Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் தலைமை மற்றும் தனித்தொகுதிகளின் உருவாக்கம்

காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் - வரலாறு - டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் தலைமை மற்றும் தனித்தொகுதிகளின் உருவாக்கம் | 12th History : Chapter 4 : Advent of Gandhi and Mass Mobilisation

   Posted On :  09.07.2022 04:36 am

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 4 : காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் தலைமை மற்றும் தனித்தொகுதிகளின் உருவாக்கம்

1920 களில் ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டங்களின் மையப்புள்ளியாக டாக்டர் அம்பேத்கர் விளங்கினார்.

டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் தலைமை மற்றும் தனித்தொகுதிகளின் உருவாக்கம்

1920களில் ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டங்களின் மையப்புள்ளியாக டாக்டர் அம்பேத்கர் விளங்கினார். நாட்டின் மையப்பகுதியில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சாதியாகக் கருதப்பட்ட மஹர் சாதியில் ராணுவ வீரரின் மகனாகப் பிறந்த டாக்டர் அம்பேத்கர் அவரது சாதியில் பத்தாம் வகுப்பை நிறைவு செய்த முதலாமவராகத் திகழ்ந்தார்.

அம்பேத்கரின் கல்வியும் அவர் பெற்ற பட்டங்களும்

எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்த அம்பேத்கர் கல்வி உதவித்தொகை பெற்று 1912இல் பட்டதாரி ஆனார். பரோடா அரசரின் கல்வி உதவித்தொகை பெற்ற அவர் அமெரிக்கா சென்று பட்டமேற்படிப்புப் பட்டத்தையும், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். சட்டம் மற்றும் பொருளாதார படிப்புக்களுக்காக அவர் லண்டன் சென்றார்.

அம்பேத்கரின் அறிவாற்றல் பலரது கவனத்தை ஈர்த்தது. 1916இல் மானுடவியல் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு இந்தியாவின் சாதிகள்' (Castes in India) என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பித்தார். இந்தக் கட்டுரை பின்னர் அரிய இந்தியப் புத்தகம்' (Indian Antiquary) என்ற தொகுப்பில் பதிப்பிக்கப்பட்டது. இந்தியாவில்

ஒடுக்கப்பட்டோரிடையே திறமையுடையோரைத் தேடி வந்த பிரிட்டிஷ் அரசு இந்திய வாக்காளர்களுக்கு வாக்குரிமை பெற வயது மற்றும் தகுதி பற்றி தகவல் சேகரித்து வந்த சவுத்பொரோ குழுவுடன் கலந்துரையாட வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தது.

இந்தக் கலந்துரையாடல்களின் போதுதான் அம்பேத்கர் முதன்முறையாக தனித் தொகுதிகள் பற்றி பேசினார். தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதிகள் மற்றும் இடங்கள் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று வாதிட்டார். இந்தத் திட்டத்தின்படி தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் மட்டுமே அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வாக்களிக்க முடியும். தேர்தலில் போட்டியிடும் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வேட்பாளர் தீண்டத்தக்க வாக்காளர்களைச் சார்ந்திருக்க நேரிட்டால், வாக்களிக்கும் பின்னவருக்குக் கடமைப்பட்டவராகவும் அவர் மாறவேண்டிய நிலைமை ஏற்படும் என்று அம்பேத்கர் கருதினார். அவர்கள் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் நலனுக்காகச் சுதந்திரமாகப் பணியாற்ற முடியாத நிலைமை ஏற்படும் என்றும் அவர் நினைத்தார். இட ஒதுக்கீடு பெறப்பட்ட இடங்களில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தால் அவர்கள் தங்களின் உண்மையான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க முடியும்.

அம்பேத்கரின் தீவிரச் செயல்பாடு


அம்பேத்கர் புதிய பத்திரிக்கைகள் மற்றும் அமைப்புகளைத் தோற்றுவித்தார். மூக் நாயக் (வாய்பேச முடியாதவர்களின் தலைவர்) என்ற பத்திரிக்கை தனது கருத்துகளை வெளிப்படுத்துவதற்காகவும் பஹிஷ்கிரித் ஹிடாகரினி சபை (தனித்துவிடப்பட்டவர்களின் நலனுக்கான அமைப்பு) என்ற அமைப்பைத் தனது செயல்பாடுகளுக்காகவும் அவர் தொடங்கினார். பம்பாய் சட்டப்பேரவையின் உறுப்பினராக அவர் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் மீது விதிக்கப்பட்ட திறன் குறைபாடுகளைக் களைவதற்காக அயராது பாடுபட்டார். ஊருணிகள் மற்றும் கிணறுகளில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தரவேண்டிய அடிப்படை உரிமைகளை மீட்டுத்தர மஹத் சத்தியாகிரகம் என்ற அமைப்பைத் தொடங்கினார். அம்பேத்கரின் அறிவாற்றல் மற்றும் பொதுநடவடிக்கைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் காலனி ஆதிக்க ஆட்சியின் அதிகாரிகளைக் குறிவைத்து அவரது நேரடித் தாக்குதல்கள் இருந்தன. இதனிடையே காங்கிரஸ் கட்சி மற்றும் காந்தியடிகளின் கீழ் சுதந்திரப் போராட்டம் ஒரு முடிவெடுக்கும் கட்டத்தை எட்டியது. பூரண சுதந்திரம் அல்லது முழுமையான விடுதலை என்பதற்காகப் போராடுவதைக் குறிக்கோளாக அறிவிக்கும் இறுதி நிலையைச் சுதந்திரப் போர் அடைந்தது.

தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் பெறுவதில் அம்பேத்கர்

சுதந்திர இந்தியாவில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்காலம் குறித்து அம்பேத்கர் பெரிதும் கவலை அடைந்தார். காங்கிரசின் கட்டுப்பாட்டில் சாதி இந்துக்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என அவர் கவலையடைந்தார். அனைத்துக் கட்சி மாநாடுகள், சைமன் குழு, வட்டமேசை மாநாடு என அனைத்து இடங்களிலும் தனித் தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தினார். தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் தருவது தேசிய இயக்கத்தை மேலும் வலுவிழக்கச் செய்யும் என்று காங்கிரசும் காந்தியடிகளும் கவலைப்பட்டனர். முஸ்லிம்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியர்களுக்குத் தனித்தொகுதிகள் மற்றும் இதர சிறப்பு நலன்கள் ஆகியன பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கையை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வழியமைக்கும் என்று அவர்கள் வருத்தப்பட்டனர். தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களை இந்துக்களில் இருந்து அரசியல் ரீதியாகப்பிரிப்பது சமூகப்பாதிப்புகளை உருவாக்கும் என்று காந்தியடிகள் அச்சப்பட்டார்.


வகுப்புவாரி தொகுதி ஒதுக்கீடு

லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகக் காந்தியடிகள் மற்றும் அம்பேத்கர் செல்வதற்கு முன் அவர்கள் இடையே தனித்தொகுதிகள் பற்றிய கருத்தில் நடந்த பேச்சுகள் தோல்வி அடைந்தன. வட்ட மேசை மாநாட்டின் போது இருதலைவர்கள் இடையே இதே கருத்துக் குறித்து விவாதம் நடந்தது. பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்டு இதில் தலையிட்டு முடிவெடுக்க வேண்டும் என்று இந்த கருத்தில் முடிவு எட்டப்படாமல் இருந்தது. ஆகஸ்ட் 1932இல் வகுப்புவாரித் தொகுதி ஒதுக்கீடுகள் குறித்து பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. இவ்வாறாக இட ஒதுக்கீட்டுடன் கூடிய தனித்தொகுதிகள் பற்றிய அம்பேத்கரின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.

பூனா ஒப்பந்தம்

தீண்டத்தகாதோருக்குத் தனித் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதைத் தனது வாழ்நாள் முழுவதும் எதிர்க்கப்போவதாக மிகவும் வருத்தத்துடன் காந்தியடிகள் அறிவித்தார். தான் அடைக்கப்பட்ட எரவாடா சிறையில் அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முயன்றார். காந்தியடிகளின் உயிரைக் காப்பாற்றும் அழுத்தம் அம்பேத்கருக்கு ஏற்பட்டது. ஆலோசனைகள், கூட்டங்கள், பிரார்த்தனைகள் அனைத்தும் நடத்தப்பட்டன. அதன் விளைவாகக் காந்தியடிகளுடன் சிறைச்சாலையில் நடந்த சந்திப்புக்குப் பிறகு வகுப்புவாரித் தொகுதி ஒதுக்கீடு திருத்தப்பட்டது. அம்பேத்கர் மற்றும் காந்தியடிகளுக்கு இடையே ஏற்பட்ட புதிய ஒப்பந்தம் பூனா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது.

தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகளைப் பறித்துக்கொண்டாலும் இடங்களின் ஒதுக்கீடு குறித்து உத்தரவாதமளிக்கப்பட்டது. இடஒதுக்கீடு பெற்ற தொகுதிகள் என்ற சட்ட அம்சம் அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டு திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனத்திலும் இது இடம்பெற்றது.

அம்பேத்கரும் கட்சி அரசியலும்

அம்பேத்கர் இரண்டு கட்சிகளை ஆரம்பித்தார். சுதந்திர தொழிலாளர் கட்சியை 1937-லும் பட்டியல் இனத்தவர் கூட்டமைப்பை 1942-லும் அவர் தொடங்கினார். அவரது போராட்டங்களை அங்கீகரித்த காலனி அரசு தனது ஆதரவை சமன்படுத்த அம்பேத்கரின் சேவைகளைப் பயன்படுத்தியது. 1942ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறை ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக

அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். சில மாதங்களுக்குப் பிறகு அரசப்பிரதிநிதியின் (வைசிராய்) அமைச்சரவையில் அமைச்சராக இடம்பிடித்தார்.

நாட்டுக்கு அவர் ஆற்றிய சேவைகளுக்கு மகுடம் சூட்டும் விதமாக சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசன வரைவுக் குழுவின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதந்திரம் பெற்ற பிறகு நேரு அமைச்சரவையில் அவர் அமைச்சராக இடம் பெற அழைக்கப்பட்டார்.

Tags : Advent of Gandhi and Mass Mobilisation | History காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் - வரலாறு.
12th History : Chapter 4 : Advent of Gandhi and Mass Mobilisation : Emergence of Dr. B.R. Ambedkar and the Separate Electorates Advent of Gandhi and Mass Mobilisation | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 4 : காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் : டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் தலைமை மற்றும் தனித்தொகுதிகளின் உருவாக்கம் - காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 4 : காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்