Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | குடும்பம் – மியூசேசி (வாழைக் குடும்பம்)

வகைப்பாட்டு நிலை, பொதுப் பண்புகள், மலர் சூத்திரம், பொருளாதார முக்கியத்துவம் - குடும்பம் – மியூசேசி (வாழைக் குடும்பம்) | 11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany

   Posted On :  06.07.2022 08:01 am

11 வது தாவரவியல் : அலகு 5 : வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்

குடும்பம் – மியூசேசி (வாழைக் குடும்பம்)

மியூசேசி குடும்பம் 2 பேரினங்களையும் (மியூஸா மற்றும் என்சீட்டே) மற்றும் 81 சிற்றினங்களையும் உள்ளடக்கியது.

ஒருவிதையிலைக் குடும்பங்கள்

 


குடும்பம் – மியூசேசி  (வாழைக் குடும்பம்)

வகைப்பாட்டு நிலை





ஜிஞ்ஜிபரேலிஸ் துறையின்வேர்ப் பரிணாம விளக்கப்படம்

குறிப்பு: மியூசேசி முன்னர் 6 பேரினங்களுடன் பெரிய குடும்பமாக இருந்தது. என்சீட்டே, ராவனெலா, ஸ்டெரிலிட்சியா, மியூசா, ஆர்க்கிடேந்தா மற்றும் ஹெலிகோனியா என்ற 6 பேரினங்களில் மியூசா மற்றும் என்சீட்டே என்ற 2 பேரினங்கள் மட்டும்தான் APG வகைப்பாட்டின்படி மியூசேசியில் உள்ளன. மற்ற 4 பேரினங்கள் இக்குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டு வெவ்வேறு குடும்பங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுப்பண்புகள்

பரவல்: மியூசேசி குடும்பம் 2 பேரினங்களையும் (மியூஸா மற்றும் என்சீட்டே) மற்றும் 81 சிற்றினங்களையும் உள்ளடக்கியது. இக்குடும்பத் தாவரங்கள் பெரும்பாலும் ஈரமான வெப்பமண்டலத் தாழ்நிலப் பகுதிகளான மேற்கு ஆப்பிரிக்கா முதல் பசிபிக் வரை (தெற்கு ஜப்பான் முதல் குயின்ஸ்லாந்து வரை) அதிகமாக உள்ளன. இந்தியாவில் இக்குடும்பத்தில் மியூஸா தாவரம் பரவலாகக் காணப்படுகிறது.

வளரியல்பு: பெரிய அளவினையுடைய பலப்பருவச்செடிகள் தரையடித் தண்டான ரைசோம் மூலம் தொடர்ந்து பல ஆண்டுகள் உயிர் வாழ்பவை (மியூஸா பாரடிஸியாகா), அரிதாக மரங்கள் (ராவனெலா மடகாஸ்கரியன்சிஸ் / விசிறி வாழை).

வேர்: வேற்றிட சல்லிவேர்த்தொகுப்பு.

தண்டு: மியூஸாவில் உண்மையான தண்டு தரையடி ரைசோம் ஆகும். (சில சிற்றினங்களில் தண்டு இரு கவட்டுக் கிளையுற்றது). தரைக்கு மேல் காணப்படும் கிளையற்ற, நிமிர்ந்த தண்டு போன்ற பகுதி பொய்த் தண்டாகும், இது நீண்ட கடினமான மற்றும் அகன்ற உறைபோன்ற பல இலையடிப்பகுதிகள் ஒன்றையொன்று தழுவி உருவான தரைமேல் பொய்த்தண்டாகும். பொய்த்தண்டுக்குள்ளாக அடிப்பகுதியில் மறைந்து காணப்படும் மைய அச்சு – வாழைத்தண்டு எனப்படும். மலர் உருவாகும் பருவத்தில் இத்தண்டு நீட்சியடைந்து, பொய்த்தண்டினைத் துளைத்துக் கொண்டு நுனிப்பகுதியில் மஞ்சரியை உற்பத்தி செய்கிறது. பல்லாண்டுவாழ் ஒரு காய்ப்புத் தாவரம் (மியூஸா) (இது தனது வாழ்காலத்தில் ஒரு முறை மட்டுமே மலர்களையும் கனிகளையும் உற்பத்தி செய்து அழிகிறது). ராவனெலா மடகாஸ்கரியன்சிஸ்ல் தரைக்கு மேல் வளரும் தண்டு கட்டைத்தன்மை உடையது.

இலை: தனி இலை, நீண்ட உறுதியான இலைக் காம்புடன் பெரிய அகன்ற இலைப்பரப்புடன் கூடிய, தழுவிய இலையடிப்பகுதியுடன் காணப்படுகிறது. இலைத்தாள் வட்ட நுனி உடையது; இலையடி உறையுடையது; இலையடி செதிலற்றது, முட்டை வடிவம், முனை மழுங்கிய வட்டநுனி அல்லது நீள்வடிவுடையது. தடித்த நடுநரம்பு உடையது முழுமையானது. எண்ணற்ற இணைப்போக்கு நரம்பமைப்பு இலையின் விளிம்பு வரை நீட்சியடைந்துள்ளது. இளம் இலைகள் சுருண்டு காணப்படுகிறது. இலையமைவு மியூஸாவில் சுழல் முறையிலும், ராவனெலாவில் இருவரிசைமாற்றிலை அமைப்பில் அமைந்துள்ளன.

மஞ்சரி: நுனியிலோஅல்லது இலைக்கக்கத்திலோ அமைந்த மஞ்சரி. மியூஸாவில் கூட்டு மடல்கதிர் காணப்படுகிறது. பொதுவாக மலர்கள் பெரிய கண்கவர் வண்ணத்தில், சுழல் முறையில் அமைந்துள்ள, படகு போன்ற பூவடிச்செதில்களால் பாதுகாக்கப்படுகின்றன. இப்பூவடிச் செதில் மடல் எனப்படும். ராவனெலாவில் மஞ்சரி கூட்டுசைம் ஆகும்.

மலர்கள்: பூவடிச் செதிலுடையவை, பூக்காம்புச்செதிலற்றவை, காம்பற்றவை, மூவங்கமலர்கள், ஒருபால் அல்லது இருபால் அல்லது பன்பால் மலர்கள். ஒருபால் தன்மை காணப்படின் மலர்கள் ஆண்-பெண் மலர்த்தாவரங்கள் கொண்டவை, மலர்கள் இருபக்கச்சீர் உடையவை மற்றும் சூலகக் கீழ் மலர்கள் (மியூஸாவில் மலரானது பன்பால் அதாவது ஆண்மலர்கள், பெண்மலர்கள், இருபால்மலர்கள் ஒரே தாவரத்தில் உள்ளன).

பூவிதழ் வட்டம்: பூவிதழ் 6, அடுக்கிற்கு 3 வீதம் இரு அடுக்குகளில் அமைந்துள்ளன. உருஒத்த உறைகளையுடையது, 3+3 இணைந்த பூவிதழ்கள், மியூஸாவின் பெரும்பாலான சிற்றினங்களில் வெளி அடுக்கின் மூன்று பூவிதழ்களும் உள் அடுக்கின் இரு பக்கவாட்டுப் பூவிதழ்களும் தொடு இதழ் அமைவில் இணைந்து, 5 பற்களை உடைய குழல் போன்ற அமைப்பு உருவாகிறது இதற்குக் கீழ் உதடு எனப் பெயர். உள் அடுக்கின் அச்சு நோக்கிய பூவிதழ் தனித்தது. இது பெரிதாகவும், மென்மையான சவ்வு போன்றும் உள்ளது. இது சிற்றுதடு என்றும் அழைக்கப்படுகிறது.

மகரந்தத்தாள் வட்டம்: மகரந்தத்தாள்கள் 5 அல்லது 6, அடுக்கிற்கு 3 வீதம் இரு அடுக்குகளில் பூவிதழ்களுக்கு எதிராகவும் பூவிதழோடு இணைந்தும் அமைந்துள்ளன. மியூஸாவில் 5 மகரந்தத்தாள்கள் மட்டுமே இனப்பெருக்கத் தன்மையுடையவை. உள் அடுக்கின் அச்சு நோக்கிய மகரந்தத்தாள் இனப்பெருக்கத் தன்மையற்றவை மகரந்தத்தாளாகக் காணப்படுகிறது அல்லது முற்றிலும் இல்லாமல் இருக்கிறது. ராவனெலாவில் 6 மகரந்தத்தாள்களும் இனப்பெருக்கத் தன்மையுடையவை. தனித்த மகரந்தப்பைகள் இழைபோன்றது, இருமடல்களுடையவை நீள்வாக்கில் வெடிப்பவை. மகரந்தம் ஒட்டும்தன்மை கொண்டவை..

சூலக வட்டம்: மூன்று சூலக இலைகளையுடையவை, இணைந்தவை, மூன்றில் நடு ஒற்றைச் சூலகம் அச்சு விலகி வெளிப்புறம் அமைந்துள்ளது. மூன்று சூலறைகளையுடையவை, கீழ்மட்டச் சூலகப்பையுடையவை, பல சூல்கள் அச்சு சூல் ஒட்டு முறையில் அமைந்துள்ளன. சூல் தண்டு இழை போன்றது சூல்முடி மூன்று மடல்களை உடையது. தடுப்புச்சுவர் தேன் சுரப்பி காணப்படுகிறது.

கனி: (மியூஸா) நீண்ட சதைக்கனி, (ராவனெலா) வெடிகனி.

விதை: பெரிய அளவிலான தரசம் நிறைந்த கருவூண் (என்சீட்டே)


மியூஸா பாரடிஸியாகா கலைச்சொற்களால் விளக்கம்


வளரியல்பு: ஒரு காய்ப்பு பல பருவச்செடி.


வேர்: வேற்றிட சல்லி வேர்த்தொகுப்பு காணப்படுகிறது.

தண்டு: உண்மையான தண்டு தரையில் காணப்படும். தரைக்கு மேல் காணப்படும் கிளையற்ற, நிமிர்ந்த தண்டு போன்ற பகுதி பொய்த்தண்டாகும். இது நீண்ட கடினமான மற்றும் அகன்ற உறைபோன்ற பல இலையடிப் பகுதிகள் ஒன்றையொன்று தழுவி உருவான பொய்த்தண்டாகும். பொய்த்தண்டுக்குள்ளாக அடிப்பகுதியில் மறைந்து காணப்படும் மைய அச்சு 'வாழைத்தண்டு' எனப்படும். மலர் உருவாகும் பருவத்தில் இவ்வாழைத் தண்டு நீட்சியடைந்து, பொய்த்தண்டினைத் துளைத்துக் கொண்டு நுனிப்பகுதியில் மஞ்சரியை உற்பத்தி செய்கிறது.

இலை: தனி இலை, நீண்ட உறுதியான இலைக் காம்புடன் பெரிய இலைத்தாளையுடையது. இலைத்தாள் வட்ட நுனி உடையது. இலையடி உறையுடையது. இலையடி செதிலற்றது. விளிம்பு வரை நீட்சியடைந்துள்ள சிறகு இணைப்போக்கு நரம்பமைப்பு உடையது. சுழல் இலையடுக்கமைவு கொண்டது.

மஞ்சரி: கூட்டு மடல்கதிர் மஞ்சரி. மஞ்சரியின் மலர்கள் பெரிய, கவரும் வண்ணமுடைய, சுழல் முறையில் அமைந்துள்ள, படகு போன்ற பூவடிச்செதில்களால் பாதுகாக்கப்படுகின்றன. இப்பூவடிச் செதில் மடல் எனப்படும். மலர்கள் முதிர்ந்த பின், இம்மடல்கள் பின்நோக்கிச் சுருண்டு இறுதியாக உதிர்ந்துவிடுகின்றன.

மலர்கள்: பூவடிச் செதிலுடையவை, பூக்காம்புச் செதிலற்றவை, காம்பற்றவை, மூவங்க மலர்கள் ஒருபால் அல்லது இருபால் தன்மையுடையவை. மலர்கள் இருபக்கச்சீர் உடையவை, சூலகக் கீழ் மலர்கள்.

பூவிதழ் வட்டம்: பூவிதழ் 6, அடுக்கிற்கு 3 வீதம் இரு அடுக்குகளில் (3+3) அமைந்துள்ளன. ஒத்த அடுக்குகளையுடையது, இணைந்த பூவிதழ்கள். வெளிஅடுக்கின் மூன்று பூவிதழ்களும் உள் அடுக்கில் இரு பக்கவாட்டுப் பூவிதழ்கள் தொடு இதழ் அமைவில் இணைந்து 5 பற்களை உடைய குழல் போன்ற அமைப்பு உருவாகிறது. இது கீழ் உதடு எனப்படும் உள் அடுக்கின் மேல் பக்கப் பூவிதழ் தனித்துக் காணப்படுகிறது. இது பெரிதாகவும் மற்றும் மென்மையான சவ்வு போன்றும் உள்ளது. இது சிற்றுதடு (Labellum) என அழைக்கப்படுகிறது.

மகரந்தத்தாள் வட்டம்: மகரந்தத்தாள்கள் 6, அடுக்கிற்கு 3 வீதம் இரு அடுக்குகளில் பூவிதழ்களுக்கு எதிராக அமைந்துள்ளன. 5 மகரந்தத்தாள்கள் மட்டுமே இனப்பெருக்கத் தன்மையுடையவை. உள் அடுக்கில் அச்சு நோக்கி மலட்டு மகரந்தத்தாள் காணப்படுகிறது அல்லது முற்றிலும் இல்லாமல் இருக்கும். மகரந்தப்பைகள் இரு அறைகளையுடையவை, நீள்வாக்கில் வெடிப்பவை, மகரந்தக்கம்பி இழை போன்றது. சில ஆண் மலர்களில் மலட்டுச் சூலகம் காணப்படும்.

சூலக வட்டம்: மூன்று சூலக இலைகளையுடையவை, இணைந்தவை, நடு சூலகம் அச்சு விலகி அமைந்துள்ளது. மூன்று சூலறைகளையுடையவை, கீழ்மட்டச் சூலகப்பையுடையவை, பல சூல்கள் அச்சு சூல் ஒட்டு முறையில் அமைந்துள்ளன. சூலகத் தண்டு இழை போன்றது. சூலக முடி மூன்று மடல்களை உடையது தடுப்புச்சுவர்.

கனி: நீண்ட சதைக்கனி, சாகுபடி செய்யப்படும் பெரும்பாலான வாழைகளில் விதைகள் இல்லை.

மலர் சூத்திரம்:



மியூசேசி குடும்பத்தின் பொருளாதார முக்கியத்துவம்

Tags : Diagnostic and General characters, Botanical description, Floral Formula, Economic Importance வகைப்பாட்டு நிலை, பொதுப் பண்புகள், மலர் சூத்திரம், பொருளாதார முக்கியத்துவம்.
11th Botany : Chapter 5 : Taxonomy and Systematic Botany : Family Musaceae – Banana Family Diagnostic and General characters, Botanical description, Floral Formula, Economic Importance in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது தாவரவியல் : அலகு 5 : வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல் : குடும்பம் – மியூசேசி (வாழைக் குடும்பம்) - வகைப்பாட்டு நிலை, பொதுப் பண்புகள், மலர் சூத்திரம், பொருளாதார முக்கியத்துவம் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது தாவரவியல் : அலகு 5 : வகைப்பாட்டியல் மற்றும் குழுமப் பரிணாம வகைப்பாட்டியல்