Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | பொருளாதார அமைப்பு முறைகள்

பொருளாதாரம் - பொருளாதார அமைப்பு முறைகள் | 12th Economics : Chapter 1 : Introduction to Macro Economics

   Posted On :  14.03.2022 08:38 pm

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 1 : பேரியல் பொருளாதாரம்

பொருளாதார அமைப்பு முறைகள்

1. முதலாளித்துவ பொருளாதார அமைப்பு (முதலாளித்துவம்) 2. சமத்துவ பொருளாதார அமைப்பு (சமத்துவம்) மற்றும் 3. கலப்பு பொருளாதார அமைப்பு (கலப்புத்துவம்)

பொருளாதார அமைப்பு முறைகள் (ECONOMIC SYSTEMS)


பொருளாதார அமைப்பு முறை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மக்களையும் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகும். இது சமுதாயத்தின் தேவைகளை நிறைவு செய்வதற்காக மேற்கொள்ள உதவும் பொருளாதார நடவடிக்கைகளின் செய்யும் வழிமுறை ஆகும். பொருளாதார அமைப்பு முறை மூன்று முக்கிய வகைகளைக் கொண்டுள்ளது. அவையாவன:

1. முதலாளித்துவ பொருளாதார அமைப்பு (முதலாளித்துவம்) 

2. சமத்துவ பொருளாதார அமைப்பு (சமத்துவம்) மற்றும் 

3. கலப்பு பொருளாதார அமைப்பு (கலப்புத்துவம்)


உலகத்துவம்

பன்னாட்டு வாணிபத்தால் நாடுகளை இணைப்பதன்மூலம் உலகமுன்னேற்றத்தை எதிர்நோக்கம் உலகமயமாக்குதல் என்ற புதிய அங்காடி தத்துவத்தை குறிப்பிட்ட, உலகத்துவம் (Globalism) என்ற பதத்தை, மேன்பிரட்டிஸ்டீகர் (Manfred D Steger) 2002ம் ஆண்டு உருவாக்கினார். இந்த தத்துவம், விரிவுபடுத்தப்பட்ட முதலாளித்துவம் (Extended - Capitalism) என்றும் குறிப்பிடப்படுகின்றது.



முதலாளித்துவம் மற்றும் சமத்துவம் ஆகிய இரு அணுகுமுறைகளும் ஒன்றுக்கொன்று எதிரிடையானது. முதலாளித்துவ பொருளாதாரத்தில், தனியார் உற்பத்தி நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. சமத்துவ பொருளாதாரத்தில், தனியார் நிறுவனத்திற்கு சுதந்திரம் இல்லை. மாறாக உற்பத்தியில் அனைத்து செயல்பாடுகளும் பொதுவுடைமை ஆக்கப்படும். கலப்பு பொருளாதார அமைப்பு என்பது முதலாளித்துவம், சமத்துவம் ஆகிய இரண்டின் இயல்புகளையும் உள்ளடக்கியது. கீழ்கண்ட பகுதியில் பல்வேறு பொருளாதார அமைப்பு முறைகளின் இயல்புகள், நன்மைகள் மற்றும் குறைகள் விளக்கப்பட்டு உள்ளன.



1. முதலாளித்துவ பொருளாதார அமைப்பு (முதலாளித்துவம்)


'முதலாளித்துவத்தின் தந்தை' ஆடம் ஸ்மித் ஆவார். முதலாளித்துவப் பொருளாதார அமைப்பை தடையில்லா பொருளாதாரம் (Laissez faire - லேசிபேர், லத்தீனில் - Free Economy) அல்லது சந்தைப் பொருளாதாரம் (Market Economy) என்றும் அழைக்கிறோம். இங்கு பொருளாதார நடவடிக்கைகளை தீர்மானிப்பதில் அரசாங்கத்தின் பங்கு குறைவாகவும், சந்தையின் பங்கு அதிகமாகவும் இருக்கும்.

முதலாளித்துவ பொருளாதாரத்தில் உற்பத்தி நடவடிக்கைகள் தனியார் வசம் இருக்கும். பொருட்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இலாப நோக்கத்தை முதன்மையாகக் கொண்டிருப்பார்கள். தனிநபர் தங்களுக்கான வேலையைத் தெரிந்தெடுப்பதிலும் மற்றும் திறமையை வளர்த்துக் கொள்வதிலும் சுதந்திரமாகச் செயல்படுவர். USA, மேற்கு ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு உதாரணங்கள் ஆகும்.

மேலும், இவ்வமைப்புகளில் அங்காடிச் சக்திகளிடம் இருந்து (Market forces) அடித்தட்டு சாதாரண மக்களை பாதுகாக்க தேவையான சமூக நல நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர்.



முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் இயல்புகள்



1. தனியார் சொத்துரிமை மற்றும் பரம்பரைச் சட்டம் (Private Ownership of Property and Law of Inheritance)

முதலாளித்துவத்தின் முக்கிய இயல்பு என்னவெனில், நிலம், உழைப்பு, மூலதனம், இயந்திரங்கள், சுரங்கம் போன்ற அனைத்து வளங்களும் தனிநபர்களுக்கு சொந்தமாக இருக்கும். உரிமையாளர்கள் வளங்களை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு உரிமம் கொள்ள, வைத்துக்கொள்ள, விற்க மற்றும் பயன்படுத்த அதிகாரம் படைத்தவர்களாவர். உரிமையாளர்கள் இறந்த பிறகு சொத்துக்கள் அவர்கள் வாரிசுகளுக்கு மாற்றப்படும்.


2. தெரிந்தெடுப்பதில் சுதந்திரம் (Freedom of Choice and Enterprise)

ஒவ்வொரு தனிநபரும் தங்களது வேலையைத் தேர்ந்தெடுப்பதிலும், உற்பத்தி செய்யும் பொருட்களை தேர்ந்தெடுப்பதிலும் மற்றும் வியாபார இடத்தை தெரிவு செய்வதிலும் முழு சுதந்திரம் பெற்றிருப்பர். அதே போன்று நுகர்வோர்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை தெரிவு செய்வதிலும் முழு சுதந்திரம் பெற்றிருப்பார்கள்.


3. இலாப நோக்கம் (Profit Motive)

முதலாளித்துவ பொருளாதார அமைப்பில், அனைத்து பொருளாதார நடவடிக்கைகளிலும் இலாபம் பெறுவதே உந்து விசையாக காணப்படும். ஒவ்வொரு தனிநபர்களும், அமைப்புகளும் அதிக இலாபம் தரக்கூடிய பொருட்களை மட்டுமே உற்பத்தி செய்வார்கள். இங்கு வேலை பகுப்பு, புதிய தொழில்நுட்பம் மற்றும் சிறப்புக் கவனம் போன்றவை பின்பற்றப்படும். முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் உற்பத்தியாளர்களால் பின்பற்றப்படுகின்ற தங்க விதி (Golden Rule) 'உச்ச இலாபம்' அடைதல்.


4. போட்டியில் சுதந்திரம் (Free Competition)

பொருட்கள் சந்தை மற்றும் காரணிகள் சந்தை ஆகிய இரண்டிலும் முழு சுதந்திரம் உண்டு. அரசாங்கமோ வேறு எந்த அமைப்போ நிறுவனங்களின் வாங்குதல் மற்றும் விற்பதில் தலையிட முடியாது. வாங்குபவர் மற்றும் விற்பவர் இடையே போட்டி நிலவும்.


5. விலை இயங்கு முறை (Price Mechanism)

விலை இயங்கு முறையானது முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் இதயமாகும். அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் விலை இயங்கும் முறை, தேவை மற்றும் அளிப்பு அங்காடி சக்திகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.


6. அரசின் பங்கு (Role of Government)

முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் விலை இயங்கு முறையை கட்டுப்படுத்துவதால், அரசின் பங்கு மிகக் குறைவாக இருக்கும். அடிப்படை பணிகளான பாதுகாப்பு, பொதுநலம், கல்வி போன்றவற்றை அரசாங்கம் வழங்குகிறது.


7. வருமான ஏற்றத்தாழ்வு (Inequalities of Income)

முதலாளித்துவ சமுதாயம் இரண்டு வகுப்பாகப் பிரிக்கப்படுகிறது. சொத்துக்களை வைத்திருப்பவர்கள் (Haves) மற்றும் சொத்துக்கள் இல்லாதவர்கள் (Have - nots) எனப் பிரிக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக, பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாகவும், ஏழைகள் இன்னும் ஏழைகளாகவும் இருக்கின்றனர். இதனால் பொருளாதார சமனற்ற நிலை அதிகரிக்கிறது.



முதலாளித்துவத்தின் நன்மைகள் (Merits of Capitalism)



1. தானாக இயங்குதல் : முதலாளித்துவ பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் எந்த தலையீடும் இல்லாமல் பொருளாதாரம் தானாகவே செயல்படும்.


2. வளங்களைத் திறமையாகப் பயன்படுத்துதல்: இப்பொருளாதாரத்தில் அனைத்து வளங்களும் திறமையாக உத்தம அளவில் பயன்படுத்தப்படுகிறது. 


3. கடின உழைப்பிற்கு வெகுமதி : கடின உழைப்பு ஊக்குவிக்கப்படுவதும், அதிக திறனால் தொழில் முனைவோர்கள் அதிக இலாபம் பெறுவதும் காணப்படும். 


4. பொருளாதார முன்னேற்றம்: முதலாளித்துவ பொருளாதார அமைப்பில், உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் அளவு மிக அதிகமாகும். 


5. நுகர்வோர் இறையாண்மை: அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளும் நுகர்வோர்களை திருப்தி செய்வதை முக்கிய நோக்கமாக கொண்டிருக்கின்றன. 


6. மூலதன ஆக்க வீதம் அதிகரித்தல்: சேமிப்பும், முதலீடும் அதிகரிக்கும். மூலதன ஆக்க வீதத்தை உயர்த்த வழி வகுக்கும். 


7. புதிய தொழில்நுட்ப முன்னேற்றம்: இலாபம் பெறுவது நோக்கமாக இருப்பதால், உற்பத்தியாளர்கள் புதிய தொழில் நுட்பத்தில் முதலீடு செய்து, தரமான பொருட்களை உற்பத்தி செய்வர்.



முதலாளித்துவத்தின் குறைகள் (Demerits of Capitalism)


1. வருமானம் மற்றும் செல்வச் செறிவு

முதலாளித்துவத்தில் வருமானம் மற்றும் செல்வம் சிலரது கைகளில் மட்டும் குவிகிறது. இதனால் வருமான ஏற்றத்தாழ்வு அதிகரிக்கிறது.


2. வளங்கள் வீணாக்கப்படுதல்

போட்டி விளம்பரங்களினாலும் பொருட்களின் பிரதிகளினாலும் வளங்கள் அதிக அளவில் வீணாக்கப்படுகின்றன.


3. வகுப்புப் போராட்டம்

முதலாளித்துவமானது, சமுதாயத்தை முதலாளிகளாகவும், வேலைக்காரர்களாகவும் பிரிப்பதால் வகுப்பு போராட்டத்திற்கு வழிவகுக்கிறது.


4. வாணிபச் சுழல்

தடையில்லாச் சந்தை முறை (Free Market System) அதிக அளவில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்கும் கொண்டு செல்கிறது. 


5. அத்தியாவசியமில்லா பொருட்களின் உற்பத்தி

இலாபத்தைப் பெறுவதற்காக வாய்ப்பு இருக்குமாயின், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கூட உற்பத்தி செய்யப்படும்.


2. சமத்துவப் பொருளாதார அமைப்பு (Socialism)


கார்ல் மார்க்ஸ் சமத்துவத்தின் தந்தை ஆவர். சமத்துவம் என்பது மொத்த திட்டமிடுதல், பொது உடமை மற்றும் பொருளாதார நடவடிக்கைளில் அரசின் கட்டுப்பாடு ஆகிய முறைகளை குறிப்பிடுவதாகும். அரசே பெரும்பான்மையான தொழில்களை உரிமம் கொண்டு மற்றும் கட்டுப்படுத்தி ஒரு சமுதாயத்தின் ஒழுங்குபடுத்தும் முறையை வரையறுப்பது சமத்துவம் ஆகும். ஒரு சமத்துவ பொருளாதார அமைப்பை, திட்டமிட்ட பொருளாதாரம் (Planned Economy) அல்லது கட்டளைப் பொருளாதாரம் (Command Economy) என்றும் அறியப்படுகிறது.


ஒரு சமத்துவ பொருளாதார அமைப்பின் அனைத்து வளங்களையும் அரசே உரிமமாக்கி பயன்படுத்தும். பொதுநலமே (Public Welfare) அனைத்து பொருளாதார நடவடிக்கைகளின் பின்புல முக்கிய நோக்கமாகும். வருவாய் மற்றும் செல்வம் பகிர்வதில் சமத்துவம் மற்றும் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்குவதே இதன் குறிக்கோள். ரஷ்யா, சீனா, வியட்நாம், போலந்து மற்றும் கியூபா ஆகியவை சமத்துவ பொருளாதார அமைப்புகளுக்கு உதாரணமாகும். ஆனால் தற்காலத்தில், முற்றிலும் பொருத்தமான சமத்துவ பொருளாதார அமைப்புகள் எங்கும் இல்லை.



சமத்துவ பொருளாதார அமைப்பின் இயல்புகள்


1. உற்பத்தி மூலங்களின் பொது உரிமம் (Public Ownership)

அனைத்து வளங்களுக்கும் அரசே உரிமம் கொண்டிருக்கும். இதன் பொருள் என்னவெனில், அனைத்து உற்பத்திக் காரணிகளும் பொது அதிகாரத்தால் (அரசால்) தேசிய மயமாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும்.


2. மைய திட்டமிடல் (Central Planning)

ஒரு சமத்துவ பொருளாதார அமைப்பில், திட்டமிடுதல் என்பது ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகும். இந்த அமைப்பு முறையில், மைய திட்ட அதிகாரமே அனைத்து முடிவுகளையும் மேற்கொள்ளும்.


3. அதிகபட்ச சமூக நலன் (Social Benefit)

சமூக நலன் அனைத்து பொருளாதார நடவடிக்கையின் வழி காட்டுக் கொள்கையாகும். பெரும்பாலான பயன்கள் சமூகத்திற்கு சம அளவில் பகிரும்படியாக முதலீடுகள் திட்டமிடப்படுகின்றன.


4. போட்டி இல்லாமை

சமத்துவ பொருளாதார அமைப்பு முறையில் போட்டி இல்லாத அங்காடி காணப்படும். பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்தியையும், பகிர்வையும் அரசே முற்றிலும் கட்டுப்படுத்துகிறது. நுகர்வோருக்கு ஒரு வரையறுக்கப்பட்ட விருப்ப அளவே உண்டு .


5. விலை இயங்கு முறை இல்லாமை (Price mechanism)

மையதிட்ட அதிகாரத்தின் கட்டுபாடு மற்றும் ஒழுங்குப்படுத்துதலின் அடிப்படையில் விலை நிர்ணய முறை காணப்படும்.


6. வருவாயில் சமத்துவம் (Equality of Income)

சமத்துவ பொருளாதார அமைப்பின் மற்றொரு அத்தியாவசிய தன்மையானது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதும் மற்றும் குறைப்பதும் ஆகும். சமத்துவ பொருளாதாரத்தில், தனியார் சொத்துரிமை மற்றும் வாரிசு சொத்துரிமை நடைமுறையில் இல்லை.


7. வாய்ப்புகளில் சமத்துவம் (Equality of Opportunity)

இலவச மருத்துவம், கல்வி மற்றும் பயிற்சி ஆகியவை சமத்துவ பொருளாதாரத்தில் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும்.


8. வகுப்பு பேதமில்லா சமூகம் (Classless Society)

சமத்துவ பொருளாதாரத்தில், வகுப்பு பேதமில்லா சமூகம்மற்றும் வகுப்பு சண்டைகள் இல்லை. ஒரு உண்மையான சமத்துவ சமூகத்தில், பொருளாதார நிலையில் அனைவரும் சமம்.


சமத்துவ பொருளாதார அமைப்பின் நன்மைகள்


1. ஏற்றத்தாழ்வுகளில் குறைவு

எந்த நபராலும் தனியார் சொத்துக்களை உரிமம் கொண்டு மற்றும் பயன்படுத்துவதன் மூலம் மற்றவர்களை சுரண்ட அனுமதி இல்லை.


2. வளங்கள் அறிவார்ந்த முறையில் ஒதுக்கீடு

மைய திட்ட அதிகாரத்தால் திட்டமிட்டபடி வளங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வளங்கள் விரயமாவது குறைக்கப்படுவதுடன் முன்திட்ட அடிப்படையில் முதலீடுகள் மேற்கொள்ளப்படுகிறது.


3. வகுப்பு சண்டைகள் இல்லாமை

ஏற்றத்தாழ்வுகள் குறைவாக இருப்பதால், பணக்காரர் மற்றும் ஏழைகளுக்கிடையேயான சண்டைகள் இருப்பதில்லை. சமூகம் சுமுகமான சூழலில் செயல்படும்.


4. வாணிக சூழலுக்கு முடிவு

பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்தி மற்றும் பகிர்வை திட்ட அதிகாரமே முழு கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் அதனால், தவிர்க்க முடியும்.


5. சமூக நலன் முன்னேற்றம்

சுரண்டல் இல்லாமை, மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறைக்கப்படுகிறது. ஏற்றத்தாழ்வுமிக்க வாணிகச் சுழல் தவிர்த்தல் மற்றும் உற்பத்தித்திறன் அதிகரித்தல் ஆகியவை சமூக நலன் வளர உதவுகிறது.


சமத்துவ பொருளாதார அமைப்பின் தீமைகள்


1. சிகப்பு நாடா (Red Tapism) மற்றும் அதிகார வர்க்கம் (Bureaucracy)

அனைத்து முடிவுகளையும் அரசு அமைப்புகளை எடுப்பதாலும், அநேக அலுவலர்களின் அனுமதி பெற வேண்டி, கோப்புகள் ஒரு மேஜையிலிருந்து மற்றொன்றுக்கு செல்ல எடுக்கும் கால அளவு அதிகமாவதாலும் ஒரு சிகப்பு நாடா நிலைக்கு கொண்டு செல்லப்படும்.


2. ஊக்கமில்லாமை (Absence of Incentive)

சமத்துவத்தின் மிகப்பெரிய குறை என்பது, இந்த முறையில் திறமைக்கு எந்த ஊக்கமும் அளிப்பதில்லை. எனவே, உற்பத்தி திறனும் பாதிக்கப்படும்.


3. தெரிவு செய்வதில் சுதந்த குறைவு (Limited Freedom & Choice)

பண்டங்கள் மற்றும் பணிகளை நுகர்வதில் தெரிவு செய்யும் சுதந்திரம் நுகர்வோரால் அனுபவிக்க முடியாது.


4. அதிகாரம் குவிதல் (Concentration of Power)

அரசே அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது. பொருளாதார தீர்மானங்களில் தனியார் எந்த முயற்ச்சியும் எடுப்பது இல்லை. எனவே, அரசே மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு வாய்ப்பாகவும் அமைகிறது.


3. கலப்புப் பொருளாதாரம் (கலப்புத்துவம்)


கலப்புப் பொருளாதார அமைப்பு முறையில், தனியார் மற்றும் பொதுத்துறைகள் இணைந்து பொருளாதார மேம்பாட்டிற்காகப் பணியாற்றும். இம்முறை முதலாளித்துவம், சமத்துவம் ஆகியவற்றின் கலவையாகும். முதலாளித்துவம் மற்றும் சமத்துவ பொருளாதார அமைப்பு முறைகளின் தீமைகளை களைய இம்முறை உதவும். இப்பொருளாதார அமைப்பு முறைகளில் தனியார்களும் அரசும் வளங்களைக் கொண்டிருப்பர். இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் ஆகிய நாடுகள் கலப்புப் பொருளாதார நாடுகளின் உதாரணங்கள் ஆகும்.


கலப்பு பொருளாதார அமைப்பின் தன்மைகள்


1. சொத்து, உற்பத்திச் சாதனங்களின் உரிமம் (Ownership of Property and Means of Production)

உற்பத்திச் சாதனங்களும் சொத்துக்களும் பொதுத்துறைக்குச் சொந்தமாக இருக்கும். பொதுத்துறையும் தனியார்துறையும் வளங்களைக் கொள்முதல் செய்யவும், பயன்படுத்தவும் அல்லது மாற்றவும் உரிமை கொண்டிருக்கும்.


2. பொது மற்றும் தனியார் துறைகள் இணைந்திருக்கும் (Coexistence of Public and Private Sectors)

கலப்புப் பொருளாதாரங்களில் தனியார், பொதுத்துறைகள் இரண்டும் இணைந்திருக்கும். தனியார் தொழிற்சாலைகள் இலாபத்திற்காகவே நடவடிக்கைகளை மேற்கொள்ளும். சமூக நலனை உச்சப்படுத்துவதற்காக பொதுத்துறை நிறுவனங்கள் அரசின் வசம் இருக்கும்.


3. பொருளாதாரத் திட்டமிடல் (Economic Planning)

மைய திட்டமிடல் அதிகாரம் பொருளாதாரத் திட்டங்களைத் தயாரிக்கும். அரசினால் தயாரிக்கப்படும் தேசிய திட்டங்களை தனியார் துறையும் பொதுத்துறையும் மதித்து பின்பற்றும். பொதுவாக, திட்டத்தில் வரையறுக்கப்பட்ட நோக்கங்கள், முன்னுரிமைகள், இலக்குகள் அடிப்படையில்தான் எல்லாத்துறைகளும் இயங்கும்.


4. பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு (Solution to Economic Problems)

எதனை உற்பத்தி செய்வது? எப்படி உற்பத்தி செய்வது? யாருக்காக உற்பத்தி செய்வது? மற்றும் எப்படிப் பகிர்ந்தளிப்பது போன்ற அடிப்படைப் பிரச்சினைகளை விலை இயக்க முறை (Price mechanism) மற்றும் அரசின் தலையீட்டின் (Government Intervention) மூலம் தீர்க்கப்படும்.


5. சுதந்திரமும் கட்டுப்பாடும் (Freedom and Control)

வளங்களை உரிமை கொண்டாடவும், பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்து பகிரவும் தனியாருக்குச் சுதந்திரம் இருந்தாலும்கூட, அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தக் கட்டுப்பாடும் அரசிடமே காணப்படும்.


கலப்புத்துவத்தின் நன்மைகள்


1. அதிவேகப் பொருளாதார வளர்ச்சி (Rapid Economic Growth)

கலப்புப் பொருளாதாரத்தின் சிறந்த நன்மை அதிக வேக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதாகும். இவ்விதம், பொதுத் தேவைகளும், தனியாரின் தேவைகளும் சந்திக்கப்படுகின்றன.


2. சமமான பொருளாதார வளர்ச்சி (Balanced Economic Growth)

பொருளாதாரத்தின் சமநிலை வளர்ச்சியை கலப்புத்துவம் ஊக்குவிக்கிறது. இது வேளாண்மை மற்றும் தொழில், நுகர்வுப் பண்டங்கள் மற்றும் மூலதனப் பண்டங்கள், கிராமம் மற்றும் நகரம் ஆகியவற்றிடையே சமமான வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.


3. வளங்களைச் சரியாக பயன்படுத்துதல் (Proper Utilization of Resources)

ஒரு கலப்புப் பொருளாதாரத்தில், வளங்களின் சரியான பயன்பாட்டை அரசு உறுதிப்படுத்தலாம். அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை நேரடியாகக் கட்டுப்படுத்தும். மேலும் தனியார் துறையை மறைமுகமாகக் கட்டுப்படுத்தும்.


4. பொருளாதாரச் சமத்துவம் (Economic Equality)

அரசு வருவாய் வரியை விதிப்பதற்கு வளர்வீத வரிமுறையைப் பயன்படுத்தி பொருளாதார சமத்துவத்தை கொண்டு வருகிறது .


5. சமூகத்துக்கு சிறப்பு நன்மைகள் (Special Advantages to the Society)

குறைந்தபட்சக் கூலிகள் மற்றும் பகிர்வு முறைச் சட்டங்கள், நியாயவிலைக் கடைகளை ஏற்படுத்துதல், மற்றும் சமூக நல நடவடிக்கைகளை உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் தொழிலாளர்கள், நலிவடைந்த பிரிவினரின் ஆர்வங்களை அரசு பாதுகாக்கும்.


கலப்பு பொருளாதார அமைப்பின் தீமைகள் (Demerits of Mixedism) 


1. ஒருங்கிணைப்பு இல்லாமை (Lack of Coordination) 

கலப்புத்துவத்தின் மிகப்பெரிய குறைபாடு பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததாகும். இவ்விரண்டு துறைகளும் வேறுபட்ட நோக்கங்களுடன் செயல்படுவதால் ஒருங்கிணைப்புத் தொடர்பான பிரச்சினைகள் உருவாகின்றன.


2. போட்டி மனப்பான்மை (Competitive Attitude)

அரசு மற்றும் தனியார் துறைகள் சமூகத்தின் நலனுக்காக இணைந்து செயலாற்றும் மனப்பான்மையுடன் இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் நடைமுறையில் இவ்விரண்டு துறைகளும் அவற்றின் நடவடிக்கைகளில் போட்டித் தன்மையுடனேயே நடந்துகொள்கின்றன.


3. திறமையின்மை (Inefficiency)

மந்தமான அதிகாரமுறை, சிவப்புநாடாமுறை, ஊக்கமின்மை ஆகியவற்றால் பொதுத்துறை நடவடிக்கைகளில் பெரும்பாலானவை திறனற்றவைகளாகவே இருக்கின்றன.


4. தேசியமாக்கல் பற்றிய பயம் (Fear of Nationalization)

கலப்புப் பொருளாதார அமைப்பில், தேசியமயமாக்குதல் பற்றிய பயம் தனியார் துறைகளில் காணப்படுவதால், தனியார் தொழில்முனைவோர்கள் அவர்களின் வாணிப நடவடிக்கைகளையும், புத்தாக்க முயற்சிகளையும் சுருக்கி விடுகின்றனர்.


5. விரிவடையும் சமத்துவமின்மை (Widening Inequality)

வளங்களின் உரிமை, பரம்பரைச் சட்டங்கள், மக்களின் இலாப நோக்கம் ஆகியவை பணக்காரர், ஏழைகளிடையே இடைவெளியை விரிவடையச் செய்கின்றன.

இறுதியாக, முதலாளித்துவத்தின் சமத்துவமின்மையும், சமதர்மத்தின் திறமையின்மையும் கலப்புப் பொருளாதாரத்தில் காணப்படுகின்றன.


பொருளாதார அமைப்புகளை ஒப்பிடுதல்




Tags : Economics பொருளாதாரம்.
12th Economics : Chapter 1 : Introduction to Macro Economics : Economic Systems Economics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 1 : பேரியல் பொருளாதாரம் : பொருளாதார அமைப்பு முறைகள் - பொருளாதாரம் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 1 : பேரியல் பொருளாதாரம்