Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

வரலாறு - பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள் | 11th History : Chapter 2 : Early India: The Chalcolithic, Megalithic, Iron Age and Vedic Cultures

   Posted On :  15.03.2022 10:27 pm

11 வது வகுப்பு வரலாறு : அலகு 2 : பண்டைய இந்தியா : செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

வழக்கமான நேர்க்கோட்டு முறையிலான இந்திய வரலாறு, சிந்து நாகரிகம் குறித்த தகவல்களை வழங்கி, பின் வேதகாலத்திற்கு நகர்ந்து, அதன் பின்னர் மகாஜனபதங்கள் குறித்த விளக்கங்களைத் தருகின்றது.


பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்

 

கற்றல் நோக்கங்கள்

இந்தியாவில் செம்புக்காலத்தின் தனிச்சிறப்புகளைப் புரிந்துகொள்வது

இந்தியாவின் பெருங்கற்கால, இரும்புக்காலப் பண்பாடுகளைத் தெரிந்து கொள்வது

ஆரியர், ஆரியர் அல்லாதோர், வேதகாலப் பண்பாடு ஆகியன குறித்த அறிமுகத்தைப் பெறுதல்

தொடக்க, பிந்தைய வேத காலச் சமூகங்கள் இடையேயான தனித்தன்மைகளைக் கற்றல்

 

 

அறிமுகம்

வழக்கமான நேர்க்கோட்டு முறையிலான இந்திய வரலாறு, சிந்து நாகரிகம் குறித்த தகவல்களை வழங்கி, பின் வேதகாலத்திற்கு நகர்ந்து, அதன் பின்னர் மகாஜனபதங்கள் குறித்த விளக்கங்களைத் தருகின்றது. ஆனால் சிந்துப் பண்பாட்டின் சரிவுக்குப் பின்னர் பொ..மு. 2000 முதல் பொ..மு. 600 வரையிலுமான காலகட்டத்தையும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலுமான, அருணாசலப் பிரதேசத்திலிருந்து குஜராத் வரையிலுமான நிலப்பரப்பு முழுவதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொண்டால், பழங்கால இந்தியாவில் பல்வேறு மொழிகளைப் பேசிய பல்வகைப்பட்ட பண்பாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்தனர் என்பது தெளிவாக விளங்கும்.

இப்பாடம் பிந்தைய ஹரப்பா காலகட்டம், செம்புக்காலம், பெருங்கற்காலம், இரும்புக்காலம், வேதகாலப் பண்பாடுகள் மற்றும் ஆரியர்கள் குறித்து விவரிக்கின்றது. சிந்துப் பண்பாடு குறித்து முந்தைய பாடத்தில் கற்றோம். இப்பாடம் சுமார் பொ..மு. 3000த்திற்கும், மகாஜனபதங்கள் தோற்றத்திற்கும் இடையேயான வரலாறு, குறிப்பாக சமூகப் பொருளாதார மாற்றங்கள் குறித்து விளக்குகின்றன.

சான்றுகள்

பொ..மு. 1900 காலகட்டத்தில் சிந்து நாகரிகம் மறைந்ததைத் தொடர்ந்து இந்திய வரலாறு புதிய கற்காலம், செம்புக்காலம், பெருங்கற்காலம், இரும்புக்காலம், வேதகாலம் ஆகிய பண்பாடுகளைச் சேர்ந்த நாடோடிச் சமூகங்கள், வேட்டையாடும், உணவு சேகரிக்கும் சமூகங்கள், நிரந்தரமற்ற, ஓரளவு நிரந்தரமான இடத்தில் தங்கி வாழ்ந்த வேளாண் - மேய்ச்சல் சமூகங்களைக் கொண்டிருந்தது. இந்திய வரலாற்றில் பொ..மு. 3000 முதல் பொ..மு. 600 வரையிலான நீண்ட கால வரலாறு தொடர்பாக இருவகைப்பட்ட முக்கிய வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அவற்றில் ஒன்று அகழ்வாய்வு செய்யப்பட்ட இடங்கள், களிமண் பாண்டங்கள், மக்கிய தாவரங்கள், உலோகப் பொருள்கள் ஆகியன உள்ளடக்கிய சான்றுகளாகும். மற்றொன்று வேதகால இலக்கியங்களாகும். இக்கால கட்டத்திற்கு எழுதப்பெற்ற சான்றுகள் இல்லை. ஏனெனில் வேத இலக்கியங்கள் வழிவழியாக வாய்மொழி மூலம் பயிலப்பட்டு நினைவில் கொள்ளப்பட்டவை ஆகும். இக்குறிப்பிட்ட காலத்தில் சிந்துப் பண்பாடு சார்ந்த குறியீடுகள் (இவை இன்றளவும் வாசித்து அறியப்படவில்லை) தவிர வேறு எழுத்து முறையை மக்கள் வளர்த்துக்கொள்ளவில்லை. வேத நூல்களில் சொல்லப்பட்டுள்ள பல குழுக்களைச் சேர்ந்த மக்களைப் பற்றிய செய்திகளையும் தொல்லியல் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்ட பண்பாடுகளையும் ஒன்றோடொன்று ஒப்பிட்டு தொடர்புபடுத்துவது எளிதான பணியல்ல. சிந்து நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்கள் யார் என்பது குறித்தும் பிற தொல்லியல் பண்பாடுகள் குறித்தும் பல கருத்துக்கள் நிலவுகின்றன. இந்தக் கால வெளிக்குள் வெவ்வேறான பண்பாடுகளும், பல்வேறு வகைப்பட்ட வாழ்க்கை முறைகளை மேற்கொண்ட சமூகங்களும் இந்தியாவில் வாழ்ந்தன.

தொடக்ககால வேதப் பண்பாடு இந்தியாவின் சில செம்புக்கால பண்பாடுகளின் கூறுகளோடு பொருந்துகிறது. அதைப் போலவே பிற்கால வேதப் பண்பாடு இந்தியாவின் இரும்புக்காலத்தைச் சேர்ந்த ஓவியங்கள் தீட்டப்பட்ட சாம்பல் நிறப் பாண்டப் பண்பாட்டோடு பொருந்தி உள்ளது. சிந்து நாகரிகக் காலத்தில் குறிப்பிட்ட நிலப் பகுதிகளில் மட்டும் நிலவிய நகர்ப்புறம் சார்ந்த பண்பாடுகள் போல் இல்லாமல், இக்காலகட்டத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலும், வேளாண்மை மற்றும் தொழில் நுட்பங்களின் விரிவாக்கத்தையும், வளர்ச்சியையும் காண முடிகிறது. இக்காலத்தில், கைவினைப்பொருள் உற்பத்திப் பெருக்கமும் மக்கட்தொகைப் பெருக்கமும் ஏற்பட்டன. இந்தியா முழுவதிலும் ஒரு வலுவான பண்பாட்டு அடித்தளம் உருவாக்கப்பட்டதும் இக்காலகட்டத்திலேதான் ஆகும். இன்றளவும் வேளாண்மையும் கால்நடை மேய்ச்சலும் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவின் கிராமக் குடியிருப்புகளுக்கான விரிவான அடித்தளம் இக்காலகட்டத்திலேயே அமைக்கப்பட்டது.

வேதகால இலக்கியங்கள்

இந்தியாவின் பழம்பெரும் சமய நூல்களில் வேதங்களும் அடங்கும் (வேதங்கள்; வித் = தெரிந்து கொள்ளல், வித்யா). வேதங்கள் நான்காகும். அவை ரிக், யஜூர், சாம, அதர்வ வேதங்களாகும். இவற்றில் ரிக் வேதம் பழமையானதாகும். இவை மனப்பாடம் செய்யப்பட்டு வாய்வழி வாயிலாக, தலைமுறை தலைமுறையாக பிராமணர்களால் போதிக்கப்பட்டது. எழுதும் முறை அறிமுகமான பின்னர் பிற்காலத்தில் இவை எழுத்து வடிவம் பெற்றன. பொ.. 10-11ஆம் நூற்றாண்டுகளில்தான் வேதப்பாடல்கள் முதன் முதலாக எழுதப்பெற்றதாக அறியப்படுகிறது. அப்பாடல்கள் அரசியல், சமூகம், மதம், தத்துவம் சார்ந்த செய்திகளைக் கொண்டிருப்பதால், அவை வரலாறு எழுதுவதற்கான சான்றுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

வேதப்பாடல்களின் முக்கியத் தொகுப்புகள் சம்ஹிதைகள் என்றழைக்கப்படுகின்றன. இவற்றில் பழமையானது ரிக் வேத சம்ஹிதை ஆகும். இது பொ..மு.1500க்கும் பொ..மு.1000க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது. ரிக் வேதம் மொத்தம் 10 காண்டங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் இரண்டிலிருந்து ஏழு வரையிலான காண்டங்கள் முதலில் எழுதப்பெற்றன எனவும், 1, 8, 9, 10 ஆகிய காண்டங்கள் பிற்காலத்தைச் சேர்ந்தவை எனவும் கருதப்படுகின்றன.

ஒவ்வொரு சம்ஹிதையும் பிராமணங்கள் என்னும் இணைப்புக்குறிப்புகளைக் கொண்டுள்ளன. இவை பாடல்கள் மற்றும் சடங்குகள் குறித்த விளக்கவுரைகளாகும். சம்ஹிதைகள் இயற்றப்பட்ட பின்னரே பிராமணங்கள் இயற்றப்பட்டன. இவை சடங்குகள் பற்றிய பாடங்களாகும். இவை சடங்குகளின் மத சமூக முக்கியத்துவத்தை விளக்குகின்றன. ஒவ்வொரு பிராமணமும், ஓர் ஆரண்யகம், ஓர் உபநிடதம் கொண்டுள்ளது. ஆரண்யகங்கள் என்பவை காடுகளில் வாழும் முனிவர்கள் ரகசியமாக மேற்கொள்ள வேண்டிய மந்திரச் சடங்குகள் குறித்த குறிப்புகளைக் கொண்டுள்ளன. உபநிடதங்கள் தத்துவக் கருத்துகளையும் வினாக்களையும் கொண்டுள்ளன.

யஜூர், சாம, அதர்வ வேதங்கள் சற்றே பிற்காலத்தைச் சேர்ந்தவையெனக் கணக்கிடப்பட்டுள்ளன. யஜூர், சாம, அதர்வ வேதங்களின் சம்ஹிதைகளும் இவ்வேதங்களோடு இணைக்கப்பட்டுள்ளபிராமணங்களும், ஆரண்யகங்களும் உபநிடதங்களும் வேத காலத்தின் இறுதியில் இயற்றப்பட்டவையாகும். சாமவேதம் இசைப்பாடல்களாக அமைந்துள்ளது. யஜூர் வேதம் சடங்குகளையும் பாடல்களையும் கொண்டுள்ளது. அதர்வ வேதமானது, மாய மந்திர ஜாலங்கள் அடங்கியது.

ஜென்ட் அவெஸ்தா: ஜென்ட் அவெஸ்தா எனப்படும் இப்பாரசீக/ஈரானிய நூல் ஜொராஸ்டிரிய மதத்தைச் சேர்ந்த நூலாகும். இந்தோ-ஈரானிய மொழிகளைப் பேசிவந்த மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு, அவர்களின் கடவுள்கள் குறித்து இந்நூல் பல செய்திகளைக் கூறுகிறது. இந்தியாவின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளைப் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் உள்ளன. இந்நூலில் இடம் பெற்றுள்ள சொற்கள் வேதநூல்களின் சமஸ்கிருதச் சொற்களோடு மொழி ஒப்புமை கொண்டுள்ளன. இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியே அமைந்திருந்த ஆரியர்களின் தொடக்ககால வாழிடங்கள் பற்றி அறிந்துகொள்ள ஏதுவான துணைச்சான்றுகளை இந்நூல் கொண்டுள்ளது.

 

Tags : History வரலாறு.
11th History : Chapter 2 : Early India: The Chalcolithic, Megalithic, Iron Age and Vedic Cultures : Early India: The Chalcolithic, Megalithic, Iron Age and Vedic Cultures History in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 2 : பண்டைய இந்தியா : செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள் : பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள் - வரலாறு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 2 : பண்டைய இந்தியா : செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப் பண்பாடுகள்