Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | அல்லியம் சீபா கலைச்சொற்களால் விளக்கம்

தாவரவியல் - அல்லியம் சீபா கலைச்சொற்களால் விளக்கம் | 11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany

   Posted On :  06.07.2022 08:03 am

11 வது தாவரவியல் : அலகு 5 : வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்

அல்லியம் சீபா கலைச்சொற்களால் விளக்கம்

APG வகைப்பாட்டின்படி தற்போது இக்குடும்பத்தில் லிலியம் மற்றும் டுலிப்பா மட்டுமே உள்ளன. மற்ற பேரினங்கள் பல குடும்பங்களில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இக்குடும்பத்தில் ஏறக்குறைய 15 பேரினங்களும், 550 சிற்றினங்களும் உலகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவிக் காணப்படுகின்றன.

வளரியல்பு: பெரும்பாலும் பலபருவச் சிறு செடிகள், நிலையான கிளைத்த நிலமட்டத்தண்டுச் செடி (பாலிகோனேட்டம்), குமிழ்த்தண்டு (லில்லியம்), கந்தம் (கால்சிகம்) மரத்தன்மையுடைய குற்று தாவரம் (யுக்கா மற்றும் டிரசினா), கட்டைத்தன்மையுடைய ஏறுகொடிகளாகக் காணப்படுகின்றன, ஸ்மைலாக்ஸில் இலையடிச் செதில்கள் பற்றுக் கம்பியாக மாறி ஏறுகொடிகளாக வளர்கின்றன. மரமாகவும் (ஜான்ந்தோர்ரியா), சதைப்பற்றுள்ளவையாகவும் (அலோ) காணப்படுகின்றன.

வேர்: வேற்றிட சல்லிவேர்த்தொகுப்பு மற்றும் பொதுவாகச் சுருங்கும் தன்மையுடையவை. 

குறிப்பு: பெந்தாம் மற்றும் ஹீக்கரின் வகைப்பாட்டின்படி லில்லியேசி குடும்பம், அல்லியம், குளோரியோஸா, ஸ்மைலாக்ஸ், அஸ்பராகஸ், சில்லா, அலோ, டிரசினா போன்ற பேரினங்களை உடையது. ஆனால் APG வகைப்பாட்டின்படி தற்போது இக்குடும்பத்தில் லிலியம் மற்றும் டுலிப்பா மட்டுமே உள்ளன. மற்ற பேரினங்கள் பல குடும்பங்களில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

தண்டு: பொதுவாகத் தண்டு தரைக்கீழ்க் குமிழ்த் தண்டு, சிலவற்றில் மட்டநிலத்தண்டுடனும், நிமிர்ந்த நிலத்தின் மேல் காணப்படும் தண்டினையும் உடையது, நிமிர்ந்தது (டிரசினா) அல்லது ஏறுகொடிகளாக (ஸ்மைலாக்ஸ்) உள்ளன. ரஸ்கஸ் தாவரத்தில் கிளைகள் இறுதியில் இலைத்தொழில் தண்டாக (ஃபில்லோகிளாடு) மாறியுள்ளது. அஸ்பராகஸ் தாவரத்தில் தண்டானது கிளாடோடாக மாறியுள்ளது, இலைகள் செதில்களாகச் சிறுத்து உருமாறியுள்ளன.

இலை: வேரண்மை இலைகள் (லில்லியம்) தண்டின் மீது அமைந்த காலைன் (டிரசினா), பொதுவாக மாற்றிலையடுக்கமைவு, எதிரிலையடுக்கமைவு (குளோரியோஸா). சிலசமயங்களில் சதைப்பற்றுள்ளவை மற்றும் உள்ளீடற்ற இலைகள் செதில்களாக மாற்றமடைந்துள்ளன. (ரஸ்கஸ் மற்றும் அஸ்பராகஸ்), பொதுவாக இணைப்போக்கு நரம்பமைப்பு காணப்படுகிறது. ஆனால் ஸ்மைலாக்ஸ் தாவரத்தில் வலைப்பின்னல் நரம்பமைப்பு காணப்படுகிறது. இலைகள் பொதுவாக இலையடிச் செதில் அற்றது. ஆனால் ஸ்மைலாக்ஸ் தாவரத்தில் இலையின் அடிபாகத்திலிருந்து இரண்டு பற்றுக் கம்பிகள் தோன்றுகின்றன. எனவே இவை இலையடிச் செதில்களின் மாற்றுருவாகக் கருதப்படுகிறது.

மஞ்சரி: மலர்கள் பொதுவாகத் தனித்த அல்லது கிளைத்தரெசிமோஸ் வகை (அஸ்போடிலஸ்) ஸ்பைக் (அலோ) பெரிய நுனியிலமைந்த பெரிய கூட்டு ரசீம் (பானிக்கிள்) (யுக்கா), தனித்து இலைக்கோணத்தில் அமைந்தவை (குளோரியோஸா), தனித்த மற்றும் நுனியிலமைந்தவை (டுலிப்பா).


மலர்கள் : பொதுவாகப் பகட்டான அழகிய மலர்கள், காம்புடைய மலர்கள், பூவடிச்செதிலுடையது, பூக்காம்பு செதில்களற்றது (டயனெல்லா மற்றும் லில்லியம் தவிர) இருபால் தன்மையுடையது, ஆரச்சீர் உடையது. மூவங்கமலர், சூலக மேல்மலர், அரிதாக ஒருபால் மலர் (ஸ்மைலாக்ஸ்) மற்றும் ஒருபால் மலர்த்தாவரங்கள். அரிதாக நான்கங்க மலர்கள் (மையாந்திமம்) சற்றுச் சாய்வான இருபக்கச்சீர் கொண்டவை (லில்லியம்) மற்றும் மேல் மட்டச் சூலகப்பையுடையவை.

பூவிதழ்வட்டம் : பூவிதழ்கள், அடுக்கிற்கு 3 வீதம் இரண்டு அடுக்குகளையுடையது இணையாதவை அல்லது அரிதாக இணைந்த பூவிதழ்கள் (அலோ). பொதுவாக வேறுபாடற்ற அல்லிகள் போன்றோ அல்லது சிலசமயம் வேறுபாடற்ற புல்லிகள் போன்றோ காணப்படும். வெளிவட்டத்தின் தனித்த பூவிதழ் அச்சு விலகி வெளிப்புறம் நோக்கிக் காணப்படும். தொடு இதழ் அல்லது தழுவு இதழ் அமைவு, பாரிஸ் குவாட்ரிஃபோலியா தாவரத்தில் பூவிதழ்கள் 6 - க்கும் அதிகமாகக் காணப்படுகின்றன.

மகரந்தத்தாள் வட்டம் : மகரந்தத்தாள் 6, அடுக்கிற்கு 3 வீதம் இரண்டு அடுக்குகளில் அமைந்துள்ளன. அரிதாக மகரந்தத்தாள் 3 (ரஸ்கஸ்) 4 (மையான்திமம்) அல்லது 12 வரை இருக்கும், தனித்த மகரந்தத்தாள்கள், பூவிதழ்களுக்கு எதிராக அமைந்துள்ளன. சிலவற்றில் பூவிதழுடன் ஒட்டியவை, மகரந்தக்கம்பிகள் தனித்தவை அல்லது மையத்தில் இணைந்தவை, மகரந்தப்பை இருமடல்களையுடையவை, அடியிணைந்தவை, அல்லது சூழல் அமைப்புடையவை. வெளிநோக்கியவை அல்லது உள்நோக்கியவை, பொதுவாக நீள்வாக்கில் வெடிப்பவை, சில சமயங்களில் நுனிமூலம் வெடிப்பவை. அரிதாக மகரந்தத்தாள் வெளிவட்ட பூவிதழோடு இணைந்தவை (ரஸ்கஸ்).

சூலக வட்டம் : மூன்று சூலக இலைகளையுடையது. சூலக இலைகள் இணைந்தவை, ஒற்றைச் சூலக இலை மலரின் அச்சு விலகிக் காணப்படுகிறது. மேல்மட்டச் சூலகப்பையுடன் மூன்று சூலக அறைகள், எண்ணற்ற சூல்கள் இரண்டு வரிசையில் அச்சு சூல் ஒட்டு முறையில் அமைந்துள்ளது. பொதுவாகச் சூல்தண்டு ஒன்று, சூல்முடி ஒன்று அல்லது மூன்று அரிதாகக் கீழ்மட்டக் சூலகப்பை (ஹீமோடோரம்) சூலகத்தில் தடுப்புச்சுவர் தேன் சுரப்பிகள் காணப்படுகிறது.

கனி : பொதுவாகத் தடுப்புச்சுவர் வழி (அ) அறைவழி வெடிகனி அல்லது சதைக்கனி எ.கா. அஸ்பராகஸ் மற்றும் ஸ்மைலாக்ஸ்.


அல்லியம் சீபா கலைச்சொற்களால் விளக்கம்


வளரியல்பு : பல பருவக் குமிழ் தண்டுடைய சிறுசெடி.

வேர்: வேற்றிட சல்லிவேர்த் தொகுப்பு தண்டு: தரைக்கீழ்க் குமிழம்.

இலை : தரைக்கீழ்க் குமிழ் தண்டிலிருந்து கொத்தான வேரண்மை இலையமைவு காணப்படுகிறது. உருளைவடிவிலும், சதைப்பற்றுடன் அகன்ற இலை அடி உறையுடன் உள்ளன. இணை நரம்பமைவு காணப்படுகிறது.

மஞ்சரி : ஸ்கேப்பிஜிரஸ் வகை. அதாவது மஞ்சரியின் அச்சானது (மஞ்சரிகாம்பு) தரையிலிருந்து உருவாகி அதன் நுனியில் கொத்தாகப் பூக்களை உருவாக்குகிறது. பூக்காம்பு சமஅளவு நீளமுடையவை. மஞ்சரி அச்சின் நுனியில் உருவாகும் அனைத்துப் பூக்களும் சம அளவு உடையவை.

மலர்: சிறியது, வெள்ளை நிறம் பூவடிச் செதிலுடையது, பூக்காம்புச் செதிலற்றவை, பூக்காம்புடையது, முழுமையானது, மூவங்கமலர், ஆரச்சீருடையது மற்றும் சூலக மேல் மலர், மகரந்தம் முதலில் முதிரும் தன்மையுடையன.

பூவிதழ் வட்டம் : பூவிதழ்கள் 6, அடுக்கிற்கு 3 வீதம் இரு அடுக்குகளில் உள்ளன. இணைந்த பூவிதழ்கள், தொடு இதழ் அமைவு முறையில் அமைந்துள்ளது.

மகரந்தத்தாள் வட்டம் : மகரந்தத்தாள் 6, அடுக்கிற்கு 3 வீதம் இரு அடுக்குகளில் உள்ளன. பூவிதழில் ஒட்டியவை, மகரந்தாள்கள் தனித்தவை, இதழ்களுக்கு எதிராக அமைந்துள்ளன. மகரந்தப்பைகள் இரு அறைகளையுடையவை, அடி ஒட்டிய மகரந்தக்கம்பி, உள்நோக்கியவை, நீள்வாக்கில் வெடிப்பவை.

சூலக வட்டம் : மூன்று இணைந்த சூலக இலைகள், மூன்று சூலக அறைகள், சூலக அறைக்கு இரண்டு சூல்கள் வீதம் அச்சு சூல் ஒட்டு முறையில் அமைந்துள்ளன. மேல்மட்டச் சூலகப்பை, சூலகத் தண்டு தனித்தது, மென்மையானது மற்றும் தனித்த சூலக முடியுடையது.

கனி : அறை வெடிகனி.

விதை: கருவூண் உடையது.

மலர் சூத்திரம்: 

Tags : தாவரவியல்.
11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany : Botanical description of Allium cepa in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 5 : வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல் : அல்லியம் சீபா கலைச்சொற்களால் விளக்கம் - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 5 : வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்