பொருளாதாரம் - தேவை நெகிழ்ச்சி | 11th Economics : Chapter 2 : Consumption Analysis

   Posted On :  26.07.2022 07:46 pm

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 2 : நுகர்வு பகுப்பாய்வு

தேவை நெகிழ்ச்சி

விலையில் ஏற்பட்ட மாற்றத்தால் தேவையில் ஏற்படும் மாற்றத்தை தேவை விதி விளக்குகிறது.

தேவை நெகிழ்ச்சி

விலையில் ஏற்பட்ட மாற்றத்தால் தேவையில் ஏற்படும் மாற்றத்தை தேவை விதி விளக்குகிறது. விலையில் ஏற்படும் மாற்றம் எந்த அளவு தேவையில் மாற்றத்தைக் கொணர்கிறது என்பதை தேவை நெகிழ்ச்சி காட்டுகிறது.

"தேவை நெகிழ்ச்சி" என்ற கருத்துருவின் மூலம், குறிப்பிட்ட விலை மாற்றத்திற்கு தேவை அளவில் ஏற்படும் பதில் மாற்ற விகிதம் விளக்கப்படுகிறது என ஸ்டோனியர் மற்றும் ஹேக் கூறுகின்றனர்.

நெகிழ்ச்சியுள்ள தேவை அல்லது மிகை நெகிழ்ச்சியுள்ள தேவை


சிறிய விலை குறைவினால் ஒரு பண்டத்தின் தேவை மிக அதிக அளவில் உயர்வதும்; சிறிய விலை உயர்வினால் மிக அதிக அளவில் தேவை குறைவதும் நெகிழ்ச்சியுள்ள தேவை அல்லது மிகை நெகிழ்ச்சியுள்ள தேவை என அழைக்கப்படுகின்றன.


1. தேவை நெகிழ்ச்சியின் வகைகள்


1. விலைத் தேவை நெகிழ்ச்சி

விலைத் தேவை நெகிழ்ச்சி பொதுவாக தேவை நெகிழ்ச்சி என்றே அழைக்கப்படுகிறது. ஏனெனில் தேவையைத் தீர்மானிக்கும் காரணிகளில் விலையே மிக முக்கிய காரணி ஆகும். "விலையில் ஏற்பட்ட மாற்றத்துக்கு தேவை அளவில் ஏற்படும் பதில் மாற்ற விளைவையே தேவை நெகிழ்ச்சி" என்கிறோம். வேறுவகையில் கூறினால்

விலைத் தேவை நெகிழ்ச்சி (EP) = தேவை அளவில் ஏற்பட்ட மாற்ற விகிதம் /விலையில் ஏற்பட்ட மாற்ற விகிதம் 

கணித முறைப்படி,

Ep = ΔQ / ΔP × P / Q

ΔQ = மாறிய தேவை அளவு 

ΔP = மாறிய விலை 

P = ஆரம்ப விலை 

Q = ஆரம்ப தேவை

இங்கு , ΔQ = Q1 –Q0, ΔP = P1 – P0 

Q1= புதிய தேவை அளவு, 

Q0= ஆரம்ப தேவை அளவு, 

P1 = புதிய விலை , 

P0 =ஆரம்ப விலை

2. வருமானத் தேவை நெகிழ்ச்சி 

பண்டத்தின் தேவையைத் தீர்மானிப்பதில் வருமானமும் ஒரு காரணி ஆகும். "வருமானத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் தேவையில் ஏற்படும் பதில் மாற்ற விகித அளவே வருமானத் தேவை நெகிழ்ச்சி" ஆகும். 

வருமானத் தேவை நெகிழ்ச்சி கணக்கிடும் முறை

EY      =    பண்டத்தின் தேவை அளவில் ஏற்படும் விகிதாசார மாற்றம் / வருமான அளவில் ஏற்படும் விகிதாசார மாற்றம்

பெரும்பான்மையான பண்டங்களுக்கு வருவாய் தேவை நெகிழ்ச்சி ஒன்றுக்கு அதிகமாக காணப்படும். அதாவது, தேவையில் ஏற்படும் விகிதாச்சார மாற்றம் வருமானத்தில் ஏற்படும் விகிதாச்சார மாற்றத்தை விட அதிகமாக இருக்கும். வருவாயும், தேவையும் நேர் விகிதத்தில் மாற்றம் காணும். அதாவது வருமானம் அதிகரித்தால் தேவையும் அதிகரிக்கும்; வருமானம் குறைந்தால் தேவையும் குறையும். தரம் தாழ்ந்ததாக கருதப்படும் பொருட்களின் தேவை விலை உயரும்போது குறையலாம்.

3. குறுக்குத் தேவை நெகிழ்ச்சி

ஒரு பண்டத்தின் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றொரு பண்டத்தின் தேவையில் மாற்றத்தை ஏற்படுத்தும். இம்மாற்றங்களின் விளைவை அளப்பது குறுக்குத் தேவை நெகிழ்ச்சி ஆகும். இவ்வகையான நெகிழ்ச்சி வழக்கமாக ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பண்டங்களில் ஏற்படும். (உ.ம்.) பதிலீட்டுப் பண்டங்கள், உடனுறு பண்டங்கள். X மற்றும் Y-க்கிடையேயோன குறுக்குத் தேவை நெகிழ்ச்சியினைக் கீழ்வருமாறு குறிப்பிடலாம்.

Ec       X பண்டத்தின் தேவை அளவில் ஏற்படும் விகிதாசார மாற்றம் / Y பண்டத்தின் விலையில் ஏற்படும் விகிதாச்சார மாற்றம்

4. விளம்பரத் தேவை நெகிழ்ச்சி

விளம்பரத்தினாலோ அல்லது பிற வியாபாரத்தை உயர்த்தும் செலவுகளாலோ தேவையில் மாற்றம் ஏற்பட்டால் அதை விளம்பரத் தேவை நெகிழ்ச்சி என்று அழைக்கிறோம்.

Ea        = தேவை அளவில் ஏற்படும் விகிதாச்சார மாற்றம் / விளம்பர செலவில் ஏற்படும்  விகிதாச்சார மாற்றம்


2. விலைத் தேவை நெகிழ்ச்சி அளவுகள்

விலையில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக தேவையில் ஏற்படும் மாற்றம் விலைத் தேவை நெகிழ்ச்சியாகும்.

1. முற்றிலும் நெகிழ்ச்சியுள்ள தேவை (Ep = )


விலையில் சிறிய மாற்றம் உள்ளபோது அல்லது விலையில் மாற்றமே இல்லாதபோது தேவையில் பெரிய அளவு மாற்றமோ அல்லது முடிவில்லா மாற்றமோ ஏற்பட்டால் அதை முற்றிலும் நெகிழ்ச்சியுள்ள தேவை என்கிறோம். இப்படிப்பட்ட தேவைக் கோடு படுக்கை கோடாக X அச்சுக்கு இணையாக இருக்கும். வரைபடம் 2.9ல் இது விளக்கப்பட்டுள்ளது.

2. முற்றிலும் நெகிழ்ச்சியற்ற தேவை (Ep=0)


விலையில் ஏற்படும் சிறிய அல்லது பெரிய மாற்றம் தேவையில் எந்தவித மாற்றத்தையும் உண்டாக்கவில்லை எனில் அது முற்றிலும் நெகிழ்ச்சியற்ற தேவை எனப்படும். இங்கு தேவைக் கோடானது y அச்சுக்கு இணையாக செங்குத்துக் கோடாக இருக்கும். வரைபடம் 2.10ஐப் பார்க்கவும்.

வரைபடத்தில் விலை P1, P2 மற்றும் P3 ஆக மாறினாலும் தேவை அளவு மாற்றமில்லாமல் OQ அளவில் இருக்கிறது. அப்படியானால் முற்றிலும் நெகிழ்ச்சியற்ற தேவையாகும்.

3. மிகைத் தேவை நெகிழ்ச்சி (Ep>1)


விலையில் ஏற்பட்ட மாற்ற விகிதத்தைவிட தேவை மாற்ற விகிதம் அதிகமாக இருந்தால் அதனை மிகைத் தேவை நெகிழ்ச்சி என்கிறோம். இங்கு தேவைக் கோடு மெதுவாகச் சரிகிறது.

வரைபடம் 2.11 ஐப் பார்க்கவும். இதில் விலையானது ₹10 -லிருந்து 9ஆக குறைந்துள்ளது, இது 10% குறைவு ஆகும். தேவை 5 லிருந்து 10 ஆக உயர்கிறது, இது 100% உயர்வாகும். எனவே, இவ்வரைபடம் மிகைத் தேவை நெகிழ்ச்சியைக் காட்டுகிறது.

4. குறைவான நெகிழ்ச்சியுள்ள தேவை / குறைத் தேவை நெகிழ்ச்சி (Ep<1)


விலையில் ஏற்பட்ட பெரிய சதவீத மாற்றம் தேவையில் சிறிய சதவீத மாற்றத்தை ஏற்படுத்துமாயின் அதை குறைத்தேவை நெகிழ்ச்சி என்கிறோம் அல்லது ஒன்றுக்கு குறைவான நெகிழ்ச்சி என்றும் அழைக்கிறோம். இங்கு தேவைக்கோடு வேகமாக சரிகிறது. இங்கு விலை OP1 லிருந்து OP2 ஆக அதிக அளவில் குறையும்போது தேவை OQ0 லிருந்து OQ1 வரை குறைந்த அளவே அதிகரித்திருக்கிறது. 

5. அலகுத் தேவை நெகிழ்ச்சி (Ep=1)


விலையில் ஏற்படும் சதவீத மாற்ற அளவு அதே சமஅளவு சதவீத மாற்றத்தினை தேவையில் தோற்றுவிக்குமானால் அதனை அலகுத்தேவை நெகிழ்ச்சி என்கிறோம். இங்கு தேவைக்கோடு செவ்வக அதிபரவளையமாக (Rectangular Hyperbola) உள்ளது. ஒன்றுக்குச் சமமான பகுதியை இது குறிக்கிறது.

இங்கு OP0R0Q0 = OP1R1Q1.

மேலே குறிப்பிடப்பட்டவை விலைத் தேவை நெகிழ்ச்சியின் சில வகைகளாகும். தேவையின் வகைகளைப் பொறுத்து ஒரு நிறுவனம் தன் பண்டத்திற்கான விலையைத் தீர்மானிக்க வேண்டியுள்ளது. அதற்கு இவை உதவி புரிகின்றன. விலை மாற்றத்திற்கேற்ப எவ்வாறு தனிநபர் தன் தேவையை மாற்றிக் கொள்கிறார் என்பதைப் பொறுத்து நிறுவனம் விலையை நிர்ணயிக்க வேண்டியுள்ளது.



3. தேவை நெகிழ்ச்சியைத் தீர்மானிப்பவைகள்

தேவை நெகிழ்வின் அளவைப் பல காரணிகள் நிர்ணயிக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 

அ. பதிலீட்டுப் பொருட்கள்

ஒரு பொருளுக்கு பல பதிலீட்டுப் பொருட்கள் இருந்தால், அப்பொருளின் விலைத் தேவை நெகிழ்வு மிக அதிகமாக இருக்கும். அந்தப் பொருளின் விலை அதிகரித்தால், மக்கள் அதனுடைய பதிலீட்டுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள். எனவே விலை சிறிது உயர்ந்தால் கூட, அப்பொருளின் தேவை வெகுவாகக் குறைந்து விடும். இங்கு விலைத் தேவை நெகிழ்வு மிக அதிகம். எ.கா. காய்கறிகள்.

உப்புக்கு நெருங்கிய பதிலீட்டுப் பொருட்கள் இல்லை. எனவே உப்பின் விலை உயர்ந்தாலும் தேவை அந்த அளவு குறையாது. பதிலீடுகள் இல்லாத உப்பு போன்ற பொருட்களின் விலைத்தேவை நெகிழ்ச்சி மிகவும் குறைவு. 

ஆ. நுகர்வோரின் வருமானத்தின் எவ்வளவு செலவு செய்யப்படுகிறது.

ஒரு பொருளின் மீது (x) நுகர்வோரின் குறைவான விகிதாச்சார வருமானம் செலவு செய்யப்பட்டால் அப்பொருளின் (x) தேவை நெகிழ்வு மிக குறைவாக இருக்கும். உதாரணத்திற்கு உப்பை எடுத்துக் கொள்ளலாம். உப்புக்காக செலவு செய்யப்படும் வருமானம் பங்கு மிகக் குறைவே. அப்படியானால், உப்பின் விலைத் தேவை நெகிழ்வும் மிக குறைவாகவே இருக்கும்.

இ. ஒரு பொருளின் பயன்கள்

ஒரு பொருளின் பயன் மிக அதிகமாக இருப்பின், அப்பொருளின் விலைத் தேவை நெகிழ்வும் மிக அதிகமாக இருக்கும். எடுத்துக்காட்டாக பால். பாலின் விலை சிறிது குறைந்தாலும், பாலை வைத்து மோர், தயிர், நெய், பாயாசம் ஆகியவற்றை உருவாக்கலாம். தேவை மிக அதிகமாகிவிடும். எனவே, பாலின் விலைத் தேவை நெகிழ்வு அதிகமாக இருக்கும். 

ஈ. இணைப்புப் பொருட்கள் 

வாகனம் வைத்திருப்போர் பெட்ரோலும், மசகு எண்ணையையும் (Lubricating oil) அதிகம் பயன்படுத்துவர். மசகு எண்ணெய் விலை மட்டும் அதிகரிப்பின் அதன் தேவை குறைவதில்லை . ஏனெனில் அதன் பயன்பாடு பெட்ரோலுடன் இணைந்ததாகும். 

உ. காலம்

நீண்ட காலத்தில் பெரும்பாலான பொருட்களுக்கு விலைத் தேவை நெகிழ்ச்சி அதிகமாக இருக்கும். ஏனெனில் நீண்ட காலத்தில் பல பதிலீட்டுப் பண்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கும். எனவே குறுகிய காலத்தைவிட நீண்டகாலத்தில் நெகிழ்ச்சி அதிகமாக இருக்கும். குறுகிய காலத்தில் பதிலீட்டுப்பொருட்களை கொண்டுவருவது கடினமாக இருக்கும்.


4. தேவை நெகிழ்ச்சியை அளவிடும் முறைகள்

விலைத் தேவை நெகிழ்ச்சியை மூன்று வகைகளில் அளவிடலாம்.

1. விழுக்காட்டு முறை

Ep   = ΔQ/ΔP x P/Q 

இது விகிதாசார முறை என்றும் அழைக்கப்படுகிறது.

விகிதாச்சார முறையில்

Ep = %ΔQ / %ΔP

இதில்

%ΔQ என்பது தேவையில் ஏற்படும் சதவீத மாற்றம்

%ΔP என்பது விலையில் ஏற்படும் சதவீத மாற்றம்.

2. மொத்தச் செலவு முறை

நுகர்வோரின் மொத்தச் செலவில் ஏற்படும் மாற்றத்தையோ அல்லது நிறுவனத்தின் மொத்த வருவாயில் ஏற்படும் மாற்றத்தையோ அளவிடுவதன் மூலம் தேவையானது நெகிழ்ச்சி உள்ளதா நெகிழ்ச்சியற்றதா என்பதை எளிய முறையில் அறியமுடியும் என மார்ஷல் குறிப்பிடுகிறார்.

மொத்த வருவாய் =  விலை X விற்பனை அளவு

TR = P X Q


விலைக்கும் மொத்தச் செலவிற்கும் எதிர்மறை உறவு இருக்குமெனில் இங்கு தேவை நெகிழ்ச்சியுள்ளதாக இருக்கும்; நேரடி உறவு எனில் நெகிழ்ச்சியற்றதாக இருக்கும். மொத்தச் செலவில் மாற்றமில்லாதபோது நெகிழ்ச்சி ஒன்றுக்குச் சமமாக இருக்கும். 

3. புள்ளி அல்லது வடிவியல் முறை

நேர் தேவைக் கோட்டில் குறிப்பிட்ட புள்ளியினுடைய வலப்பகுதியை இடப்பகுதியால் வகுக்கக் கிடைக்கும் விகிதத்தைக் கொண்டு புள்ளி முறையில் நெகிழ்ச்சியை அளவிடலாம்


புள்ளி நெகிழ்ச்சி = தேவைக் கோட்டில் புள்ளிக்கு கீழ்ப்பகுதியின் அளவு (வலது பகுதி) / தேவைக்கோட்டில் புள்ளிக்கு மேல்பகுதி (இடது பகுதி)

e= L / U = கீழ்ப்பகுதி / மேல்பகுதி

இங்கு ep என்பது புள்ளி நெகிழ்ச்சி, L என்பது கீழ்ப்பகுதி, U என்பது மேல்பகுதி.


5. தேவை நெகிழ்ச்சியின் முக்கியத்துவம்

தேவை நெகிழ்ச்சி என்ற கருத்து நடைமுறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

1. விலைத் தீர்மானம்

நிறைகுறைப் போட்டியிலும் முற்றுரிமையிலும் விற்பனையாளர்கள் தங்களுடைய பண்டத்தின் விலையைத் தீர்மானிப்பதில் தேவை நெகிழ்ச்சி என்ற கருத்தை அடிப்படையாக கொள்கின்றனர். பண்டத்திற்கான தேவை நெகிழ்ச்சியற்றதாக இருக்கும்போது அவர்கள் அதிக விலையை நிர்ணயிக்கிறார்கள்.

2. உற்பத்தி

ஒரு பண்டத்தின் தேவையின் அடிப்படையில் உற்பத்தியாளர்கள், உற்பத்தியின் அளவைத் தீர்மானிக்கிறார்கள்.

3. பகிர்வு

தேவை நெகிழ்ச்சியினைப் பொறுத்து உற்பத்திக் காரணிகளின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 

4. பன்னாட்டு வாணிபம்

இரண்டு நாடுகளிடையே வாணிப நிலையை நிர்ணயிக்க தேவை நெகிழ்ச்சி உதவிகரமாக உள்ளது. இரண்டு நாடுகளின் பண்டங்களின் தேவை நெகிழ்ச்சியைப் பொருத்தே ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் அளவு அமைகிறது. 

5. பொதுநிதி

அரசாங்கம் வரிக்கொள்கையை உருவாக்க தேவை நெகிழ்ச்சி உதவிகரமாக உள்ளது. ₹ (உ.ம்.) பண்டங்களுக்கான வரிவிதிப்பு.

6. நாட்டுடமையாக்குதல்

தொழிற்சாலைகளை நாட்டுடமையாக்கும் முடிவை எடுப்பதற்கு அரசிற்கு தேவை நெகிழ்ச்சி என்ற கருத்து பயன்படுகிறது.


Tags : Economics பொருளாதாரம்.
11th Economics : Chapter 2 : Consumption Analysis : Elasticity of Demand Economics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது பொருளாதாரம் : அத்தியாயம் 2 : நுகர்வு பகுப்பாய்வு : தேவை நெகிழ்ச்சி - பொருளாதாரம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது பொருளாதாரம் : அத்தியாயம் 2 : நுகர்வு பகுப்பாய்வு