Home | 9 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | வங்காளத்தில் தொடக்கக் கால சீர்திருத்த இயக்கங்கள்

19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் - வங்காளத்தில் தொடக்கக் கால சீர்திருத்த இயக்கங்கள் | 10th Social Science : History : Chapter 5 : Social and Religious Reform Movements in the 19th Century

   Posted On :  27.07.2022 08:30 am

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 5 : 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

வங்காளத்தில் தொடக்கக் கால சீர்திருத்த இயக்கங்கள்

(அ) இராஜா ராம்மோகன் ராயும், பிரம்ம சமாஜமும் (ஆ) மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் (இ) கேசவ் சந்திர சென்னும் இந்தியாவின் பிரம்ம சமாஜமும் (ஈ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் (உ) பிரார்த்தனை சமாஜம்

வங்காளத்தில் தொடக்கக் கால சீர்திருத்த இயக்கங்கள்


(அ) இராஜா ராம்மோகன் ராயும், பிரம்ம சமாஜமும்

இராஜா ராம்மோகன் ராய் (1772-1833) மேலைநாட்டுக் கருத்துக்களால் கவரப்பட்டு, சீர்திருத்தப்பணிகளை முன்னெடுத்த தொடக்ககாலச் சீர்திருத்த வாதிகளில் ஒருவராவார். பெரும் அறிஞரான அவர், தனது தாய்மொழியான வங்காள மொழியில் புலமை பெற்றிருந்ததோடு சமஸ்கிருதம், அரபி, பாரசீகம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். இராஜா ராம்மோகன் ராய் பொருளற்ற சமயச் சடங்குகளையும், கேடுகளை விளைவிக்கும் சமூக மரபுகளையும் எதிர்த்தார். இருந்த போதிலும் கடந்த காலத்துடனான தொடர்பை அவர் பாதுகாக்க விரும்பினார். தன்னுடைய சமய, தத்துவ சமூகப்பார்வையில் அவர் ஒருகடவுள் கோட்பாடு, உருவவழிபாடு எதிர்ப்பு போன்ற கருத்துக்களின் தாக்கத்தைப் பெற்றிருந்தார். உபநிடதங்களுக்குத் தான் கொடுத்த விளக்கங்களின் அடிப்படையில் இந்துக்களின் மறை நூல்கள் அனைத்தும் ஒரு கடவுள் கோட்பாட்டை அல்லது ஒரு கடவுளை வணங்குவதை உபதேசிப்பதாகக் கூறினார்.


சமூகத்தில் நிலவிவரும் உடன்கட்டை ஏறுதல் (சதி), குழந்தைத் திருமணம், பலதார மணம் போன்ற மரபு சார்ந்த பழக்கங்கள் குறித்து பெரிதும் கவலை கொண்ட அவர், அவற்றிற்கு எதிராகச் சட்டங்கள் இயற்றும்படி ஆங்கில அரசாங்கத்திற்கு விண்ணப்பித்தார். விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொள்ள உரிமை உடையவர்கள் எனும் கருத்தை முன்வைத்தார். பலதார மணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென்றார். மக்களைப் பகுத்தறிவோடும், பரிவோடும், மனிதப் பண்போடும் இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். 1829இல் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் 'சதி' எனும் உடன்கட்டையேறும் பழக்கத்தை ஒழித்துச் சட்டம் இயற்றியதில் இராஜா ராம் மோகன் ராய் முக்கிய பங்கு வகித்தார்.

ராம்மோகன் ராய் பெண்ணடிமைத்தனத்தைக் கண்டனம் செய்தார். ஆண்கள் பெண்களை கீழானவர்களாக நடத்தும் அன்றைய கால நடைமுறையை எதிர்த்தார். பெண்களுக்குக் கல்வி வழங்கப்பட வேண்டும் எனும் கருத்தை வலுவாக முன்வைத்தார். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆங்கிலக்கல்வியும் மேலை நாட்டு அறிவியலும் அறிமுகம் செய்யப்படுவதை முழுமையாக ஆதரித்தார்.

இராஜா ராம்மோகன் ராய் 1828 இல் பிரம்ம சமாஜத்தை நிறுவி ஆகஸ்டு 20ஆம் நாள் கல்கத்தாவில் ஒரு கோவிலை நிறுவினார். அக்கோவிலில் திருவுருவச் சிலைகள் எதுவும் வைக்கப்படவில்லை . இங்கு எந்த ஒரு மதத்தையும் அல்லது மறைமுகமாகக் குறிப்பிடப்படலாகாது என எழுதிவைத்தார். பிரம்ம சமாஜம் உருவவழிபாட்டை தவிர்த்ததோடு பொருளற்ற சமயச் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் எதிர்த்தது. இருந்தபோதிலும் தொடக்கம் முதலாக பிரம்ம சமாஜத்தின் கருத்துக்கள் கற்றறிந்த மேதைகள், கல்வியறிவு பெற்ற வங்காளிகள் என்ற அளவில் மட்டுமே செயல்பட்டது. சமூகத்தின் கீழ்த்தட்டு மக்களைத் தன்பால் ஈர்ப்பதில் சமாஜம் தோல்வியடைந்தாலும், நவீன வங்காளப் பண்பாட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மீதான அதனுடைய தாக்கம் மிகவும் போற்றுதலுக்குரியதாகும்.


(ஆ) மகரிஷி தேவேந்திரநாத் தாகூர்

இராஜா ராம்மோகன் ராய் 1833இல் இயற்கையெய்திய பின்னர் அவர் விட்டுச்சென்றப் பணிகளை, கவிஞர் இரவீந்திரநாத் தாகூரின் தந்தையரான தேவேந்திரநாத் தாகூர் (1817-1905) தொடர்ந்தார். அவர் நம்பிக்கை பற்றிய நான்கு கொள்கைக்கூறுகளை முன்வைத்தார்.

1. தொடக்கத்தில் எதுவுமில்லை, எல்லாம் வல்ல ஒரு கடவுள் மட்டுமே உள்ளார். அவரே இவ்வுலகத்தைப் படைத்தார்.

2. அவர் ஒருவரே உண்மையின், எல்லையற்ற ஞானத்தின், நற்பண்பின், சக்தியின் கடவுளாவார். அவரே நிலையானவர், எங்கும் நிறைந்திருப்பவர், அவருக்கிணையாருமில்லை.

3. நம்முடைய வீடுபேறு, இப்பிறவியிலும் அடுத்த பிறவியிலும் அவரை நம்புபவரையும் அவரை வணங்குவதையும் சார்ந்துள்ளது.

4. அவரை நம்புவதென்பது, அவரை நேசிப்பதிலும் அவர் விருப்பத்தைச் செயல்படுத்துவதிலும் அடங்கியுள்ளது.



(இ) கேசவ் சந்திர சென்னும் இந்தியாவின் பிரம்ம சமாஜமும்

தேவேந்திரநாத் மிதவாதச் சீர்திருத்தவாதியாவார். ஆனால் சமாஜத்தில் அவருடன் பணியாற்றிய இளையவர்கள் விரைவான மாற்றங்களையே விரும்பினர். அவர்களுள் மிக முக்கியமானவரான கேசவ் சந்திரசென் (1838-84),1857 இல் சபையில் இணைந்தார். 1866இல் பிரம்மசமாஜத்தின் உறுப்பினர்களிடையே பிளவு ஏற்பட்டதால் கேசவ் சந்திர சென் சமாஜத்திலிருந்து விலகி புதிய அமைப்பான “இந்திய பிரம்ம சமாஜத்தை உருவாக்கினார். இதன் பின்னர் தேவேந்திரநாத் தாகூரின் அமைப்பு ஆதி பிரம்ம சமாஜம் என அழைக்கப்படலாயிற்று. குழந்தைத் திருமணத்தை சமாஜம் கண்டனம் செய்திருந்த போதும் அதற்கு மாறாக கேசவ் சந்திர சென் தனது பதினான்கு வயது மகளை இந்திய இளவரசன் ஒருவருக்குத் திருமணம் செய்து கொடுத்தபோது, குழந்தைத் திருமணத்தை எதிர்த்தோர் இந்திய பிரம்ம சமாஜத்திலிருந்து விலகி சாதாரண சமாஜ் எனும் அமைப்பை நிறுவினர்.



(ஈ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

வங்காளத்தைச் சேர்ந்த மற்றொரு முதன்மையான சீர்திருத்தவாதி ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் (1820-1891) ஆவார். 


இராஜா ராம் மோகன் ராயும் மற்றவர்களும் சமூகத்தைத் திருத்துவதற்கு மேலைநாட்டுப் பகுத்தறிவுச் சிந்தனைகளின் துணையை நாடிய போது வித்யாசாகர் இந்து மறை நூல்களே முற்போக்கானவை என வாதிட்டார். விதவைகளை எரிப்பதும் விதவை மறுமணத்தைத் தடை செய்வதும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதற்கு மறை நூல்களிலிருந்தே சான்றுகளை முன்வைத்தார். அவர் தனது கருத்துக்களுக்கு ஆதரவான வாதங்களைக் கொண்ட சிறுநூல்களை வெளியிட்டார். அவர் நவீன வங்காள உரைநடையின் முன்னோடியாவார். பெண்கல்வியை மேம்படுத்துவதில் முக்கியப்பங்காற்றிய அவர் பெண்களுக்கான பள்ளிகள் நிறுவப்பட உதவிகள் செய்தார். இந்து சமூகத்தில் குழந்தைப் பருவத்திலேயே விதவைகளான சிறுமிகளின் வாழ்வை மேம்படுத்துவதற்காகவே தனது முழுவாழ்வையும் அர்ப்பணித்தார். பண்டித ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் தலைமையேற்ற இயக்கத்தின் விளைவாய் 1856 இல் மறுமண சீர்திருத்தச் சட்டம் (விதவைகள் மறுமணச் சட்டம்) இயற்றப்பட்டது. இச்சட்டம் குழந்தை விதவைகளின் நிலையை மேம்படுத்துவதையும் நிரந்தரமாக விதவையாய் இருக்கவேண்டிய ஆபத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.

1860 இல் முதன்முறையாக திருமண வயதுச் சட்டம் இயற்றப்பட்டது. அப்பெருமை ஈஸ்வர் சந்திர வித்யாசாகரையேச் சாரும். திருமணத்திற்கான வயது பத்து என்று நிர்ணயம் செய்யப்பட்டது. அது 1891இல் பன்னிரெண்டாகவும், 1925இல் பதிமூன்றாகவும் உயர்த்தப்பட்டது. ஆனால் கவலைக்குரிய விதத்தில் திருமண வயது ஒப்புதல் கமிட்டி (1929) கூறியபடி இச்சட்டம் காகிதத்தில் மட்டுமேயிருந்தது. நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் ஒருசில படித்த மனிதர்களுமே அதனைப் பற்றிய அறிவைப் பெற்றிருந்தனர்.


(உ) பிரார்த்தனை சமாஜம்

மகாராஷ்டிரப் பகுதியானது சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு கிடைக்கப்பெற்ற மற்றொரு பகுதியாகும். பிரம்ம சமாஜத்துக்கிணையாக பம்பாயில் 1867இல் நிறுவப்பட்ட அமைப்பே பிரார்த்தனை சமாஜம். இதனை நிறுவியவர் ஆத்மராம் பாண்டுரங் (1825-1898) ஆவார். இந்த சமாஜத்தின் இரண்டு மேன்மைமிக்க உறுப்பினர்கள் R.C. பண்டர்கர், நீதிபதி மகாதேவ் கோவிந்த் ரானடே ஆகிய இருவருமாவர். இவ்விருவரும் சாதிமறுப்பு, சம்பந்தி, சாதி மறுப்புத் திருமணம், விதவை மறுமணம், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் போன்ற நடவடிக்கைகளுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களாவர். மகாதேவ் கோவிந்த் ரானடே (1842-1901) விதவை மறுமணச் சங்கம் (1861), புனே சர்வஜனிக் சபா (1870), தக்காணக் கல்விக்கழகம் (1884) ஆகிய அமைப்புகளை நிறுவினார்.



Tags : Social and Religious Reform Movements in the 19th Century 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்.
10th Social Science : History : Chapter 5 : Social and Religious Reform Movements in the 19th Century : Early Reform Movements in Bengal Social and Religious Reform Movements in the 19th Century in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 5 : 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் : வங்காளத்தில் தொடக்கக் கால சீர்திருத்த இயக்கங்கள் - 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 5 : 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்