தாவரவியல் - கேரா - பாசிகள் | 11th Botany : Chapter 2 : Plant Kingdom

   Posted On :  05.07.2022 02:23 am

11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம்

கேரா - பாசிகள்

கேரா பொதுவாக ’கல் தாவரங்கள்’ (Stoneworts) என அழைக்கப்படுகிறது. இவை நன்னீர் நிலைகளாகிய ஏரி, அமைதியான ஓடைகளின் அடித்தள சகதியில் பதிந்து, மூழ்கி வாழ்கின்றன.

கேரா

வகுப்பு - குளோரோஃபைசி

துறை - கேரேல்ஸ்

குடும்பம் - கேரேசி

பேரினம் - கேரா

கேரா பொதுவாக ’கல் தாவரங்கள்’ (Stoneworts) என அழைக்கப்படுகிறது. இவை நன்னீர் நிலைகளாகிய ஏரி, அமைதியான ஓடைகளின் அடித்தள சகதியில் பதிந்து, மூழ்கி வாழ்கின்றன. கேரா பால்டிகா (Chara baltica) என்ற சிற்றினம் உப்பு நீரில் வாழ்கிறது. இத்தாவர உடலத்தில் பெரும்பாலும் கால்சியம் மற்றும் மெக்னீசியம் கார்பனேட் பொதிந்து காணப்படுகிறது.


உடல அமைப்பு

இத்தாவரம் பல செல்களாலான கண்களுக்குப் புலப்படக்கூடிய உடலத்தைக் கொண்டது. தாவரம் மைய அச்சு, வேரிகள் என பிரித்தரியப்படுகிறது. வேரிகள் இழைபோன்று பலசெல் அமைப்புடையவை. இவை உடலத்தின் அடிப்புறத்தின் இருந்தோ அல்லது கீழ் பகுதியில் உள்ள கணுவின் வெளிப்பு செல்களிலிருந்தோ தோற்றுவிக்கப்படுகிறது. வேரிகளின் இழைகளில் சரிவாக அமைந்த குறுக்குச் சுவர்கள் காணப்படுகின்றன. இந்த வேரிகள் உடலத்தின் மையஅச்சு வளர்தளத்தில் ஒட்டி வாழவும், உப்பு, கரைப்பொருள்களை உறிஞ்சவும் உதவுகின்றன. (படம் 2.5)


உடலத்தின் மைய அச்சு கிளைத்து, நீண்டு கணு, கணுவிடைப்பகுதி என பிரித்தறியப்படுகிறது. கணுவிடைப் பகுதிகளின் மையத்தில் பல நீண்ட செல்களால் ஆன மைய அச்சு செல் அல்லது கணுவிடைசெல் காணப்படுகிறது. அச்சு செல்களைச் சூழ்ந்து நீண்ட செங்குத்தான அளவில் சிறிய புறணி செல்கள் கணுப்பகுதியிலிருந்து தோன்றுகின்றன.

கேரா வாலிச்சை மற்றும் கேரா கோராலினா போன்ற தாவரங்களில் புறணி செல்கள் காணப்படுவதில்லை. தாவரத்தின் கணுப்பகுதியிலிருந்து மூன்று விதமான வளரிகள் தோன்றுகின்றன. அவை. (1) வரம்புடைய வளர்ச்சி கொண்ட கிளைகள் (2) வரம்பற்ற வளர்ச்சி கொண்ட கிளைகள் (3) சிறுசெதில்கள் (Stipuloides). நுனி செல்லின் மூலம் மைய அச்சு மற்றும் பக்க கிளைகளில் வளர்ச்சி நடைபெறுகிறது.

கேராவின் கணுப்பகுதி ஒரு உட்கருவையும், குறைந்த எண்ணிக்கையில் நீள்முட்டை வடிவ பசுங்கணிகங்களையும் பெற்றுள்ளது. கணுவிடைப்பகுதி நீண்ட செல்களையும், மையத்தில் ஒரு பெரிய வாக்குவோலையும், பல உட்கருக்களையும், எண்ணற்ற வட்டுவடிவ பசுங்கணிதத்தையும் கொண்டது.

கேராவின் சைட்டோபிளாசம் வெளிபுறத்தில் புறபிளாசம் (Ectoplasm), உட்புறத்தில் அகபிளாசம் (Endoplasm) என வேறுபட்டுள்ளது. புறபிளாசத்தில் சைட்டோபிளாச நகர்வு (Cytoplasmic streaming) காணப்படுகிறது.


இனப்பெருக்கம்

கேரா தழைஉடல மற்றும் பாலினப்பெருக்க முறைகளில் இனப்பெருக்கம் செய்கிறது. தழைஉடல இனப்பெருக்கம் நட்சத்திரவடிவ அமைலங்கள் (Amylum stars) வேர் சிறுகுமிழ்கள், (Root bulbils) உருவமற்ற சிறுகுமிழ்கள் (Amorphous bulbils) மற்றும் இரண்டாம் நிலை புரோட்டோனீமா வழி நடைபெறுகிறது.

முட்டைகருவுறுதல் (Oogamy) வகை பாலினப்பெருக்கம் காணப்படுகிறது. வரம்புடைய வளர்ச்சி கொண்ட கிளைகளில் காணத்தக்க பாலின உறுப்புகள் தோற்றுவிக்கப்படுகின்றன. ஆண் பாலின உறுப்பு ஆந்திரிடியம் அல்லது குளோபியூல் (Globule) எனவும், பெண் பாலின உறுப்பு ஊகோணியம் அல்லது நியூக்யூல் (Nucule) எனவும் அழைக்கப்படுகிறது (படம் 2.6). நியூக்யூல் குளோபியூலுக்கு மேற்புறமாக அமைந்துள்ளது. அளவில் பெரிய கோள வடிவுடைய ஆந்திரீடியத்தின் சுவர் எட்டு செல்களால் ஆனது. இவை கவச செல்கள் (Shield cells) என்று அழைக்கப்படுகின்றன.



ஆந்திரிடியத்தில் நகரும் ஆண்கேமீட்டுகளை உற்பத்தி செய்யக்கூடிய விந்தாக்கு இழைகள் காணப்படுகின்றன. இந்த இழைகள் நகரும் ஆண்கேமீட்டுகளை உற்பத்தி செய்கின்றன. நியூக்யூலின் மேற்பகுதியில் ஐந்து சுருள் போன்று திருகமைந்த குழல் செல்களும், ஐந்து முடி செல்களும் காணப்படுகிறது. இதன் மையத்தில் ஒரு முட்டை காணப்படுகிறது. நியூக்யூல் முதிர்ச்சி அடைந்தபின் குழாய் செல்கள் பிரிந்து சிறிய பிளவை ஏற்படுத்துகின்றன. இப்பிளவின் வழியே நகரும் ஆண் கேமீட்டுகள் ஊகோணியத்தினுள் ஊடுருவுகிறது. இவ்வாறு நுழையும் நகரும் ஆண் கேமீட்களில் ஏதேனும் ஒன்று முட்டையுடன் இணைந்து இரட்டை மடிய (2n) கருமுட்டையை தோற்றுவிக்கிறது. இந்த கருமுட்டை தடித்த உறையை தோற்றுவித்து ஓய்வு நிலைக்கு பிறகு முளைக்க ஆரம்பிக்கிறது. கருமுட்டையில் உள்ள உட்கரு பகுப்படைந்து நான்கு ஒற்றைமடிய சேய் உட்கருக்களை தருகிறது. இதில் மூன்று உட்கருக்கள் அழிந்துவிடுகின்றன. எஞ்சிய ஒரு உட்கரு உடைய கருமுட்டை முளைத்து, ஒற்றை மடிய புரோடோனீமாவை தோற்றுவிக்கிறது. கேராவின் உடலம் ஒற்றை மடிய நிலை பெற்றுள்ளது வாழ்கைசுழற்சியில் கருமுட்டை மட்டுமே இரட்டைமடிய (2n) நிலையைக் கொண்டது. ஆகவே கேராவின் வாழ்க்கை சுழற்சி ஒற்றைமடிய (n) வாழ்க்கைச்சுழலைச் சார்ந்தது. இதில் சந்ததி மாற்றம் காணப்படுகிறது (படம் 2.7).


உங்களுக்குத் தெரியுமா?

கடலில் ஒரு திறன்மிக்க பயிராக்கம்:

கப்பபைகஸ் ஆல்வர் ஜே , கிராசிலேரியா எடுலிஸ், ஜெலிடியெல்லா ஏசரோசா போன்ற பாசிகள் பாசிகூழ்மங்கள் அறுவடைச் செய்ய வணிகரீதியில் வளர்க்கப்படுகின்றன.

கடல்பனை (Sea Palm) என்பது போஸ்டிலியா பால்மிபார்மிஸ் எனும் பழுப்பு பாசியாகும்.

Tags : தாவரவியல்.
11th Botany : Chapter 2 : Plant Kingdom : Chara - Algae in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம் : கேரா - பாசிகள் - தாவரவியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 2 : தாவர உலகம்