Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | மத்திய மாநில உறவுகளுக்கான குழுக்கள்

இந்தியாவில் கூட்டாட்சி | அரசியல் அறிவியல் - மத்திய மாநில உறவுகளுக்கான குழுக்கள் | 12th Political Science : Chapter 5 : Federalism in India

   Posted On :  02.04.2022 07:59 pm

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 5 : இந்தியாவில் கூட்டாட்சி

மத்திய மாநில உறவுகளுக்கான குழுக்கள்

மத்திய மாநில உறவுகளை பற்றி இது வரையில் பல்வேறு குழுக்கள் பரிந்துரைகளை வழங்கியுள்ளன.

மத்திய மாநில உறவுகளுக்கான குழுக்கள்

மத்திய மாநில உறவுகளை பற்றி இது வரையில் பல்வேறு குழுக்கள் பரிந்துரைகளை வழங்கியுள்ளன.


1. நிர்வாகச் சீர்திருத்தங்கள் குழு

நமது நாட்டின் நிர்வாகச் சீர்திருத்தங்களுக்காக இரண்டு நிர்வாகச் சீர்திருத்தக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நிர்வாகச் சீர்திருத்தக் குழு 1966-ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையிலும் பின்னர் கே.அனுமந்தையா தலைமையிலும் உருவாக்கப்பட்டது. இக்குழு 20 அறிக்கைகளை வழங்கியது. அவைகளில் ஒரு அறிக்கை மத்திய மாநில உறவுகளை பற்றி பரிந்துரைகளை வழங்கியது.

இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்தங்கள் குழு 2005ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் வீரப்ப மௌலியும் பின்னர் வி. இராமச்சந்திரனும் தலைவர்களாக இருந்தனர்.


மத்திய மாநில உறவுகள்

குழுக்கள்

1. நிர்வாகச் சீர்திருத்தங்கள் குழு

2. இராஜாமன்னார் குழு

3. சர்க்காரிய குழு

4. புன்ச்சி குழு

5. வெங்கட செல்லையா குழு



2. இராஜமன்னார் குழு


இராஜமன்னார் தமிழ்நாடு அரசாங்கம் நமது அரசமைப்பின் மத்திய மாநில உறவுகளை ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்குவதற்கு இராஜமன்னார் குழுவை அமைத்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி.வி இராஜமன்னார், சென்னை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ஏ. இலட்சுமண சுவாமி, ஆந்திர உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முனைவர் பி சந்திர ரெட்டி ஆகியோர் இக்குழுவில் இருந்தனர். தங்களது பரிந்துரைகளை இக்குழு அரசாங்கத்திற்கு 1971 ஆம் ஆண்டு வழங்கியது. மாநில சுயாட்சி வரலாற்றில் மிகவும் முக்கிய மைல்கல்லாக இக்குழுவின் அறிக்கை உள்ளது.

இக்குழுவின் முக்கிய பரிந்துரைகள் கீழ்க்கண்டவைகள் ஆகும்.

1. அரசமைப்பின் 263 உறுப்பு உடனடியாக அமல் படுத்தப்பட வேண்டும். மாநிலங்களுக்கிடையேயான குழு உருவாக்கப்பட வேண்டும். இக்குழுவின் தலைவராக பிரதமர் பணிபுரிய வேண்டும். மாநில முதல்வர்கள் அல்லது அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள் உறுப்பினர்களாக பணியாற்ற வேண்டும். மாநிலங்களுக்கிடையேயான குழுவிடம் அதிக அதிகாரங்கள் இருக்கவேண்டும். மத்திய அரசாங்கத்தின் முக்கிய முடிவுகளையும், நாடாளுமன்றத்தின் சட்டங்களையும் இக்குழுவில் ஆலோசிக்க வேண்டும். தேசத்தின் பாதுகாப்பு, வெளியுறவு ஆகிய இரண்டு அதிகாரங்கள் தவிர, இதர எல்லா அதிகாரங்களையும், பயன்படுத்தும் முன் மத்திய அரசு மாநிலங்களுக்கிடையேயான குழுவை ஆலோசிக்க வேண்டும். 

2. அரசமைப்பின் உறுப்புகள் 256, 257, 339(2) ஆகியவைகளை நீக்க வேண்டும். இந்த உறுப்புகள் மாநில உரிமைகளை பாதிப்பதால் அவைகளை நீக்கி மாநில உரிமைகளை வலுப்படுத்த வேண்டும் என இராஜமன்னார் குழு பரிந்துரைத்தது. 

3. மூன்று பட்டியல்களில் இல்லாத இதர அதிகாரங்கள் மத்திய அரசிடமிருந்து மாநில அரசுகளுக்கு மாற்றப்பட வேண்டும். வரி விதிக்கும் அதிகாரமும் மாநில அரசுகளுக்கு மாற்றப்பட வேண்டும்.

4. அரசமைப்பின் XVIII பகுதியில் உள்ள உறுப்பு 356 மத்திய அரசால் கவனமாக பயன்படுத்தப்பட வேண்டும். மாநிலத்தில் அரசியல் சாசன அமைப்பு முற்றிலும் சீர்குலைந்தால் மட்டுமே, கடைசி ஆயுதமாக மத்திய அரசு இவ்வுறுப்பை பயன்படுத்த வேண்டும். சாதாரண சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கு இவ்வுறுப்பை மாநிலங்களில் மத்திய அரசு பயன்படுத்தக்கூடாது.

5. இராஜமன்னார் குழு அனைத்து இந்தியப் பணிகளில் பெரிய அளவில் மாற்றங்களை பரிந்துரைத்தது. மத்திய அரசுக்கு சாதகமான, மாநில அரசுகளுக்கு எதிரான அனைத்து இந்தியப் பணிகள் தேவையில்லை. கூட்டாட்சி முறைக்கு எதிராக இருப்பதால் இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்) உள்ளிட்ட அனைத்து இந்தியப் பணிகளை அரசமைப்பிலிருந்து நீக்குவதற்கு இராஜமன்னார் குழு பரிந்துரைத்தது.

6. நிதி ஆதாரங்களை மத்திய அரசாங்கத்திடம் இருந்து மாநில அரசாங்கத்திற்கு அதிக அளவில் மாற்றித்தர வேண்டும் என இக்குழு கூறியது. மாநிலங்களின் நிதி சக்தியை அதிகரிப்பதற்கு தொழில் நிறுவனங்கள் வரி, ஏற்றுமதி வரி, சுங்க வரி போன்றவற்றை மத்திய அரசாங்கத்திடம் இருந்து மாநிலங்களுக்கு மாற்ற வேண்டும். நிதி ஆற்றல் தான் மாநில உரிமைகளின் அச்சாணி என்று இக்குழு கருதியது. ஆகவே அரசமைப்பின் ஏழாவது அட்டவணையில் திருத்தங்கள் பெரிய அளவில் செய்ய வேண்டும். மத்தியப் பட்டியல், பொதுப் பட்டியல் ஆகியவற்றிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு அதிக அதிகாரங்களை மாற்ற வேண்டும். நிதிக் குழு ஒரு நிரந்தர, பாகுபாடு இல்லாத அமைப்பாக மாற வேண்டும் என இராஜமன்னார் குழு பரிந்துரைத்தது.


3. சர்க்காரியா குழு


மத்திய அரசாங்கம் 1983 ஆம் ஆண்டு நீதியரசர் ஆர்.எஸ். சர்க்காரியா தலைமையில் ஒரு குழுவை உருவாக்கியது. முனைவர் ஆர்.எஸ். இக்குழுவில் பி . சிவராமன், சர்க்காரியா முனைவர் ஆர்.எஸ்.எஸ். சென் ஆகிய நிபுணர்களும் உறுப்பினர்களாக இருந்தனர். இக்குழு 247 பரிந்துரைகளை உள்ளடக்கிய ஒரு விரிவான அறிக்கையை ஐந்து வருடங்கள் கழித்து மத்திய அரசிற்கு சமர்ப்பித்தது.

1. மாநிலங்களுக்கிடையேயான குழு: 

அரசமைப்பின் உறுப்பு 263(பி) மற்றும் (சி) பணிகளை செய்யும் அதிகாரம் இக்குழுவிடம் வழங்கப்பட வேண்டும். மாநிலங்களின் பொதுவான நலன் கருதி மாநிலங்களுக்கிடையேயான குழு பரிந்துரைகளை வழங்க வேண்டும். ஆனால் அரசமைப்பின் உறுப்பு 263(அ)-யின் அதிகாரம் இக்குழுவிற்கு வழங்கப்படக்கூடாது. அதாவது மாநிலங்கள் இடையில் எழும் சிக்கல்களில் தலையிடும் அதிகாரம் மாநிலங்களுக்கிடையேயான குழுவிற்கு வழங்கக் கூடாது. மேலும் ஒரு நிரந்தர, சுயாட்சி பெற்ற செயலகத்தை மாநிலங்களுக்கிடையேயான குழுவிற்கு உருவாக்கித் தர வேண்டும்.


2. அரசமைப்பின் உறுப்பு 356 

இந்த உறுப்பு மிகவும் கவனமாக , மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்பட வேண்டும். கடைசி ஆயுதமாக இவ்வுறுப்பு பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு மாநிலத்தில் அரசமைப்பு ஆட்சி முறை முற்றிலும் சீர்குலைந்தால் மட்டுமே இவ்வுறுப்பை பயன்படுத்த வேண்டும். உறுப்பு 356 அமல்படுத்துவதற்கு முன் எல்லா மாற்று உத்திகளையும் பயன்படுத்த வேண்டும்.


3. ஆளுநர்: 

ஆளுநர் பதவியை ரத்து செய்ய வேண்டும். ஆளுநரை நியமிக்கும் முன் சம்பந்தப்பட்ட மாநில அரசை கலந்தாலோசிக்க வேண்டும் என்ற சில அரசியல் கட்சிகளின் கருத்துக்களை சர்க்காரியா குழு நிராகரித்தது. கூட்டாட்சி முறை நன்கு செயல்படுவதற்கு அரசியல் தலைவர்களை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது என்று இக்குழு பரிந்துரைத்தது. இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பாடுபட்ட பெருமை மிக்க இந்தியக் குடிமகன்களை ஆளுநர்களாக நியமிக்க வேண்டும். வெவ்வேறு கட்சிகள் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் பொழுது, மத்தியில் ஆளும் கட்சியின் தலைவர்களை மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கக்கூடாது.


4. மொழி: 

மும்மொழிக்கொள்கையை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று சர்க்காரிய குழு பரிந்துரைத்தது. மும்மொழிக் கொள்கை தேசிய ஒற்றுமையை வளர்க்கும் என்று இக்குழு கூறியது.


4. புன்ச்சி குழு


மத்திய அரசாங்கம் 2007ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் முன்னால் தலைமை நீதிபதி மதன் மோகன் புன்ச்சி தலைமையில் ஒரு புதிய குழுவை அமைத்தது. இக்குழுவில் மூன்று நிபுணர்களும் ஒரு செயலரும் இருந்தார். இக்குழு 2010 ஆம் ஆண்டு தனது பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கியது.

மாநில ஆளுநர்கள் குறிப்பிட்ட பதவிக்காலத்திற்கு நியமிக்கப்படவேண்டும். குடியரசுத்தலைவரை பதவி நீக்கம் செய்யும் முறை போல மாநில ஆளுநர்களும் நாடாளுமன்றத்தின் பதவி நீக்க தீர்மானம் மூலம் மட்டுமே பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். ஒரு மாநிலத்தில் கிளர்ச்சியில் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் அல்லது பகுதிகளில் மட்டுமே குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம். மாநிலம் முழுவதும் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை.

இதற்காக அரசமைப்பின் உறுப்புகள் 355, 356 ஆகியவற்றில் மாற்றம் செய்ய வேண்டும். மதக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில அரசாங்கத்தின் ஒப்புதல் பெறாமலே மத்திய அரசு தனது காவல் படைகளை அனுப்பி அமைதியை நிலைநாட்டலாம்.


செயல்பாடு

"முன்னேற்றத்திற்காக பெரிய மாநிலங்களை உடைத்து சிறிய மாநிலங்களை உருவாக்க வேண்டும்" என்ற தலைப்பில் வகுப்பில் குழு விவாதத்தை நடத்த வேண்டும்.

 எஸ்.ஆர். பொம்மை வழக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு

நிகழ் ஆய்வு


சோமப்ப ராயப்ப பொம்மை (6 ஜூன் 1924 முதல் 10 அக்டோபர் 2007 வரை) கர்நாடக மாநிலத்தின் பதினோராவது முதல்வராக பணியாற்றினார். ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் 1996 முதல் 1998 வரை மனிதவள முன்னேற்ற அமைச்சராகவும் இருந்தார். எச்.டி.தேவகவுடா, ஐ.கே.குஜரால் ஆகிய இரண்டு பிரதமர்களின் அமைச்சரவையில் அவர் பணியாற்றியுள்ளார்.

எஸ் .ஆர் .பொம்மை அவர்கள் முதல்வராக இருந்த கர்நாடக அரசாங்கம் மத்திய அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து முதல்வர் எஸ்ஆர் பொம்மை உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். உச்ச நீதிமன்றம் இவ்வழக்கில் 1994 ஆம் ஆண்டு புகழ்பெற்ற பொம்மை வழக்குத் தீர்ப்பை வழங்கியது. மத்திய மாநில உறவுகளில், மாநில உரிமைகளை காப்பதில் பொம்மை வழக்குத் தீர்ப்பு மிக முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது.

மத்திய அரசாங்கம் தன்னிச்சையான முறையில், அரசமைப்பிற்கு எதிராக மாநில அரசாங்கங்களை பதவி நீக்கம் செய்யக்கூடாது என்பது இத்தீர்ப்பின் மையக் கருத்தாகும். அரசியலமைப்பின் 356 -வது உறுப்பை கவனத்துடன், கடைசி ஆயுதமாக மத்திய அரசாங்கம் பயன்படுத்த வேண்டும். அரசியல் சாசன ஆட்சி சீரழிந்தால் மட்டுமே இவ்வுறுப்பை மத்திய அரசு பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் எந்த ஒரு கட்சிக்கும் கூட்டணிக்கும் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை. மத்திய அரசாங்கத்தின் கட்டளைகளை மாநில அரசாங்கம் மதிக்கவில்லை போன்ற காரணங்களுக்கு மாநில அரசாங்கத்தை மத்திய அரசு பதவி நீக்கம் செய்யலாம்.

சாதாரண காரணங்களுக்காக மத்திய அரசு 356-வது உறுப்பை பயன்படுத்தக்கூடாது. எடுத்துக்காட்டாக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலத்தில் ஆளும் கட்சி தோற்றுவிட்டது.

மாநிலத்தில் அரசியல் சாசன ஆட்சிமுறை சீரழிந்து விட்டது என்ற ஆளுநரின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மாநிலத்தில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை ஆளுநரின் அறிக்கை தெளிவாக விவரிக்க வேண்டும். மாநிலத்தின் சட்டப்பேரவை கலைக்கப்படுவதற்கு முன் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.

நீதிமன்றம் உறுப்பு 356 கீழ் மாநில அரசை மத்திய அரசாங்கம் பதவி நீக்கம் செய்தது சரியா, தவறா என ஆராயும் அதிகாரத்தை பெற்று இருக்கின்றது. உறுப்பு 356 தவறாக மத்திய அரசால் பயன்படுத்தப்பட்டால் உச்ச நீதிமன்றம் நீதி சீராய்வு அதிகாரத்தை பயன்படுத்தும். பதவி நீக்கம் அரசமைப்பிற்கு எதிராக இருந்தால் உச்ச நீதிமன்றம் பதவி நீக்கப்பட்ட மாநில அரசாங்கத்தை மீண்டும் பதவியில் அமர்த்தும்.

பொம்மை வழக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு மத்திய அரசின் தன்னிச்சையான பதவி நீக்க நடவடிக்கையில் இருந்து மாநில அரசாங்கங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

அண்ணல் அம்பேத்கர் அரசமைப்பின் உறுப்பு 356-யை (தேவையற்ற வார்த்தை) என்று வர்ணித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்கு எதிராக இவ்வுறுப்பு உள்ளதை அவர் கசப்புடன் ஏற்றுக்கொண்டார்.


5. வெங்கடசெல்லையா குழு


பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய மக்களாட்சிக் கூட்டணி அரசாங்கம் 2000ஆம் ஆண்டு நீதியரசர் நாராயணராவ் எம்.என். ராவ் வெங்கசெல்லையா வெங்கடசெல்லையா தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இந்த அரசமைப்பு மதிப்பாய்வு தேசிய குழு (NCRIVC) அரசமைப்பில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் எனக் கூறியது.


Tags : Federalism in India | Political Science இந்தியாவில் கூட்டாட்சி | அரசியல் அறிவியல்.
12th Political Science : Chapter 5 : Federalism in India : Commissions on Centre-State Relations Federalism in India | Political Science in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 5 : இந்தியாவில் கூட்டாட்சி : மத்திய மாநில உறவுகளுக்கான குழுக்கள் - இந்தியாவில் கூட்டாட்சி | அரசியல் அறிவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 5 : இந்தியாவில் கூட்டாட்சி