Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | தேசிய வருவாய் கணக்கீட்டில் உள்ள சிரமங்கள்

பொருளாதாரம் - தேசிய வருவாய் கணக்கீட்டில் உள்ள சிரமங்கள் | 12th Economics : Chapter 2 : National Income

   Posted On :  14.03.2022 10:27 pm

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 2 : தேசிய வருவாய்

தேசிய வருவாய் கணக்கீட்டில் உள்ள சிரமங்கள்

இந்தியா ஒரு ஒழுங்குபடுத்தப்படாத, அன்றாட பிழைப்பை நடத்தும் சிறு தொழில்களையும் பண்ட மாற்று அங்காடிகளையும் உள்ளடக்கிய நாடு.

தேசிய வருவாய் கணக்கீட்டில் உள்ள சிரமங்கள்


தேசிய வருவாய் கணக்கீடு செய்யும் போது இந்தியாவின் சிறப்புக் இயல்புகளை மனதில் கொள்ள வேண்டும். இந்தியா ஒரு ஒழுங்குபடுத்தப்படாத, அன்றாட பிழைப்பை நடத்தும் சிறு தொழில்களையும் பண்ட மாற்று அங்காடிகளையும் உள்ளடக்கிய நாடு. எனவே ஒரு சரியான தேசிய வருமான மதிப்பீடு தருவதில் சிரமங்கள் இருக்கின்றன. சில சிரமங்கள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.



1. மாற்றுச் செலுத்துதல்கள் (Transfer Payments)

ஓய்வூதியம், வேலையின்மைக்கான உதவித்தொகை, மானியங்கள் போன்றவற்றை அரசு அளிக்கிறது. இவைகள் அரசின் செலவுகள் ஆகும். ஆனால் இவைகளை தேசிய வருவாயில் சேர்ப்பதில்லை. தேசியக்கடனுக்காக செலுத்தப்படும் வட்டியும் இது போன்றதே.



2. தேய்மானங்கள் கொடுப்பனவு மதிப்பிடுவதில் சிக்கல் (Difficulties in assessing depreciation allowance)

தேய்மானம் கொடுப்பளவு, விபத்து இழப்பீடு மற்றும் பழுது கட்டணங்கள் போன்றவற்றை தேசிய வருவாயிலிருந்து கழிப்பது என்பது மிக எளிதானது அல்ல. இவைகளை அதிக கவனத்துடன் சரியாக மதிப்பீடு செய்து கழிக்க வேண்டும்.



3. பணம் செலுத்தப்படாத சேவைகள் (Unpaid services)

இந்தியாவில் அதிகமான பெண்கள் வீட்டிலேயே அதிக வேலை செய்கின்றனர். உணவு தயாரித்தல், தையல், பழுது பார்த்தல், துவைத்தல், சுத்தம் செய்தல், குழந்தைகளை வளர்த்தல் போன்ற வேலைகளையும் எந்தவித பண வருமானமும் இன்றியும் நட்பு, பாசம், அன்பு, மரியாதை போன்ற பணத்தால் மதிப்பிட முடியாத காரணங்களுக்காகவும் வேலை செய்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அர்ப்பணிப்பு தேசிய உற்பத்தியில் சேர்க்கப்படுவதில்லை.



4. சட்டவிரோத நடவடிக்கையிலிருந்து பெறும் வருமானம் (Income from illegal activities)

சூதாட்டம், கடத்தல் மற்றும் சட்ட விரோதமாக மதுவை தயாரித்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்படும் வருமானம் தேசியவருமானத்தில் சேர்க்கப்படுவது இல்லை . இந்த நடவடிக்கைகள் மக்களின் விருப்பத்தை நிறைவு செய்தாலும் சமுதாய ரீதியில் உற்பத்தியைச் சார்ந்தது என்று எடுத்துக் கொள்ள முடியாது.



5. சுய நுகர்வுக்கு உற்பத்தி செய்தல் மற்றும் விலை மாற்றம் (Production for self-consumption and changing price)

விவசாயிகள் தங்களின் சுய நுகர்விற்காக உற்பத்தியில் ஒரு பகுதியை ஒதுக்கி வைக்கின்றனர். சந்தையில் விற்பனை செய்யாமல் ஒதுக்கிய உற்பத்தி தேசிய வருமானத்தில் சேர்க்கப்பட்டதா என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது.

உற்பத்தி முறையில் தேசிய வருவாய் கணக்கிடுதல் என்பது நடப்பு சந்தை விலையில் முடிவடைந்த பொருள்கள் மற்றும் பணிகளின் மதிப்பை அளவிடுதல் ஆகும். ஆனால் விலைகள் ஒரே மாதிரி நிலையாக இருப்பது இல்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வுகான, பொருளியல் அறிஞர்கள் நுகர்வோர் விலை குறியீட்டெண்ணை பயன்படுத்தி நிலையான விலையில் உண்மை தேசியவருவாயை கணக்கிடுகின்றனர்.



6. மூலதன இலாபம் (Capital Gains)

மூலதன சொத்துக்களான வீடு மற்றும் பிற சொத்துக்கள், பங்குகள் போன்றவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் மூலதன இலாபம் கிடைக்கிறது. தேசிய வருவாய் கணக்கீட்டில் மூலதன இலாபம் சேர்க்கப்படுவது இல்லை.



7. புள்ளி விவர சிக்கல் (Statistical Problems)

புள்ளிவிவரங்களை சேகரிப்பதில் பல பிரச்சினைகள் உள்ளன. ஒரே விவரத்தை பல முறை கணக்கில் சேர்ப்பது, நம்பகத்தன்மை, புள்ளி கிடைக்காமை, சேகரிப்பவர்களின் திறன் குறைவு, அர்ப்பணிப்பு இன்மை ஆகியவை தேசிய வருவாய் கணக்கிடுதலில் பிரச்சனைகளைத் தரலாம்.

 1. விவசாயத்துறையில் உற்பத்தி அளவை கணக்கிடுவது சிரமம். மேலும் கால்நடைத்துறையின் உற்பத்தி போன்றவை பற்றிய புள்ளிவிவரங்கள் சரியாகவும் முழுமையாகவும் கிடைக்காது.

2. பல்வேறு மொழி மற்றும் கலாச்சாரம் போன்ற காரணத்தினாலும் புள்ளிவிவரங்களை மதிப்பிடுவதில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

3. அரசு அலுவலர்கள் - மக்கள் உறவு நம் நாட்டில் சுமூகமாக இல்லாத நிலையில் புள்ளி விவரங்கள் சேகரிப்பதில் பிரச்சனைகள் வருகின்றன. மக்கள் உண்மையான புள்ளிவிவரங்கள் தருவதில்லை .

4. புள்ளி விவரங்களை சேகரிக்கும் பெரும்பான்மையான அலுவலர்கள் பயிற்சி அற்றவர்களாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளனர்.

ஆகையினால் தேசிய வருவாய் மதிப்பீட்டில் துல்லிய தன்மை இல்லாமலும், புள்ளி விவரங்கள் போதுமானதாக இல்லாமலும் இருக்கின்றன. 10 சதவிகிதம் அதிகமாகவோ அல்லது குறைத்தோ மதிப்பிடப்படுகின்றது. இத்தகைய காரணங்களினால் இந்தியாவின் GDPயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு ஏறக்குறைய 2 டிரில்லியன் US$ யிலிருந்து 5 டிரில்லியன் US$ வரை வேறுபடுகிறது.


Tags : Economics பொருளாதாரம்.
12th Economics : Chapter 2 : National Income : Difficulties in Measuring National Income Economics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 2 : தேசிய வருவாய் : தேசிய வருவாய் கணக்கீட்டில் உள்ள சிரமங்கள் - பொருளாதாரம் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 2 : தேசிய வருவாய்