Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | இந்திய வெளியுறவுக் கொள்கையின் பரிணாம வளர்ச்சி (1947-54)
   Posted On :  04.04.2022 12:40 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 9 : இந்தியாவும் உலகமும்

இந்திய வெளியுறவுக் கொள்கையின் பரிணாம வளர்ச்சி (1947-54)

சுதந்திரத்திற்கு முன் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஆங்கிலேய அரசாங்கத்தின் பொறுப்பு மற்றும் கட்டுப்பாட்டில் இருந்தது.

இந்தியாவும் உலகமும்


கற்றலின் நோக்கங்கள்

* தற்கால உலகத்தில் இந்தியாவின் பங்கு பற்றி தெரிந்து கொள்வது. 

* வல்லரசுகளுடனான இந்தியாவின் கொள்கைகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.

* நவீன உலகத்தின் எதிர்கால லட்சியங்கள் பற்றி சிந்திப்பது.

* அணு ஆயுதக்கொள்கை மற்றும் அதனை அமைதி தேவைக்கு பயன்படுத்துவது பற்றி புரிந்து கொள்வது. 

* உலகமயமாதல் மற்றும் அதனுடைய விளைவுகள் இந்தியாவிலும் மற்றும் மூன்றாம் உலக நாடுகளிலும் ஏற்படுத்திய விளைவுகளை ஆராய்தல். 

* சுற்றுச்சூழல் மாறுபாடு, நீடித்த வளர்ச்சி மற்றும் இந்தியாவின் பங்கு ஆகியவற்றை புரிந்துக் கொள்ளுதல்.





இந்திய வெளியுறவுக் கொள்கையின் பரிணாம வளர்ச்சி (1947-54) 

சுதந்திரமும் பிரிவினையும்

சுதந்திரத்திற்கு முன் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஆங்கிலேய அரசாங்கத்தின் பொறுப்பு மற்றும் கட்டுப்பாட்டில் இருந்தது. இரண்டாம் உலகப்போரில் பிரிட்டனின் வெற்றிக்காக இந்தியா தேவையான அளவு மனித சக்தி மற்றும் இதர கருவிகளை பங்களித்தது. 1945ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் முடிந்து, 1947ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் இந்தியா ஆங்கிலேய அரசாங்கத்திடம் இருந்து விடுதலையடைந்தபின், இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை வடிவமைத்துக் கொண்டது. போருக்கு பின்னர் ஏற்பட்ட உலக அரசியல் நிகழ்வுகள் மற்றும் இந்தியாவின் சொந்த அரசியல் சூழல் போன்றவை வெளியுறவுக் கொள்கையினை வடிவமைத்தன.

உலக நாடுகள் ராணுவரீதியாக இரண்டு துருவங்களாக பிரிந்திருந்தன. அவை தங்களைப் பாதுகாப்பதற்காக ராணுவ கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டன. இரு ராணுவ கூட்டணிகளிலும் பல நாடுகள் இணைந்தன. இந்த இரு கூட்டணிகளும் ஒன்றையொன்று வெற்றிக்கொள்ள எடுத்த முயற்சிகளே பனிப்போர் என்றழைக்கப்படுகிறது. இரண்டு முகாம்களும் ராணுவங்களை கட்டியெழுப்ப பெருமளவு பணம் செலவழித்தாலும், பெரியளவிளான போர் தவிர்க்கப்பட்டது. மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவியது. புதிதாக விடுதலையடைந்த நாடுகள் இந்த இரண்டு இராணுவ முகாம்களின் சண்டைகளுக்கிடையே தங்களுடைய வளங்களை வீணாக்கிக் கொள்ளும் நிலையில் இல்லை. அந்நாடுகள் தங்களைக் கட்டமைப்பதற்கு அனைத்தையும் பாதுகாக்க வேண்டியிருந்தது. அதேநேரத்தில் இரண்டு வல்லரசுகளான அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே நடைப்பெற்ற கருத்து ரீதியான சண்டை பனிப்போரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. காலனியாதிக்கத்தின் பிடியில் இருந்து புதிய எல்லைகளுடன் தோன்றிய நாடுகளுக்கு உலகளாவிய அளவில் இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கியது. மேற்கத்திய சக்திகள் புதிய உலக ஒழுங்கமைப்பை ஏற்படுத்த வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில், கண்டங்களுக்கிடையே பெருமளவிலான மனித இடப்பெயர்வு நிகழ்ந்து கொண்டிருந்தது 1945ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அட்லாண்டிக் சாசனம் மூலம் ஐக்கிய நாடுகள் அமைப்பு தோன்றுவதற்கு உலக நாடுகள் முனைப்பாக இருந்தன.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வடிவமைக்கும் சிற்பியாக ஜவஹர்லால் நேரு இருந்தார். அப்போது உலகம் இருந்த நிலைமைகளில் உலக அமைதிக்கான தாக்கத்தைப் பற்றியும், ஒரு புதிய தேசத்தின் தேவைகளைப் பற்றியும் நேரு நன்கு உணர்ந்திருந்தார். புதிய இந்திய தேசத்தின் சமூகபொருளாதார மேம்பாடு, நவீனமயமாக்குதல், உலக அமைதி, போர் தவிர்ப்பு , பிற நாடுகளின் அமைதியான ஆக்கப்பூர்வமான உறவு, காலனியாதிக்கத்திலிருந்து ஆசிய ஆப்பிரிக்கா நாடுகளின் விடுதலை, ஐக்கிய நாடுகள் சபையை வலுப்படுத்துவது, பிற நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு ஆகிய இந்தியத் தேவைகளின் அடிப்படையில் நேருவின் அயல்நாட்டுக் கொள்கை உருவாக்கப்பட்டது.

1947ஆம் ஆண்டு இந்திய துணைக் கண்டத்தை பிரித்து, பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது. இந்த நிகழ்வானது மனித வரலாற்றில் பெருமளவு அகதிகள் புலம்பெயர்வதற்கு காரணமாக இருந்தது. இன்றுவரை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் காஷ்மீர் சிக்கலானது தொடர்ந்து அடிப்படை விஷயமாக இருந்து வருகிறது. இதுவே தொடர்ச்சியாக நான்கு போர்களுக்கு காரணமாகியது. 


பஞ்சசீலமும் - அணிசேரா இயக்கமும் (1954-1991)


தனது அண்டை நாடுகளுடன் நெருங்கிய நட்புறவை வளர்த்துக் கொள்வது மற்றும் பராமரிப்பது என்பதில் நேரு மிகவும் உறுதியாக இருந்தார். குறிப்பாக சீனாவுடனான உறவில், இரு நாடுகளும் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு பிணைப்பில் நீண்ட வரலாறு கொண்டிருப்பவையாகும். இது இந்திய-சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையே 1954ஆம் ஆண்டு நேரு மற்றும் சீன பிரதமர் சூ-யென்லாய்-வுடன் பஞ்சசீல ஒப்பந்தம் ஏற்படக் காரணமாகியது. பஞ்சசீலக் கொள்கையின் அடிப்படையில் இரு நாடுகளும் உறவுகளைப் பேணுவது என்று இரு நாட்டு தலைவர்களும் முடிவு செய்தனர்.

பஞ்சசீலக் கொள்கைகள்

·  இரு நாடுகளும் ஒன்றின் எல்லையை, இறையாண்மையை மற்றொன்று மதிப்பது 

·  ஆக்கிரமிப்பு செய்யாமை 

·  ஒவ்வொருவரின் உள் நாட்டு விவகாரங்களில் மற்றவர் தலையிடாமல் இருத்தல் 

·  தூதரக அளவிலான சமத்துவம் மற்றும் ஒத்துழைப்பு 

·  அமைதியுடன் இணைந்து வாழ்தல்


இந்த ஒப்பந்தங்கள் யாவும் இருந்த போதிலும், 1962ஆம் ஆண்டு இந்தியாவும்சீனாவும் எல்லை தொடர்பான விவகாரத்தின் மீது இறுதியாக போரில் குதித்தன. இந்த இரு நாடுகளுக்கிடையேயான எல்லை பிரச்சனை இந்த நாள் வரை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் மிகவும் முதன்மையாக உள்ளது. பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

பாண்டுங் மாநாடு

பாண்டுங் மாநாடு (இந்தோனேசியா) 1955ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 29 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு அணிசேரா இயக்கம் உருவாக்குவது பற்றி விவாதித்தனர்.

17 ஆண்டுகள் வெளியுறவு விவகாரத்தினை தனது பொறுப்பில் வைத்திருந்த பண்டித ஜவஹர்லால் நேரு (1947-64) பனிப்போரில் சிக்காமல், இந்தியாவுக்கென்று சொந்த வெளியுறவுக் கொள்கைப் பற்றி தெளிவாக இருந்தார். இந்த நிலைப்பாடு 1961ஆம் ஆண்டு அணிசேரா இயக்கம் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது. அணிசேரா இயக்கம் தோன்றுவதற்கு எகிப்தின் கமால் அப்துல் நாசர், கானாவின் குவாமி நிக்ருமா, இந்தோனேசியாவின் அகமது சுகர்னோ மற்றும் யூகோஸ்லேவியாவின் ஜோசிப் புரோஸ் டிட்டோ ஆகியோருடன் நேருவும் காரணமாவார். இதன் பொருள் நீதிக்கும் அநீதிக்குமான சண்டையில் யார் ஒருவரும் நடுநிலையோடு இருக்க முடியாது என்பதாகும். கூட்டு சேராமை என்பதன் பொருள் ராணுவ ரீதியாக எந்த ஒரு வல்லரசுகளுடனோ அல்லது ராணுவ முகாம்களுடனோ உடன்பாடு செய்துக் கொள்ளக் கூடாது என்பதாகும். ஆனால், நாடுகளுக்கிடையே உள்ள சிக்கலின் தன்மையின் அடிப்படையில் அமைதியான ஒத்துழைப்பு என்ற நோக்கத்துடன் தீர்மானிக்கும் சுதந்திரத்தை தக்கவைத்துக் கொள்வது அணிசேராமை ஆகும். இந்த சுதந்திரமான தெரிவு முறைதான் சீனாவுடனான போரின் போது மேற்கு உலக நாடுகளிடமிருந்து ஆயுதங்கள் கொள்முதல் செய்ய வைத்தது, மேலும் சோவியத் ஒன்றியத்துடன் தூதரக அளவிலான உடன்படிக்கையை 1971இல் வங்கதேச நாட்டுடனான போருக்கு முன்னர் செய்து கொள்ளவும் முடிந்தது.

அணிசேரா இயக்கம் தோன்றுவதற்க்கு முன்பாகவே இரண்டு வல்லரசு கூட்டணிகளுடனும் அணிசேர்க்கை கூடாது என்ற சிந்தனை இருந்தது. 1955 ஆம் ஆண்டு நடைபெற்ற பாண்டுங் ஆசிய-ஆப்ரிக்க மாநாடு அத்தகைய அணிசேரா கோட்பாட்டினைக் கொண்டிருந்தது, பின்னர் இதுதான் 1961ஆம் ஆண்டு அணிசேரா இயக்கத்திற்க்கு அடிப்படையாக அமைந்தது.

செயல்பாடு

வகுப்பறையில், உனது ஆசிரியரின் வழிகாட்டுதல்படி "பாண்டுங்கின் பத்து கொள்கைகள்" பற்றி விவாதிக்க.

ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டத்தில் காலனி ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர குரல் கொடுத்த நேரு, அணிசேரா இயக்கமே அமெரிக்க மற்றும் சோவியத் யூனியனின் ராணுவக் கூட்டமைப்புக்கு மாற்றாக புதிதாக சுதந்திரம் அடையும் நாடுகளுக்கு இருக்கும் என்ற தொலைநோக்குப் பார்வையை கொண்டிருந்தார். இதுவே அணிசேரா இயக்கத்தின் மையக் கருத்தாகும், பல புதிய நாடுகள் இதன் ஒரு பகுதியாக மாற முடிவு செய்தன, அவை பனிப்போர் அரங்கத்தின் ஒரு அங்கமாக தங்களது நாடு இருக்க விரும்பவில்லை . 


சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியும் மற்றும் பொருளாதார தாராளமயமாக்கலும் (1991-முதல் தற்பொழுது வரை)

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தாராளமயம், தனியார்மயம் மற்றும் உலகமயமாதல் போன்றவை எழுச்சி பெற்றன. இந்தியாவை பெருமளவு சோசலிச பொருளாதாரத்தில் இருந்து சந்தைப் பொருளாதாரத்திற்கு நகர்த்திச் சென்றது. இந்தியா இதன் பிறகு அந்நிய நேரடி முதலீட்டிற்கு (FDI) தனது கதவுகளைத் திறந்து விட்டது. பின்னர் இது அமெரிக்க ஐக்கிய நாடுகளுடனான உறவுகள் மேம்பட உதவியாக அமைந்தது.

தற்காலத்தில் இந்தியா புது வகையான சவால்களை சந்திக்கிறது, மாறிவரும் புவிசார் அரசியல் தன்மைகளினால் மையக்கரு மாறாமல், அதன் வெளியுறவுக் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

தெற்கு ஆசியாவின் சீனா , உலக வல்லரசுகளில் ஒன்றாக ஆகியிருக்கிறது. அது நமது அண்டை நாட்டு வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாகிறது. வளர்ந்து வரும் பொருளாதாரத்துடன் இந்தியாவும், ஒரு மண்டல அளவிலான சக்தியாகிறது. எனவே முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் அதற்கு இன்னும் அதிக உலகளாவிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து இந்தியா தன்னுடைய நலனைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், தன்னுடைய அண்டை நாடுகளுடன் நல்லுறவுகளை வளர்த்துக் கொள்வதற்காகவும் தனது வெளியுறவுக் கொள்கையில் சில மாறுதல்களை செய்ய வேண்டியுள்ளது.

இந்தியா மற்ற நாடுகளுடன் உறவை பேணுவதற்கான மற்ற காரணிகளாக பாதுகாப்பு மற்றும் பொது பயன்பாட்டிற்கு அணு ஆற்றலை பயன்படுத்திக் கொள்ளும் வலிமையை தன்னகத்தே கொண்டிருத்தல், முக்கிய சர்வதேச அமைப்புகளான பிரிக்ஸ் (BRICS), ஜி 20 (G20), ஷாங்காய் அமைப்பு (SCO) ஏவுகணைத் தொழில்நுட்ப கட்டுப்பாடு அமைப்பு (MTCR) போன்ற அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது போன்றவற்றைக் கூறலாம். இந்தியா தனது அடையாளத்தில் தொடர்ந்து உயர்ந்து வருவதால், உலகத்தில் உள்ள பல வலிமையான நாடுகள், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றன. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் சாராம்சத்தை நாம் சுருக்கமாக குறிப்பிட வேண்டுமானால், இஸ்ரேல், ஈரான், பாலஸ்தீனம் மற்றும் சவுதி அரேபியா போன்ற மாறுபட்ட பண்புகளை கொண்ட நாடுகளுடன் நட்புறவை வைத்திருக்கும் மிகவும் அரிதான தனித்தன்மையைக் கொண்டிருக்கின்ற ஒரே நாடு இந்தியா எனலாம்.



12th Political Science : Chapter 9 : India and the World : Evolution of India’s foreign policy (1947-54) in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 9 : இந்தியாவும் உலகமும் : இந்திய வெளியுறவுக் கொள்கையின் பரிணாம வளர்ச்சி (1947-54) - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 9 : இந்தியாவும் உலகமும்