Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | ஐரோப்பிய சமூக அமைப்பின் ஒருங்கிணைப்பும் விரிவாக்கமும்

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - வரலாறு - ஐரோப்பிய சமூக அமைப்பின் ஒருங்கிணைப்பும் விரிவாக்கமும் | 12th History : Chapter 15 : The World after World War II

   Posted On :  12.07.2022 02:40 am

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 15 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

ஐரோப்பிய சமூக அமைப்பின் ஒருங்கிணைப்பும் விரிவாக்கமும்

முன்னர் பார்த்தவாறு, கம்யூனிசத்தைக் கட்டுப்படுத்துவது என்ற தனது கொள்கையைப் பின்பற்றி அமெரிக்கா, போரினால் சீரழிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய பொருளாதாரத்தைப் புனரமைத்துக் கொள்ள உதவிகள் செய்வதற்காக ட்ரூமன் கோட்பாட்டையும் மார்ஷல் திட்டத்தையும் முன் வைத்தது.

ஐரோப்பிய சமூக அமைப்பின் ஒருங்கிணைப்பும் விரிவாக்கமும்

முன்னர் பார்த்தவாறு, கம்யூனிசத்தைக் கட்டுப்படுத்துவது என்ற தனது கொள்கையைப் பின்பற்றி அமெரிக்கா, போரினால் சீரழிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய பொருளாதாரத்தைப் புனரமைத்துக் கொள்ள உதவிகள் செய்வதற்காக ட்ரூமன் கோட்பாட்டையும் மார்ஷல் திட்டத்தையும் முன் வைத்தது. 1948ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஐரோப்பியப் பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனம் (OEEC) எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பு ஐரோப்பியப்புனரமைப்புத் திட்டத்தின் (ERP) ஆதரவில் செய்யப்படும் மார்ஷல் திட்ட உதவிகள் வழங்குவதை மேற்பார்வை செய்தது. ஐரோப்பியப் பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனம், அமெரிக்கா செய்யும் உதவியைத் தனது 16 உறுப்பு நாடுகளுக்குப் பிரித்துக் கொடுத்தது. இந்நாடுகளுடன் அமெரிக்க வணிக நிறுவனங்கள் மேற்கொண்டிருந்த வணிகத்தை மேம்படுத்துவற்காக, இந்நாடுகள் தங்களிடையே செயல்படுத்தி வந்த காப்பு வரிகளை நீக்கும்படி அமெரிக்கா கூறியது. அமெரிக்காவிடமிருந்து மேலும் நிதி உதவியைப் பெறும் நோக்கத்தில் காப்பு வரிகளை நீக்கச் சம்மதித்த நாடுகள் 1949 முடிய சுதந்திர வணிகத்தைப் பின்பற்றின. அமெரிக்கா செய்த உதவியின் விளைவாய் மேற்கு ஐரோப்பிய நாடுகள் 1950இல் போருக்கு முந்தைய உற்பத்தி அளவை எட்டின. பெற்ற வெற்றிகள் மேலும் அவைகளை முன்னேறச்செய்தன. ஐரோப்பியம் பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனம் (OEEC) ஐரோப்பிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. 1961இல் அமெரிக்காவும் கனடாவும் இவ்வமைப்பில் தொடக்ககால உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டன. 1964இல் ஜப்பான் இவ்வமைப்பில் இணைந்தது.


இன்று உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து முப்பத்தியேழு நாடுகள் ஐரோப்பியப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ளன. அவைகளில் பெரும்பாலானவை வளர்ந்த நாடுகளாகும். அவை சுதந்திர சந்தைப் பொருளாதாரம் மற்றும் மக்களாட்சி ஆகிய கோட்பாடுகளில் உறுதிப்பாடு உடைய நாடுகளாகும். இவ்வமைப்பின் தலைமையகம் பாரிஸில் உள்ளது.

 

ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி

ஐரோப்பிய மன்றம்

இரண்டாவது உலகப் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தனித்தன்மை வாய்ந்த முடிவுகளில் மேற்கு ஐரோப்பிய நாடுகளை ஒருங்கிணைப்பது என்பதும் ஒன்றாகும். 1949 மே மாதத்தில் பத்து நாடுகள் லண்டனில் சந்தித்து ஐரோப்பிய மன்றம் (Council of Europe) எனும் அமைப்பை உருவாக்க கையொப்பமிட்டன. இவ்வமைப்பின் தலைமையிடம் ஸ்ட்ராஸ்பர்க்கில் அமைக்கப்பட்டது. உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களைக் கொண்ட ஒரு குழுவையும் அந்நிய நாடுகளின் பாராளுமன்றங்களிலிருந்து தருவிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவொன்றையும் கொண்டதாக இவ்வமைப்பு நிறுவப்பட்டது.

 

ஐரோப்பிய நிலக்கரி, எஃகு சமுதாயம் (ECSC)

 

பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சரான ராபர்ட் ஷுமன் பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் இடையே சமரசம் ஏற்பட்டால் அது இருநாடுகளுக்கும் நன்மை பயப்பதோடு ஐரோப்பாவின் போருக்குப் பிந்தைய புனரமைப்பிற்கும் நன்மைபயக்கும் என உணர்ந்தார். 1950 மே 9இல் அவர் ஷுமன் திட்டம் என்றறியப்பட்ட ஒரு திட்டத்தை முன் வைத்தார். அத்திட்டத்தில் இரு நாடுகளின் நிலக்கரி மற்றும் எஃகு ஆகியவற்றின் கூட்டு உற்பத்தியை, நாடுகள் கடந்த வலுவான, உயர்மட்ட ஆணையம் எனும் கட்டமைப்பிற்குள் வைத்து நிர்வகிக்கப்பட வேண்டுமென முன்மொழிந்தார். துறைகள் பொருளாதார ஒருங்கிணைப்புக்கான இத்திட்டம் பரஸ்பர ஆர்வத்தை உருவாக்கி இரு நாடுகளையும் தானாகவே இணைத்தது. மேற்கு ஜெர்மனியின் அதிபரான கொன்ட்ராட் அடினவர் மேற்கத்திய நாடுகளோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான இத்திட்டத்தை வரவேற்றார்.


ECSC உறுப்பினர்கள் 1951 ஏப்ரல் 18இல் பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து பாரிஸில் உடன்படிக்கை ஒன்றிலும் கையெழுத்திட்டதால் ஐரோப்பிய நிலக்கரி, எஃகு சமுதாயம் (ECSC) உருவானது. இவ்வாறு ஆறு நாடுகளுக்கிடையே நிலக்கரி, இரும்பு, எஃகு ஆகியவற்றின் வணிகத்திலிருந்த அனைத்து வரிகளும் தடைகளும் நீக்கப்பட்டன. ஐரோப்பிய நிலக்கரி, எஃகு சமுதாயத்தின் உருவாக்கமே ஐரோப்பிய ஒருங்கிணைப்பை நோக்கி எடுத்துவைக்கப்பட்ட முதல் அடியாகும். பிரிட்டன் தனது நாட்டின் தொழிற்சாலைகளை நாட்டிற்கு வெளியேயுள்ள ஒரு ஆணையத்திடம் ஒப்படைக்க விரும்பாததால் இவ்வமைப்பில் இணைய மறுத்தது. முதல் ஐந்து ஆண்டு காலத்தில் எஃகு உற்பத்தி ஐம்பது விழுக்காடுகள் அதிகமானதே இவ்வமைப்பின் வெற்றிக்குச் சான்றாகும். இவ்வெற்றிகளால் அனைத்துப் பொருட்களையும் இதைப் போலவே உற்பத்தி செய்து மேலும் முன்னோக்கிச் செல்ல அந்நாடுகள் முடிவு செய்தன. சுங்க வரிகளையும் ஒதுக்கீடுகளையும் படிப்படியாக நீக்கிவிட்டால் சுதந்திரமான போட்டியும், பொதுச்சந்தையும் உருவாகுமென பெல்ஜியத்தின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஸ்பாக் கூறினார். ஐரோப்பிய நிலக்கரி எஃகு சமுதாய அமைப்பைச் சேர்ந்த ஆறு நாடுகள் ரோமில் மேற்கொண்ட உடன்படிக்கையின் மூலம் ஐரோப்பிய பொருளாதாரச் சமுதாயம் (European Economic Community – EEC) 31006051 ஐரோப்பிய பொதுச் சந்தை (European Common Market -ECM) பிரஸ்ஸல்சை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இங்கிலாந்து இதில் இணையவில்லை.

 

ஐரோப்பிய பொருளாதார சமுதாயம் (EEC)


ஐரோப்பியப் பொருளாதார சமுதாயமானது, பொருட்கள், சேவைகள், மூலதனம், உழைப்பு ஆகியவை ஓரிடம் விட்டு வேறிடம் செல்வதற்கு இருந்த தடைகளைக் களைந்தது. சந்தைப் போட்டிகளைக் கட்டுப்படுத்தியப் பொதுக் கொள்கைகளையும் அல்லது தனியார் ஒப்பந்தங்களையும் இவ்வமைப்பு தடை செய்தது. ஒரு பொது வேளாண் கொள்கையும் (Common Agricultural Policy - CAP) ஒரு பொது வெளிநாட்டு வணிகக் கொள்கையும் தோற்றுவிக்கப்பட்டன. இதற்குப் போட்டியாக பிரிட்டன், டென்மார்க், நார்வே, சுவீடன், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் போர்த்துகல் ஆகிய நாடுகள் அங்கம் வகித்த ஐரோப்பிய சுதந்திர வணிகச் சங்கம் (European Free Trade Association - EFTA) TO) 9460LDUGU இங்கிலாந்து 1960இல் உருவாக்கியது. பொதுவான பொருளாதாரக் கொள்கைகள் இல்லாமல் போனதாலும் இந்நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யும் அதிகாரம் பெற்ற அமைப்புகள் இல்லை என்பதாலும் இவ்வமைப்பு தொடக்கம் முதல் வலிமை குன்றியதாகவே இருந்தது.

1961இல் இங்கிலாந்து ஐரோப்பியப் பொருளாதார சமுதாயத்தில் இணைவதற்கு முடிவு செய்தது. இங்கிலாந்தின் பொருளாதாரம் பலவீனமாக இருந்ததால் அதன் வருகையை பிரான்சின் குடியரசுத்தலைவர் சார்லஸ் டீ கோலே எதிர்த்தார். பின்னர் அவர் பதவி விலகியவுடன் இங்கிலாந்தின் பிரதமர் எட்வர்டு ஹீத் தனது திறமைமிக்க அரசியல் விவேகத்தின் மூலம் இவ்வமைப்பில் இணைவதற்கு வழி ஏற்படுத்தினார். 1973 ஜனவரி 1இல் அயர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளுடன் இங்கிலாந்தும் இவ்வமைப்பில் இணைந்தது.

 

ஒற்றை ஐரோப்பியச் சட்டம் (SEA)

1987 ஜூலை 1இல் நடைமுறைக்கு வந்த ஒற்றை ஐரோப்பிய சட்டம் ஐரோப்பிய பொருளாதார சமுதாயத்தினுடைய நோக்கத்தின் எல்லைகளை விரிவடையச் செய்தது. இது உறுப்பு நாடுகள் தங்களுக்கு இடையிலான அயலுறவுக் கொள்கையில் மேலும் தீவிரமாக ஒருங்கிணைந்து செயல்படவேண்டுமெனக் கூறியது. இச்சட்டத்தின்படி ஒவ்வொரு உறுப்பு நாட்டிற்கும் அதன் மக்கட்தொகையின் அடிப்படையில் பல வாக்குகள் வழங்கப்பட்டன. ஒரு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால் மொத்த உறுப்பினர்களில் தோராயமாக மூன்றில் இரண்டு பகுதி உறுப்பினர்களின் வாக்குகள் தேவை. இப்புதிய செயல்முறை ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அதிகாரத்தை அதிகரிக்கச் செய்தது. இது 1952 முதல் நடைமுறைக்கு வந்தது குறிப்பாக பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட மசோதாக்கள் அமைச்சர் குழுவின் ஒட்டுமொத்த ஒப்புதலைப் பெற்றால் சட்டமாக்கப்படலாம்.

 

ஐரோப்பிய ஒன்றியம் (EU)


ஐரோப்பிய பொருளாதார சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒன்றிணைந்து 1991 டிசம்பரில் மாஸ்ட்ரிட்க் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். இதன் வாயிலாக 1993இல் ஒற்றைச் சந்தையுடன் ஐரோப்பிய ஒன்றியம் நிறுவப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்ட பின்னர் ஒன்றிய உறுப்பினர்கள் வெளியுறவுக் கொள்கை, உள்நாட்டுப் பாதுகாப்பு போன்ற ஏனைய துறைகளிலும் இணைந்து பணியாற்றினர். இவ்வுடன்படிக்கை ஒரே ஐரோப்பியப் பணமான யூரோ உருவாக்கப்படுவதற்கு வழிவகுத்தது. 2017இல் பிரிட்டன் இவ்வமைப்பிலிருந்து வெளியேறியது. (பிரிட்டனின் வெளியேற்றம் (exit), பிரெக்ஸிட் Brexit' என்றழைக்கப்படுகிறது. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் 28 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதன் தலைமையகம் பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்சில் அமைந்துள்ளது.

 

பனிப்போரின் முடிவு

உலக அளவில் அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் இரு துருவப் பன்னாட்டுக்கட்டமைப்பை உருவாக்கியிருந்தன. தொடக்கத்தில் சோவியத் யூனியனின் ராணுவத் திறன் வலிமை குன்றியதாகவேயிருந்தது. ஆனால் 1969வாக்கில் சோவியத் யூனியன், அணு ஆயுதத் திறனில் அமெரிக்காவுக்குச் சரிநிகரானது. பரஸ்பரம் உறுதி செய்யப்பட்ட அழிவு (Mutual Assured Destruction - MAD) என்பது இரு சக்திகளையுமே அச்சத்திற்குள்ளாக்கியது. மேலும் அணு ஆயுதப் போட்டி இருநாடுகளுக்கும் மிகப்பெரும் செலவினத்தை ஏற்படுத்தியது. வரவு செலவுத் திட்டங்களில் பாதுகாப்பிற்கு ஒதுக்கப்படும் பெருமளவிலான நிதி ஒதுக்கீடு இரு நாடுகளுக்கும் இக்கட்டான பொருளாதார நிலைகளை ஏற்படுத்தியது. ஐரோப்பாவில் நடைபெற்ற வலுவான ஆயுதத்குறைப்பு இயக்கங்கள் ஆளுகிற அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்தன. இவை வல்லரசுகளை பேச்சுவார்த்தைக்கு இட்டுச் சென்றன.

1960களின் பிற்பகுதி முதல் 1970களின் பிற்பகுதி வரையிலான காலப்பகுதி மனக்கசப்பு நீங்கிய (தற்காலிகப் பகைமைத் தவிர்த்த காலம்) காலப்பகுதியென அறியப்பட்டது. இக்காலப் பகுதியில் அமெரிக்காவிற்கும் சோவியத் ரஷ்யாவிற்குமிடையே ஒத்துழைப்பு வணிகமும் அதிகரித்தது. போர்திறம் வாய்ந்த ஆயுதங்கள் கட்டுபாட்டுப் பேச்சுவார்த்தைகள் (Strategic Arms Limitation Talks SALT 1972 & 1979) போர்திறம் வாய்ந்த ஆயுதக் குறைப்பு உடன்படிக்கைள் (Strategic Arms Reduction Treaties START, 1991) ஆகியன ஒத்துழைப்பும், சகவாழ்வும் நிறைந்த காலத்தின் வருகையை முன்னறிப்புச் செய்தது.


1985இல் மிகைல் கோர்பசேவ் சோவியத் ரஷ்யாவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சோவியத் யூனியனில் வியக்கத்தக்க அரசியல், சமூக மாற்றங்கள் ஏற்படலாயின. கோர்பசேவ் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதில் உறுதிப்பாட்டுடன் இருந்தார். 1986 பிப்ரவரியில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் அரசியல், பொருளாதார மறுகட்டமைப்பின் (பிரெஸ்ட்ரோகியா-Perestroika) அவசியம் குறித்து விளக்கியதோடு, ஒளிவுமறைவற்ற அல்லது வெளிப்படையான (கிளாஸ்நாஸ்ட் - glasnost) காலம் உருவாக வேண்டுமெனவும் கூறினார். பிரெஸ்ட்ரோகியாவின் மூலம் அவர் பல நிறுவனங்களின் மீதிருந்த மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்தினர். விவசாயிகளும், பொருள் உற்பத்தியாளர்களும், வணிகர்களும் எதை உற்பத்தி செய்வது, எவ்வளவு உற்பத்தி செய்வது எவ்வளவு விலை வைப்பது என்பதை அவர்களே முடிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

சோவியத் யூனியனின் நிர்வாகக் கட்டமைப்பை ஜனநாயகப்படுத்துவற்காக கோர்பசேவால் உருவாக்கப்பட்ட கோட்பாடே கிளாஸ்நாஸ்ட் என்பதாகும். சோவியத் யூனியனின் அரசியல் கட்டமைப்பில் பல அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்தன. கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரம் குறைக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் பதவிக்குப் பல வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தல் முறை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. அரசு அலுவலர்கள் விமர்சனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டனர். செய்திகளை சுதந்திரமாகப் பரப்புவதற்கு கிளாஸ்நாஸ்ட் மூலம் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மக்கள் தாங்கள் நினைத்ததை பேசும் சுதந்திரம் பெற்றனர். அரசுக்கு எதிரான செய்திகளைப் பேசினால் கைது செய்யப்படுவோமோ, நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவோமோ என மக்கள் கவலை கொள்ளத் தேவையில்லாமல் போயிற்று. இக்கோட்பாடுகள் சோவியத் யூனியனில் புரட்சிகர தாராளவாத அலைகளை உருவாக்கிய அதே சமயத்தில், அவையே சோவியத் யூனியனின் சிதைவுக்கும் காரணமாயிற்று.

  

பனிப்போர் காலகட்டத்தில் 1989ஆம் ஆண்டு ஒரு திருப்புமுனையாகும், அவ்வாண்டில் போலந்து நாட்டில் சதந்திரமாகத் தேர்தல்கள் நடைபெற்றன. அத்தேர்தலில் போலிஷ் ஒருமைப்பாட்டு இயக்கம் (Polish Solidarity Movement) எனும் கட்சி வெற்றி பெற்றது. கம்யூனிஸ்டுகள் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டனர். ஜூலை மாதத்தில் ஐரோப்பிய மன்றத்தில் உரை நிகழ்த்துகையில், கோர்பசேவ் தனக்கு முன்னர் அதிபராக இருந்த பிரஷ்னேவின் கோட்பாடுகளைத் தான் நிராகரிப்பதாகக் கூறினார். மேலும் நட்பு நாடுகளோ, கூட்டு சேர்ந்திருக்கும் நாடுகளோ அல்லது எந்த நாடுகளாக இருந்தாலும் அந்நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது அல்லது அவற்றின் இறையாண்மையைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது அனுமதிக்க முடியாது என்றும் கூறினார். 1989 நவம்பரில் பனிப்போரின் மிகமுக்கியச் சின்னமாக விளங்கிய பெர்லின்சுவர் இடிக்கப்பட்டது. 1989 நவம்பர் மாதத்தின் இறுதிப் பகுதியில் மேற்கு ஜெர்மனியின் அதிபரான ஹெல்மட் கோல், நட்பு நாடுகளைக் கலந்தாலோசிக்காமலே திடீரென கிழக்கு ஜெர்மனியில் சுதந்திரமாகத் தேர்தல்கள் நடைபெறுவதற்கான பத்து அம்சத் திட்டத்தை அறிவித்தார். தொடர்ந்து ஜெர்மனியின் இணைப்புக்கும் அழைப்பு விடுத்தார். 1989இன் இறுதியில் கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் மக்கள் எழுச்சிகள் ஏற்பட்டன. பல்கேரியா தவிர்த்து ஏனைய கம்யூனிச நாடுகளின் தலைவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். மெதுவாகக் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் கம்யூனிசத்துடன் கொண்டிருந்த இணைப்பைத் துண்டித்துக் கொண்டன. இந்நிகழ்வுகளை அறிகுறியாக எடுத்துக்கொண்ட சோவியத் குடியரசுகள் 1990இன் இடைப்பகுதியில் தங்களைச் சுதந்திர நாடுகளாக அறிவித்துக் கொண்டன. 1991டிசம்பர் 8இல் சோவியத் யூனியன் சிதைந்தது. டிசம்பர் 25இல் கோர்பசேவ் பதவி விலகினார். போரிஸ் யெல்ட்சின் ரஷ்யக் குடியரசின் குடியரசுத் தலைவரானார்.சோவியத் யூனியனின் சிதைவோடு பனிப்போரும் ஒரு முடிவுக்கு வந்தது.

போரிஸ் யெல்ட்சின் (1931 - 2007) 1961இல் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்த இவர் 1968இல் கட்சியின் முழுநேர ஊழியரானார். எழுபதுகளில் பரவலாக அறியப்பட்டவரான இவர் கட்சியில் முக்கியப் பதவிகளை வகிக்கத் தொடங்கினார். கோர்பசேவ் பதவிக்கு வந்த பின்னர் அவர் மாஸ்கோ கட்சி அமைப்பிலுள்ள ஊழல்களைக் களைவதற்காக போரிஸ் யெல்ட்சினை (1985) தேர்ந்தெடுத்தார். 1986இல் யெல்ட்சின் பொலிட்பீரோவின் (சோவியத் யூனியனின் உயர்மட்ட கொள்கை முடிவு செய்யும் அமைப்பு) உறுப்பினராக உயர்த்தப்பட்டார். விரைவில் அவர் மாஸ்கோவின் மேயராக நியமிக்கப்பட்டார். கட்சி கூட்டங்கள் சீர்திருத்தப் பணிகள் மிக மெதுவாக நடைபெறுவதாக இவர் விமர்சனம் செய்ததால் கோர்பச்சேவின் எதிர்ப்பைச் சம்பாதித்தார். நிர்வாகம் ஜனநாயகப்படுத்தப்படவேண்டும், பொருளாதாரம் சீர்திருத்தப்படவேண்டும் எனும் கருத்துக்களை அவர் முன்வைத்ததால் சோவியத் வாக்காளர்களிடையே பிரபலமானார். 1989 மார்ச்சில் சோவியத் யூனியனின் புதிய பாராளுமன்றமான மக்கள் பிரதிநிதிகள் சபையில் ஒரு இடத்தைப் பெறுவதில் வெற்றி பெற்றார். ஓராண்டுக்குப் பின்னர், 1990 மே 29இல் கோர்பச்சேவின் விருப்பத்திற்கு எதிராக சோவியத் பாராளுமன்றம் யெல்ட்சினை ரஷ்ய குடியரசின் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. இவரே சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் 1991இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவரானார்.

Tags : The World after World War II | History இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - வரலாறு.
12th History : Chapter 15 : The World after World War II : Consolidation and Expansion of European Community The World after World War II | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 15 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் : ஐரோப்பிய சமூக அமைப்பின் ஒருங்கிணைப்பும் விரிவாக்கமும் - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 15 : இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்