Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | இரண்டாம் உலகப் போருக்கான காரணங்கள், போரின் போக்கு, விளைவுகள்
   Posted On :  27.07.2022 05:44 am

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 3 : இரண்டாம் உலகப்போர்

இரண்டாம் உலகப் போருக்கான காரணங்கள், போரின் போக்கு, விளைவுகள்

முதலாம் உலகப்போர், மாபெரும் போர் என்றும் அனைத்துப் போர்களையும் முடித்துவைக்கும் போர் எனவும் குறிப்பிடப்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்கான காரணங்கள், போரின் போக்கு, விளைவுகள்

(அ) காரணங்கள்

முதலாம் உலகப்போர், மாபெரும் போர் என்றும் அனைத்துப் போர்களையும் முடித்துவைக்கும் போர் எனவும் குறிப்பிடப்பட்டது. பகை நாடுகளில், குறிப்பாக நேச நாடுகள் மீண்டும் ஒரு நீண்ட மோதலுக்கான எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை, இதுவே முதல் உலகப் போருக்குப் பின் இந்நாடுகளின் செயல்பாடுகளை இயக்கும் சக்தியாய்த் திகழ்ந்தது. எழுச்சி பெற்ற ஜெர்மனி மேற்கொண்ட ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கைகளும், ஜப்பானின் விரைவான வளர்ச்சியுமே இரண்டாம் உலகப்போருக்கான உடனடி மற்றும் அடிப்படைக் காரணங்களாகும்.

ஜெர்மனியும், வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையும் 1919

1919 ஜூனில் கையெழுத்தான வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையோடு முதல் உலகப்போர் முடிவுற்றது. அதன் சரத்துக்களில் மூன்று அம்சங்கள் ஜெர்மனி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின. (i) ஜெர்மனி தனது மேற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய எல்லைகளில் பல பகுதிகளை விட்டுத்தரக் கட்டாயப்படுத்தப்பட்டது. (ii) ஜெர்மனி ஆயுதக்குறைப்புக்கு உள்ளாக்கப்பட்டு மிகக் குறைந்த அளவிலான படைகளை மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. (iii) போரினால் நேச நாடுகளுக்கு ஏற்பட்ட இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் உயிர் இழப்பிற்காக ஜெர்மனி இழப்பீடு வழங்க வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது.

பன்னாட்டுச் சங்கத்தின் தோல்வி

அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனின் முயற்சியால் பன்னாட்டுச் சங்கம் உருவானது என்பதை பாடம் 1 ல் பார்த்தோம். இச்சங்கம் நாடுகளிடையே பிரச்சனை ஏற்படும்போது நடுவராக இருந்து பிரச்சனைகளைத் தீர்க்கும் என்றும் இராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொள்ளும் நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா இவ்வமைப்பில் உறுப்பு நாடாகச் சேரவில்லை. ஏனெனில் போருக்குப்பின்னர் அமெரிக்காவின் பொதுவான மனோநிலை மரபான தனித்திருக்கும் கொள்கைக்கு ஆதரவாக இருந்தது. ஏனைய நேசநாடுகளும் தலையிடாக் கொள்கை மனநிலையில் உறுதியாக இருந்தன. இதன் விளைவாக பன்னாட்டுச் சங்கம் ஒரு பயனற்ற பன்னாட்டுச் சங்கமாக இருந்தது.

முதல் உலகப்போருக்குப் பின் ஏற்பட்ட சிக்கலும், ஜெர்மனியும் 

மேற்குறிப்பிட்டவாறு வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் முக்கியமான மூன்று சரத்துக்கள், குறிப்பாக போர் இழப்பீடு தொடர்பான சரத்து ஜெர்மனியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின. முதல் உலகப்போருக்குப் பின் பத்தாண்டுகளில் பல நாடுகள் எதிர்கொண்ட பிரச்சனைகள் இத்தாலி (முசோலினி), ஜெர்மனி (ஹிட்லர்), ஸ்பெயின் (பிராங்கோ) ஆகிய நாடுகளில் தீவிர வலதுசாரி சர்வாதிகார ஆட்சி எழுச்சி பெறுவதற்கு இட்டுச் சென்றன.

முதல் உலகப்போருக்குப் பின்னர் ஜெர்மனி பெருமளவிலான வேலையில்லாத் திண்டாட்டத்தையும் கடுமையான பணவீக்கத்தையும் அனுபவிக்க நேர்ந்தது. மேலும் அதனுடைய காகிதச் செலாவணி முழுமையாக மதிப்பிழந்தது. சாதாரண மக்கள் ரொட்டி வாங்குவதற்காக வண்டி நிறைய பணத்தை எடுத்துச்செல்வது போன்ற பல படங்கள் 1920களில் வெளியாயின. பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் ஜெர்மனி வழங்க வேண்டிய போர் இழப்பீட்டுத் தொகை குறைக்கப்பட்டாலும் மேற்சொல்லப்பட்ட துயரங்களுக்கு ஜெர்மனியின் மீது கட்டாயமாகச் சுமத்தப்பட்ட போர் இழப்பீடே காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டது.

அடால்ப் ஹிட்லரின் எழுச்சி

ஜெர்மனி பெருமளவு அவமானப் படுத்தப்பட்டதாக நிலவிய கருத்தைப் பயன்படுத்தி, தனது வல்லமை மிக்க சொற்பொழிவாற்றும் திறமையாலும் உணர்ச்சிமிக்கப் பேச்சுக்களாலும் ஜெர்மனியை அதன் இராணுவப் புகழ்மிக்க முந்தைய காலத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்வதாக அடால்ப் ஹிட்லர் மக்களைத் தன்பக்கம் ஈர்த்தார். தேசிய சமதர்மவாதிகள் கட்சியை நிறுவினர். இது நாசிக் கட்சி என்று அழைக்கப்பட்டது. இரண்டு அடிப்படைக் கருத்துகளை அடித்தளமாகக் கொண்டு ஹிட்லர் ஆதரவைத் திரட்டினார். ஒன்று ஜெர்மனியரே சுத்தமான ஆரிய இனத்தவர் எனும் இனஉயர்வு மனப்பாங்கு மற்றொன்று மிக ஆழமான யூத வெறுப்பு. 1933இல் ஆட்சிக்கு வந்த அவர் 1945வரை ஜெர்மனியை ஆட்சி செய்தார்.

வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துக்களுக்கு நேரெதிராக ஹிட்லர் ஜெர்மனியின் இராணுவத்தையும் ஆயுதங்களையும் அதிகரிக்க துவங்கினார். ஆயுதப் படைகளுக்கான ஆள்சேர்ப்பு, அரசாங்கத்தின் செலவில் நிறுவப்பட்ட, இராணுவத்திற்குத் தேவைப்படும் ஆயுதங்களையும் ஏனைய இயந்திரங்களையும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் நிறுவப்படுதல் போன்றவற்றால் ஜெர்மனியின் பொருளாதாரம் புத்துயிர் பெற்றதோடு, வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்சனையும் தீர்த்து வைக்கப்பட்டது.

எழுச்சிமிக்க முசோலினியின் எத்தியோப்பியப் படையெடுப்பினால் இத்தாலியுடன் கொண்டிருந்த உறவினை பிரிட்டனும் பிரான்சும் முறித்துக்கொண்ட அதேவேளையில் ஜெர்மனியும் இத்தாலியும் நட்புகொண்டன. ஹிட்லர் படைநீக்கம் செய்யப்பட்ட மண்டலமாகக் கருதப்பட்ட ரைன்லாந்தின் மீது 1936இல் படையெடுத்தார். இத்தாலியும் ஜெர்மனியும் இணைந்து ரோம் - பெர்லின் உடன்படிக்கையை ஏற்படுத்தின. பின்னர் இதில் ஜப்பான் இணைந்தவுடன் ரோம் - பெர்லின் டோக்கியோ அச்சு உடன்படிக்கை உருவானது. 1938இல் ஹிட்லர் ஆஸ்திரியா, செக்கோஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளைத் தாக்கிக் கைப்பற்றினார். செக்கோஸ்லோவாக்கியாவின் ஒரு பகுதியான சூடட்டன்லாந்தில் ஜெர்மன் மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வந்தனர். ஜெர்மன் மொழி பேசும் மக்கள் வாழ்கின்ற பகுதிகள் அனைத்தும் ஒரே நாடாக இணைக்கப்பட வேண்டும் என ஹிட்லர் உரிமை கோரினார்.

நேசநாடுகளும் தலையிடாக் கொள்கையும்

இதே சமயத்தில் இத்தாலியும் ஜப்பானும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இத்தாலி 1935இல் எத்தியோபியா மீதும், 1939இல் அல்பேனியா மீதும் படையெடுத்தது. எத்தியோப்பியப் பேரரசர் ஹெய்லி செலாஸ்ஸி பன்னாட்டுச் சங்கத்திடம் முறையிட்டார். ஆனால் அவருக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை . கிழக்குப் பகுதிகளில் ஜப்பான் இராணுவ விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது. 1931இல் ஜப்பான் மஞ்சூரியாவின் மீது படையெடுத்தது. 1937இல் சீனாவைத் தாக்கி பெய்ஜிங்கை முற்றுகையிட்டது. இந்நடவடிக்கைகளை எல்லாம் நேசநாடுகளால் கண்டுகொள்ளாமல் இருந்தன. பன்னாட்டுச் சங்கத்தால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள இயலவில்லை.

இவ்வாறு ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகியவை இராணுவரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும் பிரிட்டனும் பிரான்சும் எதிலும் தலையிடாமலேயே இருந்தன. பிரிட்டனின் பொது மனநிலை மற்றுமொரு போரைத் தொடங்குவதற்கு ஆதரவாக இல்லை. பிரிட்டனின் பிரதமர்கள் பால்டுவின், சேம்பர்லின் ஆகியோரும் அதிகாரபூர்வமாக தங்களின் நலன்சாரா பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகளில் தலையிடுவது நியாயமற்றது என நினைத்தனர். அமெரிக்காவோ வெளியுலகை பற்றிச் சற்றேனும் அக்கறை கொள்ளாமல் பொருளாதாரப் பெருமந்தத்தின் பின்னர் தனது பொருளாதாரத்தை மீட்டு எடுப்பதில் மட்டும் கவனத்தைச் செலுத்தியது.


மியூனிச் உடன்படிக்கை

சோவியத் ரஷ்யாவும் மேற்கத்திய நாடுகளும் ஒன்றின் மீது மற்றொன்று அவநம்பிக்கை கொண்டிருந்தன. 1938இல் பிரிட்டன் பிரதமர் சேம்பர்லின் ஜெர்மனியோடு மியூனிச் உடன்படிக்கையை மேற்கொண்டார். இது செக்கோஸ்லோவாக்கியாவின் மீது படையெடுத்து அதன் ஜெர்மன் மொழி பேசும் பகுதியான சூடட்டன்லாந்தை ஜெர்மனி இணைத்துக்கொண்டதை ஏற்றுக்கொள்வதாக அமைந்தது. இருந்தபோதிலும் 1939இல் சோவியத் யூனியன் ஜெர்மனியுடன் ஒருவர்மீது மற்றொருவர் படையெடுப்பதில்லை என ஒப்பந்தம் செய்துகொண்டது. நேசநாடுகளின் செயலற்ற இத்தன்மையும் படைகளைப் பெருக்கிக் கொள்வதில் அவை காட்டிய தயக்கமும் இரண்டாம் உலகப்போருக்குக் காரணங்களாக அமைந்தன.

வேறு எந்த ஒரு நாட்டையும் தான் தாக்கப்போவதில்லை என ஹிட்லர் மியூனிச் உடன்படிக்கையில் உறுதியளித்திருந்தாலும் அது உடனடியாக மீறப்பட்டது. 1939இல் ஹிட்லர் செக்கோஸ்லோவாக்கியாவின் மீது படையெடுத்தார். அடுத்து போலந்து தாக்கப்பட்டது. இதுவே ஜெர்மனிக்கு எதிராக பிரிட்டனும் பிரான்சும் போர்ப்பிரகடனம் செய்வதற்கு இட்டுச்சென்ற இறுதி நடவடிக்கைகளாக அமைந்தன. பிரிட்டன் பிரதமர் சேம்பர்லின் 1940இல் பதவி விலகினார். ஹிட்லரைப் பற்றியும் அவருடைய இராணுவ நோக்கங்களைப் பற்றியும் எப்போதும் எச்சரித்து வந்த வின்ஸ்ட ன் சர்ச்சில் பிரதமரானார்.


 

(ஆ) இரண்டாம் உலகப்போரின் போக்கு

போரின் தன்மை

இரண்டாம் உலகப்போர் ஐரோப்பா, ஆசியா, பசிபிக் எனும் இருவேறுமுனைகளில் நடைபெற்றது. ஐரோப்பாவில் நேசநாடுகள் ஜெர்மனிக்கும் இத்தாலிக்கும் எதிராகப் போரிட்டன. ஆசிய பசிபிக் பகுதிகளில் நேசநாடுகள் ஜப்பானுக்கு எதிராக போர் செய்தன.

இரண்டாம் உலகப்போர் நவீனப் போராகும். டாங்குகள், போர்க்கப்பல்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள், நீர்மூழ்கிகள், போர்விமானங்கள், குண்டுவீசும் விமானங்கள், கனரக இராணுவ தளவாடங்களைக் கொண்டு போர்கள் நடத்தப்பட்டன. இவையனைத்தையும் உற்பத்தி செய்வதற்குப் பெருமளவிலான வளங்கள் தேவைப்பட்டன. இராணுவ உபகரணங்களை நவீனப்படுத்துவதற்கு தேவையான கச்சாப்பொருள்கள், உற்பத்தித்திறன், தொழிற்நுட்பம் ஆகியவையும் தேவைப்பட்டன. பின்னர் நினைத்து வருந்தும் அளவிற்கு பெரும் பொருட்செலவை ஏற்படுத்திய, நீண்ட காலப் போராக இப்போர் அமைந்தது.

போரின் தொடக்கம்

பிரிட்டனும் பிரான்சம் 1939 செப்டம்பரில் ஜெர்மனியின் மீது போர்ப் பிரகடனம் செய்தன. இத்தாலி 1940 ஜூனில் ஜெர்மனியோடு சேர்ந்தது. 1940 செப்டம்பரில் ஜப்பான் அச்சு நாடுகளுடன் கை கோர்த்தது.


போர் அறிவிப்பு செய்யப்பட்டவுடன் சிறிய அளவிலான செயல்பாடுகளே காணப்பட்டன. பிரிட்டன் ஏற்கெனவே தனது இராணுவ வலிமையை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இளைஞர்கள் அனைவரும் கட்டாய இராணுவச் சேவைக்கு அழைக்கப்பட்டனர். போரின் தொடக்க ஆண்டுகள் ஜெர்மன் படையினரின் பிரமிக்கவைக்கும் வெற்றியாண்டுகளாகத் திகழ்ந்தன. டென்மார்க், நார்வே பின்னர் பிரான்ஸ் ஆகிய நாடுகளை ஜெர்மானிய ராணுவம் கைப்பற்றியது. 1941இல் ரஷ்யாவின் எல்லை வரையிலான ஐரோப்பாவின் முக்கியநிலப் பகுதிகள் அனைத்தும் அச்சு நாடுகளின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவரப்பட்டன. திடீரென, மிக வலுவான நாடுகளைத் தாக்கிக் கைப்பற்ற ஜெர்மானியப் படைகள் பிளிட்ஸ்கிரிக் எனும் மின்னல் வேகத்தாக்குதல் (lightning strike, ஜெர்மன் மொழியில் Blitzkrieg) போர்த்தந்திரத்தைக் கடைப்பிடித்தன.


ஐரோப்பிய நாடுகளின் கப்பற்படைகளில் தி பிரிட்டிஷ் ராயல் நேவி என்றழைக்கப்பட்ட பிரிட்டனின் கப்பற்படையே தொடர்ந்து மிக வலுவானதாகத் திகழ்ந்தது. கடல்வழித் தாக்குதல் நடத்தி பிரிட்டனை கைப்பற்றுவது இயலாது என்பதை அது உறுதிப்படுத்தியது. இருந்தபோதிலும் பிரிட்டன் தனது பேரரசின் ஏனைய பகுதிகளில் இருந்தும், அமெரிக்காவிலிருந்தும் கடல் வழியாக இறக்குமதி செய்யப்படும் உணவுப்பண்டங்கள், கச்சாப் பொருள்கள், தொழிற்சாலை உற்பத்திப் பொருள்கள் ஆகியவற்றையே பெரிதும் சார்ந்திருந்தது. இதனைத் தாக்குவதற்காக ஜெர்மனி நீர்மூழ்கிக் கப்பற்படையை அனுப்பிப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக அட்லாண்டிக் பெருங்கடலில் பிரிட்டனுக்குத் தேவையானப் பொருள்களை ஏற்றிவரும் பயணியர் கப்பல்களை அவை மூழ்கடித்தன.

முக்கிய நிகழ்வுகள்

டன்கிர்க் - 1940 மே மாதத்தில் சுமார் 3 லட்சம் பிரிட்டன், பிரான்சு நாடுகளின் கூட்டுப்படை வீரர்களுக்கு டன்கிர்க் நகரின் கடற்கரைப் பகுதிக்குப் பின்வாங்கும் கட்டாயம் ஏற்பட்டது. பெருமளவிலான தனது வீரர்களை பிரிட்டன் டன்கிர்க்கில் இழந்திருந்தால் மீண்டும் இது போன்றதொரு படையை அணிதிரட்டுவது பிரிட்டனுக்கு இடர்ப்பாடு மிகுந்ததாக இருந்திருக்கும்.

பிரிட்டன் போர் - 1940 ஜூலையில் பிரிட்டனின் மீது ஜெர்மனி படையெடுக்கும் எனும் அச்சம் ஏற்பட்டது. நீண்ட நெடிய ஆகாய விமானக் குண்டுத் தாக்குதல்களின் மூலம் தனது திட்டங்களை ஏற்றுக்கொள்ளுமாறு பிரிட்டனை வற்புறுத்த ஹிட்லர் விரும்பினார். ஜெர்மனியின் விமானப்படைகள் குறிப்பிட்ட இலக்குகளை, மிகக் குறிப்பாகத் துறைமுகங்கள், விமானத்தளங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றைத் தாக்கத் தொடங்கின. 1940 செப்டம்பரில் லண்டன் நகரம் இரக்கமற்ற குண்டுவீச்சுக்கு இலக்கானது. இந்நடவடிக்கை மின்னல் (Blitz) என்றழைக்கப்பட்டது. 1940 அக்டோபரில் லண்டன் மற்றும் ஏனைய தொழில் நகரங்களின் மீது இரவு நேரத்தில் குண்டு வீச்சுத் தாக்குதல் தொடங்கிற்று. ஆனால் இது தோல்வியில் முடிந்தது. ஜெர்மனியின் போர் விமானங்கள் சற்று தொலைவில் வரும்போதே அவற்றைக் கண்டறியும் திறன்பெற்ற, புதிதாகக் கண்டறியப்பட்ட, மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த கண்டறி கருவியெனும் ரேடாரைப் பயன்படுத்தி பிரிட்டனின் ராயல் ஏர்போர்ஸ் போர்விமானங்கள் (சிடுமூஞ்சிகள், சூறாவளிகள் எனப் பெயரிடப்பட்டவை) ஜெர்மனியின் குண்டுவீச்சு விமானங்களைத் தாக்கிப் பேரிழப்பை விளைவித்தன. விமானத் தாக்குதல்கள் 1940 அக்டோபர் மாதத்தோடு நின்று போனது. விமானப்போரில் ஏற்பட்ட இத்தோல்வியால் பிரிட்டனின் மீது படையெடுக்கும் திட்டத்தை ஜெர்மனி கைவிட்டது.


கடன் குத்தகைத் திட்டம் (1941–1945)

அமெரிக்கக் குடியரசுத்தலைவர் ரூஸ்வெல்ட், தனிமைப்பட்டிருத்தல் கொள்கையிலிருந்து மாற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார். ஆனால் ஐரோப்பியப் போர்களில் நேரடியாகத் தலையிடுவது சாத்தியமில்லாமல் இருந்தது. எனவே 1941 மார்ச்சில் கடன் குத்தகை திட்டத்தைத் (Lend lease) தொடங்கினார். அதன்படி கடன் எனும் பெயரில் ஆயுதம், உணவுப் பண்டம், இராணுவத் தளவாடம், ஏனைய பொருள்கள் பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்படும். அவை பயன்படுத்திய பின்னர் திருப்பிக் கொடுக்கப்பட்டுவிடும். இத்திட்டம் மிகப்பெருமளவிற்கு பிரிட்டனின் வளங்களைப் பெருக்கியது. 1941-1945 இடைப்பட்ட ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட உதவியின் மதிப்பு 46.5 பில்லியன் டாலராகும்.

ரஷ்யப் படையெடுப்பு (1941-1942)

1941 ஜுனில் ஜெர்மனி படைகள் ரஷ்யாவின் மீது படையெடுத்தன. ஜெர்மனி மக்களைக் குடியேற்றுவதற்குத் தேவையான முக்கிய நிலப் பகுதிகளைப் பெறுதல், கம்யூனிச ஆட்சியை ஒழிப்பது ரஷ்யாவின் இயற்கை வளங்களைக் குறிப்பாக எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவது போன்ற நீண்டகால நோக்கங்களுடன் இப்படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. ஜெர்மன் படைகளின் தாக்குதல் தந்திரமான மின்னல் வேகத் தாக்குதல் தொடக்கத்தில் வெற்றிகளை நல்கியது. மிக விரைவில் ரஷ்யாவிற்குள் 1000 மைல்கள் வரை ஜெர்மனி படைகள் ஊடுருவின. பின்னர் ஜெர்மன் படைகள் மாஸ்கோவை நோக்கி முன்னேறின. ஆனால் இறுதியில் சோவியத் படைகளின் வலுவான எதிர்ப்பு, ரஷ்யாவின் கடுமையான குளிர் ஆகிய காரணங்களால் ஜெர்மனி படை தோல்வியுற்றது.

ஸ்டாலின்கிரேடு போர் (1942 ஜூலை 17 முதல் 1943 பிப்ரவரி 2 வரை)

1942 ஆகஸ்ட்டில் ஜெர்மானியர் ஸ்டாலின்கிரேடு நகரைத் தாக்கினர். வோல்கா நதிக்கரையில், 30 மைல் (50 கி.மீ) பரப்பளவில் அமைந்திருந்த ஸ்டாலின்கிரேடு ஆயுதங்களையும் டிராக்டர்களையும் உற்பத்தி செய்யும் முக்கியத் தொழில் நகரமாகும். அந்நகரைக் கைப்பற்றிவிட்டால் தெற்கு ரஷ்யாவுடனான சோவியத்தின் போக்குவரத்துத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுவிடும். மேலும் காகஸஸ் பகுதிகளிலுள்ள எண்ணெய் வயல்களைச் சென்றடைவதற்கு ஜெர்மன் படைகளுக்கு ஸ்டாலின் கிரேடு வசதியாக இருக்கும். மேலும் சோவியத்தின் தலைவர் ஸ்டாலினின் பெயரைத்தாங்கிய இந்நகரைக் கைப்பற்றுதல் ஹிட்லரின் தனிப்பட்ட வெற்றியாகவும் அவரது பிரச்சாரத்திற்குக் கிடைத்த வெற்றியாகவும் கருதப்படும். ஜெர்மனியின் போர்த் திட்டமிடல் வல்லுநர்கள் ஃபால் புளூ (Operation Blue) எனும் திட்டத்தின்படி இந்நகரைக் கைப்பற்றிவிடலாம் என நம்பினர். 1942 ஜூன் 28இல் ஜெர்மனி படைகள் குறிப்பிடத் தகுந்த வெற்றிகளோடு போர் நடவடிக்கைகளைத் தொடங்கின.

ஜெர்மன் படைகள் கைப்பற்றிய பகுதிகளில் வாழ்ந்த ரஷ்ய மக்கள் மோசமான பணியிட, வாழ்க்கைச் சூழல்களால் மட்டுமே துன்பங்களை அனுபவிக்கவில்லை. அவர்கள் ஜெர்மன் படைகளாலும் மிகவும் மோசமாகவும் நடத்தப்பட்டனர். போரின் போது 15 மில்லியன் பொதுமக்கள் உயிரிழந்தனர். 10 மில்லியன் படை வீரர்களும் பலியாயினர். மொத்தத்தில் ரஷ்யாவின் மக்கள்தொகையில் பத்தில் ஒரு பகுதியினர் மரணத்தைத் தழுவினர். இருந்த போதிலும் ரஷ்ய மக்கள், ஸ்டாலினுக்கு எதிராகப் புரட்சி ஏற்படும் என்ற ஹிட்லரின் நம்பிக்கைக்கு நேர்மாறாக சோவியத் அரசுக்கு ஆதரவாக இருந்தனர்.

எல் அலாமெய்ன் போர் (1942)

போரின் தொடக்க ஆண்டுகளில் ஜெனரல் ரோம்மெல் தலைமையிலான ஜெர்மன் படைகள் வட ஆப்பிரிக்காவை விரைந்து கைப்பற்றுவதில் வியத்தகு வெற்றிகளைப் பெற்றன. எகிப்து மட்டுமே இங்கிலாந்தின் கைவசமிருந்தது. ஜெனரல் மாண்ட்கோமரியின் தலைமையிலான நேசநாட்டுப் படைகள் எதிர்த்தாக்குதல் நடத்தி வட ஆப்பிரிக்காவில் எல் அலாமெய்ன் என்ற இடத்தில் ஜெர்மனி, இத்தாலியப் படைகளைத் தோற்கடித்தன. பாலைவனத்தின் வழியாகத் துரத்தப்பட்ட ஜெர்மனி படைகள் வட ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டன. இதனால் இத்தாலியின் மீது படையெடுப்பதற்கு வசதியான தளம் நேச நாடுகளுக்குக் கிடைத்தது.

இத்தாலி சரணடைதல் (1943)

இத்தாலியில் முசோலினியின் சர்வாதிகார ஆட்சி தூக்கியெறியப்பட்டது. புதிய இத்தாலி அரசு 1943இல் நேச நாடுகளிடம் சரணடைந்தது. இருந்தபோதிலும் ஜெர்மனி வடக்கே ஒரு பொம்மை அரசை நிறுவி அதில் முசோலினியை அமரவைத்தது. 1945 ஏப்ரலில், முசோலினி இத்தாலியக் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டார்.

ஹிட்லரின் முடிவு

ஜெனரல் ஐசனோவரின் தலைமையிலான நேசநாட்டுப் படைகள் பிரான்ஸ் நாட்டின் நார்மண்டியின் மீது படையெடுத்தன. ஜெர்மானியப் படைகள் மெதுவாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டன. ஆனால் ஜெர்மனி படைகள் தொடர்ந்து எதிர்த்துப் போரிட்டதால் போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து இறுதியில் 1945 மே மாதத்தில் முடிவுற்றது. ஹிட்லர் 1945 ஏப்ரலில் தற்கொலை செய்துகொண்டார்.

1944 இலிருந்து ரஷ்யப் படைகள் கிழக்குப்புறத்தில் ஜெர்மனியைத் தாக்கி கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியையும், போலந்தையும் கைப்பற்றியது. 1945இல் பெர்லின் நகரின் சில பகுதிகளையும் ரஷ்யப்படைகள் கைப்பற்றின. இதனால் போருக்குப் பின்னர் ஜெர்மனி இருபிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.

ஆசியா- பசிபிக் பகுதிகளில் நடைபெற்ற போர்

ஹிட்லரைப் போலவே ஜப்பானும் பேரரசுக் கனவில் இருந்தது. 1931இல் ஜப்பானியப் படைகள் மஞ்சூரியா மீது படையெடுத்தன. சீனா இதுகுறித்து பன்னாட்டுச் சங்கத்தில் முறையிட்டது. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை பிரிட்டன் அல்லது அமெரிக்காவின் கவனத்தை ஈர்க்கவில்லை. 1937இல் ஜப்பான் சீனாவின் மீது படையெடுத்து அதன் பாரம்பரியமிக்கத் தலைநகரான பெய்ஜிங் நகரை (பீகிங்) முற்றுகையிட்டது. ஷாங்காயைச் சுற்றியிருந்தப் பகுதிகளும் அப்பகுதியின் தலைநகரான நான்சிங் (நான்கிங்) நகரமும் அவ்வாண்டின் இறுதியில் கைப்பற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து வரலாறு காணாத மனித படுகொலையை ஜப்பான் நான்கிங்கில் அரங்கேற்றியது. விளையாட்டு போல் பொதுமக்கள் மொத்தமாகக் கொல்லப்பட்டனர். பெண்கள், குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர் வரை பல்வேறு சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். குவாங்சூவும் (கேன்டன்) சீனாவின் வேறுபல பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டன. சியாங்-கே-ஷேக்கின் தலைமையிலான சீனப்படைகள் மேற்கேயிருந்த மலைப் பகுதிகளுக்குப் பின்வாங்கி அங்கிருந்தபடியே ஜப்பானியருக்கு எதிரானப் போரைத் தொடர்ந்தனர்.

முத்துத் துறைமுகம் (Pearl Harbour) (1941)

1941 டிசம்பரில் ஹவாயிலுள்ள அமெரிக்கக் கப்பற்படைத் தளமான முத்துத் துறைமுகத்தின் மீது ஜப்பானிய விமானப்படைகள் முன்னறிவிப்பின்றி பெரும் தாக்குதலைத் தொடுத்தன. அமெரிக்காவின் பசிபிக் கப்பற்படையை முடக்கிவிட்டால் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுக்கும் போது எதிர்ப்பேதும் இருக்காது என ஜப்பான் நினைத்ததே இதற்குக் காரணமாகும். இத்தாக்குதலில் பல போர்க்கப்பல்களும் போர்விமானங்களும் அழிக்கப்பட்டன. அமெரிக்க வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா ஜப்பான் மீது போர்ப் பிரகடனம் செய்தது. சீனாவும் பிரிட்டனும் அமெரிக்காவுடன் இணைந்தன. இதனால் ஆசிய பசிபிக் போரும் ஐரோப்பியப் போரும் ஒன்றிணைந்து ஒரு பொதுக் காரணத்திற்கான போராக மாறியது. மிக முக்கியமாக இத்தாக்குதல் பெருமளவிலான வளங்களைக் கொண்டிருந்த அமெரிக்க நாட்டை நேசநாடுகளின் அணியில் இப்போரில் பங்கேற்க வைத்தது.


தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானின் ஆக்கிரமிப்புகள்

தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் தனது பேரரசை விரிவாக்க வேண்டுமென்ற தனது திட்டத்தில் ஜப்பான் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றது. குவாம், பிலிப்பைன்ஸ், ஹாங்காங், சிங்கப்பூர், மலேயா, டச்சு கிழக்கிந்தியா (இந்தோனேசியா), பர்மா ஆகிய அனைத்தும் ஜப்பானிடம் வீழ்ந்தன.

மிட்வே போரும் க்வாடல்கெனால் போரும் (1942)


மிட்வே போரில் அமெரிக்கக் கப்பற்படை ஜப்பானின் கப்பற்படையைத் தோற்கடித்தது. இது போரின் போக்கை நேசநாடுகளுக்குச் சாதகமாக மாற்றியது. சாலமோன் தீவுகளிலுள்ள க்வாடல்கெனால் போரில் காலாட்படையும் கப்பற்படையும் இணைந்து தாக்குதலை மேற்கொண்டன. இப்போர் பல மாதங்கள் நீடித்தது. இவ்விரு போர்களுமே ஜப்பானுக்குப் படுதோல்விகளாய் அமைந்தன.

இதன் பின்னர் அமெரிக்கப் படைகள் பிலிப்பைன்ஸை மீட்டது. படிப்படியாக ஜப்பானியர் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். 1944இல் இந்தியாவின் வடகிழக்குப் பகுதி மீது படையெடுக்க முயன்ற ஜப்பானியரை இந்தியப் படைகளும் ஆங்கிலேயப் படைகளும் இணைந்து எதிர்கொண்டு பின்னுக்குத் தள்ளினர். பின்னர் சீனப் படைகளோடு சேர்ந்து ஜப்பானியரை பர்மாவை விட்டு வெளியேற்றினர். மலேயாவையும் சிங்கப்பூரையும் விடுவித்தனர்.

ஹிரோஷிமா, நாகசாகி (ஆகஸ்ட் 1945)

இதனிடையே நவீன அறிவியல் வளர்ச்சியைப் பயன்படுத்தி ரகசியத் திட்டத்தின் மூலம் அமெரிக்கா அணுகுண்டுகளைத் தயாரித்திருந்தது. வழக்கமான வெடிமருந்து குண்டைக் காட்டிலும் பெருமளவிலான சக்தி கொண்டனவாக இக்குண்டுகள் விளங்கின. ஜப்பானியப் படைத்தளபதிகள் சரணடைய மறுத்தபோது அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா நகர்மீது ஒரு அணுகுண்டை வீசியது. இதன் பின்னரும் ஜப்பானியர் சரணடைய மறுத்ததால் மற்றொரு அணுகுண்டு நாகசாகியின் மீது வீசப்பட்டது. இறுதியாக ஜப்பான் ஆகஸ்ட் 15, 1945இல் தங்களது சரணடைதலை அறிவித்தபின், செப்டம்பர் 2, 1945இல் முறையாகக் கையெழுத்திட்டதும் இரண்டாம் உலகப்போர் ஓர் முடிவுக்கு வந்தது.



(இ) போரின் விளைவுகள்

உலகம் இரு அணிகளாகப் பிரிதல்: இரண்டாவது உலகப்போர் உலகில் அடிப்படையானதும் முக்கியமானதுமான பல மாற்றங்களை ஏற்படுத்தியது. வல்லரசுகள் தலைமையிலான அணிகளைக் கொண்ட உலகம் இரு துருவங்களானது. ஒரு அணி கம்யூனிச எதிர்ப்புக் கருத்துக்களைக் கொண்ட அமெரிக்காவால் தலைமையேற்கப்பட்டது. மற்றொரு அணிக்கு சோவியத் யூனியன் தலைமை தாங்கியது. கம்யூனிச நாடுகள், கம்யூனிசமல்லாத நாடுகள் என ஐரோப்பா இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

அணு ஆயுதப் பரவல்: அமெரிக்க ஐக்கிய நாடுகளும் சோவியத் யூனியனும் அணுஆயுதங்களை அதிகரிக்கும் போட்டியில் இறங்கி, ஆயுதங்களைப் பெருக்கிக் குவித்தன. பல நாடுகளில் இராணுவத்திற்கான செலவினங்கள் உச்சத்தை எட்டின.

பன்னாட்டு முகமைகள்: பல பன்னாட்டு முகமைகள் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை, உலகவங்கி, பன்னாட்டு நிதியம் (InternationalMonetary Fund) போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

காலனி நீக்கச் செயல்பாட்டின் அடிப்படையில் காலனியாதிக்கச் சக்திகள் தங்களது காலனிகளுக்கு விடுதலை வழங்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாயினர். அதில் இந்தியா முதலாவதாய் சுதந்திரம் பெற்றது.


10th Social Science : History : Chapter 3 : World War II : Causes, Course and Effects of World War II in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 3 : இரண்டாம் உலகப்போர் : இரண்டாம் உலகப் போருக்கான காரணங்கள், போரின் போக்கு, விளைவுகள் - : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 3 : இரண்டாம் உலகப்போர்