Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | அகில இந்திய இந்து மகாசபையின் எழுச்சி

தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் - வரலாறு - அகில இந்திய இந்து மகாசபையின் எழுச்சி | 12th History : Chapter 6 : Communalism in Nationalist Politics

   Posted On :  12.07.2022 04:36 am

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 6 : தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்

அகில இந்திய இந்து மகாசபையின் எழுச்சி

அகில இந்திய முஸ்லிம் லீக் உருவாக்கப்பட்டதையும், 1909ஆம் ஆண்டு இந்தியக் கவுன்சில் சட்டம், அறிமுகப்படுத்தப்பட்டதையும் தொடர்ந்து ஒரு இந்து அமைப்பைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் பரவலாக எழுந்தது.

அகில இந்திய இந்து மகாசபையின் எழுச்சி

அகில இந்திய முஸ்லிம் லீக் உருவாக்கப்பட்டதையும், 1909ஆம் ஆண்டு இந்தியக் கவுன்சில் சட்டம், அறிமுகப்படுத்தப்பட்டதையும் தொடர்ந்து ஒரு இந்து அமைப்பைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் பரவலாக எழுந்தது. அம்பாலாவில் நடைபெற்ற ஐந்தாவது பஞ்சாப் இந்து மாநாட்டிலும், பெரோஷ்பூரில் நடைபெற்ற ஆறாவது மாநாட்டிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் தொடர்ச்சியாக 1915இல் இந்துக்களின் முதல் அகில இந்திய மாநாடு ஹரித்துவாரில் கூட்டப்பெற்றது. அங்குதான் டேராடூனைத் தலைமையிடமாகக் கொண்டு அகில இந்திய இந்து மகாசபை தொடங்கப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மாகாண இந்து சபைகள் அலகாபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஐக்கிய மாகாணத்திலும் பம்பாயிலும், பீகாரிலும் தொடங்கப்பெற்றன. பம்பாயிலும், பீகாரிலும் இவ்வமைப்புகள் திறம்பட செயல்படவில்லை. சென்னையிலும் வங்காளத்திலும் ஓரளவிலான ஆதரவேயிருந்தது.

நகர்ப்புற இயல்பினை அதிகம் கொண்டிருந்த இம்மகாசபை வட இந்தியாவின் பெரும் வணிக நகரங்களில், குறிப்பாக அலகாபாத், கான்பூர், பனாரஸ், லக்னோ , லாகூர் போன்ற நகரங்களில் வீரியத்துடன் செயல்பட்டது. ஐக்கிய மாகாணத்திலும் பீகாரிலும் பெரும்பாலும் படித்த இடைத்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த தலைவர்களால் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. இவர்கள் காங்கிரசிலும் திறம்படச் செயல்பட்டனர். வகுப்புவாதிகளின் பிரிவினைவாத அரசியலைக் கிலாபத் இயக்கம் ஓரளவுக்கு ஒத்தி போட்டது. இதன்விளைவாக 1920-1922 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்து மகாசபை செயல்படவில்லை .

அரசியலில் உலோமாக்கள் நுழைந்ததானது இந்துக்களிடையே ஆக்கிரமிப்புத் தன்மை கொண்ட, புத்துயிர் பெற்ற இஸ்லாமைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தியது. அலி சகோதரர்களைப் போன்ற முக்கிய முஸ்லிம் தலைவர்கள் கூட எப்போதும் கிலாபத் இயக்கத்தவர்களாகவே இருந்தனர். அடுத்தபடியாகத்தான் அவர்கள் காங்கிரஸ்காரர்களாய் இருந்தனர். கிலாபத் இயக்கத்தின் போது மத அடிப்படையில் மக்களைத் திரட்டும் பணியில் முஸ்லிம்கள் காட்டிய திறன், இந்துக்களை ஒன்று திரட்ட அதே பாணியைப் பின்பற்ற இந்து வகுப்பு வாதிகளைத் தூண்டியது. சுத்தி இயக்கம் ஒரு புதிய நிகழ்வாக இல்லாவிட்டாலும் கிலாபத் இயக்கத்திற்கும் பின்வந்த காலங்களில் அது புதிய முக்கியத்துவத்தைப் பெற்றது. 1921இல் வேல்ஸ் இளவரசரின் வருகையைப் புறக்கணிக்க மக்களைத் திரட்டுகையில், சுவாமி சிரத்தானந்தா பசுப்பாதுகாப்பைப் பரப்புரை செய்வதன் மூலம் இந்து மகாசபைக்கு புத்துயிர் அளிக்க முனைந்தார்.

முதல் உலகப்போருக்கு முன்னர் கலீஃபா, காபா (இஸ்லாமியச் சமயத்தின் புனிதமான இடம்) ஆகியவற்றின் நலன்களைப் பாதுகாப்பதாக இங்கிலாந்து வாக்குறுதி வழங்கியிருந்தது. ஆனால் முதல் உலகப்போரில் துருக்கியின் தோல்விக்குப் பின்னர் அவ்வாக்குறுதியை நிறைவேற்ற மறுத்துவிட்டது. திகைத்துப்போன முஸ்லிம் சமூகத்தினர் ஆங்கிலேயருக்குத் தங்கள் கோபத்தைக் காட்டவும், துருக்கியின் கலீஃபாவை பாதுகாக்கவும், கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினர்.

1921இல் நடைபெற்ற குருதி ட் கொட்டிய மலபார் கிளர்ச்சியின் போது அங்கு முஸ்லிம் விவசாயிகள் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் இந்து நிலப்பிரபுக்களுக்கு GHTNEET எதிராகவும் களமிறங்கியது இந்து மகா சபை தன்னுடையப் பிரச்சாரத்தை புதுப்பிக்க காரணமாயிற்று. அடிப்படையில் அது ஒரு விவசாயக் கிளர்ச்சியாக இருந்தாலும் தீவிர மத உணர்வுகள் கோலோச்சின. இதன் விளைவாக காந்தியடிகளே இந்நிகழ்வை இந்து முஸ்லிம் மோதலாகவே மதிப்பிட்டார். மலபாரில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு முஸ்லிம் தலைவர்கள் பொது மன்னிப்பு கேட்க வேண்டுமென காந்தியடிகள் கோரிக்கை விடுத்தார்.


 

அ) ஐக்கிய மாகாணத்தில் வகுப்புவாதம்

1922இல் ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்டதும், 1924இல் கலீஃபா பதவி ஒழிக்கப்பட்டதும் முஸ்லிம்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஒத்துழையாமை இயக்கத்தின் பின் விளைவாகக் காங்கிரசுக்கும் கிலாபத்துக்கும் இடையேயான உறவு சிதைந்தது. 1919ஆம் ஆண்டுச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சுயாட்சி நிறுவனங்களில் தங்கள் அரசியல் கோரிக்கைகளுக்காக இந்துக்களும் முஸ்லிம்களும் போட்டியிட்டனர் அதிகாரத்திற்கும் பதவிகளுக்குமான இப்போட்டியின் விளைவாக புதிதாக வகுப்பவாத வன்முறைகள் பெருகின. ஆகஸ்ட் 1923இல் வாரணாசியில் நடைபெற்ற இந்து மகாசபையின் ஆறாவது மாநாட்டில் 968 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்களில் 56.7 விழுக்காட்டினர் ஐக்கிய மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். ஐக்கியமாகாணம், பஞ்சாப், டெல்லி, பீகார் ஆகியவை 86.8 விழுக்காட்டுப் பிரதிநிதிகளை அனுப்பி வைத்தன. சென்னை பம்பாய், வங்காளம் ஆகிய மூன்றும் 6.6 விழுக்காடு பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பி வைத்தன. 1920கள் காங்கிரசிற்கு சோதனைகள் மிகுந்த காலமாகும். இம்முறை ஐக்கிய மாகாணத்தில் ஏற்பட்ட வகுப்புவாதப் பதட்டத்திற்கு இந்து முஸ்லிம் தலைவர்களின் மத ஈடுபாடு மட்டும் காரணமல்ல. சுயராஜ்யவாதிகளுக்கும் தாராளவாதிகளுக்குமான (Liberal Party) அரசியல் போட்டிகளும் தூண்டுகோலாய் அமைந்தன.

 

அலகாபாத்தில் மோதிலால் நேருவும் மதன் மோகன் மாளவியாவும் ஒருவரையொருவர் எதிர்த்தனர். 1923இல் நடைபெற்ற நகரசபைத் தேர்தலில் மோதிலால் நேருவின் குழுவினர் வெற்றி பெற்றதால், மாளவியாவின் அணியினைச் சேர்ந்தோர் மத உணர்வுகளைச் சுயநலத்திற்குப் பயன்படுத்தத் தொடங்கினர். விசாரணை மேற்கொண்ட மாவட்ட நீதிபதி குரோஸ்த்வெயிட் மாளவியாவின் குடும்பத்தார் வேண்டுமென்றே இந்துக்களைத் தூண்டிவிட்டனர். இச்செயல் முஸ்லிம்களின் மீது எதிர்வினையாற்றியது எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


ஆ) இந்து மகாசபை

வகுப்புவாதம் பஞ்சாபில் ஒரு வலுவான இயக்கமாக முழுமையாக நிலை கொண்டது. 1924இல் பஞ்சாப் மாகாணம் இந்து, முஸ்லிம் மாகாணங்களாகப் பிரிக்கப்பட வேண்டுமென லாலா லஜபதி ராய் வெளிப்படையாகக் கூறினார். அரசியல் களத்தில் இந்துமத மறுமலர்ச்சிக்கு ஆதரவான சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்துமகாசபை அகண்ட இந்துஸ்தான் என்னும் முழக்கத்தை முன் வைத்தது. இது முஸ்லிம் லீக்கின் தனித்தொகுதிக் கோரிக்கைக்கு எதிராக வைக்கப்பட்டதாகும். இந்து மகாசபை நிறுவப்பட்டதிலிருந்து சுதந்திரப் போராட்டத்தில் அதன் பங்கு முரண்பட்டதாகவே இருந்தது. ஆங்கிலேய ஆட்சியை ஆதரிக்காத இந்து மகாசபை, அதே நேரத்தில் தேசிய இயக்கத்திற்கும் தனது முழுமையான ஆதரவை நல்கவில்லை.

அந்நிய மேலாதிக்கத்திற்கு எதிராக அனைத்து வர்க்கங்களின், சமூகங்களின் ஆதரவைத் திரட்ட வேண்டிய அவசியம் காங்கிரசுக்கு இருந்தது. ஆனால் பல்வேறு சமூகங்களின் தலைவர்களால் சமய உணர்வுமிக்கக் குழுவினரின் ஆதரவை இழக்க நேரிடும் எனும் அச்சத்தின் காரணமாக சமயச் சார்பின்மை எனும் கோட்பாட்டை வலியுறுத்த முடியவில்லை . இக்காலகட்டத்தில் காந்தியடிகளின் தலைமையில் காங்கிரஸ் பல ஒற்றுமை மாநாடுகளை நடத்திய போதிலும் அவற்றால் பயன்களேதும் ஏற்படவில்லை .

 

இ) முஸ்லிம்களின் டெல்லி மாநாடும் அவர்களின் புதிய கருத்துருக்களும்

1927 மார்ச் 20இல் டெல்லியில் முஸ்லிம்களின் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டின் நிகழ்வுகள் ஒற்றுமைக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் உன்னத வெளிப்பாடாய் அமைந்தது. மாநாடு முன்வைத்த நான்கு கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால், தனித்தொகுதிக்கோரிக்கையை தாங்கள் கைவிடுவதாக முஸ்லிம்கள் அறிவித்தனர். அந்நான்கு கோரிக்கைகள் வருமாறு 1. பம்பாயிலிருந்து சிந்துப் பகுதியைத் தனியாகப் பிரிப்பது 2. பலுச்சிஸ்தானையும் அதன் எல்லைகளையும் சீர்திருத்துவது 3. பஞ்சாபிலும் வங்காளத்திலும் மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவம் 4. மத்திய சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு 33 விழுக்காடுகள் இட ஒதுக்கீடு.

டெல்லி முஸ்லிம் மாநாடு வடிவமைத்த புதிய கருத்துக்களை ஒப்புக்கொள்ளும்படி மோதிலால் நேருவும் எஸ். ஸ்ரீனிவாசனும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை வற்புறுத்தினர். ஆனால் வகுப்புவாத உணர்வுகள் மிகவும் ஆழமாக வேர்விட்டிருந்ததால் இம்முன் முயற்சிகள் தோல்வியடைந்தன. இந்து முஸ்லிம் பிரச்சனை மனிதர்களின் கைகளைத் தாண்டிச் சென்றுவிட்டதாகக் காந்தி கருத்துக் கூறினார். இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி இச்சிக்கலைத் தீர்க்கத் தவறிய காங்கிரஸ், பிரச்சனையை நீட்டிக்கும் விதமாக இரண்டு குழுக்களை அமைத்தது. பம்பாயிலிருந்து சிந்துவை பிரிப்பது நிதியாதார அடிப்படையில் இயலும் என்பதைக் கண்டறிய ஒரு குழு, முஸ்லிம் பெரும்பான்மையைப் பாதுகாக்கும் ஒரு உத்தியாக விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் குறித்து ஆய்வு மேற்கொள்ள மற்றொரு குழு என இரு குழுக்கள் அமைக்கப்பெற்றன. இரு பிரிவினருக்குமிடையே ஏற்பட்டிருந்த விரிசலைச் சுருக்குவதற்கான முயற்சிகளை ஜின்னா மேற்கொண்டிருந்தார். அவர் இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் தூதுவர் என சரோஜினியால் புகழாரம் சூட்டப்பெற்றவராவார். ஆனால் 1928இல் கல்கத்தாவில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இந்து மகாசபையின் உறுப்பினர்கள் திருத்தங்கள் அனைத்தையும் ஒப்புக்கொள்ள மறுத்து, ஒற்றுமைக்கான வாய்ப்புகள் அனைத்தையும் அழித்தபோது ஜின்னா, தான் கைவிடப்பட்டதாக வேதனையுற்றார். இதன் பின்னர் பெரும்பான்மையான முஸ்லீம் தலைவர்கள் காங்கிரஸிலிருந்து சிறப்பு சலுகைகளைப் பெறுவதைவிட ஆங்கிலேயஅரசாங்கத்தை நாடுவது சாலச் சிறந்தது என உறுதியாக நம்பினர்.

பிரிவினைவாத தேசியத்தின் வளர்ச்சி குறித்த தனது மன வேதனையை காந்தி பின்வருமாறு வெளிப்படுத்தினார்: தனிமனிதர்களின் எண்ணிக்கையைப் போலவே பல மதங்கள் உள்ளன." ஆனால் தேசியத்தின் ஆன்மா குறித்த விழிப்புணர்வுள்ளவர்கள் மற்றவர்களின் மதங்களில் தலையிடமாட்டார்கள். இந்தியாவிலுள்ள அனைவரும் இந்துக்களாக மட்டுமே இருக்க வேண்டுமென இந்துக்கள் நம்பினால் அவர்கள் கனவுலகில் வாழ்கிறார்கள் என்றே பொருள். தங்கள் நாட்டை உருவாக்கிய இந்துக்கள், சீக்கியர்கள், முகமதியர்கள், பார்சிகள், கிறித்துவர்கள் ஆகிய அனைவரும் நாட்டின் சக மனிதர்களே. தங்களுடைய நலன்களுக்காக அவர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்தாக வேண்டும். உலகத்தின் எந்தவொரு பகுதியிலும் ஒரு நாட்டுரிமையும் ஒரு மதமும் ஒரே பொருளைத் தருகிற வார்த்தைகளாக இல்லை. இந்தியாவில் அவ்வாறு எப்போதுமே இருந்ததில்லை.



ஈ) வகுப்புவாதத் தீர்வும் அதன் பின் விளைவுகளும்

பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதில் ஆங்கில அரசு உறுதியாய் இருந்தது. இரண்டாவது வட்டமேஜை மாநாட்டுப் பிரதிநிதிகள் வகுப்புவாத அடிப்படையில்தான் தேர்வு செய்யப்பட்டனர். வட்ட மேஜை மாநாடுகளின் தோல்விக்குப் பின்னர் இங்கிலாந்து பிரதமர் ராம்சே மெக்டொனால்டு வகுப்புவாதத் தீர்வை அறிவித்தார். அது அரசியல் சூழலை மேலும் சீர்குலைத்தது.


1925இல் உருவாக்கப்பட்ட ராஷ்ட்ரிய சுயசேவா சங்கம் விரிவடைந்து கொண்டிருந்தது. அதன் உறுப்பினர் எண்ணிக்கை 1,00,000 மாக உயர்ந்த து. K.B.ஹெட்கேவர், V.D. சவார்க்கர், M.S. கோல்வாகர் ஆகியோர் இந்து ராஷ்டிரா எனும் கோட்பாட்டை மேலும் விரிவாக்கம் செய்யும் முயற்சிகளை மேற்கொண்டனர். இந்துஸ்தானிலுள்ள இந்துக்கள் அல்லாத மக்கள் இந்து பண்பாட்டையும் மொழியையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்." அவர்கள் அந்நியர்களாக இருப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் அல்லது இந்து தேசத்திற்குக் கீழ்ப்படிந்தவர்களாகவும் உரிமை கோராதவர்களாகவும் இருத்தல் வேண்டும் என்று அவர்கள் வெளிப்படையாகவே கூறினர். இந்துக்கள் ஆகிய நாங்கள் நாங்களாகவே ஒரு தேசமாக உள்ளோம் என V.D.சவார்க்கர் உறுதிபடக் கூறினார். 1934 முதலாகவே தனது உறுப்பினர்கள் இந்து மகாசபையிலோ ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திலோ இணைவதைக் காங்கிரஸ் தடை செய்தது. ஆனால் டிசம்பர் 1938இல் தான் காங்கிரஸ் செயற்குழு இந்து மகாசபையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் காங்கிரசில் உறுப்பினர்களாக இருக்கத் தகுதி இல்லாதவர்கள் என அறிவித்தது.

Tags : Communalism in Nationalist Politics | History தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் - வரலாறு.
12th History : Chapter 6 : Communalism in Nationalist Politics : Emergence of the All India Hindu Mahasabha Communalism in Nationalist Politics | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 6 : தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் : அகில இந்திய இந்து மகாசபையின் எழுச்சி - தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 6 : தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்