தோன்றிய இரு பண்புக் கலப்புயிரியான உருண்டை வடிவ மஞ்சள் நிற விதைகளைத் தன் மகரந்தச் சேர்க்கைக்குட்படுத்தும் போது நான்கு விதமான தாவரங்கள் தோன்றின. அவை முறையே உருண்டை மஞ்சள் (9), உருண்டை பச்சை (3), சுருங்கிய மஞ்சள் (3), சுருங்கிய பச்சை (1) நிற விதைகளுடைய தாவரங்கள். எனவே இரு பண்புக் கலப்பின் புறத்தோற்ற விகிதம் 9:3:3:1 ஆகும்.

மேற்கண்ட ஆய்வின் அடிப்படையில் பண்புகளுக்கான காரணிகள் தனித்தன்மையுடனும் சார்பின்றியும் கேமீட்டுகளில் காணப்படுகின்றன. இக்காரணிகள் ஒவ்வொன்றும் சார்பின்றி தனித்தன்மை இழக்காமல் அடுத்த சந்ததிக்குச் செல்லும்.



Tags : Heredity | Science மரபியல் | அறிவியல்.
10th Science : Chapter 18 : Heredity : Book Back Questions with Answers Heredity | Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : அலகு 18 : மரபியல் : புத்தக வினாக்கள் விடைகள் - மரபியல் | அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : அலகு 18 : மரபியல்