இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - சீனப்புரட்சி | 10th Social Science : History : Chapter 4 : The World after World War II

   Posted On :  27.07.2022 04:51 am

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 4 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

சீனப்புரட்சி

நீண்ட வரலாற்றைக் கொண்ட சீன நாகரிகம் ஐரோப்பாவைவிட மேம்பட்டதாகும். ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் அதன் வளர்ச்சி தேங்கியது. அதன் அரசர்களான மஞ்சுக்கள் சீனாவை ஏறக்குறைய 1650 ஆண்டுகள் ஆட்சி புரிந்திருந்தனர்.

சீனப்புரட்சி 

(அ) போருக்கு முன்பான சீனா

நீண்ட வரலாற்றைக் கொண்ட சீன நாகரிகம் ஐரோப்பாவைவிட மேம்பட்டதாகும். ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் அதன் வளர்ச்சி தேங்கியது. அதன் அரசர்களான மஞ்சுக்கள் சீனாவை ஏறக்குறைய 1650 ஆண்டுகள் ஆட்சி புரிந்திருந்தனர். ஆட்சியதிகாரமானது அறிவுமிக்க அதிகாரிகளாக கருதப்பட்ட மாண்டரின்கள் எனும் நிலவுடைமையாளர் வசம் இருந்தது. சாதாரண விவசாயிகள் அதிகமான வரிவிதிப்பினாலும் மிதமிஞ்சிய குத்தகை வசூலிப்பாலும் குறைந்த நிலம் கொண்டவர்களாக விளங்கியதாலும் கடுமையான பாதிப்புகளுக்குட்பட்டு வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தனர். சில இருப்புப்பாதைப் பணிகளும் பொறியியல் நிபுணத்துவம் கொண்ட சில பணிகளும் நடைபெற்றிருந்தாலும் தொழிற்சாலைகள் போதிய அளவில் உருவாகவில்லை.

அரசியல் - பொருளாதார அதிருப்தி பல இடங்களில் விவசாயிகளை எழுச்சியடையச் செய்தது. தைபிங் கலகம் (1850-64) இங்கு ஒரு முக்கிய எழுச்சியாகும். முறையே 1832லும் 1848லும் நடந்த அபினிப்போர்களில் தோல்வியைச் சந்தித்த சீனா முதன்முறையாக மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளுக்கு தன் துறைமுகங்களைத் திறந்துவிட்டது. இம்முடிவினால் பொருளாதாரச் சுரண்டலும் சீன மக்கள் மேலும் வறுமைக்குத் தள்ளப்பட்டதும் நடந்தேறியது.

ஐரோப்பியர்களின் வருகை வெளிநாட்டினர் மீது கடும் வெறுப்பு ஏற்படக் காரணமாக இருந்தது. இவற்றோடு போரில் ஏற்பட்ட தோல்வி மேற்கத்திய கல்வியறிவு பெற்ற அறிஞர்களிடம் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த கோரிக்கை வைக்கத் தூண்டியது. மேற்கத்திய கல்வியறிவு பெற்ற அறிவுஜீவிகளின் வழிகாட்டுதலினால் சிறுவயதினரான பேரரசர் 1898இல் நூறு நாட்கள் சீர்திருத்தம் என்ற பெயரில் வரிசையாக சில சீர்திருத்தங்களைத் துவக்கினார். இச்சீர்திருத்தங்கள் பழமைவாதிகளிடமிருந்தும் அரசரின் பாதுகாவலராகத் திகழ்ந்த பேரரசியான சூசி யிடமிருந்து கடும் எதிர்ப்பினைக் கிளப்பின. பேரரசியார் பேரரசரை சிறையில் தள்ளியதோடு சீர்திருத்தங்களைப் புறந்தள்ளினார்.

(ஆ) 1911ஆம் ஆண்டு சீனப்புரட்சி

மஞ்சு வம்சத்தின் சிதைவு 1908ஆம் ஆண்டு பேரரசின் பாதுகாவலராயிருந்த பேரரசியார் தாவேகரின் மரணத்தோடுத் துவங்கியது. புதிய பேரரசர் இரண்டு வயதே நிரம்பியவர் என்ற நிலையில் மாகாண ஆளுநர்கள் சுதந்திரமாகச் செயல்படலாயினர். உள்ளூர் இராணுவக் கிளர்ச்சி 1911ஆம் ஆண்டு அக்டோபரில் ஏற்பட்டு அதன் பாதிப்பு பலமட்டங்களில் பரவியது. மாகாண ஆளுநர்கள் மஞ்சு அரசின் பிரதிநிதித்துவங்களை உதறித் தங்கள் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தலாயினர். இக்காலக் கட்டத்தில் நடுத்தர வர்க்கத்திலிருந்து சில தலைவர்கள் உருவாகியிருந்தனர். அவர்களில் டாக்டர் சன் யாட் சென்னும் ஒருவர். சீனாவில் ஏற்பட்ட எழுச்சியைப் பற்றி அமெரிக்க நாளிதழ்களின் மூலமாக அறிந்து கொண்ட டாக்டர் சன் யாட் சென் ஷாங்காய் நகரை வந்தடையந்ததும் அங்கே அவர் சீனக் குடியரசின் தற்காலிக குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டாக்டர் சன் யாட் சென் (1866-1925)


ஒரு ஏழ்மையான குடும்பத்தில் காண்டன் நகரத்தின் அருகே பிறந்த டாக்டர் சன்யாட் சென், நவீன சீனாவின் தந்தை, ஒரு கிறித்தவப் பள்ளியில் கல்வி பெற்றதோடு கிறித்தவராகவும் மாறினார். ஹாங்காங் நகரில் மருத்துவப் பயிற்சி பெற்றார். அரசியலில் ஆர்வம் கொண்டிருந்த அவர் 1895இல் மஞ்சுக்களுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டார். அவர் 1905ஆம் ஆண்டு டோக்கியோவில் ஒரு அரசியல் கட்சியைத் துவக்கினார். அதுவே 1912இல் கோமிங்டாங் என்றும் தேசிய மக்கள் கட்சி என்றும் உருவெடுத்தது. தேசியம், ஜனநாயகம், மக்களின் வாழ்க்கை முறை ஆகிய மூன்று கூறுகளைக் கொண்ட அவர்தம் கொள்கை சோஷியலிஸச் சிந்தனையையே உச்சமாகக் கருத்தில் கொண்டது.

இ) யுவான் ஷி-கேயும் அதன் பின்னரும்


யுவான் ஷி கேயின் கீழ் சீனா நான்கு வருடம் ஒருமைப்பாட்டுடன் விளங்கியது. 1916ஆம் ஆண்டு அவரது மரணத்திற்குப்பின் அடுத்தப் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு குடியரசுத் தலைவர் நியமிக்கப்பட்டிருந்தாலும் அவ்வரசு பெயரளவில் மட்டுமே நடுவண் தன்மையைக் கொண்டிருந்தது.

ஈ) சீனப் பொதுவுடைமைக் கட்சி


புரட்சிக்கும் அதோடு இணைந்து சீனப் பழமைவாதிகளின் வீழ்ச்சிக்கும் பின்னர் கன்பூசியசின் சிந்தனைகள் புறந்தள்ளப்பட்டு 1917இல் ஏற்பட்ட ரஷ்யப் புரட்சியோடு மார்கஸ்லெனின் போன்றவர்களின் சிந்தனை வலுப்பெற்றது. மார்க்ஸியத்தை கற்கும் விதமாக 1918இல் பீகிங் பல்கலைக்கழகத்தில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பால் நடத்தப்பட்டக் கூட்டங்களில் கலந்துகொண்டவருள் மா சே - துங்கும் ஒருவர் ஆவார்.

மா சே - துங் (1893 -1976)


தென்கிழக்குச் சீனாவில் உள்ள ஹுனான் நகரில் மா சே துங் பிறந்தார். அவரது தந்தையார் செல்வச்செழிப்பான விவசாயிகளில் ஒருவர் என்பதோடு மஞ்சுக்களின் ஆட்சியை ஆதரித்தவராவார். வாசிப்பதில் மிகுந்த ஆர்வங்கொண்ட மா சே துங் தன் திறமையால் சாங்ஸியாவிலிருந்த இளையோர் கல்லூரியில் இடம்பிடித்தார். அதே ஆண்டு (1911) சீனாவில் புரட்சி வெடித்தது. புரட்சிப்படை ஒன்றை உருவாக்கிய போதும் விரைவில் அதிலிருந்து விலகி சாங்ஸியாவிலிருந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் ஹூனான் நகரை மையமாகக் கொண்டு தனது அரசியல் வாழ்க்கையைத் துவங்கிய அவர் ஒரு முழு பொதுவுடைமைவாதியாக மாறினார்.

கோமிங்டாங்கும் ஷியாங் கே-ஷேக்கும்

சன் யாட் சென் இறந்த பின் கோமிங்டாங்கின் தலைவராக ஷியாங்கே -ஷேக்கும், பொதுவுடைமைக் கட்சியின் தலைவர்களாக சூ - யென்-லாயும் மா சே -துங்கும் விளங்கினர். பொதுவுடைமைவாதத்தின் தீவிர விமர்சகரான ஷியாங் தனது கட்சிக்குள்ளிருந்த பொதுவுடைமைவாதிகளை முக்கிய பொறுப்புகளிலிருந்து விடுவித்தார். பொதுவுடைமைவாதிகளின் செல்வாக்கோ பெருகத் தொடங்கி அவர்கள் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் தங்கள் இராணுவத்தில் பெருமளவில் சேர்க்கும் நிலை ஏற்பட்டது. மேலும் வெற்றிகரமாக அவர் 1928ஆம் ஆண்டு பீகிங்நகரைக் கைப்பற்றினார். மீண்டும் சீனாவில் ஒரு நடுவண் அரசு உருவானது.


விவசாயிகளை வழிநடத்திய மாவோ

கோமிங்டாங்கின் கட்டுப்பாடு நகரங்களின் மீது கடுமையாக இருந்ததை மாவோ (மா சே - துங்) உணர்ந்தார். அதனால் அவர் விவசாயிகளை ஒருங்கிணைக்க முயற்சி செய்தார். மாவோவின் தலைமையில்சிலநூறுகம்யூனிஸ்டுகள் காடுகள் சூழ்ந்த மலைப்பகுதிகளில் ஏழு ஆண்டுகள் பதுங்கியிருந்தனர். கோமிங்டாங்கால் அக்காட்டு மலைப்பகுதியில் நுழைய முடியாத அதேவேளையில் மாவோவின் படை பெருகிக்கொண்டே சென்றது. இவர்களை அழித்தொழிக்கும் முயற்சியின் போது ஷியாங் கே-ஷேக் ஜப்பானிடமிருந்தும் வேறு சில போர்ப்படைத் தளபதிகளிடமிருந்தும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டியிருந்ததால் அவரது வேகம் குறைந்தது.

1934இல் நீண்ட பயணம்

ஷியாங் கே -ஷேக் பொதுவுடைமை வாதிகளைச் சுற்றி முற்றுகையிடும் விதமாக ஆங்காங்கே பல பாதுகாக்கப்பட்ட அரண்களை அமைத்திருந்தார். மாவோவும் ஹுனான் பகுதியை விட்டு அகன்று பாதுகாப்பான ஒரு பகுதிக்குச் செல்ல நினைத்தார். ஏறத்தாழ 1933ஆம் ஆண்டு வாக்கில் சீன பொதுவுடைமை கட்சியின் மீதான முழுக் கட்டுப்பாடும் மாவோ வசம் வந்து சேர்ந்தது. ஒரு நீண்ட பயணத்தை முன்னெடுத்து 100,000 பொதுவுடைமை இராணுவத்தினர் 1934இல் கிளம்பினர். அப்பயணம் ஒரு சகாப்தமாக மாறியது. இவ்வாறு கிளம்பிய 1,00,000 பேரில் வெறும் 20,000 பேர் மட்டும் 1935இன் பிற்பகுதியில் 6,000 மைல்களைக் கடந்து வடக்கு ஷேனிப் பகுதியை சென்றடைந்தனர். மேற்கொண்டு அவர்களோடு மற்ற பொதுவுடைமைவாதப் படைகளும் சேர்ந்து கொண்டன. 1937ஆம் ஆண்டில் ஏறக்குறைய ஒரு கோடி மக்களின் தலைவராக மாவோ அங்கீகரிக்கப்பட்டார்.


   மாவோவின் நீண்ட பயணம்

ஜப்பானிய ஆக்கிரமிப்பு

வடபுற சீனப் பகுதிகளை தொடர்ச்சியாக ஆக்கிரமித்து வந்த ஜப்பான் மஞ்சூரியாவைத் தனது இராணுவத் தளமாகப் பயன்படுத்தியது. மாவோ ஜப்பானுக்கு எதிராக போரிட ஷியாங் கே -ஷேக் தேவை என்றும் அவர் கோமிங்டாங் மீது சிறிது காலத்திற்காவது கட்டுப்பாடு கொண்டிருப்பது அவசியம் என்றும் நினைத்தார். இத்தகையை நெறிப்படுத்தப்பட்ட சிந்தனையால் பொதுவுடைமைவாதிகளின் மீதானத் தாக்குதல் சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டது.

பொதுவுடைமைவாதிகளின் வெற்றி

ஜப்பான் சரணடைவதாக அறிவித்த 1945இல் பொதுவுடைமைவாதிகளும் கோமிங்டாங் கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு ஜப்பானின் பகுதிகளை ஆக்கிரமிக்கலாயினர். இப்போட்டியில் கோமிங்டாங்கே வெற்றி பெற்றது. ஜப்பானிய நகரங்களும் இருப்புப்பாதைப் போக்குவரத்தும் அதன் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. அமெரிக்க ஐக்கிய நாடு இராணுவரீதியாக உதவியதால் ஷியாங் கே -ஷேக்கின் படைகள் பீகிங்கை சுற்றியமைந்திருந்த பகுதிகளைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் அமோக ஆதரவால் கோமிங்டாங் அரசு நிர்வாகத்தையும், துறைமுகங்களையும் தகவல் தொடர்பையும் தன்வசப்படுத்திக் கொண்டது. ஆனால் பெரும்பான்மையாக விவசாயிகளை உள்ளடக்கியப் போர்வீரர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததால் அவர்களின் அதிருப்தியையும் சம்பாதித்தது. நடுத்தர வர்க்கத்தின் ஆதரவைப் பெற மாவோ கடுமையாக முயற்சித்தார். அதனால் கம்யூனிஸ்டுகள் மக்களாட்சியைத்தான் விரும்புவதாகவும் சர்வாதிகார ஆட்சியை அல்ல என்றும், சுரண்டலை முடிவுக்கு கொண்டுவரவே முனைவதாகவும் முழுமையான சமத்துவத்தை நிறுவ அல்ல என்றும் பிரகடனப்படுத்தினார்.

தேசிய மக்கள் காங்கிரஸ்

தென் சீனாவில் சச்சரவுகள் முடிவை வந்தடையும் முன்பே செப்டம்பர் 1949இல் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு பீகிங் நகரில் கூடியது. பொதுவுடைமைக் கட்சியிலிருந்தும் பிற இடதுசாரி அமைப்புகளில் இருந்தும் 650 பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மாநாடு நடுவண் ஆட்சிக்குழுவைத் தேர்ந்தெடுத்து அதற்கு மா சே துங்கை தலைவராக நியமித்தது. இக்குழு ஐந்தாண்டுகளுக்குச் சீனாவை ஆட்சி செய்தது.

மா சே துங்கின் (மாவோ) தலைமையில் உருவான சீன மக்கள் குடியரசு ஆட்சியின் செயல்பாடுகள் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. உலகின் இரு பெரும் பொதுவுடைமை சக்திகளாய் சோவியத் ரஷ்யாவும் சீன மக்கள் குடியரசும் உருவெடுத்தன.

ஐ.நா. சபையில் உறுப்பினராக மறுக்கப்படல்

அமெரிக்க ஐக்கிய நாடு ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு மேலாக சீன மக்கள் குடியரசை அங்கீகரிக்க மறுத்ததால் ஐ.நா. சபையில் உறுப்பினராக தாமதமானது.


Tags : The World after World War II இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்.
10th Social Science : History : Chapter 4 : The World after World War II : Chinese Revolution The World after World War II in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 4 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் : சீனப்புரட்சி - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 4 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்