Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | தொழில் முடக்கமும் செல்வச் சுரண்டலும்

ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் - தொழில் முடக்கமும் செல்வச் சுரண்டலும் | 11th History : Chapter 17 : Effects of British Rule

   Posted On :  15.03.2022 09:24 pm

11 வது வகுப்பு வரலாறு : அலகு 17 : ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்

தொழில் முடக்கமும் செல்வச் சுரண்டலும்

ஐரோப்பிய நாடுகள் கிழக்கிலிருந்து பெருமளவில் இறக்குமதி செய்துகொண்ட அளவிற்கு ஆரம்பத்தில் ஏற்றுமதி செய்ய முடியவில்லை.

தொழில் முடக்கமும் செல்வச் சுரண்டலும்

ஐரோப்பிய நாடுகள் கிழக்கிலிருந்து பெருமளவில் இறக்குமதி செய்துகொண்ட அளவிற்கு ஆரம்பத்தில் ஏற்றுமதி செய்ய முடியவில்லை. ஏற்றுமதியான நறுமணப் பொருட்கள், பருத்தி, ஆபரணங்கள் முதலானவற்றுக்கு மாற்றாகக் கிழக்கு நாடுகளுக்கு ஐரோப்பாவிலிருந்து எதுவும் தேவைப்படவில்லை. இந்த நிலையை இங்கிலாந்தின் ஜவுளி உற்பத்தியில் ஏற்பட்ட தொழிற்புரட்சி முதன்முறையாக மாற்றியமைத்தது. அதன்பின் திட்டமிட்டே இந்தியாவில் தொழில்கள் அழிவுக்குத் தள்ளப்பட்டன. உலகின் துணி ஏற்றுமதியில் முதன்மை பெற்று விளங்கிய இந்தியா, லங்காஷ்யரின் (இங்கிலாந்து) பருத்தி ஆடைத் தேவைக்குச் சந்தையாக மாற்றப்பட்டது. குறைந்த விலையில் இயந்திரங்களின் மூலம் தயாரிக்கப்பட்ட பிரிட்டிஷ் பொருட்கள் இந்தியச் சந்தைகளில் குவியலாயின. நீண்டகாலப் பயன்பாட்டுக்கு உகந்தமையாக இருந்ததனாலும், சொற்ப விலைக்கு விற்கப்பட்டதாலும் இயந்திரத் தயாரிப்பில் உருவான பொருட்களின் பயன்பாடு ஓங்கி, இந்தியப் கைவினைப் பொருட்கள் உற்பத்தி நலிவடையக் காரணமாகியது.

முதல் முப்பது ஆண்டுகளில் கம்பெனி அரசு பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியான பொருட்களை இறக்குமதி வரி ஏதும் விதிக்காமல் தங்குதடையின்றி அனுமதிக்கும் கொள்கையைப் பின்பற்றியது. இப்பொருட்கள் உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை விட விலை குறைவாக இருந்தன. அதே வேளை, இந்திய உற்பத்திப் பொருட்கள் மீது பாதுகாப்பு வரிகள் பலவற்றைத் திணித்து பிரிட்டிஷ் சந்தையில் பங்குபெற முடியாமல் செய்தனர். இக்கொள்கை இந்திய நெசவாளர்களையும் வணிகர்களையும் பெரிதும் பாதித்தது. நெசவாளர்கள் பெருமளவில் வேலையிழந்து வாழ்வாதாரத்திற்காக வேளாண்மைக்குச் செல்லக் கட்டாயப்படுத்தப்பட்டனர். ஏற்கனவே நிலத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருந்த மிக அதிக அளவிலான வேளாண் மக்களோடு நெசவாளர்களும் சேர்ந்ததால் நிலத்தின் மீதான அழுத்தம் அதிகமாகி நிலைமையை மேலும் சிக்கலாக்கியது.

இஸ்லாமியர் ஆட்சி முறையை பிரிட்டிஷ் அரசிடமிருந்து வேறுபடுத்திப் பார்த்த வில்லியம் பெண்டிங், முந்தைய ஆட்சியே நன்மை பயக்கக்கூடியதாகக் கருதினார். பெண்டிங் எழுதுகிறார்: பல வகையிலும் இஸ்லாமியர் ஆட்சி நம்மை விஞ்சுகிறது; அவர்கள் படையெடுத்துச் சென்ற நாடுகளிலேயே குடியமர்ந்தார்கள்; அவர்கள் உள்ளூர் மக்களோடு மண உறவு கொண்டார்கள், அவர்களுக்கு அனைத்துச் சலுகைகளும் வழங்கினார்கள்; படையெடுத்தவர்களும், அடிபணிந்தவர்களும் ஒத்தக்கருத்தும், எண்ண ஓட்டமும் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள். இதற்கு மாறாக நம்முடைய ஆட்சியோ நேர் எதிரானதாக உள்ளது - விரோதப் போக்கு, சுயநலம், இரக்கமின்மை ஆகியவையே அதன் கூறுகள்.

பிரிட்டிஷ் இந்தியாவின் வரவு செலவுக் கணக்கில் இராணுவ மற்றும் குடிமை நிர்வாகச் செலவுகள் 80 சதவீதமாகவும், எஞ்சிய 20 சதவீதம் மட்டுமே மற்ற துறைகளுக்குப் பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலை இருந்தது. வேளாண்மை புறக்கணிக்கப்பட்டது. பாசன வசதி ஏற்படுத்தப்படவில்லை . காலனி அரசு நீர்ப்பாசனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்புப்பாதை பதிப்பதில் ஆர்வத்தைக் குறைத்துக்கொள்ளலாம் என்று ஆர்தர் காட்டன் பரிந்துரைத்ததை இங்கிலாந்தின் ஏகாதிபத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி கால்நூற்றாண்டில் ஏற்பட்ட தொடர் பஞ்சங்கள், பிரிட்டிஷ் முடியரசை அணைகள் கட்ட சில நடவடிக்கைகள் எடுக்கத் தூண்டின.

இரயத்துவாரி முறையின் நோக்கம் சீரழிந்துபோன வஞ்சகமான ஜமீன்தார்களிடமிருந்து விடுவிக்கப்பட்ட வேளாண் குடிகளை உருவாக்குவதே என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் பெரிய நிலக்கிழார்களே வலுவடைந்தார்கள். இரயத்துவாரி பகுதிகளில் குத்தகை விவசாயிகளின் நலன் பற்றி அரசு அக்கறை கொள்ளவில்லை . நில வரியே அரசின் பெரிய வருவாயாக இருந்ததால் கடுமையான முறைகளைப் பின்பற்றி வரி வசூலிப்பது முக்கியக் கொள்கையாக இருந்தது. கம்பெனி அரசால் சென்னையில் நியமிக்கப்பட்ட சித்திரவதை ஆணையம் 1855இல் சமர்ப்பித்த அறிக்கை , வருவாய் அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் வரி வசூலிக்கும் சமயங்களில் பயிரிடுவோர் மீது கட்டவிழ்த்துவிட்ட அராஜகங்களை விளக்கமாக எடுத்தியம்பியது. எனினும் சித்திரவதைச் சட்டம் 1858ஆம் ஆண்டுதான் திரும்பப் பெறப்பட்டது.

 

இங்கிலாந்து மக்களவையின் தேர்வுக்குழு (Select Committee) 1840 ஆம் ஆண்டு அங்கம் வகித்த சார்லஸ் ட்ராவல்யன் இவ்வாறு தன் பார்வையை முன் வைக்கிறார். வங்காளத்தில் முன்பு விளைந்த ஒருவகைப் பட்டு போன்ற பருத்தியிலிருந்து டாக்கா மஸ்லின் என்ற மெல்லிய துணியை நெய்வார்கள், அது போன்ற ஒன்றை பார்ப்பது அரிதாகிவிட்டது. டாக்கா நகரின் மக்கள் தொகை 1,50,000லிருந்து 30,000 அல்லது 40,000 என்ற அளவில் விழுந்து விட்டது என்பதோடு அந்நகரை மலேரியா நோயும், காடுகளும் வேகமாக சூழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவின் மான்செஸ்டர் என்று கருதப்பட்டு வந்த நகரம் இன்று சிறப்பிழந்து வறுமை சூழ்ந்து சிறுத்துவிட்டது. அங்கே நிலவும் அசாதாரணச் சூழல் உண்மையில் படு பயங்கரமானது.

அபே டுபாய் என்ற பிரெஞ்சுக் கத்தோலிக்க சமயப் போதகர் தான் ஐரோப்பாவிற்குத் திரும்புவதற்கு முன் 1823ஆம் ஆண்டு இவ்வாறு கூறுகிறார். "கவலையும், இறப்பும் எங்கெங்கும் நிறைந்து சென்னை மாகாணத்திலுள்ள ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் பசியால் செத்து மடிகிறார்கள்."

வணிக வரலாற்றில் இதற்கு சமமான ஒரு துயரம் நிகழ்ந்ததில்லை . பருத்தி நெசவாளர்களின் எலும்பு இந்தியாவின் கங்கைச் சமவெளிப் பரப்புகளை வெளுக்கச் செய்கின்றன" என்று கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் கூறுகிறார்.


Tags : Effects of British Rule ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்.
11th History : Chapter 17 : Effects of British Rule : Deindustrialization and Drain of Wealth Effects of British Rule in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 17 : ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் : தொழில் முடக்கமும் செல்வச் சுரண்டலும் - ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 17 : ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்