Home | 7 ஆம் வகுப்பு | 7வது சமூக அறிவியல் | தமிழகத்தில் பௌத்தம்

மூன்றாம் பருவம் அலகு -3 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - தமிழகத்தில் பௌத்தம் | 7th Social Science : History : Term 3 Unit 3 : Jainism, Buddhism and Ajivika Philosophy in Tamil Nadu

   Posted On :  19.04.2022 02:12 am

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : மூன்றாம் பருவம் அலகு -3 : தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

தமிழகத்தில் பௌத்தம்

புத்தரின் உண்மையான பெயர் சித்தார்த்த சாக்கிய முனி கௌதமர் என்பதாகும். ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தால் "கௌதமர் சாக்கிய இனக்குழுவைச் சேர்ந்தவர், மேலும் அவர் முழுநிறைவு எனும் இலக்கை எட்டியவர்" எனப் பொருள்படும்.

தமிழகத்தில் பௌத்தம்


பௌத்தம்

புத்தரின் உண்மையான பெயர் சித்தார்த்த சாக்கிய முனி கௌதமர் என்பதாகும். ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தால் "கௌதமர் சாக்கிய இனக்குழுவைச் சேர்ந்தவர், மேலும் அவர் முழுநிறைவு எனும் இலக்கை எட்டியவர்" எனப் பொருள்படும். கௌதம புத்தர் மகாவீரரின் சமகாலத்தவர் ஆவார். அவரது தந்தையார் இன்றைய நேபாளத்திற்கு அருகேயுள்ள ஒரு பகுதியில் சாக்கிய இனக்குழுவின் தலைவராக ஆட்சிசெய்து வந்தார். கௌதமர் பழைய மதங்களின் குருமார்களிடமிருந்து தான் கற்றுக்கொள்வதற்கு ஏதுவுமில்லை எனத் தெரிந்து கொண்டார். துறவற வாழ்க்கையை மேற்கொள்வதே வீடுபேறு எனப்படும் முக்தியை அடைவதற்கான ஒரேவழி என மதங்கள் அறிவித்தன. ஆனால் துறவுவாழ்க்கை மேற்கொண்ட பின்னரும் கௌதமரால் எங்கிருந்தும் உண்மைக்கான பொருளை உணரமுடியவில்லை. ஒருநாள் இரவு அவர் ஒரு போதிமரத்தின் கீழ் அமர்ந்து தனது சந்தேகங்கள், தனிமை ஆகியவை பற்றி சிந்தனை வயப்பட்டிருந்த வேளையில் ஒரு பேரமைதி அவர் மீது நிலவியது. விளைவாக கௌதமர் எனும் துறவி புத்தர் எனும் ஞானியானார். இறுதியில் மானுடத் துயரங்கள் குறித்த புதிரையும் அதற்கான காரணங்களையும், களைவதற்கான வழிகளையும் தெரிந்து கொள்வதில் வெற்றிபெற்றார். அரச வாழ்வு (மிகை ஆர்வமும் இன்ப நுகர்வும்) துறவு வாழ்வு (தன்னடக்க நிலையை எய்துதல்) ஆகிய இரண்டுமே தவறு என உறுதிபடக் கூறிய அவர் இவை இரண்டிற்கும் இடைப்பட்டதைக் கண்டறிந்தார். அவருடைய இடைப்பட்ட வழி எண்வகை வழிகளை அடித்தளமாகக் கொண்டதாகும். அவை நல்ல எண்ணங்கள், நல்ல குறிக்கோள்கள், அன்பான பேச்சு, நன்னடத்தை, தீது செய்யா வாழ்க்கை, நல்ல முயற்சி, நல்ல அறிவு, நல்ல தியானம் என்பனவாகும்.

புத்தர் கடவுளின் புகழைக் கற்றுக் கொடுக்கவில்லை. ஆனால் அன்பின் வலிமையைக் கற்றுக் கொடுத்தார். அனைத்து மனிதர்களும் 'சமமான உரிமைகளுடன் பிறக்கின்றனர் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். அவர் நீண்ட பயணங்களை மேற்கொண்டு தனது செய்திகளைத் தொலைதூரப் பகுதிகளில் பரப்பினார். புத்தர் தனது போதனைகளை பிராகிருத மொழியில் பரப்புரை செய்தார். புத்தரின் நான்கு பேருண்மைகள் பின்வருமாறு:

1. வாழ்க்கை துயரம், வயோதிகம், நோய், இறுதியில் மரணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

2. துயரங்கள் ஆசையினாலும் வெறுப்பினாலும் ஏற்படுகின்றன.

3. ஆசையைத் துறந்துவிட்டால் துயரங்களை வென்று மகிழ்ச்சியை அடையலாம்

4. ஒருவர் எண்வகை வழிகளைப் பின்பற்றினால் உண்மையான மகிழ்ச்சியும், நிறைவும் கைவரப்பெறலாம்.


பௌத்த இலக்கியங்கள்

புத்தருடைய போதனைகள் நீண்ட காலத்திற்கு ஆசிரியர்களின் நினைவாற்றல் வழியாக சீடர்களுக்குக் கற்றுத்தரப்பட்டது. ஏறத்தாழ கி.மு.80இல் அவை எழுதப்பட்டன. அவை பாலி மொழியில் எழுதப்பட்டன. பாலிமொழியில் எழுதப்பட்ட திரிபிடகா எனும் பௌத்தப் பொதுவிதிகள் மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளன. அவை முன்று கூடைகள் என்றும் அழைக்கப்பட்டன. அவை: வினய பிடகா, சுத்த பிடகா, அபிதம்ம பிடகா.

வினய பிடகா: இதில் பௌத்தத் துறவிகளுக்கான (பிட்சுக்கள்) விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன. தூய்மையான நடத்தையைப்பெற இவை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

சுத்த பிடகா: விவாதங்களைச் சான்றுகளாகக்கொண்டு பௌத்தத்தின் மூலக் கோட்பாடுகளைக் கூறுகின்றது.

அபிதம்ம பிடகா: இது நன்னெறிகள், தத்துவம், நுண்பொருள் கோட்பாடு ஆகியன குறித்து விளக்குவதாகும்

பொதுவிதிகளைப் பற்றிக் கூறுகிற ஏனைய பௌத்த நூல்கள்:

ஜாதகங்கள்: பௌத்த இலக்கியங்களில் காணப்படும் புத்தருடைய வாழ்க்கை தொடர்பான பல்வேறு கதைகளைக் கூறும் நூல்

புத்தவம்சா: இது கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ள மரபுவழிக் கதையாகும். கௌதமருக்கு முன்பாக வாழ்ந்ததாக நம்பப்படுகிற 24- புத்தர்களின் வாழ்க்கையையும் செயல்பாடுகளையும் இது எடுத்துரைக்கின்றது. பொதுவிதிகள், கோட்பாடுகள் குறித்து விளக்கும் நூல்களைத் தவிர பாலி மொழியில் எழுதப்பட்ட நூல்கள் நீண்ட வரிசை கொண்டதாக உள்ளது. கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை அவற்றில் அடங்கும்.

* மிலிந்தபன்கா - அதாவது 'மிலிந்தாவின் கேள்விகள்' எனப் பொருள். கிரேக்க - பாக்டீரியன் அரசன் மிலிந்தா என்பவருக்கும் பௌத்த பிட்சுவான நாகசேனர் என்பவருக்குமிடையே பௌத்தத்தின் சில அம்சங்கள் குறித்து நடைபெற்ற உரையாடலைக் கொண்டுள்ளது. இதன் மூலம், சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. 

* இலங்கையின் புகழ்பெற்ற வரலாற்றுத் தொகுப்புகளான மகாவம்சம், தீபவம்சம் ஆகியனவற்றுள், மகாவம்சம் இலங்கை உட்பட இந்தியத் துணைக்கண்டத்தின் அரச குலங்களைப் பற்றி கூறுகிறது. தீபவம்சம் புத்தருடைய போதனைகளையும் அவற்றைப் பரப்பியோர் இலங்கைக்கு வருகை புரிந்ததைப்பற்றியும் பேசுகிறது. 

* புத்தகோசாவால் எழுதப்பட்ட விசுத்திமக்கா பிற்காலத்தைச் சேர்ந்த ஒரு நூலாகும். இவரே முதல் பௌத்த உரையாசிரியர் ஆவார். 

* மகாயான பௌத்தத்தின் எழுச்சியைத் தொடர்ந்து பௌத்த சமயத்துள் சமஸ்கிருத மொழி முக்கிய இடத்தை வகிக்கத் தொடங்கியது. இருந்தபோதிலும் ஒருசில சமஸ்கிருத நூல்கள் ஹீனயானப் பிரிவினராலும் படைக்கப்பட்டன. அஸ்வகோஷரால் எழுதப்பட்ட புத்தசரிதா சமஸ்கிருதத்தில் இதிகாச பாணியில எழுதப்பட்ட நூலாகும். இந்நூல் கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாற்றை இயம்புகிறது. 


தமிழகத்தில் பௌத்தம்

தமிழகத்தில் பௌத்தமானது இலங்கையைச் சேர்ந்த சமயப் பரப்பாளர்களால் பரப்பப்பட்டதாக நம்பப்படுகிறது. இதற்குச் சான்றாக பாண்டிய நாட்டில் சில நினைவுச் சின்னங்கள் உள்ளன. அவை கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும். குகைகளில் காணப்படும் அவை பஞ்ச பாண்டவ மலை என அழைக்கப்படுகிறது. இக்காலப் பகுதியில் தழைத்தோங்கிய பௌத்தமானது சமணம், ஆசீவகம் இந்து மதத்தின் பல்வேறு பிரிவுகள் ஆகியவற்றுடன் நட்பமைதியுடன் கூடிச் செயல்பட்டுள்ளது. பக்தி இயக்க காலம் முதல் பக்தி இயக்கப் பெரியோர்கள் பௌத்தத்தை எதிர்த்தனர். பௌத்தம் அரசர்கள் அளித்து வந்த ஆதரவை இழக்கத் தொடங்கியது. தமிழகத்தில் பௌத்தம் சந்தித்த சவால்கள் குறித்த சான்றுகளைச் சைவ நாயன்மார்களின் தேவாரப் பாடல்களும் வைணவ ஆழ்வார்களால் இயற்றப்பட்ட நாலாயிர திவ்விய பிரபந்தமும் முன்வைக்கின்றன. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சீனப் பயணியான யுவான்சுவாங் தென்னிந்தியா வந்தபோது பௌத்தம் ஏறத்தாழ சரிவுற்ற நிலையிலிருந்தது.

பௌத்தம் முற்றிலுமாக மறைந்து போனது என்ற ஒரு பொதுக் கருத்து உள்ளது. ஆனால் அப்படியல்ல, வீரசோழியம் எனும் நூல் (11 ஆம் நூற்றாண்டில் பிற்காலச் சோழர்கள் காலத்தில் பௌத்தர் ஒருவரால் எழுதப்பட்ட இலக்கண நூல்) கிடைக்கப் பெற்றமையும், நாகப்பட்டினத்தில் கிடைத்துள்ள 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தரின் செப்புச் சிலைகளும் பின்வந்த காலங்களிலும் பௌத்தம் இருந்தமையை உறுதி செய்கின்றன. சேலம் மாவட்டம் தியாகனூர் கிராமத்தில் கிடைத்திருக்கும் புத்தரின் சிற்பங்கள் இக்கருத்திற்கு மேலும் வலுச் சேர்க்கின்றன.


நாம் முன்னர் பார்த்தவாறு பல்லவர் காலம் முதலாகவே பௌத்தம் சைவ, வைணவச் சமயங்களின் சவால்களை எதிர்கொண்டது. இதில் நாகப்பட்டினம் மட்டுமே விதிவிலக்காகத் திகழ்ந்தது. அங்கே பௌத்தத்தை சோழ அரசர்கள் ஆதரித்தனர். அவ்வாதரவு சமயக் காரணங்களுக்காக அல்ல, மாறாக அரசியல் காரணங்களுக்காக அளிக்கப்பட்ட ஆதரவாகும். நாகப்பட்டினத்தில் ஸ்ரீவிஜயா அரசரால் கட்டப்பட்ட சூடாமணி விகாரைக்கு ராஜராஜ சோழன் ஆதரவளித்தார் பிற் காலத்தில் அது அழிவுக்குள்ளாயிற்று கூலவாணிகன் சீத்தலை சாத்தனாரால் எழுதப்பட்ட மணிமேகலை முற்றிலுமாக தமிழ் பௌத்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காப்பியமாகும். சமஸ்கிருதம், பாலி ஆகிய மொழிகளில் இருந்த பௌத்த சமயம் தொடர்பான சொற்களை அவர் தமிழில் மொழியாக்கம் செய்து பௌத்தத்தை இம்மண் சார்ந்ததாக ஆக்கினார்.

வஜ்ரபோதி எனும் பௌத்தத் துறவி தாந்ரீகச் சடங்குகளில் திறன் பெற்று விளங்கினார் என்றும், பல்லவ அரச சபையை அலங்கரித்த அவர் பின்னர் சீனம் சென்று விட்டதாகவும் இரண்டாம் நரசிம்ம பல்லவன் காலத்து சான்றொன்று கூறுகிறது. பௌத்தம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்த சமயமென மகேந்திரவர்மனின் மத்தவிலாச பிரகாசனம் எனும் நூல் எடுத்துரைக்கின்றது.

கல்விப்புலத்தில் பௌத்த சங்கங்களும் விகாரைகளும் கல்விக்கான இல்லங்களாகத் தொண்டுசெய்தன. கல்வி கற்பதற்காக உலகின் பல பகுதிகளிலிருந்து மாணவர்கள் இங்கு வந்தனர். நாளந்தா, தட்சசீலம், விக்கிரமசீலா ஆகியன மிகச்சிறந்த கல்வி மையங்கள் எனப் பெயர்பெற்றன. இவையனைத்தும் பௌத்த விகாரைகளாகும். திபெத், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மீது பௌத்தம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திற்று. பௌத்தத்தின் போதனைகளைப் பரப்புவதற்கு அவர்கள் செயல்திறன் மிக்க முயற்சிகளை மேற்கொண்டனர்.

விகாரா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு 'வாழ்விடம்' அல்லது இல்லம்' என்றுபொருள். தொடக்கத்தில் சுற்றியலைந்து திரியும் துறவிகள் இவற்றை மழைக்காலங்களின் போது தங்குமிடங்களாகப் பயன்படுத்தினர். பணம்படைத்த, சாமானிய பௌத்தர்களால் வழங்கப்பட்ட கொடைகளின் மூலம் இவை கல்வி மையங்களாக மாற்றம் பெற்றன. அரசர்கள் அளித்த ஆதரவினால் இஸ்லாமிய ஆட்சிக்கு முந்தைய இந்தியா, பல விகாரைகளைக் கொண்ட நாடாக விளங்கியது. அவை பல்கலைக்கழகக் கல்வியை வழங்கியதோடு, புனித நூல்களின் கருவூலச் சேகரங்களாகவும் திகழ்ந்தன. நாளந்தாவைப் போன்றே பல விகாரைகள் உலகப்புகழ் பெற்றவையாகும்.


விகாரைகள்


இந்தியத் தொல்லியல் துறையால் காவிரிப்பூம்பட்டினத்தில் அகழ்வாய்வு செய்து ஒரு பௌத்த விகாரையும் ஒரு கோவிலும் கண்டறியப்பட்டது. மேலும் 125க்கும் மேற்பட்ட ஆய்விடங்களில் நூற்றுக்கணக்கான கல்சிற்பங்களும் செப்புச்சிலைகளும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. பௌத்தம் தமிழகம் முழுவதும் பரவியிருந்தது என்பதற்கு இவைகளே சான்றுகளாகும். திருவாரூர் மாவட்டத்தில் மிகவும் ஒதுக்கமாயுள்ள திருநாட்டியட்டாங்குடி கிராமத்தின் ஒரு வயலில் கிணறு வெட்டும்போது 1.03 மீட்டர் உயரமுடைய, பத்மாசன கோலத்திலுள்ள புத்தரின் சிலையொன்று கிடைத்துள்ளது.



Tags : Term 3 Unit 3 | History | 7th Social Science மூன்றாம் பருவம் அலகு -3 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
7th Social Science : History : Term 3 Unit 3 : Jainism, Buddhism and Ajivika Philosophy in Tamil Nadu : Buddhism in Tamil Nadu Term 3 Unit 3 | History | 7th Social Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : மூன்றாம் பருவம் அலகு -3 : தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் : தமிழகத்தில் பௌத்தம் - மூன்றாம் பருவம் அலகு -3 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : மூன்றாம் பருவம் அலகு -3 : தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்