Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | முதல் உலகப்போருக்கான காரணங்களும் போக்கும் விளைவுகளும்
   Posted On :  27.07.2022 05:35 am

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 1 : முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

முதல் உலகப்போருக்கான காரணங்களும் போக்கும் விளைவுகளும்

1900இல் ஐரோப்பிய வல்லரசுகளில் ஐந்து அரசுகள், இரண்டு ஆயுதமேந்திய முகாம்களாகப் பிரிந்தன. ஒரு முகாம் மைய நாடுகளான ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி ஆகியவற்றைக் கொண்டிருந்தது.

முதல் உலகப்போருக்கான காரணங்களும் போக்கும் விளைவுகளும்


(அ) காரணங்கள்

ஐரோப்பிய நாடுகளின் அணி சேர்க்கைகளும் எதிர் அணி சேர்க்கைகளும்

1900இல் ஐரோப்பிய வல்லரசுகளில் ஐந்து அரசுகள், இரண்டு ஆயுதமேந்திய முகாம்களாகப் பிரிந்தன. ஒரு முகாம் மைய நாடுகளான ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி ஆகியவற்றைக் கொண்டிருந்தது. பிஸ்மார்க்கின் வழிகாட்டுதலில் அவை 1882இல் மூவர் உடன்படிக்கையை மேற்கொண்டன. இதன்படி ஜெர்மனியும் ஆஸ்திரியாவும் பரஸ்பரம் உதவிகள் செய்துகொள்ளும். மற்றொரு முகாமில் பிரான்சும் ரஷ்யாவும் அங்கம் வகித்தன. 1894இல் மேற்கொண்ட உடன்படிக்கையின்படி இவ்விரு நாடுகளில் ஏதாவதொன்று ஜெர்மனியால் தாக்கப்படும்பட்சத்தில் பரஸ்பரம் துணைநிற்கும் என உறுதி செய்யப்பட்டது. இப்படியாக இங்கிலாந்து தனிமைப்படுத்தப்பட்டது. தன்னுடைய தனித்திருத்தலிலிருந்து வெளிவரும் பொருட்டு இங்கிலாந்து இருமுறை ஜெர்மனியை அணுகித் தோல்வி கண்டது. ரஷ்யாவின் மீதான ஜப்பானின் பகைமை அதிகமான போது பிரான்ஸ் ரஷ்யாவின் நட்புநாடாக இருந்ததால் ஜப்பான் இங்கிலாந்துடன் இணைய விரும்பியது (1902). ஆங்கிலோ - ஜப்பான் உடன்படிக்கை பிரான்சை இங்கிலாந்தோடு உடன்படிக்கை செய்துகொள்ளத் தூண்டியது. அதன் மூலம் மொராக்கோ, எகிப்து ஆகிய காலனிகள் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள விரும்பியது. இதன் விளைவாக 1904இல் இருநாடுகளிடையே நட்புறவு ஒப்பந்தம் ஏற்பட்டது. மொராக்கோவில் பிரான்ஸ் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்படும் பட்சத்தில் எகிப்தை இங்கிலாந்து கைப்பற்றியதை அங்கீகரிக்க பிரான்ஸ் உடன்பட்டது. இதனைத் தொடர்ந்து பாரசீகம், ஆப்கானிஸ்தான், திபெத் தொடர்பாக ரஷ்யாவுடன் இங்கிலாந்து ஒப்பந்தம் மேற்கொண்டது. இவ்வாறு இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய மூவரைக் கொண்ட மூவர் கூட்டு உருவாக்கப்பட்டது.

வன்முறை சார்ந்த தேசியம்

தேசப்பற்றின் வளர்ச்சியோடு “எனது நாடு சரியோ தவறோ நான் அதை ஆதரிப்பேன்” என்ற மனப்பாங்கும் வளர்ந்தது. ஒரு நாட்டின் மீதான பற்று மற்றொரு நாட்டை வெறுக்கும் தேவையை ஏற்படுத்தியது. இங்கிலாந்தின் ஆரவாரமான நாட்டுப்பற்று (jingoism), பிரான்சின் அதி தீவிரப்பற்று (chauvinism), ஜெர்மனியின் வெறிகொண்ட நாட்டுப்பற்று (kultur) ஆகிய அனைத்தும் தீவிர தேசியமாக போர்வெடிப்பதற்கு தீர்மானமாக பங்காற்றியது.

ஜெர்மன் பேரரசின் ஆக்கிரமிப்பு மனப்பாங்கு

ஜெர்மன் பேரரசரான இரண்டாம் கெய்சர் வில்லியம் ஜெர்மனியே உலகத்தின் தலைவன் எனப் பிரகடனம் செய்தார். ஜெர்மனியின் கப்பற்படை விரிவுபடுத்தப்பட்டது 1805இல் டிரபால்கர் போரில் நெப்போலியனின் தோல்வியைத் தொடர்ந்து கடல் இங்கிலாந்தின் தனியுரிமை எனக்கருதப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பு இயல்பு கொண்ட அரசியல் விவேகத்தையும், விரைவாகக் கட்டப்படும் அதன் கப்பற்படை தளங்களையும் கண்ணுற்ற இங்கிலாந்து, ஜெர்மன் கப்பற்படை தனக்கு எதிரானதே என முடிவு செய்தது. ஆகவே இங்கிலாந்தும் கப்பற்படை விரிவாக்கப் போட்டியில் இறங்கவே இரு நாடுகளுக்குமிடையிலான பதற்றம் மேலும் அதிகரித்தது.


பிரான்ஸ் ஜெர்மனியோடு கொண்ட பகை

பிரான்சும் ஜெர்மனியும் பழைய பகைவர்களாவர். 1871இல் ஜெர்மனியால் தோற்கடிக்கப்பட்ட பிரான்ஸ் அல்சேஸ், லொரைன் பகுதிகளை ஜெர்மனியிடம் இழக்க நேரிட்டது குறித்த கசப்பான நினைவுகளை பிரெஞ்சு மக்கள் ஜெர்மனியின் மீது கொண்டிருந்தனர். மொராக்கோ விவகாரத்தில் ஜெர்மனியின் தலையீடு இக்கசப்புணர்வை மேலும் அதிகரித்தது. மொராக்கோவில் பிரான்சின் நலன்கள் சார்ந்து, இங்கிலாந்து பிரான்சோடு மேற்கொண்ட ஒப்பந்தத்தை ஜெர்மனி எதிர்த்தது. எனவே ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியம் மொராக்கோ சுல்தானின் சுதந்திரத்தை அங்கீகரித்ததோடு மொராக்கோவின் எதிர்காலம் குறித்து முடிவு செய்யப் பன்னாட்டு மாநாடு ஒன்றைக் கூட்டும்படி கோரினார்.

பால்கன் பகுதியில் ஏகாதிபத்திய அரசியல் அதிகாரத்திற்கான வாய்ப்பு

1908இல் துருக்கியில் ஒரு வலுவான, நவீன அரசை உருவாக்கும் முயற்சியாக இளம் துருக்கியர் புரட்சி நடைபெற்றது. இது ஆஸ்திரியாவுக்கும் ரஷ்யாவிற்கும் பால்கன் பகுதிகளில் தங்கள் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் வாய்ப்பினை வழங்கியது. இது தொடர்பாக ஆஸ்திரியாவும் ரஷ்யாவும் சந்தித்துப் பேசின. அதன்படி பாஸ்னியா, ஹெர்சகோவினா ஆகிய இரண்டையும் ஆஸ்திரியா இணைத்துக்கொள்வதென்றும், ரஷ்யா தனது போர்க்கப்பல்களைச் சுதந்திரமாக டார்டனெல்ஸ், போஸ்பொரஸ் துறைமுகங்கள் வழியாக மத்தியதரைக்கடல் பகுதிக்குள் கொண்டு செல்லலாமென்றும் ஒப்பந்தமாயிற்று. இதனைத் தொடர்ந்து பாஸ்னியாவையும் ஹெர்சகோவினாவையும் தான் இணைத்துக் கொண்டதாக ஆஸ்திரியா அறிவித்தது. ஆஸ்திரியாவின் இவ்வறிவிப்பு செர்பியாவில் தீவிரமான எதிர்ப்பைத் தூண்டியது. இதன் தொடர்பில் ஜெர்மனி ஆஸ்திரியாவிற்கு உறுதியான ஆதரவை நல்கியது. மேலும் ஆஸ்திரியா செர்பியாவின் மீது படையெடுக்கும்போது அதன் விளைவாக செர்பியாவிற்கு ரஷ்யா உதவுமானால் ஆஸ்திரியாவிற்கு ஆதரவாக நான் களமிறங்குவேன் என அறிவிக்கும் அளவிற்கு ஜெர்மனி சென்றது. ஆஸ்திரியாவிற்கும் செர்பியாவிற்குமான இப்பகை 1914இல் போர் வெடிக்கக் காரணமாயிற்று.

பால்கன் போர்கள்

பதினெட்டாம் நூற்றாண்டின் முதல் பாதியில் தென்மேற்கு ஐரோப்பாவில் துருக்கி வலிமை வாய்ந்த நாடாகத் திகழ்ந்தது. அதன் பேரரசு பால்கனிலும், ஹங்கேரியின் குறுக்காகப் போலந்து வரையிலும் பரவியிருந்தது. துருக்கியப் பேரரசு பால்கன் பகுதிகளில் பல துருக்கியர் அல்லாத மக்களையும் கொண்டிருந்தது. பால்கன் பகுதியைச் சேர்ந்த துருக்கியரும் துருக்கியர் அல்லாத பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்களும் பயங்கரமான படுகொலைகளிலும் அட்டூழியங்களிலும் ஈடுபட்டனர். ஆர்மீனிய இனப்படுகொலைகள் இதற்கு ஒரு பயங்கரமான எடுத்துக்காட்டு ஆகும்.

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியில் துருக்கியப் பேரரசின் உறுதியற்ற அரசியல் பொருளாதாரச் சூழலைச் சாதகமாகக் கொண்டு கிரீசும் அதனைத் தொடர்ந்து ஏனைய நாடுகளும் ஒன்றன் பின் ஒன்றாகத் தங்களைத் துருக்கியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துக் கொண்டன. மாசிடோனியா பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களைக் கொண்டிருந்தது. எனவே மாசிடோனியாவைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் கிரீஸ், செர்பியா, பல்கேரியா பின்னர் மாண்டி நீக்ரோ ஆகிய நாடுகளிடையே போட்டிகள் நிலவின. 1912ஆம் ஆண்டு மார்ச் திங்களில் அவை பால்கன் கழகம் எனும் அமைப்பை உருவாக்கின. இக்கழகம் முதல் பால்கன் போரில் (1912-1913) துருக்கியப் படைகளைத் தாக்கித் தோற்கடித்தன. தொடர்ந்து, கைப்பற்றிய பகுதிகளைப் பிரித்துக்கொள்வதில் பிரச்சனை எழுந்தது. 1913 மே திங்களில் கையெழுத்தான இலண்டன் உடன்படிக்கையின்படி அல்பேனியா எனும் புதிய நாடு உருவாக்கப்பட்டது. மாசிடோனியாவை ஏனைய பால்கன் நாடுகள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டன. துருக்கி, கான்ஸ்டாண்டிநோபிளைச் சுற்றியுள்ள பகுதிகளை மட்டும் கொண்ட அரசாகச் சுருக்கப்பட்டது.

இருந்தபோதிலும் மாசிடோனியாவைப் பிரித்தளித்ததில் செர்பியாவையும் கிரீஸையும் பல்கேரியா தாக்கியது. ஆனால் பல்கேரியா எளிதாகத் தோற்கடிக்கப்பட்டது. 1913 ஆகஸ்டு திங்களில் கையெழுத்திடப்பட்ட புகாரெஸ்ட் உடன்படிக்கையோடு இரண்டாம் பால்கன் போர் முடிவடைந்தது.

உடனடிக் காரணம்

பால்கனில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் உச்சகட்டம் பாஸ்னியாவிலுள்ள செராஜிவோ என்னுமிடத்தில் அரங்கேறியது. 1914 ஜூன் 28ஆம் நாள் ஆஸ்திரியப் பேரரசரின் மகனும் வாரிசுமான பிரான்ஸ் பெர்டினாண்டு, பிரின்ஸப் என்ற பாஸ்னிய செர்பியனால் கொலை செய்யப்பட்டார். ஆஸ்திரியா இதனை செர்பியாவைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பாக எண்ணியது. செர்பியாவிற்கு ஆதரவாகத் தலையிட ரஷ்யா படைகளைத் திரட்டுகிறது என்னும் வதந்தியால் ஜெர்மனி முதல் தாக்குதலைத் தானே தொடுப்பது என முடிவு செய்தது. ஆகஸ்டு திங்கள் முதல்நாள் ஜெர்மனி ரஷ்யாவிற்கு எதிராகப் போர் அறிவிப்பு செய்தது. ஜெர்மனிக்கும் பிரான்சுக்குமிடையே சச்சரவுகள் ஏதும் இல்லாவிட்டாலும், பிரான்சுக்கும் ரஷ்யாவுக்குமிடையே ஏற்கெனவே கூட்டணி இருந்ததால் ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் எதிராகப் போர் செய்யத் திட்டமிட்டது. மேலும் இச்சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவும் ஜெர்மனி விரும்பியது. பெல்ஜியத்தின் நடுநிலைமையை மதியாது அதனை ஜெர்மனி தாக்கவே இப்போரில் இங்கிலாந்து பங்கேற்பது கட்டாயமாயிற்று.


(ஆ) போரின் போக்கு
இரண்டு போரிடும் முகாம்கள் மைய நாடுகள்

போரிடும் நாடுகள் இரண்டு அணிகளாகப் பிரிந்திருந்தன. மைய நாடுகள் அணியில் ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா ஆகிய நாடுகள் அங்கம் வகித்தன. தொடக்கத்தில் ஜெர்மனியோடும் ஆஸ்திரியாவோடும் அணிவகுத்திருந்த இத்தாலி பின்னர் விலகியது. டிரன்டினோ நகர் வடகிழக்கு இத்தாலியில் அமைந்திருந்தது. ஆனால் ஆஸ்திரியஹங்கேரி அரசின் ஆளுகைக்குட்பட்டிருந்த, இத்தாலிய மக்கள் அதிகம் வாழும் டிரன்டினோ எனும் நகரை மீட்க இத்தாலி மேற்கொண்ட முயற்சியை ஜெர்மனி ஆதரிக்கவில்லை என்பதே இத்தாலியின் விலகலுக்குக் காரணமாகும். அதனால் போர் வெடித்த போது இத்தாலி நடுநிலைமை வகித்தது. ஆனால் வடகிழக்கிலுள்ள பகுதியைப் பெறவேண்டும் எனும் நோக்கத்தில் போரில் கலந்துகொள்ள முடிவுசெய்தது. 1915 ஏப்ரலில் பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி ஆகியவற்றிக்கிடையே லண்டனில் ரகசிய ஒப்பந்தமொன்று கையெழுத்தாயிற்று. அதன்படி போருக்குப் பின்னர் தான் விரும்பிய பகுதி தனக்கு வழங்கப்படும் என்பதன் அடிப்படையில் இத்தாலி மையநாடுகளுக்கு எதிராகப் போரில் பங்கேற்க இசைந்தது.

நேசநாடுகள்

மையநாடுகளை எதிர்த்த நேசநாடுகள் ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, அமெரிக்கா, பெல்ஜியம் ருமேனியா, செர்பியா, கிரீஸ் ஆகிய ஒன்பது நாடுகளாகும். ருமேனியாவும் கிரீஸூம் முறையே 1916, 1917 ஆகிய ஆண்டுகளில் மைய நாடுகளுக்கு எதிராகப் போர் அறிவிப்புச்செய்தன. ஆனால் அவை இப்போரில் சிறிதளவே பங்கேற்றன. பெரும்பாலான அமெரிக்கர்கள் தங்கள் நாடு நடுநிலைவகிக்க வேண்டுமென விரும்பியதால் அமெரிக்கா முதல் மூன்று ஆண்டுகளுக்கு நேசநாடுகளுக்குத் தார்மீக ஆதரவை நல்கியதோடு இங்கிலாந்திற்கும் பிரான்சுக்கும் பெருமளவில் பொருளுதவி வழங்கியது.

சாரின் தோல்வியுற்ற அமைதி முயற்சிகள்

ரஷ்யப் பேரரசர் இரண்டாம் நிக்கோலஸ் நாடுகளனைத்தும் கூடிப்பேசி உலக அமைதிக்கான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டுமென ஆலோசனை வழங்கினார். அவருடைய அழைப்பிற்கிணங்க 1899, 1907 ஆகிய ஆண்டுகளில் ஹாலந்து நாட்டின் தி ஹேக் நகரில் இரண்டு அமைதி மாநாடுகள் கூட்டப்பட்டன. ஆனால் எந்த விளைவும் ஏற்படவில்லை.

மேற்கு அல்லது பிரெஞ்சு முனைப் போர்

பெல்ஜியம் மக்களின் எதிர்ப்பை ஜெர்மனி தகர்த்தெறிந்தது. நேசநாடுகளின் அணியில் போர் செய்யவேண்டிய சுமை பிரெஞ்சுப்படைகளின் தோள்களின் மேல் விழுந்தது. ஒரு மாதத்திற்குள் ஏறத்தாழ பாரீஸ்நகர் வீழ்ந்துவிடும் நிலை ஏற்பட்டது.

டானென்பர்க், மார்ன் போர்கள்

இதேசமயத்தில் ரஷ்யப் படைகள் கிழக்குப் பிரஷ்யாவின் மீது படையெடுத்தன. டானென்பர்க் போரில் ரஷ்யா பேரிழப்புகளைச் சந்தித்தது. இருந்தபோதிலும் மார்ன்போரில் (1914 செப்டம்பர் தொக்கத்தில்) பிரெஞ்சுப்படைகள் ஜெர்மானியரை வெற்றிபெற்றன. இப்படியாகப் பாரிஸ் காப்பாற்றப்பட்டது. மார்ன் போரானது பதுங்குக் குழிப்போரின் தொடக்கமாகும்.


       டானென்பர்க் போர் 

பதுங்குக் குழிப்போர்

போர்வீரர்களால் தோண்டப்படும் பதுங்குக் குழிகள் எதிரிகளின் சுடுதலில் இருந்து தங்களைக் காத்துக்கொண்டு பாதுகாப்பாக நிற்க உதவின. பிரதானப் பதுங்குக் குழிகள் ஒன்றோடொன்றும் பின்புறமுள்ள குழிகளோடும் இணைக்கப்பட்டிருக்கும். அவற்றின் வழியாக உணவு, ஆயுதங்கள், கடிதங்கள், ஆணைகள் ஆகியவை வந்துசேரும். புதிய வீரர்களும் வந்து சேர்வர்.


வெர்டன் போர்

1916ஆம் ஆண்டு பிப்ரவரிக்கும் ஜூலைக்குமிடையே ஜெர்மானியர் பிரான்சின் முக்கியக் கோட்டையான வெர்டனைத் தாக்கினர். ஐந்து மாத காலம் நடைபெற்ற வெர்டன் போரில் இரண்டு மில்லியன் வீரர்கள் பங்கெடுத்தனர். அவர்களில் சரிபாதி வீரர்கள் கொல்லப்பட்டனர். ஜெர்மானியருக்கு எதிரான இங்கிலாந்தின் தாக்குதல் சோம்மி நதிக்கரை அருகே நடைபெற்றது. நான்குமாத காலம் நடைபெற்ற போரின் முதல்நாளில் இங்கிலாந்து 20,000 வீரர்களை இழந்தது. இருந்தபோதிலும் வெர்டன்போர் முதல் உலகப்போரில் நேசநாடுகளே வெற்றி பெறும் என்பதைத் தீர்மானித்தது.

கிழக்குமுனை அல்லது ரஷ்யமுனைப்போர்

கிழக்கு முனையில் ரஷ்யப் படைகள் ஆஸ்திரியப் படைகளை மீண்டும் மீண்டும் தோற்கடித்தன. அதே சமயம் ரஷ்யப் படைகள் ஜெர்மன் படைகளால் தோற்கடிக்கப்பட்டன. ரஷ்ய இராணுவம் மோசமாகப் பயிற்றுவிக்கப்பட்டிருந்ததாலும் போதுமான போர்த்தளவாட முன்னேற்பாடுகள் இல்லாமலிருந்ததாலும் பெருமளவு இழப்பைச் சந்தித்தது. 1917இல் சார் மன்னருடைய ஆட்சி மாபெரும் அக்டோபர் புரட்சியின் மூலமாகத் தூக்கி வீசப்பட்டது. ரஷ்யாவிற்கு அமைதி தேவைப்பட்டதால் ஜெர்மனியோடு 1918 மார்ச் 3ஆம் நாள் பிரெஸ்ட்-லிடோவஸ்க் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுப் போரிலிருந்து விலகியது.

சிறிய போர் அரங்குகள் மத்திய கிழக்கு

மைய நாடுகளுடன் சேர்ந்து துருக்கி போரிட்டது. தொடக்கத்தில் வெற்றிகளைப் பெற்றாலும், நேசநாடுகள் பின்னடைவுகளைச் (குறிப்பாக மெசபடோமியா, காலிபோலி ஆகிய இடங்களில்) சந்தித்தாலும் இறுதியில் துருக்கி தோற்கடிக்கப்பட்டது. துருக்கியர் சூயஸ் கால்வாயைத் தாக்க முயன்றனர். ஆனால் அது முறியடிக்கப்பட்டு துரத்தப்பட்டனர். இங்கிலாந்து முதலில் ஈராக்கிலும் பின்னர் பாலஸ்தீனத்திலும் சிரியாவிலும் துருக்கியப் படைகளுடன் போரிட்டது.

தூரக்கிழக்கு

சீனா நேசநாடுகள் அணியில் சேர்ந்திருந்தது. ஷான்டுங் மாகாணத்தில் சீனாவிற்கு ஜெர்மனி வழங்கிய கியாச்சவ் பகுதியை ஜப்பான் கைப்பற்றிக்கொண்டது. தூரக் கிழக்குப் பகுதியில் வேறு போர்களில்லை. இச்சூழலைத் தனக்குப் பயனுள்ளதாக மாற்றிய ஜப்பான் சீனாவைக் கட்டாயப்படுத்தியும் அச்சுறுத்தியும் அதிகப் பயனளிக்கக்கூடிய சலுகைகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொண்டது.

பால்கன் பகுதி

ஆஸ்திரியா – ஜெர்மானியப் படைகள் பல்கேரியாவின் ஒருங்கிணைப்போடு செர்பியாவை முற்றிலுமாக நசுக்கின. செர்பியா ஜெர்மனியின் ஆட்சியின் கீழ் வந்தது. போரின் போக்கைக் கண்காணித்த ருமேனியா 1916 ஆகஸ்டில் நேசநாடுகள் அணியில் இணைந்தது. ஆனால் ருமேனியாவும் ஆஸ்திரியா - ஜெர்மன் படைகளால் கைப்பற்றப்பட்டது.

ஆப்பிரிக்காவில் ஜெர்மன் காலனிகளின் நிலை

கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்த ஜெர்மன் காலனிகளும் நேசநாடுகளால் தாக்கப்பட்டன. இக்காலனிகளனைத்தும் ஜெர்மனியிலிருந்து தொலைதூரத்தில் இருந்ததாலும் அவற்றால் உடனடியாக எவ்வித உதவியையும் பெறமுடியாமல் போனதாலும் நேசநாடுகளிடம் சரணடையும் நிலை ஏற்பட்டது.

ஆஸ்திரியத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத இத்தாலி

இத்தாலி 1916 மே திங்களில் நேசநாடுகள் அணியில் இணைந்தது. ஆஸ்திரியாவை எதிர்த்துப் போரிட்ட இத்தாலியர் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை நீட்டித்தனர். ஆனால் ஆஸ்திரியாவிற்கு உதவியாக ஜெர்மானியர் களமிறங்கியபோது இத்தாலி நிலைகுலைந்தது.

மையநாடுகள் வெற்றி பெற்ற இடங்கள்

மைய நாடுகள் வெற்றிகரமாக பெல்ஜியத்தையும் பிரான்சின் வடகிழக்குப் பகுதியையும், போலந்து, செர்பியா, ருமேனியா ஆகியவற்றையும் கைப்பற்றின.

போரின் மையமானது மேற்கு முனையிலும் கடல்களிலும் நிலை கொண்டிருந்தது. கடல்களில் நேசநாடுகளே ஒப்புயர்வற்ற இடத்தை வகித்தன. கடல் பயணப்பாதைகளை நேசநாடுகள் கட்டுப்படுத்தியதால் மைய நாடுகளுக்குச் செல்ல வேண்டிய உணவு, ஏனைய பொருள்கள் ஆகியவற்றை அவர்களால் தடுத்து நிறுத்த முடிந்தது. இதனால் ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் பெண்களும் குழந்தைகளும் பட்டினியாலும் வறுமையினாலும் துயருற்றனர். ஜெர்மனி இங்கிலாந்தின் மீது வான்வழித் தாக்குதலை மேற்கொண்டது. லண்டன் மீதும், தொழிற்சாலைகள் அமைந்திருந்த பகுதிகளின் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. பின்னர் பொதுமக்களை இலக்காகக் கொண்டு குண்டுகள் வீசப்பட்டன. ஜெர்மனி விஷவாயுவை அறிமுகம் செய்தது. பின்னர் இரு தரப்பினருமே அவ்வாயுதத்தைப் பயன்படுத்தலாயினர்.

கடற்போர்களும் போரில் அமெரிக்கா பங்கேற்றலும்

1916இல் வடகடலில் கடற்போர் (ஜூட்லேண்டு போர்) நடைபெற்றது. இங்கிலாந்து இப்போரில் வெற்றிபெற்றது. இதன் பின்னர் ஜெர்மானியர் தங்களின் நீர்மூழ்கிப்போரைத் தொடங்கினர். அவை நேசநாடுகளின் கப்பல்களுக்கு இடையூறு செய்தன. புகழ்பெற்ற எம்டன் கப்பல் சென்னைமீது குண்டுகளை வீசியது. தங்கள் கப்பல்களின் போக்குவரத்தை இடைமறித்துத் தடை செய்த நடவடிக்கைகளுக்கு எதிர்நடவடிக்கையாக 1917 ஜனவரி திங்களில் நடுநிலை நாடுகளின் கப்பல்களையும் மூழ்கடிக்கப்போவதாக ஜெர்மனி அறிவித்தது. லூசிடானியா என்னும் அமெரிக்கக்கப்பல் ஜெர்மனியால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது. இதன் விளைவாகப் அதில் பயணித்த பல அமெரிக்கர்கள் உயிரிழந்தனர். அதனால் அமெரிக்காவில் பெருங்கோபமும் சீற்றமும் ஏற்பட்டது. குடியரசுத்தலைவர் உட்ரோ வில்சன் ஜெர்மனிக்கு எதிராக 1917 ஏப்ரல் திங்களில் போர்ப்பிரகடனம் செய்தார். மாபெரும் பொருளாதார பலத்தோடு அமெரிக்கா போரில் இறங்கியது. அது நேசநாடுகளின் வெற்றியை முன்னரே எழுதப்பட்ட முடிவுரையாக்கிற்று.


   லூசிடானியா கப்பல் மூழ்குதல்


(இ) போர்நிறுத்தமும் வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையும்

சிறப்பான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எதிர்த்து நிற்க இயலாத நிலையில் ஜெர்மனி இறுதியில் 1918 நவம்பரில் சரணடைந்தது. போர் நிறுத்தம் நவம்பர் 11 முதல் நடைமுறைக்கு வந்தது. ஜெர்மானிய அரசர் கெய்சர் இரண்டாம் வில்லியம் பதவி விலகியதைத் தொடர்ந்து ஜெர்மனியில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் காரணமாக ஜெர்மனி கடுமையான நிபந்தனைகளை ஒத்துக்கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டது.

பாரிஸ் அமைதி மாநாடு

பாரிஸ் அமைதி மாநாடு, போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான இரண்டு மாதங்களுக்குப் பின்னர் 1919 ஜனவரி திங்களில் தொடங்கியது. உட்ரோ வில்சன் (அமெரிக்க அதிபர்), லாயிட் ஜார்ஜ் (இங்கிலாந்துப் பிரதமர்), கிளமென்சோ (பிரான்சின் பிரதமர்) ஆகிய மூவரும் கலந்தாய்வில் முக்கியப் பங்குவகித்தனர்.


மற்றுமொரு போரைச் சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தில் ஜெர்மனிய அரசு உடன்படிக்கையை ஒத்துக்கொள்ளும்படி நிர்பந்திக்கப்பட்டது. 1919ஜூன் 28ஆம் நாள் அமைதி உடன்படிக்கை வெர்செய்ல்ஸ் கண்ணாடி மாளிகையில் கையெழுத்திடப்பட்டது.


      பாரிஸ் அமைதி மாநாடு

உடன்படிக்கையின் சரத்துக்கள்

1. போரைத் தொடங்கிய குற்றத்தைச் செய்தது ஜெர்மனி என்பதால் போர் இழப்புகளுக்கு ஜெர்மனி இழப்பீடு வழங்கவேண்டும். எனவும் மைய நாடுகள் அனைத்தும் போர் இழப்பீட்டுத்தொகையை வழங்கவும் வலியுறுத்தப்பட்டன.

2. ஜெர்மன் படை 1,00,000 வீரர்களை மட்டுமே கொண்டதாக அளவில் சுருக்கப்பட்டது. சிறிய கப்பற்படையொன்றை மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

3. ஆஸ்திரியா, ஜெர்மனி ஆகிய இரண்டின் ஒருங்கிணைப்பு தடை செய்யப்பட்டது.

4. ஜெர்மனியின் அனைத்துக் காலனிகளும் பன்னாட்டுச் சங்கத்தின் பாதுகாப்பு நாடுகளாக ஆக்கப்பட்டன.

5. ரஷ்யாவுடன் செய்துகொள்ளப்பட்ட பிரெஸ்ட்-லிடோவஸ்க் உடன்படிக்கையையும் பல்கேரியாவுடன் மேற்கொள்ளப்பட்ட புகாரெஸ்ட் உடன்படிக்கையையும் திரும்பப் பெற்றுக்கொள்ள ஜெர்மனி வற்புறுத்தப்பட்டது.

6. அல்சேஸ் - லொரைன் பகுதிகள் பிரான்சுக்குத் திருப்பித் தரப்பட்டன.

7. முன்னர் ரஷ்யாவின் பகுதிகளாக இருந்த பின்லாந்து, எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகியன சுதந்திர நாடுகளாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டது.

8. வடக்கு ஷ்லெஸ்விக் டென்மார்க்கிற்கும் சிறிய மாவட்டங்கள் பெல்ஜியத்திற்கும் வழங்கப்பட்டன.

9. போலந்து மீண்டும் உருவாக்கப்பட்டது.

10. நேசநாடுகளின் ஆக்கிரமிப்பின் கீழ் ரைன்லாந்து இருக்கும் என்றும், ரைன் நதியின் கிழக்குக்கரைப் பகுதி படை நீக்கம் செய்யப்பட்டப் பகுதியாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அமெரிக்க குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சன் தனது பதினான்கு அம்சத்திட்டத்தை நேசநாடுகள் பின்பற்றுவதற்காக முன்வைத்தார். அவற்றில் மிகமுக்கியமானதாக அவர் கோடிட்டுக்காட்டியது மிகப்பெரும் நாடுகள் சிறிய நாடுகள் எனும் பேதமில்லாமல் அனைத்து நாடுகளின் அரசியல் சுதந்திரத்திற்கும் அந்நாடுகளின் நிலப்பரப்பின் ஒருமைப்பாட்டிற்கும் - எல்லைகளின் உறுதிப்பாட்டிற்கும் பரஸ்பரம் உத்தரவாதம் அளிக்கக்கூடிய நாடுகளைக் கொண்ட பொது அமைப்பை உருவாக்க வேண்டும்" என்பதாகும்.

நேசநாடுகள் ஆஸ்திரியா, ஹங்கேரி, பல்கேரியா, துருக்கி ஆகிய நாடுகளுடன் தனித்தனியாக உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டன. துருக்கியோடு மேற்கொள்ளப்பட்ட செவ்ரஸ் உடன்படிக்கையைச் சுல்தான் ஏற்றுக்கொண்டாலும் அது முஸ்தபா கமால் பாட்சாவும் அவரைப் பின்பற்றுவோரும் எதிர்த்ததால் தோற்றுப்போனது.

முதல் உலகப்போரின் விளைவுகள்

முதல் உலகப்போர், ஐரோப்பிய சமூக மற்றும் அரசியல் ஆகியவற்றின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. கட்டாய இராணுவ சேவை மூலமாகவும், வான்வழித்தாக்குதல்கள் மூலமாகவும் கடந்த காலங்களைக் காட்டிலும் அதிகமான மக்களைப் போரில் பங்கேற்கச் செய்து அதிகமான பாதிப்புகளையும் ஏற்படுத்தியது. நான்கு ஆண்டுகளில் 8 மில்லியன் மக்கள் மாண்டனர். அதைப் போன்று இரண்டு மடங்கு மக்கள் காயமடைந்தனர். பலர் வாழ்நாள் முழுவதும் செயல்பட இயலாதவர்கள் ஆயினர். இதனைத் தொடர்ந்து 1918இல் இன்ஃப்ளூயன்ஸா (influenza) நோயில் பல மில்லியன் மக்கள் மாண்டனர். இதன்விளைவாக அனைத்து நாடுகளிலும் ஆண் பெண் எண்ணிக்கையில் சமநிலை குலைந்து ஆண்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. போர்வீரர்கள் பொதுமக்களைக் காட்டிலும் உயரிய நிலையில் வைக்கப்பட்டனர்.

முதல் உலகப் போரும் அதன் பின்விளைவுகளும் வரலாற்றில் அனைத்தையும் புரட்டிப்போட்ட காலமாக அமைந்தது. அவையனைத்திலும் கருத்தைக் கவர்வதாக அமைந்தது U.S.S.R அல்லது ஐக்கிய சோசலிஸ்ட் சோவியத் குடியரசுகள் என்றழைக்கப்பட்ட சோவியத் ரஷ்யாவின் எழுச்சியும் அதன் ஒருங்கிணைப்புமாகும். கடன்பட்ட ஒரு நாடாகப் போரில் நுழைந்த அமெரிக்கா போருக்குப் பின்னர் உலகத்திற்கே கடன் கொடுக்கும் நாடாக மேலெழுந்தது.

இக்காலகட்டத்தின் மற்றொரு முதன்மையான நிகழ்வு காலனிநாடுகளின் முழுமையான விழிப்புணர்வும், விடுதலை பெறுவதற்காக அவை மேற்கொண்ட தீவிர முயற்சிகளுமாகும்.

துருக்கி மீண்டும் ஒரு நாடாக மறுபிறவி எடுப்பதற்கு முஸ்தபா கமால் பாட்சா முக்கிய பங்கு வகித்தார். கமால் பாட்சா அந்நாட்டிற்கு விடுதலையை மட்டும் பெற்றுத்தரவில்லை. அவர் துருக்கியை நவீனமயமாக்கி அதை எதிர்மறையான அங்கீகாரத்திலிருந்தும் மாற்றியமைத்தார்.

இந்தியாவின் மீதான தாக்கம்

முதல் உலகப்போர் இந்தியாவின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளில் போர்ப்பணி செய்வதற்காக ஆங்கிலேயர் இந்தியர்களைக் கொண்ட பெரும்படையைத் திரட்டினர். போர் முடிந்த பின்னர் இவ்வீரர்கள் புதிய சிந்தனைகளோடு தாயகம் திரும்பினர்.

அச்சிந்தனைகள் இந்திய சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தின. போர் செலவுக்காக இந்தியா 230 மில்லியன் பவுண்டுகளை ரொக்கமாகவும், 125 மில்லியன் பவுண்டுகளைக்கடனாகவும் வழங்கியது. மேலும் 250 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள போர்முனைக்குத் தேவையான பொருள்களையும் இந்தியா அனுப்பிவைத்தது. இதன் விளைவாக இந்தியாவில் பெருமளவிலான பொருளாதார இன்னல்கள் ஏற்பட்டன. உணவுதானியப் பற்றாக்குறையால் கலவரங்கள் ஏற்பட்டு ஏழைமக்கள் கடைகளைக் கொள்ளையடித்தனர். போர் முடிவடையுந் தருவாயில் உலகம் முழுதும் பரவிய விஷக்காய்ச்சலால் இந்தியாவும் பெருந்துயருக்குள்ளானது.

போர்நிலைமைகள் இந்திய அரசியலில் தன்னாட்சி இயக்கம் உதயமாக வழிகோலியது. பிளவுபட்டிருந்த காங்கிரஸ் இயக்கம் போரின்போது மீண்டும் இணைந்தது.

இங்கிலாந்து இந்தியாவின் விசுவாசத்தைப் பாராட்டிப் பரிசளிக்கும் என்ற நம்பிக்கையோடு இந்தியர்களும் இந்தியாவும் இப்போரில் செயலூக்கத்துடன் பங்கேற்றனர். ஆனால் ஏமாற்றமே காத்திருந்தது. இவ்வாறு முதல் உலகப்போர் இந்தியச் சமூகம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றின் மேல் பல தாக்கங்களை ஏற்படுத்தியது.


10th Social Science : History : Chapter 1 : Outbreak of World War I and Its Aftermath : Causes, Course and Results of World War I in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 1 : முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் : முதல் உலகப்போருக்கான காரணங்களும் போக்கும் விளைவுகளும் - : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 1 : முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்