Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | அவைதீகச் சிந்தனையாளர்களின் தோற்றம்

வரலாறு - அவைதீகச் சிந்தனையாளர்களின் தோற்றம் | 11th History : Chapter 3 : Rise of Territorial Kingdoms and New Religious Sects

   Posted On :  14.05.2022 06:04 am

11 வது வகுப்பு : அலகு 3 : பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்

அவைதீகச் சிந்தனையாளர்களின் தோற்றம்

பொது ஆண்டுக்கு முந்தைய ஆறாம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் வட இந்தியா கவனிக்கத்தக்க அறிவுமலர்ச்சியைச் சந்தித்தது. இம்மலர்ச்சி இந்தியா முழுவதிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

அவைதீகச் சிந்தனையாளர்களின் தோற்றம்

பொது ஆண்டுக்கு முந்தைய ஆறாம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் வட இந்தியா கவனிக்கத்தக்க அறிவுமலர்ச்சியைச் சந்தித்தது. இம்மலர்ச்சி இந்தியா முழுவதிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்குப் பிந்தைய நூற்றாண்டுகளிலும் இந்தியாவின் பண்பாட்டில் இத்தாக்கம் தொடர்ந்தது. அறிவுமலர்ச்சி தெற்காசியா முழுவதும் பரவியது. ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வந்த தத்துவத்தைச் சில அவைதீகச் சிந்தனையாளர்கள் கேள்விக்கு உட்படுத்தியதன் விளைவாக இத்தகைய அறிவு மலர்ச்சி தோன்றியது. இக்காலகட்டத்தில் தான் கோசலர், கௌதம புத்தர், மகாவீரர், அஜித கேசகம்பளி முதலான பல்வேறு மாறுபட்ட சிந்தனையாளர்கள் இவ்வுலக இன்பங்களைத் துறந்து, அன்று நிலவி வந்த சமூக, பண்பாட்டுச் சூழல் குறித்து ஆழ்ந்த சிந்தனைகளுடன் கங்கைச் சமவெளிகளில் திரிந்து வந்தனர். இத்தகைய துறவிகள் கங்கைச் சமவெளி முழுவதும் குறுக்கும் நெடுக்குமாகப் பயணம் செய்வதும் புதிய கருத்துகளைப் எடுத்துரைப்பதும் அவற்றை ஆதரிப்பதும் வழக்கமாக இருந்தன. இத்துறவிகளின் போதனைகள் புதிய ஆட்சிமுறைகள், நகர மையங்களின் உருவாக்கம், கைத்தொழில்கள், தொலைதூர வணிகத்தின் வளர்ச்சி ஆகியவற்றால் மிகவிரைவாக மாறிக்கொண்டிருந்த சமூகத்தின் தேவைகளைப் பேசின. இந்த அறிவுமலர்ச்சி வாதிகள் வேதக் கருத்தாக்கங்களான ஆன்மா, மனம், உடல் ஆகியவற்றைக் கேள்விக்குள்ளாக்கினார்கள். அதன்வழியாக, புதிய மதங்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தார்கள். இவர்கள் அனைவரும் வேத மதத்தைக் கேள்விக்குள்ளாக்கினாலும், அவர்களுக்குள்ளும் போட்டிகள் நிலவின. காலப்போக்கில் இவற்றில் பௌத்தமும் சமணமும் மிகப் பிரபலமான மதங்களாக உருவாகின.

அறிவுமலர்ச்சிக்கான காரணங்கள்

பொ..மு. ஆறாம் நூற்றாண்டு, தீவிரமான அறிவுசார் எழுச்சியின் காலமாகும். இவ்வெழுச்சிக்குப் பல காரணங்கள் உள்ளன.

1. அரசுருவாக்கமும், வேத மதத்தின் கடுமையும் சிந்தனை மற்றும் செயலுக்கான சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தின. மத நம்பிக்கைகளுக்கு எதிரான கிளர்ச்சியாக அவைதீகக் கோட்பாடுகள் உருவாகின.

"மக்களின் அறிவுசார் ஆர்வத்தை அடக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, அவர்களின் மனம் அதற்கு எதிராகக் கிளர்ச்சி செய்கிறது. இத் தவிர்க்கமுடியாத எதிர்வினைகள் எல்லாவிதமானமுறைசார்ந்த அதிகாரங்களையும் பொறுத்துக்கொள்ள இயலாத தன்மையாக வெளிப்படுகிறது. அது சடங்குரீதியான மதத்தின் கட்டுப்பாட்டால் காலம்காலமாக ஒடுக்கப்பட்ட வாழ்விலிருந்து ஆவேசமாக - விடுபடும் உணர்வாக உள்ளது” - இந்தியத் தத்துவ மேதை மேனாள் குடியரசுத்தலைவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்

2. பிரதேச அடையாளங்களின் தோற்றம் சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களை உந்தித்தள்ளியது. ஏற்கெனவே நிலவிய சமூக அமைப்பைப் பற்றிய கற்பனைகளில் இருந்து வெளிவந்து அதிருப்தியுடன் இருந்த மேட்டுக்குடி மக்கள் அவற்றை எதிர்த்து மகதம் அல்லது மத்திய கங்கைச் சமவெளிகளில் செழித்து வளர்ந்து வந்த அவைதீக மதங்களை நோக்கி நகர்ந்தார்கள்.

3. வேத மதம் சமூகத்தின் அனைத்துப் பகுதியினரிடமும் ஊடுருவியிருக்கவில்லை . எனவே புதிதாக உருவாகி வந்த மதங்களைப் பின்பற்றுவது மக்களுக்குக் கடினமானதாக இல்லை.

4. நகரமயமாக்கம், வணிக விரிவாக்கம் ஆகியவற்றின் காரணமாக வணிகர்கள், சேத்கள் (seths) போன்ற வங்கியாளர்கள் என ஒரு புதிய வர்க்கம் உருவானது. இது தமது பொருளாதாரத் தகுதி நிலைக்கு இணையான சமூகத் தகுதிநிலையைக் கோரியது.

5. ஆசிரமங்களாகப் பிரிக்கப்பட்ட வாழ்க்கை முறை பிராமணர்களுக்கு மட்டுமே வேதங்களில் அனுமதிக்கப்பட்டிருந்தது. அவ்வுரிமை தங்களுக்கு அனுமதிக்கப்பட வில்லை என்பது சத்திரியர்களின் மனக்குறையாக இருந்தது.

அவைதீக மதங்கள்

ஓரிடத்தில் நிலைகொள்ளாமல் திரிந்த துறவிகளும், போதகர்களும் பல சீடர்களை ஈர்த்து பல்வேறு மதப்பிரிவுகளை உருவாக்கினார்கள். வைதீக அறவொழுக்கத்தை மறுத்தல் (அறவொழுக்கத்தை வலியுறுத்தும் சட்டங்களை மதிப்பதற்கான தேவையை இறையாற்றல் நீக்கிவிட்டது என்ற நம்பிக்கை), பொருள்முதல்வாதம், ஊழ்வினைக் கோட்பாடு ஆகியவற்றை இவர்களுடைய தத்துவங்கள் சார்ந்திருந்தன. இவை சனாதன வேதமதத்தை எதிர்த்த அவைதீக மதங்கள். இவற்றில் பல மதங்கள் அக்காலகட்டத்தில் நடைமுறைக்கு வந்தன. சமனபலசுத்தா என்ற பௌத்த நூல் அஜாதசத்ரு என்ற பேரரசர் பௌத்த மதத்தைத் தோற்றுவித்த கௌதம புத்தரைச் சந்தித்தது பற்றிக் குறிப்பிடுகிறது. அதில் இந்தச் சந்திப்பிற்கு முன், மற்ற பல்வேறு மதப்பிரிவுகளின் தலைவர்களான புராண கசபர். மக்காலி கோசலர், அஜிதகேச் கம்பளி, பகுத கச்சாயனர், சஞ்சய பெலதிபுத்தர், நிகந்த நடபுத்தர் (மகாவீரர்) ஆகியோரோடும் அஜாதசத்ரு தத்துவ விவாதங்கள் செய்ததாகக் குறிப்பிடுகிறது. இவர்கள்நீண்டகாலமாக வீடற்று சுற்றித் திரிந்தவர்கள்’ (சிர - பப்பாஜிதோ), மதங்களை உருவாக்கியவர்கள் (தீத்தகரோ), தங்களுடைய நெறிமுறைகளின் தலைவர்கள் (ஞானாசாரியோ) என்று குறிப்பிடப்படுகிறார்கள். இந்தப் பிரிவுகள் பௌத்தத்தின் முக்கியப் போட்டி மதங்களாகும். இவை எதுவும் அஜாதசத்ருவிற்கு ஏற்றுக்கொள்ளத்தகுந்ததாக இருக்கவில்லை என்றும் பௌத்தம் மட்டுமே ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தது என்றும் குறிப்பிடப்படுகிறது.

Tags : History வரலாறு.
11th History : Chapter 3 : Rise of Territorial Kingdoms and New Religious Sects : Emergence of Heterodox Thinkers History in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு : அலகு 3 : பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும் : அவைதீகச் சிந்தனையாளர்களின் தோற்றம் - வரலாறு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு : அலகு 3 : பிரதேச முடியரசுகளின் தோற்றமும் புதிய மதப்பிரிவுகள் உருவாக்கமும்