Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | வேளாண்மையின் வளர்ச்சி

ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் - வரலாறு - வேளாண்மையின் வளர்ச்சி | 12th History : Chapter 9 : Envisioning a New Socio-Economic Order

   Posted On :  09.07.2022 10:40 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 9 : ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

வேளாண்மையின் வளர்ச்சி

(அ) பசுமைப் புரட்சி (ஆ) ஊரக வளர்ச்சித் திட்டங்கள் (RDP) ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் (IRDP) 1980 - 1999 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2005 (MGNREGA)

வேளாண்மையின் வளர்ச்சி

(அ) பசுமைப் புரட்சி

1960களின் இடைப்பகுதியில் இந்தியாவில் உணவு உற்பத்தியின் நிலை மிகவும் கவலையளிப்பதாக இருந்தது. உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக நாடு மிகப் பெருமளவில் செலவு செய்தது. நிலச்சீர்திருத்தங்கள் விவசாய உற்பத்தியின் மீது எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆகவே அரசு வேளாண்மையை மேம்படுத்த தொழில்நுட்பம் எனும் மாற்று வழிகளை நாடின. 1965இல் நீர்ப்பாசன வசதியுள்ள சில தேர்ந்தெடுக்கப் பகுதிகளில் அதிக மகசூலைத் தருகிற (உயர்ரக வீரிய வித்துகள் - HYV) கோதுமை, நெல் ஆகியன பயிரிடப்பட்டன.

மரபுசார்ந்த விவசாயத்தைப் போலல்லாமல், அதிக மகசூலைத் தருகிற விதை ரகங்களுக்கு அதிக நீரும் டிராக்டர் போன்ற இயந்திரங்களும் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் ஆகியன தேவைப்பட்டன. தொடக்கத்தில் சோதனை முயற்சித் திட்டங்களில் கிடைத்த வெற்றியின் விளைவாக நாடு முழுவதும் அதிக விளைச்சலைத் தருகின்ற வீரிய விதைகள் பயன்படுத்தப்பட்டன. பொதுவாக இம்முயற்சி பசுமைப் புரட்சி என்றே குறிப்பிடப்படுகிறது. இம்முறையில் இரசாயன உரங்களுக்கும் பூச்சிகொல்லி மருந்துகளுக்குமான தேவை மிகப் பெருமளவுக்கு அதிகரித்தால் அவை தொடர்பான தொழிற்சாலைகளும் வளர்ச்சி பெற்றன.


இறுதியாக, இருபது ஆண்டுகளுக்குள்ளாகவே இந்தியா உணவுதானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது. 1960-61இல் 35 மில்லியன் டன்களாக இருந்த மொத்த அரிசி உற்பத்தி 2011-12இல் 104 மில்லியன் டன்களாக உயர்ந்தது. இதே காலப்பகுதியில் கோதுமை உற்பத்தி 11 மில்லியன் டன்களிலிருந்து 94 மில்லியன் டன்களை எட்டியது. உற்பத்தித்திறனும் அதிகரித்தது. விவசாயிகளிடமிருந்த உபரி உணவு தானியங்களை விலைக்கு வாங்கிய அரசு பெருமளவிலான தானியக் கையிருப்பை ஏற்படுத்தி அவற்றை இந்திய உணவுக் கழகத்திற்குச் (Food Corporation of India - FCI) சொந்தமான சேமிப்புக் கிடங்குகளில் சேமித்து வைத்தது. இவ்வாறு சேமிக்கப்பட்ட உணவு தானியங்கள் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் (Public Distribution System - PDS) மக்க ளுக்குக் கிடைக்குமாறு செய்யப்பட்டு மக்களுக்கான உணவு பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டது.

மற்றொரு சாதகமான அம்சம் யாதெனில் பால் மற்றும் முட்டை உற்பத்தியானது தொடர்ந்து அதிகரித்தது என்பதேயாகும். இதன் காரணமாக, அனைத்து வருமானக் குழுவினரின் உணவுப் பழக்கம் மேலும் பன்முகப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் உணவு உற்பத்தியை அதிகரிக்கச் செய்தது என்ற நிலையில் பசுமைப்புரட்சி மிகவும் வெற்றிகரமானதாக இருந்தபோதிலும், அது சில எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தியது. முதலாவதாக வசதி வாய்ப்புகள் நிறைந்த பகுதிகள், வசதி வாய்ப்புகள் குறைந்த பகுதிகள் ஆகியவற்றிற்கு இடையிலான ஏற்றதாழ்வுகளை அதிகரித்தது. காலப்போக்கில் விவசாயிகளிடையே அதிக அளவில் ரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டதன் விளைவாகச் சூழலியல் பிரச்சனைகள் தோன்றலாயின. நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் இயற்கை விவசாயத்திற்குத் திரும்பும் மனநிலை ஏற்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட விலை கொடுத்த பின்னரே வளர்ச்சி ஏற்படுகிறது என்பது கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும்.

(ஆ) ஊரக வளர்ச்சித் திட்டங்கள் (RDP)

1970களில் தொழில் துறையிலும் வேளாண்மையிலும் வளர்ச்சி ஏற்பட்ட பின்னரும் வறுமை குறையவில்லை. வறுமையெனும் பிரச்சனை வளர்ச்சியால் தீர்த்துவிடும் என்ற அனுமானம் நிறைவேறவில்லை. மேலும் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ சரிபாதியினர் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வதாகக் கண்டறியப்பட்டது (ஒரு மனிதர் உயிர் வாழ்வதற்கு தேவைப்படும் கலோரிகளை வழங்கும் உணவுப்பண்டங்களை வாங்குவதற்கு அவர் எவ்வளவு செலவு செய்கிறார் என்பதே வறுமைக் கோட்டுக்கான வரையறை). வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்களின் விழுக்காடு உயரவில்லை , ஆனால் மக்கள் தொகை பெருகுவதால் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமிருக்கிறது.

கிராமப்பகுதிகள், நகரப்பகுதிகள் ஆகிய இரண்டிலும் வறுமை நிலவுகிறது. ஆனால் மக்கள் தொகையில் நான்கில் மூன்று பகுதியினர் கிராமப்புறங்களில் வாழ்வதால் கிராமப்புற வறுமை மிகவும் நெருக்கடிமிகுந்த பிரச்சனையாய் இருக்கிறது, எனவே உடனடி கவனம் தேவைப்படுகிறது. சில குறிப்பிட்ட சமூகக் குழுக்களான சிறு மற்றும் குறு விவசாயிகள், நிலமற்ற தொழிலாளர்கள் மற்றும் வளம் குன்றிய நிலங்களிலிருந்த ஒடுக்கப்பட்ட பிரிவினர், நீர்ப்பாசன வசதிகள் மற்றும் வளமான நிலமில்லா பகுதி மக்கள் ஆகியோரிடையே வறுமையின் அளவு மிக அதிகமாக உள்ளது.

கிராமப்புற வறுமையைப் போக்குவதற்காக அரசாங்கத்தால் முழுவீச்சில் ஊரக வளர்ச்சித் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. சமூக வளர்ச்சித் திட்டங்கள், பஞ்சாயத்து ராஜ் போன்ற உள்ளாட்சி நிறுவனங்களைப் புதுப்பிப்பது, சிறு குறு விவசாயிகளைப் போன்ற குறிப்பிட்ட குழுக்களை இலக்காகக் கொண்ட திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும். கிராமப்புறக் குடும்பங்கள் விவசாயத்திலிருந்து பெறும் வருமானத்தை அதிகப்படுத்துவதற்கு வருமானத்திற்கான வேறு வழிகளை அமைத்துக் கொடுப்பதில் அதிக அக்கறை செலுத்தப்பட்டது. அவ்வாறான இரண்டு பெரும் திட்டங்கள் மிக விரிவாக கீழே விளக்கப்பட்டுள்ளன.

 

ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் (IRDP) 1980 - 1999

1980இல் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் ஓர் ஒருமுகப்படுத்தப்பட்ட திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கிராமப்புற குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு அவர்களுக்கு சில சொத்துக்களை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் அவர்கள் வறுமையிலிருந்து வெளியே வர இயலும். அது நிலத்தை மேம்படுத்துவதற்காகவோ, பால் உற்பத்திக்காகப் பசுக்கள் அல்லது ஆடுகளை வழங்குதல் அல்லது சிறிய கடைகள் வைக்கவோ அல்லது வேறு வணிகத் தொடர்பான வியாபாரங்கள் செய்வதற்கான உதவியாகவோ இருக்கலாம். நாட்டிலிருந்த 5011 ஊராட்சி ஒன்றியங்களிலும் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் இலக்கு ஐந்து ஆண்டுகளில் (1980-1985), ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் ஆண்டொன்றுக்கு 600 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்குவது, இந்த உதவிகள் 15 மில்லியன் குடும்பங்களுக்கு சென்றடைவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

இவ்வாறு வழங்கப்பட்ட மூலதன சொத்துகளுக்கான செலவு, மானியங்கள் மற்றும் கடன்கள் (மத்திய மற்றும் மாநில நிர்வாகம் தங்களுக்குள் சமமாகப் பகிர்ந்துகொள்கின்றன) ஆகியவை மூலம் ஈடு செய்யப்பட்டது. உதவியைப் பெறும் குடும்பத்தின் பொருளாதாரநிலைக்கு ஏற்றவாறு மானியங்களும் மாறுபட்டன. அவை சிறு விவசாயிகளுக்கு 25 விழுக்காடாகவும் குறு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு 33.3 விழுக்காடாகவும், பழங்குடியினர் குடும்பங்களுக்கு 50 விழுக்காடாகவும் இருந்தன. தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு வங்கிகள் கடன் கொடுத்ததன் வழியாக சொத்துக்கான மூலதனச் செலவின் மீதி சரி செய்யப்பட்டது. 1999ஆம் ஆண்டு வரையில் 53.5 மில்லியன் குடும்பங்களை இத்திட்டம் சென்றடைந்தது.

விவசாயக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட சொத்துக்களில் 50 விழுக்காடு கால்நடைகளாகவும் (பால் உற்பத்தி ) 25 விழுக்காடு விவசாயம் அல்லாத வேறு பணிகளுக்காகவும், 15 விழுக்காடு சிறிய அளவிலான நீர்ப்பாசனப் பணிகளுக்காகவும் விநியோகம் செய்யப்பட்டன. ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தின் பணிகள் பல பொருளாதார நிபுணர்களாலும், அரசு அமைப்புகளாலும் மதிப்பிடப்பட்டன. இத்திட்டத்தின் இறுதி விளைவைப் பற்றி பல ஆய்வுகள் நடத்தப்பட்டன.

பயனாளிகளைத் தெரிவு செய்வதில் தெளிவான நடைமுறையில்லாதது, ஒவ்வொரு குடும்பத்திற்குமான முதலீடு குறைவாக இருந்தது, திட்டத்தை நடைமுறைப்படுத்திய காலத்திற்குப் பிந்தைய தணிக்கையில்லாதது, பிராந்திய அளவில் வறுமைக்கோட்டிற்கு மேலே கொண்டுவருவதற்கான பயனாளிகளை அடையாளம் காணுவதில் ஏற்றதாழ்வு ஆகியவை முக்கிய பிரச்சனைகளாக இருந்தன.

இத்திட்டத்தால் அடையப்பட்ட குறிப்பிடத்தக்க வெற்றியைக் கருத்தில் கொண்டு கிராமப்புற ஏழைகளின் சுய வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டமாக 1999இல் இது மறுசீரமைக்கப்பட்டது.

 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2005 (MGNREGA)

இந்தியாவில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தீவிர முயற்சிகளின் காரணமாக, வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. அண்மைக் காலங்களில் விவசாயம் அல்லாத வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதன் மூலமாகவே  கிராமப்புற வறுமையை ஒழிக்க முடியும் என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காகப் பல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அவைகளில் பல வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. நம் நாட்டில் இன்றைய அளவில் இத்துறையில் செயல்படும் மிகப்பெரிய திட்டம் இதுவேயாகும்.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டமானது (பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது), கிராமப்புற ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் 2005இல் இயற்றப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த, வயது வந்த உறுப்பினர்களுக்கு தனித்திறனற்ற உடல் உழைப்பு, வேலையைச் செய்ய விருப்பம் உடையவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் 100 நாட்களுக்கு ஊதியத்துடன் கூடிய வேலையைக் கொடுப்பதன் மூலமே இதை வெற்றிகரமாகச் செய்தது. ஒவ்வொரு வருடமும் மூன்று மாதங்களுக்கு வேளாண் பணிகள் இல்லாத காலங்களில் வேலை எதுவும் கிடைக்காமலிருக்கும் கிராமப்புறம் சார்ந்த ஏழைக் குடும்பங்களுக்கு இத்திட்டம் ஓரளவு உதவுவதாக இருக்கும். இம்முயற்சியின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் கிராமப்புறங்களில் சாலைகள், கால்வாய்கள், சிறிய நீர்ப்பாசன வேலைகள், மரபு சார்ந்த நீர் நிலைகளை மீட்டெடுத்தல் போன்ற நீண்ட காலம் பயன்தரும் செல்வங்களை உருவாக்கும்.


இதற்கு முந்தைய, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட ஊரக வளர்ச்சித் திட்டங்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ்வாழும் குடும்பங்களைக் கண்டறிதலை அடிப்படையாகக் கொண்டிருந்ததோடு தகுதி பெறாத குடும்பங்களும் தேர்வு செய்யப்பட்டதாக பல புகார்கள் எழுந்தன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் அனைத்து கிராமப்புற குடும்பங்களுக்கும் பொருந்தக் கூடியதாகும். ஏனெனில் இது சுய இலக்கு கொண்ட ஒரு திட்டம் என்பதோடு கல்வித்தகுதி உடையவர்களோ, வசதியான பின்புலத்தைக் கொண்டவர்களோ குறைந்தபட்ச ஊதியத்திற்கு உடல் உழைப்பு வேலை செய்ய முன்வர மாட்டார்கள்.

இதற்கு முந்தைய வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் திட்டங்களில் கிராமப்புற ஏழை மக்களுக்கு வேலையைக் கேட்டுப்பெறும் உரிமை தரப்படவில்லை. தங்களுக்கு வேலை வேண்டும் எனக் கேட்பதற்கு அவர்களுக்குச் சட்டபூர்வமான உரிமை தரப்பட்டதே இச்சட்டத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இத்திட்டம் கிராம பஞ்சாயத்துக்களால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. வேலை வேண்டுவோர் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்கு வேலைக்கான அட்டை வழங்கப்படும். 15 நாட்களுக்குள்ளாக உள்ளாட்சித்துறை நிர்வாகிகள் அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். இல்லையெனில் விண்ணப்பதாரர் வேலையில்லாதோருக்கான உதவித்தொகையைப் பெறுவதற்கு உரிமை உடையவராகிவிடுவார். வேலை நடைபெறும் இடமானது விண்ணப்பதாரரின் வீட்டிலிருந்து 5கிலோமீட்டர் தொலைவிற்குள் இருத்தல் வேண்டும்.

இப்பணியில் ஒப்பந்ததாரர்களை ஈடுபடுத்தக் கூடாது. இடைத்தரகர்கள் தங்களுக்கான லாபத்தை வேலை செய்வோரின் ஊதியத்திலிருந்து எடுத்துக் கொள்வதை தவிர்ப்பதற்காகவே இந்த ஏற்பாடு. வழங்கப்படும் ஊதியத்திற்கும் முதலீடு செய்யப்பட்ட மூலதனத்திற்குமான விகிதம் 60:40 ஆகும். வேலை செய்வோரில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண்களாக இருத்தல் வேண்டும். ஆண்கள் பெண்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

மக்கள் நலத்திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. நேர்மறையான அம்சங்கள் என எடுத்துக் கொண்டால், தொழிலாளியின் பேரம் பேசும் சக்தி அதிகரித்ததால் வேளாண் வேலைகளுக்கான ஊதியம் உயர்ந்தது. விவசாய வேலைகள் இல்லாத காலப்பகுதியிலும் வறட்சியின் போதும் விவசாயத் தொழிலாளர்கள் குடிபெயர்வது இதனால் குறைக்கப்பட்டது. பெண்கள் பெருமளவில் இவ்வேலைகளில் பங்கேற்றுக் கொண்டிருப்பதும், இத்திட்டம் அவர்களை அதிகாரமிக்கவர்களாக மாற்றியிருப்பதும் இத்திட்டத்தின் மிக முக்கியப் பயன்களாகும்.

வெளிப்படைத்தன்மை மற்றும் சிக்கலற்ற பரிமாற்றத்தை உறுதி செய்யும்பொருட்டு, தொழிலாளர்களுக்கான ஊதியம் அவர்களுடைய வங்கி அல்லது அஞ்சலகக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. குடிமைச் சமூக அமைப்புகள், தன்னார்வ நிறுவனங்கள் ஆகியவற்றின் ஈடுபாட்டினாலும் அரசியல் பிரதிநிதிகளின் ஈடுபாட்டினாலும் குடிமைப் பணியாளர்களின் அதிகப் பொறுப்பு மிகுந்த மனப்பான்மையினாலும், தமிழ்நாடு, ஆந்திரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இத்திட்டம் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. திட்டத்தின் செயல்பாட்டுத் திறன் 97 விழுக்காடு உயர்ந்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 2006 முதல் 2012 வரையிலுமான காலப்பகுதியில் ரூ. 1,10,000 கோடிகள் நேரடியாக ஊதியமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 1200 கோடி மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பின்னடைவுகள் இருந்தபோதிலும் கிராமப்புற ஏழைகள் மற்றும் குடிமை சமூகத்தினிடையே இருந்த உயர்ந்த அளவிலான விழிப்புணர்ச்சியினாலும் இத்திட்டத்தின் செயல்பாடு முன்னேற்றம் பெற்றுள்ளது. இத்திட்டம் மிகப்பெரும் அளவிலான செலவினத்தைக் கொண்டிருந்ததன் விளைவாக நிதிப்பற்றாக்குறை உயர்ந்து விட்டதாக சில விமர்சகர்கள் நினைத்தாலும் இத்திட்டம் பிரபலமானதாகவே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், கிராமப்புறங்களில் நான்கில் ஒரு குடும்பம் இத்திட்டத்தில் பங்கேற்கிறது.

Tags : Envisioning a New Socio-Economic Order | History ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் - வரலாறு.
12th History : Chapter 9 : Envisioning a New Socio-Economic Order : Development of Agriculture Envisioning a New Socio-Economic Order | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 9 : ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் : வேளாண்மையின் வளர்ச்சி - ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 9 : ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்