Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | வங்காளத்தில் பாலர்கள் ஆட்சியின் தோற்றம்

வரலாறு - வங்காளத்தில் பாலர்கள் ஆட்சியின் தோற்றம் | 11th History : Chapter 8 : Harsha and Rise of Regional Kingdoms

   Posted On :  18.05.2022 05:36 am

11 வது வகுப்பு வரலாறு : அலகு 8 : ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

வங்காளத்தில் பாலர்கள் ஆட்சியின் தோற்றம்

கௌட வம்சத்து அரசனான சசாங்கன் பொ.ஆ. 590-625 ஆண்டுகளுக்கு இடையில் வங்காளத்தை ஆண்டதாக நம்பப்படுகிறது.

வங்காளத்தில் பாலர்கள் ஆட்சியின் தோற்றம்

கௌட வம்சத்து அரசனான சசாங்கன் பொ.. 590-625 ஆண்டுகளுக்கு இடையில் வங்காளத்தை ஆண்டதாக நம்பப்படுகிறது. பழங்கால வங்காளத்தை ஆண்ட முக்கியமான அரசரும் அவரே. கௌட அரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் மைய அதிகாரம் என்று ஏதும் இருக்கவில்லை. அதன் விளைவாகச் சிறு குடித்தலைமை அரசர்களுக்கிடையில் அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. எனவே, பொ.. 750ஆம் ஆண்டில் அவர்கள் குழு ஒன்று கூடி தமக்கு அரசராக கோபாலர் என்ற சத்திரியத் தலைவரை நியமிப்பது எனத் தீர்மானித்தனர். இவர் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதற்கு ஒரு கதை உள்ளது. இதற்கு முன் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொன்ற அரக்கியைக் கொலை செய்யும் ஆற்றல் அவருக்கு உண்டு என்பதாலேயே கோபாலர் தேர்ந்தெடுக்கப்பட்டாராம். கோபாலரின் முன்னோர் எவரும் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. ஆனாலும், அவர் தமக்கென ஒரு ராஜ்யத்தை அமைத்துக்கொள்வதில் வெற்றி கண்டார். கோபாலரின் அரசியல் அதிகாரம் சிறிய குறுநில அரசர்களால் விரைவில் அங்கீகரிக்கப்பட்டது. அவரது அரசு வங்கம் () கிழக்கு வங்காளத்தில் அமைந்திருந்தது.

ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பனிரெண்டாம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை பாலர்கள் பாடலிபுத்திரத்தைத் தலைநகரமாகக் கொண்டு கிழக்கு இந்தியாவை ஆண்டனர். அவர்களது நாட்டில் சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி ஆகிய மொழிகள் பயன்பாட்டில் இருந்தன. பாலர்கள் புத்த மதத்தின் மகாயான பிரிவைப் பின்பற்றினர்.

பாலர் வம்சத்து ஆட்சியாளர்கள்

முதலாம் கோபாலருக்கு அடுத்து அவரது மகன் தர்மபாலர் (பொ.. 770-815) ஆட்சிக்கு வந்தார். அவர் பாலர் ராஜ்யத்தை மதிக்கத் தக்க ஒன்றாக உருவாக்கினார். வங்காளமும் பீகாரும் அவரது நேரடி ஆட்சிக்குட்பட்டிருந்தன. கன்னோசி அவர் நியமனம் செய்த ஒருவரால் ஆளப்பட்டது. பஞ்சாப், ராஜஸ்தான், மாளவம், பீரார் ஆகிய பகுதிகளின் ஆட்சியாளர்கள் அவரது ஆட்சித் தலைமையை ஏற்றுக்கொண்டனர். அவர் பரமேஷ்வரர், பரமபட்டாரகா, மகாராஜாதிராஜா ஆகிய பட்டங்களை ஏற்றார்.

தர்மபாலர் பௌத்த மதத்தின் பெரும் ஆதரவாளராக இருந்தார். அவர் பீகாரில் பாகல்பூர் மாவட்டத்தில் விக்ரமசீலா எனும் பௌத்த மடாலயத்தை நிறுவினார். அது பௌத்த மதக் கொள்கைகளையும் பண்பாட்டையும் போதிக்கும் சிறந்த மையமாக உருவானது. அவர் சோமபுரியில் (தற்போதைய பாகர்பூர், வங்காள தேசத்தில்) பெரிய பௌத்த விகாரம் ஒன்றையும் கட்டினார். தர்மபாலர் பீகாரில் உள்ள ஒதாண்டபுரியில் ஒரு பௌத்த மடாலயத்தையும் கட்டினார். ஹரிஷ்பத்ரர் என்ற பௌத்த மத எழுத்தாளரையும் ஆதரித்தார்.

பாலர்களின் ஆட்சியை கிழக்கில் காமரூபம் (அஸ்ஸாம்) வரை தர்மபாலரின் மகன் தேவபாலர் விரிவுபடுத்தினார். ராஷ்டிரகூடர்களைத் தமது பொது எதிரியாகக் கருதிய அரசுகளை எல்லாம் ஓரணியாகத் திரட்டி ராஷ்டிரகூட அரசனான அமோகவர்ஷர் மீது போர்தொடுத்து வென்றார். தேவபாலரும் பௌத்த மதத்திற்குப் பெரும் ஆதரவாளராக விளங்கினார். சுவர்ணதீபத்தை (சுமத்ரா) ஆண்ட சைலேந்திர வம்சத்து அரசரான பாலபுத்ரதேவரால் நாளந்தாவில் கட்டப்பட்ட பௌத்த மடாலயத்தைப் பராமரிப்பதற்காக ஐந்து கிராமங்களை தேவபாலர் கொடையாக வழங்கினார். அவரது ஆட்சியில் நாளந்தா பெளத்த மதக் கொள்கைகளைப் போதிக்கும் முதன்மையான மையமாகத் தழைத்தோங்கியது.

தேவபாலருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த விக்ரம் பாலர் சில ஆண்டுகள் ஆட்சி புரிந்த பின்னர் அரியணையைத் துறந்து துறவறத்தை மேற்கொண்டார்.விக்ரமபாலரின் மகனான நாராயணபாலரும் சாந்தமான சுபாவம் கொண்டவராகவும் மதம் சார்ந்த மனப்போக்கு கொண்டவராகவும் விளங்கினார். ராஷ்டிரகூடர்களும் பிரதிகாரர்களும் இதனைத் தமக்குச் சாதகமான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு பாலர்களை வீழ்த்தினர். ஜலோரில் மிகிரபோஜரின் தலைமையில் பிரதிகாரர்களின் எழுச்சியும், பாலர்களின் ஆட்சிப் பகுதிக்குள் ராஷ்டிரகூடர்களின் ஆக்கிரமிப்பும் தவிர்க்கவியலாத நிலையில் பாலர்களுக்கு வீழ்ச்சியைக் கொண்டு வந்தன. அதுவரை பாலர்களுக்கு ஆதரவளித்து வந்த குறுநில அரசர்களும் சுயேச்சையாக இயங்கத் தொடங்கினர்.

அடுத்து வந்த ராஜ்யபாலர், மூன்றாம் கோபாலர், இரண்டாம் விக்ரமபாலர் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் பாலர் வம்சத்தின் வீழ்ச்சி மேலும் வேகம் பெற்றது. எனினும் இரண்டாம் விக்ரம் பாலரின் மகனான முதலாம் மஹிபாலரால் பாலர் வம்சத்தின் பெயர் ஓரளவு மீட்டெடுக்கப்பட்டது. பொ.. 1020-1025 ஆண்டுகளுக்கிடையில் தென்பகுதியைச் சேர்ந்த சோழ மன்னர் இராஜேந்திர சோழன் வட இந்தியாவிற்குப் படையெடுத்துச் சென்றது மஹிபாலரின் காலத்தில் மிக முக்கியமான நிகழ்வாகும். எனினும் இராஜேந்திர சோழனின் படையெடுப்பு கங்கையைக் கடக்க முடியாதபடி முதலாம் மஹிபாலரால் தடுக்கப்பட்டது.

மகிபாலரின் பதினைந்து ஆண்டு கால ஆட்சிக்குப் பின்னர் நான்கு திறமையற்ற ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்தனர். பாலர் வம்சத்தின் இழந்து போன மகத்துவத்தை மீட்டெடுக்க முயன்ற கடைசி அரசர் ராமபாலர். அவர் ஐம்பத்து மூன்று ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவரது மறைவிற்குப் பின்னர் பாலர் வம்சத்தின் இருப்பு மகதத்தின் (பீகார்) ஒரு பகுதியில் மட்டுமே என்று ஆனது. அதுவும் குறுகிய காலத்திற்கே நீடித்தது. அதே காலத்தில் வடக்கு வங்காளத்தில் வல்லமை மிக்கவராக உருவாகியிருந்த சேனர் வம்சத்து அரசர் விஜயசேனர் கடைசி ஆட்சியாளரான மதனபாலரை (பொ.. 1130-1150) ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு, தான் சார்ந்த சேனர் வம்சத்து ஆட்சியை நிறுவினார்.

மதம்

பாலர் வம்சத்து அரசர்கள் பௌத்த மதத்தின் மகாயானப் பிரிவை ஆதரித்தனர். பௌத்த மத தத்துவ ஞானியான ஹரிபத்ரர் பாலர்களின் ராஜ்யத்தை நிறுவிய தர்மபாலருக்கு ஆன்மீக குருவாக விளங்கினார். வங்காளம் பெளத்த மடாலயங்களின் இருப்பிடங்களுள் ஒன்றாக விளங்கியது. வணிகர்களும் கைவினைஞர்களும் பெருமளவில் இஸ்லாம் மதத்திற்கு மாறியதின் காரணமாகப் பாலர்களின் அரசும், பௌத்த மதமும் வீழ்ச்சியைச் சந்தித்தன.


கலையும் கட்டிடக் கலையும்

திமான், அவரது மகனான விடபாலர் ஆகிய இரு கலைஞர்களும் பாலர்களின் காலத்தினர். அவர்கள் இருவரும் பெரும் ஓவியர்களாகவும், சிற்பக் கலைஞர்களாகவும், வெண்கலச் சிலை வடிப்போராகவும் விளங்கினர். பாலர் ஆட்சிக் காலத்திய சிற்பக் கலை, குப்தர் காலத்துக் கலையின் தாக்கத்தைக் கொண்டிருந்தது. முதலாம் மகிபாலர் சாரநாத், நாளந்தா, புத்த கயா ஆகிய இடங்களில் புனித வழிபாட்டுத் தலங்களை உருவாக்கியதுடன் பலவற்றை சீரமைக்கவும் செய்தார். கோபாலர் ஒடாண்டபுரியில் (பீகார்) புகழ் பெற்ற பௌத்த மடாலயத்தை நிறுவினார். தர்மபாலர் விக்ரமசீலாவையும், சோம்புரத்தில் (வங்காள தேசம்) மகாவிகாரைகளையும் நிறுவினார்.


இலக்கியம்

அதிஷா, சரகர், திலோபா, தான்சில், தான்ஸ்ரீ, ஜினமித்ரர், முக்திமித்ரர், பத்மானவர், விராசன், சிலபத்ரர் ஆகியோர் விக்ரமசீலா, நாளந்தா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முக்கியமான அறிஞர்களாவர். பாலர் ஆட்சிக் காலத்தில் தோன்றிய தத்துவவியல் ஆக்கங்கள் கவுத் பாதரின் ஆகம சாஸ்திரம், ஸ்ரீதரபட்டரின் நியாய குண்டலி ஆகிய நூல்களை உள்ளடக்கியிருந்தன. சக்ரபாணி தத்தா, சுரேஷ்வர் கடதர வைத்தியா, ஜிமுடவாகனர் ஆகியோரால் பல மருத்துவ நூல்கள் இயற்றப்பட்டன. பாலர்கள் சமஸ்கிருத அறிஞர்களையும் ஆதரித்தனர். புத்தமதம் சார்ந்த பல தாந்திரீக நூல்கள் இயற்றப்பட்டு அவை சமஸ்கிருதத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டன. தாந்திரீகம் குறித்த மூல நூல்கள் பல்வேறுபட்ட இந்திய, திபெத்திய நூல்களால் ஆனவை. நாட்டுப் புறப் பாடல்களின் தொகுப்பானமகிபாலர் கீதங்கள்இன்றும் வங்காளத்தின் கிராமப் புறங்களில் செல்வாக்குப் பெற்று விளங்குகின்றன. ராமசரிதம் என்ற காவியத்தை சந்தியாகர் நந்தி இயற்றினார். பாலர் வம்சத்து அரசர் ராமபாலரின் வாழ்க்கை வரலாற்று நூலான இது, வனங்களில் வாழ்ந்த பழங்குடியினத் தலைவர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகளை அளிப்பதின் மூலம் அவர்கள் எவ்வாறு பாலர்களின் கூட்டணிக்குள் கொண்டு வரப்பட்டனர் என விளக்குகிறது.

Tags : History வரலாறு.
11th History : Chapter 8 : Harsha and Rise of Regional Kingdoms : Establishment of Pala Rule in Bengal History in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 8 : ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி : வங்காளத்தில் பாலர்கள் ஆட்சியின் தோற்றம் - வரலாறு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 8 : ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி