Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | நேரடி நடவடிக்கை நாள்

தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் - வரலாறு - நேரடி நடவடிக்கை நாள் | 12th History : Chapter 6 : Communalism in Nationalist Politics

   Posted On :  09.07.2022 08:07 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 6 : தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்

நேரடி நடவடிக்கை நாள்

1940களின் தொடக்கத்தில் இந்து மற்றும் முஸ்லிம் வகுப்புவாதங்கள் ஒன்றையொன்று ஊட்டி வளர்த்தன. 1942இல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை முஸ்லிம் லீக் வெளிப்படையாகவே புறக்கணித்தது.

நேரடி நடவடிக்கை நாள்

1940களின் தொடக்கத்தில் இந்து மற்றும் முஸ்லிம் வகுப்புவாதங்கள் ஒன்றையொன்று ஊட்டி வளர்த்தன. 1942இல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை முஸ்லிம் லீக் வெளிப்படையாகவே புறக்கணித்தது. 1946இல் அரசியல் நிர்ணய சபைக்கு நடைபெற்ற தேர்தலில் முஸ்லிம் லீக் மத்திய சட்டமன்றத்தில் தனக்கென ஒதுக்கப்பட்ட 30 இடங்களிலும் வென்றதோடு, மற்ற மாகாணங்களில் ஒதுக்கப்பட்ட பெரும்பாலான இடங்களையும் வென்றது. காங்கிரஸ் கட்சி பொது தொகுதிகள் அனைத்தையும் வெற்றிகரமாக கைப்பற்றியது. ஆனால் ஒட்டுமொத்த பிரிட்டிஷ் இந்திய மக்களின் குரலாக ஒலிக்கும் கட்சி அதுமட்டுமே என்ற கருத்தை வலியுறுத்தும் வாய்ப்பை இழந்தது.

1946இல் அரசு செயலாளரான பெதிக் லாரன்ஸ் தலைமையில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவைத் தூதுக்குழு காங்கிரஸ்-முஸ்லிம் லீக் இடையிலான பிணக்கைத் தீர்த்து அதிகாரத்தை ஒரு இந்திய நிர்வாக அமைப்பிடம் மாற்றம் செய்யும் நம்பிக்கையோடு புதுடெல்லி வந்தது. மூன்று உறுப்பினர்களில் ஒருவரான கிரிப்ஸ் அமைச்சரவைத் தூதுக்குழுவின் திட்ட வரைவு தயாரிப்பில் முக்கிய பங்காற்றினார். இத்திட்டமானது இந்தியாவிற்கு மூன்றடுக்கு கொண்ட கூட்டாட்சி முறையைப் பரிந்துரைத்தது, இந்த கூட்டாட்சி முறையில் டெல்லியிலுள்ள மத்திய அரசாங்கம் ஒருங்கிணைக்கப்பாளராகவும் வெளியுறவு விவகாரங்கள், தகவல் தொடர்பு, பாதுகாப்பு மற்றும் ஒன்றிய விவகாரங்களுக்கு மட்டுமான நிதி வழங்குதல் ஆகிய குறைந்தபட்ச, வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டதாகவும் இருக்கும். இத்துணைக் கண்டத்தின் மாகாணங்கள் மூன்று பெரும் குழுக்களாக வகைப்படுத்தப்படும்: இந்துக்களை பெரும்பான்மையினராகக் கொண்ட மாகாணங்களான, பம்பாய் மாகாணம், மதராஸ் மாகாணம், ஐக்கிய மாகாணம், பீகார், ஒரிசா மற்றும் மத்திய மாகாணம்ஆகியன குழு- அ -வில் அடங்கும்; முஸ்லிம்களை பெரும்பான்மையினராகக் கொண்ட மாகாணங்களான பஞ்சாப், சிந்து, வடமேற்கு எல்லைப்புற மாகாணம் மற்றும் பலுச்சிஸ்தான் ஆகியன குழு - ஆ - வில் அடங்கும்; முஸ்லிம்களை பெரும்பான்மையினராகக் கொண்ட வங்காளமும் இந்துக்களை பெரும்பான்மையினராகக் கொண்ட அசாமும் குழு - இ - யில் அடங்கும். மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளைத் தவிர மற்ற அனைத்துத் துறைகளிலும் இந்த மாகாண அரசாங்கங்கள் தன்னாட்சி அதிகாரம் கொண்டு விளங்கும். இக்குழுவில் உள்ள சுதேச அரசுகள் பின்னர் அந்தந்த குழுக்களில் ஒருங்கிணைக்கப்பட்டு அவற்றின் அருகில் இருக்கும் மாகாணங்களோடு இணைக்கப்படும். உள்ளூர் மாகாண அரசுகள் தமது குழுவிலிருந்து வெளியேற வாய்ப்பு தரப்படும். ஆனால் அந்த மாகாண அரசின் பெரும்பான்மையான மக்கள் விரும்பினால் மட்டுமே அது சாத்தியமாகும். காங்கிரஸ் தலைவர்களும் ஜின்னாவும் அமைச்சரவைத்தூதுக்குழு திட்டத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால் பல வாரங்கள் நடைபெற்ற இரகசிய பேச்சுவார்த்தைகளுக்குப் பின் 1946 ஜூலை 29இல் முஸ்லிம் லீக் அமைச்சரவைத்தூதுக்குழு திட்டத்தை நிராகரிப்பதாக அறிவித்ததோடு, இந்தியாவிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 16 அன்று நேரடி நடவடிக்கை நாளில் ஈடுபடவும் அழைப்பு விடுத்தது. கல்கத்தாவில் நான்கு நாட்கள் கலவரங்களும் கொலைகளும் நடந்தேறின. இது கடுமையான வன்முறைத் தாக்குதல்களுக்கு இட்டுச் சென்றதோடு ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதுவரை நாட்டைப் பிரிவினை செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த காந்தியடிகள் முஸ்லிம் லீக்கின் பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்றார்.

வேவல் பிரபுவைத் தொடர்ந்து மௌண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் அரச பிரதிநிதியாக பொறுப்பேற்றார். அதிகாரத்தை மாற்றித்தரவும் நாட்டின் பிரிவினையை நடைமுறைப்படுத்தவும் அவர் இந்தியா வந்தார்.

Tags : Communalism in Nationalist Politics | History தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் - வரலாறு.
12th History : Chapter 6 : Communalism in Nationalist Politics : Direct Action Day Communalism in Nationalist Politics | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 6 : தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் : நேரடி நடவடிக்கை நாள் - தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 6 : தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்