தயாரித்தல், பண்புகள், அமைப்பு, பயன்கள் - போரிக் அமிலம் | 12th Chemistry : UNIT 2 : p-Block Elements-I

   Posted On :  18.08.2022 05:04 pm

12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 2 : p-தொகுதி தனிமங்கள்-I

போரிக் அமிலம்

வேதியியல் : p-தொகுதி தனிமங்கள்-I : போரிக் அமிலம் : போரிக் அமிலம் தயாரித்தல்,போரிக் அமிலத்தின் பண்புகள், போரிக் அமிலத்தின் அமைப்பு, போரிக் அமிலத்தின் பயன்கள்

போரிக் அமிலம் (H3BO3 அல்லது B(OH)3]: 


தயாரித்தல்: 

போராக்ஸ் மற்றும் கோலிமனைட் ஆகியவற்றிலிருந்து போரிக் அமிலத்தை பிரித்தெடுக்க இயலும்

Na2B4O7 + H2SO4 + 5H2O → Na2SO4 + 4H3BO3 

Ca2B6O11 + 11H2O + 4SO2 → 2Ca(HSO3)2+ 6H3BO3


பண்புகள்:

போரிக் அமிலமானது நிறமற்ற ஒளிபுகும் படிகமாகும். இது ஒரு வலிமை குறைந்த ஒருகாரத்துவ அமிலம். மேலும் இது புரோட்டானை வழங்குவதற்கு பதிலாக ஹைட்ராக்ஸில் அயனியை ஏற்றுக்கொள்கிறது.

B(OH)3 + 2H2O ↔ H3O+ + [B(OH)4]-

இது சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைபட்டு சோடியம் மெட்டாபோரேட் மற்றும் சோடியம் டெட்ராபோரேட்டை உருவாக்குகிறது.

H3BO3 + NaOH → NaBO2 + 2H2O

4H3BO3 + 2NaOH → Na2B4O7+ 7H2

வெப்பத்தின் விளைவு:

போரிக் அமிலத்தை வெப்பப்படுத்தும்போது, 373K வெப்பநிலையில் மெட்டா போரிக் அமிலத்தையும், 413K வெப்பநிலையில் டெட்ரா போரிக் அமிலத்தையும் தருகிறது. செஞ்சூட்டு நிலைக்கு வெப்பப்படுத்தும்போது கண்ணாடி போன்ற போரிக் நீரிலியை உருவாக்குகிறது.


அம்மோனியாவுடன் வினை:

அம்மோனியா முன்னிலையில் யூரியா உடன் போரிக் அமிலத்தை சேர்த்து 800 - 1200 K வெப்பநிலையில் உருக்கும்போது போரான் நைட்ரைடு கிடைக்கிறது.

எத்தில்போரேட் ஆய்வு:

அடர் கந்தக அமிலத்தின் முன்னிலையில், போரிக் அமிலம் அல்லது போரேட் உப்பை எத்தில் ஆல்கஹாலுடன் வெப்பப்படுத்தும்போது ட்ரைஎத்தில்போரேட் எனும் எஸ்டர் உருவாகிறது. இந்த எஸ்டரின் ஆவி பச்சை நிற சுடருடன் எரிகிறது, மேலும் இது போரேட்டை கண்டறிய பயன்படும் ஒரு வினையாகும்.


குறிப்பு: ட்ரைஆல்கைல் போரேட் ஆனது டெட்ரா ஹைட்ரோ ஃபியூரானில் கரைந்த சோடியம் ஹைட்ரைடுடன் வினைப்பட்டு Na[BH(OR)3) எனும் அணைவுச் சேர்மத்தை தருகிறது, இது வலிமை மிகுந்த ஒடுக்கும் காரணியாக செயல்படுகிறது.

போரான் ட்ரைபுளூரைடு உருவாதல்:

போரிக் அமிலமானது அடர் கந்தக அமிலத்தின் முன்னிலையில் கால்சியம் புளூரைடுடன் வினைப்பட்டு போரான் ட்ரைபுளூரைடைத் தருகிறது.

3CaF2 + 3H2SO4 + 2B(OH)3 → 3CaSO4 + 2BF3 + 6H2

போரிக் அமிலத்தை, சோடா சாம்பலுடன் வெப்பப்படுத்தும்போது போராக்ஸ் உருவாகிறது.

Na2CO3 + 4B(OH)3 → Na2B4O7 + CO2 + 6H2O


போரிக் அமிலத்தின் அமைப்பு:

போரிக் அமிலமானது, இருபரிமாண அடுக்கு அமைப்பைக் கொண்டுள்ளது. இது [BO3]3- அலகை கொண்டுள்ளது. இந்த அலகுகள் ஹைட்ரஜன் பிணைப்புகளால் படம் 2.2 இல் காட்டியுள்ளவாறு ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டுள்ளன.



போரிக் அமிலத்தின் பயன்கள்:

1. பளபளப்பான மண்பாண்டங்கள், எனாமல், மற்றும் நிறமிகள் தயாரித்தலில் போரிக் அமிலம் பயன்படுகிறது

2. இது புரைதடுப்பானகவும், கண் மருந்தாகவும் பயன்படுகிறது

3. இது உணவு பாதுகாப்பானகவும் பயன்படுகிறது.



Tags : Preparation, Properties, Structure, Uses தயாரித்தல், பண்புகள், அமைப்பு, பயன்கள்.
12th Chemistry : UNIT 2 : p-Block Elements-I : Boric acid Preparation, Properties, Structure, Uses in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 2 : p-தொகுதி தனிமங்கள்-I : போரிக் அமிலம் - தயாரித்தல், பண்புகள், அமைப்பு, பயன்கள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வேதியியல் : அத்தியாயம் 2 : p-தொகுதி தனிமங்கள்-I