Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | தொழிலக வளர்ச்சி

ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் - வரலாறு - தொழிலக வளர்ச்சி | 12th History : Chapter 9 : Envisioning a New Socio-Economic Order

   Posted On :  09.07.2022 10:49 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 9 : ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

தொழிலக வளர்ச்சி

(அ) தொழிற்கொள்கை (ஆ) பொதுத்துறை (இ) பொதுத்துறை தொழில் நிறுவனங்களில் ஏற்பட்ட நெருக்கடிகள் (ஈ) தாராளமயமாக்கம் - தொழில் கொள்கை அறிக்கை 1991

தொழிலக வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சிக்கு விரைவான தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் யோசனைக்கு இந்தியா உறுதியளித்தது. பல்வேறு வழிகளின் மூலம் வளர்ச்சியை அடைய முடியும். இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில், பலவகை கச்சாப் பொருட்கள் கிடைக்கின்ற அல்லது விளைகின்ற, அதிக உழைப்பு மிகுந்த செயலாக்க தொழில்களும் தொழில் துறை வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இதற்கு மாற்றான காந்தியின் மாதிரி கிராம வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்தது. குடிசைத் தொழில்களின் மூலம் நுகர்வுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டால் அதுகிராமப்புற வறுமையையும் வேலையின்மையும் அகற்றும் எனும் கருத்தை முன்வைத்தது.

ஆனால் அரசு பல்வகைப்பட்ட தொழில்களின் முன்னேற்றத்திற்காக மிகப்பெரிய அளவிலான கனரகத் தொழில்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் நேருவின் மாதிரியைக் கைக்கொண்டது. சமதர்ம சமூகம் எனும் அடிப்படைக் கொள்கைக்கு ஏற்றவாறு அரசுக்குச் சொந்தமான தொழிற்சாலைகள் அடங்கிய தொழில்துறையை வளர்ப்பதில் அரசு பெரும்பங்கு வகிக்கும். எஃகு உற்பத்திக்காகவும், இடைப்பட்ட பொருட்களான இயந்திரங்கள், வேதியியல் பொருட்கள், உரங்கள் போன்றவற்றிற்காகவுமே அரசு கனரகத் தொழில்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவமளித்தது. சுரண்டும் தன்மை கொண்டதாகவும், மிகுந்த லாப நோக்கம் கொண்டதாகவும் ஒரு சிறிய முதலாளிகள் வர்க்கத்திற்கு மட்டும் பயனளிக்கக் கூடியதாக உள்ள தனியார் முதலீட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இவ்வளர்ச்சி மாதிரியின் சமூக நோக்கமாகும்.


(அ) தொழிற்கொள்கை

இந்நோக்கங்களை மேம்படுத்துவதற்காக தொடர்ச்சியான தொழிற்கொள்கை அறிவிப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. முதல் கொள்கை அறிக்கை 1948இல் அறிவிக்கப்பட்டது. இது தொழிலகங்களை நான்கு வகைகளாகப் பிரித்தது.

1. போர்த்துறை சார்ந்த தொழிலகங்கள் அரசின் முற்றுமைகளாக இருக்கும் (அணுசக்தி, ரயில்வே, ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்கள்).

2. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 18 தொழிலகங்கள் (கனரக இயந்திரங்கள், உரம், வீரியமிக்க ரசாயனங்கள், போர்க்கருவிகள், மற்றவை) அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்.

3. பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஆகிய இரண்டிலும் இடம்பெறும் தொழிலகங்கள்.

4. தனியார்துறையைச் சேர்ந்த தொழிலகங்கள்.

1956இல் நிறைவேற்றப்பட்ட தொழில் கொள்கைத் தீர்மானமே மிகவும் உறுதியான கொள்கை அறிக்கையாகும். அது தொழிலகங்களை மூன்று வகைகளாகப் பிரித்தது. அட்டவணை அ வில் இடம்பெற்ற தொழிலகங்கள் அரசின் முற்றுரிமையின் கீழிருந்தன; அட்டவணை ஆ வில் இடம் பெற்ற தொழிலகங்கள் அரசு புதிய அலகுகளைத் தொடங்கலாம், ஆனால் தனியார் துறையினரும் தங்கள் அலகுகளை அமைக்கலாம் அல்லது விரிவாக்கலாம்; மீதமுள்ள தொழிலகங்கள் அட்டவணை 'இ' யில் இடம் பெற்றன.

1951இல் இயற்றப்பட்ட தொழில் வளர்ச்சி மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் தனியார் துறையைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கியமான கருவியாகும். இச்சட்டம் அரசிடமிருந்து உரிமம் பெறாமல் புதிய தொழிற்சாலைகள் நிறுவப்படக்கூடாது எனவும், இருக்கின்ற தொழிற்சாலைகளின் திறன் அதிகரிக்கப்படக் கூடாதெனவும் கட்டுப்பாடுகளை விதித்தது.

1973இல் வெளியிடப்பட்ட கொள்கை அறிக்கை, வளர்ச்சியில் காணப்படும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைப் போக்கும் நோக்கத்துடன் கிராமப்புறங்களிலும் பின்தங்கிய பகுதிகளிலும் செயல்படக்கூடிய பெரும் தொழில் நிறுவனங்களை ஊக்குவித்தது. 1977இல் வெளியான கொள்கை அறிக்கையானது சிறிது காலமே ஆட்சியிலிருந்த ஜனதா அரசாங்கத்தால் வடிவமைக்கப்பட்டது. அது ஊரக, கிராமப்புறங்களை மேம்படுத்துவதோடு சிறு தொழில்களின் வளர்ச்சியையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தது.

1980இல் காங்கிரஸ் அரசால் வெளியிடப்பட்ட கொள்கை அறிக்கையும் சமச்சீரான வளர்ச்சியைப் பேணுவதை இலக்காகக் கொண்டிருந்தது. மற்றபடி இந்த அறிக்கைகள் அனைத்தும் அரசுக்குச் சொந்தமான ஒரு வலுவான பொதுத்துறை மற்றும் தனியார் துறை மற்றும் குறிப்பாகப் பெரும் வணிக நிறுவனங்களின் மீதான கட்டுப்பாட்டைத் தொடர்ந்தன.

சந்தைப் பொருளாதாரத்தில் ஊடுருவிய பிற தலையீடுகளும் இருந்தன. தனியார் துறையில் தயாரிக்கப்படும் சிமெண்ட் போன்ற இடு பொருட்கள் பங்கீட்டு முறையின் (Ration) கீழ் கொண்டுவரப்பட்டன. தனிநபர்கள் வீடு கட்டுவதற்கும் அனுமதி பெற்றாக வேண்டியதிருந்தது. உரிமம் வழங்கல் கொள்கையின் கீழ் நுகர்பொருட்களின் உற்பத்தி கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது. இது சமூகத்தில் வசதிமிக்கவர்கள், வசதியற்றவர்கள் ஆகியோரிடையே நுகர்விலுள்ள ஏற்றத்தாழ்வுகளை சமன்செய்யும் கருத்தியலின் வெளிப்பாடேயாகும். அதே சமயம் அரிதான மூலப்பொருட்களான எஃகு , சிமெண்ட் போன்றவை நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சிக்கு தேவைப்படும் போர்த்துறை சார்ந்த தொழில்களுக்குப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தது.

பல முக்கியத் தொழில்களும் சேவைகளும் தேசியமயமாக்கப்பட்டன. நிலக்கரிச் சுரங்கங்கள், பெட்ரோலிய நிறுவனங்கள், வங்கி மற்றும் ஆயுள் காப்பீட்டுச் சேவைகள் ஆகியன இதில் அடங்கும். அண்மைக் காலங்களில் தான் தனியாரும் இவ்வகையான நடவடிக்கைகளில் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர்


(ஆ) பொதுத்துறை

1951இல் இந்தியாவில் ஐந்து பொதுத்துறை நிறுவனங்களே இருந்தன. 2012இல் இந்த எண்ணிக்கை 225ஆக உயர்ந்தது. 1951இல் 29 கோடியாக இருந்த மூலதன முதலீடு 2012இல் 7.3 லட்சம் கோடிகளாக உயர்ந்தது. கனரகத் தொழிலில் பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்படுவதை மீண்டும் இரு முக்கிய அம்சங்கள் தீர்மானித்தன. முதலாவதாக கருத்தியல் நிலையில், அரசாங்கம் ஒரு சமதர்ம வளர்ச்சிக்கு உறுதியளித்தது, இது பொருளாதாரத்தின் மீது அரசின் அதிகளவிலான கட்டுப்பாட்டை உள்ளடக்கியிருந்தது. ஆனால் இரண்டாவது நடைமுறை சார்ந்தது, நடைமுறையில் கனரகத் தொழில்களை உருவாக்க வேண்டிய பொறுப்பை அரசே ஏற்க வேண்டியதிருந்தது. ஏனெனில் அவற்றை உருவாக்க மிக அதிகமான முதலீடு தேவைப்பட்டது. மேலும் இத்திட்டங்கள் உற்பத்தியைத் தொடங்குவதற்கு பல ஆண்டுகள் கால அவகாசம் எடுத்துக்கொள்ளும், அதனால் இவைகள் "நீண்டகட்டுமான காலத்திட்டங்கள்" (long gestation) என்றழைக்கப்பட்டன.

1950களில் இப்படியான முதலீடுகளைச் செய்யும் அளவுக்கு வாய்ப்பு வசதியோ, விருப்பமோ தனியார் துறையிடமில்லை . பிலாய் (சத்தீஸ்கர்), ரூர்கேலா (ஒடிசா), துர்காபூர் (மேற்கு வங்காளம்), பொக்காரோ (ஜார்கண்ட்) ஆகிய இடங்களில் எஃகுத் தொழிற்சாலைகளும், 1950களில் இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவியோடு பாரத மிகு மின் நிறுவனம் (Bharat Heavy Electricals Limited - BHEL), ஹிந்துஸ்தான் மெஷின் ரூல்ஸ் போன்ற பொறியியல் தொழிற்சாலைகளும் நிறுவப்பெற்றன.

தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பிராந்திய ஏற்றதாழ்வுகளைக் குறைப்பதற்காக மூலப்பொருள் கிடைக்குமிடங்களுக்கு அருகில் இருக்க வேண்டிய தொழில் நிறுவனங்கள் பின்தங்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டன. பாரத மிகு மின் நிறுவனம் முதலில் போபாலில் நிறுவப்பட்டது. பின்னர் திருச்சிராப்பள்ளி, 


ஹைதராபாத், ஹரித்துவார் ஆகிய இடங்களிலும் நிறுவப்பெற்றது. இவ்வாறு எஃகுத் தொழிற்சாலைகள், ஒரிசா, பீகார் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் பின்தங்கிய பகுதிகளில் நிறுவப்பெற்றன. பொதுத்துறை நிறுவனங்கள் தேசியக் கருவூலத்திற்கு தனது பங்களிப்பை நல்கியதால் சிறுகச்சிறுக சேமிக்கப்பட்ட அவைகளின் லாபத்தில் ஒரு பகுதி மத்திய அரசுக்குச் சென்றது. இவ்வாறு பொதுத்துறையின் வளர்ச்சியானது நாட்டை தொழிற்திறன் கொண்டதாக உருவாக்கியதோடு பல சமூகப் பொருளாதாரத் தேவைகளையும் நிறைவு செய்தது.


 

(இ) பொதுத்துறை தொழில் நிறுவனங்களில் ஏற்பட்ட நெருக்கடிகள்

1991இல் பொதுத்துறை சார்ந்த தொழில் நிறுவனங்கள் கடுமையான பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டிருப்பது தெளிவானது. ஒட்டுமொத்தமாக அவர்கள் லாபத்தைக் காண்பிக்கும் போது, லாபத்தில் கிட்டத்தட்ட பாதி பெட்ரோலிய நிறுவனங்களால் வழங்கப்பட்டது. பல தொழிற்சாலைகள் தொடர்ந்து நஷ்டங்களை ஏற்படுத்தின. பிரச்சனையின் ஒரு பகுதி போர்த்துறை சாராத துறைகளான சுற்றுலா, தங்கும் விடுதிகள், நுகர்வுப் பொருட்கள் (எடுத்துக்காட்டாக 1970களில் தொலைக்காட்சிப் பெட்டிகள் பொதுத்துறை நிறுவனங்களால் மட்டுமே தயாரிக்கப்பட்டன) போன்ற துறைகளிலும் பொதுத்துறை விரிவடைவதால் ஏற்படுகிறது. 

பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டுக்கு பல்வேறு காரணிகளும் பங்களிப்பைச் செய்தன. நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்து மாறுபட்ட கருத்துகள் எழுந்தன. கட்டுமானப் பணிகளை முடிப்பதில் ஏற்படும் தாமதத்தால் செலவுகள் அதிகமாகி அதிக மூலதன முதலீட்டை ஏற்படுத்தின. நிர்வாகச் செலவுகள் அனைத்து நேரங்களிலும் கட்டுக்கடங்கி இருப்பதில்லை , பொதுத்துறை நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் இடைநிலை பொருட்கள் தனியார் துறையில் உள்ளீடுகளாகப் பயன்படுத்தப்படும் போது அர்த்தமற்றதாகிறது. பொதுத்துறை நிறுவனங்களில் தேவைக்கு அதிகமானோர் பணியமர்த்தப்பட்டனர். கனரகத் தொழிற்சாலைகளின் தொழில் நுட்பத்திற்கு அவ்வளவு அதிகமான தொழிலாளர்கள் தேவையில்லை. இதனால் நிறுவனங்களை இயக்குவதற்கான செலவு அதிகரித்தது. இப்பிரச்சனைகள் அனைத்தையும் அங்கீகரித்த அரசு 1991இல் நஷ்டங்களை ஏற்படுத்தக்கூடிய மற்றும் போர்த்துறை சாராத நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகளைத் திரும்பப்பெறும் திட்டத்தைத் (Disinvestment Programme) தொடங்கியது.

அனைத்து குறைபாடுகளுக்கு மத்தியிலும், கனரகத் தொழில்களை நிறுவுவதன் மூலமும் நீண்டகாலத் தொழில்துறைத் திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதன் மூலமும் தொழில்மயமாக்கும் செயல்திட்டமானது இந்தியாவை நவீன, தொழில் துறை பொருளாதார நாடாக மாற்றுவதில் வெற்றிகண்டுள்ளது.

 

(ஈ) தாராளமயமாக்கம் - தொழில் கொள்கை அறிக்கை 1991

இறுதியாக 1991இல் இந்திய அரசு தன்னுடைய தொழில் கொள்கையில் ஒரு மாற்றத்தை அறிவித்தது. அது உரிமங்கள் வழங்கப்படுவதிலுள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதாகவும், தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தை நோக்கி நகர்வதாகவும், தனியார் துறையின் அதிகமான பங்கேற்பை அனுமதிப்பதாகவும் அமைந்தது. செயல்படாத தொழிற்சாலைகளை மூடுதல், முதலீட்டைத் திரும்பப்பெறும் கொள்கை ஆகியவற்றின் மூலம் பொதுத்துறையின் பங்கு குறைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நாட்டில் பொருளாதாரம் குறித்த மனப்போக்கில் குறிப்பாக நுகர்வோரின் கண்ணோட்டத்தில் மிகப்பெரும் மாற்றம் உருவாயிற்று. பொருட்களும் சேவைகளும் கிடைப்பதன் மூலம், வளர்ந்து வரும் மத்தியதர வர்க்கம் ஆசைப்பட்ட உயர்ந்த வாழ்க்கைத்தரம் கிட்டியது என்பது மட்டுமல்லாமல் இப்போது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களாலும் கூட அப்பொருட்களை வாங்க முடிந்தது.

நேர்மறை கோணத்தில், தாராளமயமானது இந்தியாவை மிக அதிகமாக அந்நிய நாடுகளின் முதலீட்டினை ஈர்க்கும் இடமாக மாற்றியுள்ளது. மாநில அரசுகள் தொழில் செய்வதை எளிதாக்கும் வகையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாக விளம்பரம் செய்வதில் ஆர்வமாக உள்ளன. இவையனைத்தும் ஒரு செல்வச்செழிப்பான பொதுச்சூழலை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்தப் பொருளாதாரம் குறித்த புள்ளி விவரங்களில் அது பிரதிபலிக்கின்றது.

எதிர்மறை விளைவுகளெனில் தாரளமயமாக்கலும் உலகமயமாக்கலும் அதிக ஊதியம் பெறுவோர்க்கும் குறைந்த ஊதியம் பெறுவோர்க்கும் இடையிலான ஊதிய ஏற்றதாழ்வுகளை அதிகரித்துள்ளது. பெரும் நிறுவனங்களில் ஊதிய உச்ச வரம்புகள் நீக்கப்பட்டுவிட்டதால், அந்நிறுவனங்களில் ஊதியம் பெறும் அதிகாரிகளுக்கும் குறைந்த ஊதியம் பெறுவோர்க்குமான ஏற்றத்தாழ்வுகள் விரிவடைந்துள்ளன. முறை சார்ந்த தொழில்களில் புதிய வேலைகளுக்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது. அப்படியான வாய்ப்புகள் முறைசாராத் தொழில்களில் அதிகம் உருவாகின்றன. அத்துடன் இவ்விரு துறைகளுக்குமிடையிலான ஏற்ற தாழ்வுகளும் அதிகரித்துவிட்டன.

இருந்தபோதிலும் தாராளமயமாக்கலின் அளவானது, சுதந்திரப் பொருளாதாரத்தை ஆதரிப்போர் மற்றும் இடதுசாரிப் பொருளாதார நிபுணர்கள் ஆகிய இரு சாராருக்கும் மகிழ்ச்சியளிக்கவில்லை . முன்னேற்றப் பாதையில் இன்னமும் இருந்து கொண்டிருக்கும் தடைகளையும் ஏற்றதாழ்வையும் ஒழிப்பதற்காகச் சந்தை சக்திகளுக்கு மேலும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டுமென சுதந்திரப் பொருளாதாரத்தை ஆதரிப்போர் கூறுகின்றனர். தனியாருக்கு சுதந்திரம் வழங்கியதன் மூலம், சமூக நீதியையும் மக்கள் நலத்தையும் உறுதிப்படுத்தி, முன்னேற்ற வேண்டிய தனது பொறுப்பிலிருந்து அரசு விலகிக்கொண்டதாக சில பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்தனர்.

Tags : Envisioning a New Socio-Economic Order | History ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் - வரலாறு.
12th History : Chapter 9 : Envisioning a New Socio-Economic Order : Development of Industry Envisioning a New Socio-Economic Order | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 9 : ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் : தொழிலக வளர்ச்சி - ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 9 : ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்