Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | அந்நிய நேரடி மூலதனமும் (FDI) பன்னாட்டு வாணிகமும்

பன்னாட்டுப் பொருளியல் - அந்நிய நேரடி மூலதனமும் (FDI) பன்னாட்டு வாணிகமும் | 12th Economics : Chapter 7 : International Economics

   Posted On :  16.03.2022 07:22 pm

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 7 : பன்னாட்டுப் பொருளியல்

அந்நிய நேரடி மூலதனமும் (FDI) பன்னாட்டு வாணிகமும்

பன்னாட்டுப் பொருளாதாரத்தில் அந்நிய நேரடி முதலீடு முக்கிய பங்கு வகிக்கிறது.

அந்நிய நேரடி மூலதனமும் (FDI) பன்னாட்டு வாணிகமும்

பன்னாட்டுப் பொருளாதாரத்தில் அந்நிய நேரடி முதலீடு முக்கிய பங்கு வகிக்கிறது. வெளிநாட்டு நேரடி மூலதனமும் பன்னாட்டு வாணிகமும் மிகவும் நெருக்கமுடையவை. வளரும் நாடுகளின் இயற்கை வளங்கள் மற்றும் தோட்டப்பயிர் துறைகளில் மிக அதிக அளவு வெளிநாட்டினர் முதலீடு செய்து பன்னாட்டு வாணிகத்தின் வளர்ச்சிக்கு துணைபுரிந்தனர். வெளிநாட்டு நிறுவனங்களின் உற்பத்தி இறக்குமதிக்கு மாற்றாகவும் செயல்பட்டு இறக்குமதியை கட்டுப்படுத்துகிறது.

வெளிநாட்டு நேரடி முதலீட்டுடன் இயந்திரங்கள், தொழில் நுட்பம், இடு பொருட்கள் மற்றும் அரிதான நுகர்வு பொருட்கள் போன்றவையும் ஒரு நாட்டுக்குள் வரும். ஏற்றுமதி செய்து ஈட்டிய அந்நிய செலாவணி இறக்குமதி மீது செலவழிக்க போதவில்லையென்றால் வெளிநாட்டு நேரடி மூலதனத்தைக் கொண்டு ஈடு செய்ய முடியும். அந்நிய செலாவணி பற்றாக்குறையை போக்குதல், வேலை வாய்ப்பை உருவாக்குதல் மற்றும் பொருளாதார வளர்ச்சி வேகத்தை அதிகரித்தல் போன்ற காரணங்களுக்காகவும் வெளிநாட்டு நேரடி முதலீடு விரும்பப்படுகிறது. பல நாடுகள் இறக்குமதிக்கு பதிலாக வெளிநாட்டு மூலதனத்தை விரும்புகிறார்கள்.


இயற்கை வளங்கள் மற்றும் கனிம சுரங்கங்கள் மற்றும் அதிக லாப விகிதம் உள்ள தொழில்கள், போன்ற துறைகளை குறிவைத்து வெளிநாட்டு நேரடி முதலீடு வருகிறது. எந்நேரமும் திரும்ப வெளியேறிவிடும் அபாயம், உள்நாட்டு சட்ட விதிகளை மீறுதல் போன்ற கெடுதல்களும் வெளிநாட்டு மூலதனத்தில் உண்டு. எனவே, வெளிநாட்டு மூலதனத்தின் நன்மைகள் அதிகமா, ஆபத்து அதிகமா என்பது விவாதத்துக்குரியது.

அமெரிக்க டாலரின் தேவை அதிகரிப்பை IMF மற்றும் உலக வங்கி கொள்கைகள் (நிதி - வங்கி கொள்கை) அமெரிக்க டாலரின் மதிப்பை தொடர்ந்து அதிகமதிப்புடன் வைத்திருப்பதே மறைமுக நோக்கமாகும்.



1. வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் (FDI) பொருள் விளக்கம்

வேறுநாட்டில் முதலீடு செய்து நிறுவனத்தின் மேலாண்மையை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதையே வெளிநாட்டு நேரடி மூலதனம் என்கிறோம். பன்னாட்டு வணிக நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்வதை இது குறிக்கிறது. இது வெளிநாட்டு நிதி மூலதனமல்ல. வெளிநாட்டு நிதி மூலதனம் குறுகியகால லாப நோக்கில் நிதி சந்தையில் செய்யப்படும் முதலீடாகும். நிறுவனங்களின் மேலாண்மையை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது நிதி மூலதனத்தின் நோக்கமல்ல.

வெளிநாட்டு நிதி மூலதனம் (FPI)

ஒரு நாட்டில் வெளிநாட்டினர் வங்கிகளில் நிறுவன பங்கு வாங்குவதில், கடன் பத்திரம் வாங்குவதில் மற்றும் முன் பேர. வர்த்தகத்தில் முதலீடு செய்வதை வெளிநாட்டு நிதி மூலதனம் (Foreign Portfolio Investment) எனலாம். இது வாணிபச் செலுத்துச் சமநிலை மூலதனக் கணக்கின் ஒரு பகுதியாகும்.



2. வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் நோக்கங்கள்

கீழ்கண்டவையே வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் நோக்கங்கள்

1. விற்பனையை விரிவுப்படுத்துதல் 

2. இயற்கை வளங்களை கையகப்படுத்துதல் 

3. வாணிக பரவலாக்கம் 

4. போட்டி இடர்களை குறைத்தல்

வெளிநாட்டு நிதி நிறுவன முதலீடு (FII)

வெளிநாட்டு நிதி நிறுவன முதலீடு என்பது பணசந்தை மற்றும் முன்பேர நிதி சந்தைகளில் நிதி நிறுவனங்கள் வழியாக செய்யப்படும் நிதி மூலதனமாகும். குறுகிய கால லாபத்திற்காக செய்யப்படும் முதலீடாகும். எடுத்துக்காட்டாக, ஐக்கிய நாடுகளிலுள்ள ஒரு பரஸ்பர நிதி நிறுவனம் இந்தியாவை சார்ந்த ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யலாம்.



3. வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் நன்மைகள் 

வெளிநாட்டு முதலீடு பெரும்பாலும் நேரடி முதலீடாகவே நாடுகளுக்குள் நுழைகிறது. வெளிநாட்டு நேரடி முதலீட்டின் நன்மைகளை பட்டியலிடுவோம்

1. வெளிநாட்டு நேரடி மூலதனம் அது சென்றடையும் நாட்டின் மூலதன அளவை உயர்த்தி வேலைவாய்ப்பு அளவையும் அதிகரிக்கும்

2. நேரடி வெளிநாட்டு மூலதனம் சென்றடையும் நாட்டிற்கு புதிய தொழில் நுட்பத்தையும் கொண்டு வருகிறது.

3. வெளிநாட்டு நேரடி முதலீடு நுழையும் நாட்டின் அரசுக்கு நிறுவன இலாப வரி செலுத்துவதன் மூலம் வருவாயை கொண்டு வருகிறது.

4. லாபத்தின் ஒரு பகுதியை மறுமுதலீடு செய்வதன் மூலம் தொழில் வளம் பெருகும்

5. புதிய தொழில் மேலாண்மை முறைகளை அறிமுகப்படுத்தும்

6. ஏற்றுமதியை அதிகப்படுத்தி இறக்குமதிக்கான அவசியத்தை குறைத்து அயல்நாட்டுச் செலுத்துநிலை சமமின்மையை நீக்கும்

7. போட்டியை உருவாக்கி உள்நாட்டு முற்றுரிமையை தகர்க்கும்

8. முதலீடு செய்த நாட்டின் உள்நாட்டு உற்பத்தியின் நிகர மதிப்புக் கூடுவது முதலீட்டிலிருந்து கிடைத்த வருவாயைவிட அதிகமாக இருந்தால் வெளிநாட்டு முதலீட்டிலிருந்து கிடைக்கும் தனியார் நிறுவனத்திற்கான லாபத்தைவிட சமூகத்துக்கு கிடைக்கும் பலன் அதிகம்

9. வெளிநாட்டுநேரடி மூலதனம்முதலீட்டையும் அந்நிய செலாவணியையும் கொண்டு வருவதன் மூலம் சேமிப்பு முதலீடு இடைவெளியையும் நிரப்ப உதவுகிறது.

10. உள்நாட்டுதுணைத்தொழில் நிறுவனங்கள் வளரவும், வெளிநாட்டு நிறுவனங்களோடு இணைந்து உள்நாட்டு சிறுதொழில்கள் வளரவும் உதவும்.

11. உள்நாட்டுத் தொழில் முனைவோர்களை வெளிநாட்டு மூலதனம் மற்ற நாடுகளில் முதலீடு செய்ய தூண்டுகிறது. இந்திய நிறுவனங்கள் நேபாளம், உகாண்டா, எத்தியோப்பியா மற்றும் கென்யா போன்ற நாடுகளில் முதலீடு செய்துள்ளது. மொரிஷியஸ் மற்றும் சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளின் வழியாகவே மிக அதிக அளவிலான முதலீடு இந்தியாவுக்குள் வந்துள்ளது.



4. வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் தீமைகள் 

வெளிநாட்டு நேரடி மூலதனத்தின்  தீமைகளைக் காணலாம்.

1. முன்னுரிமைத்தர வேண்டிய துறைகளுக்கு பதிலாக உயர்ந்த லாப வாய்ப்புள்ள துறைகளில் வெளிநாட்டு முதலீடு அதிகமாக செய்யப்படுகிறது.

2. நுழையும் நாட்டுக்குப் பொருத்தமற்ற தொழில் நுட்பத்தை கொண்டு வருகிறது

3. லாபத்தை தாய்நாட்டுக்கு எடுத்து செல்லும் காலங்களில் வெளிநாட்டு முதலீடு அயல்நாட்டு செலுத்துநிலை சமமின்மைக்கு வழி வகுக்கிறது.

4. முதலீடு செய்த நாட்டின் உள்நாட்டு அரசியலில் முதலீட்டு உரிமையாளர்கள் தலையிடுகிறார்கள்

5. வெளிநாட்டு நிறுவனத்தார் அறமற்ற வணிக நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

6. சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் நசுக்கி விடுகிறது.

7. தங்களுடைய பொருளாதார பலத்தால் போட்டி நிறுவனங்களை மூடவைத்து சில்லோர் முற்றுரிமை அல்லது முற்றுரிமை சூழலை உருவாக்குகிறது வெளிநாட்டு மூலதனம்

8. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகளை நாடுகள் வழங்குவதால் உள்நாட்டு சேமிப்பு குறைதல், வாணிக வீதம் பாதகமாதல், அயல்நாட்டு செலுத்து நிலை சமமின்மையை சரிசெய்வதில் சிரமங்கள் போன்ற தீய விளைவுகள் உருவாகிறது என்கிறார்.



5. இந்தியாவின் வெளிநாட்டு நேரடி மூலதனம்

இந்தியாவில் 1991ல் பொருளாதார சீர்த்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டது. இது இந்தியாவின் சந்தையை வெளிநாட்டு மூலதனத்திற்கு திறந்து விட்டது. தொடர்ந்து வெளிநாட்டு மூலதனம் இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது உழைப்பு மற்றும் முதலீட்டு இடம் பெயர்தலை தாராளமாக்கியது, புதிய தொழில் நுட்பத்தை கொண்டுவந்தது, புதிய மேலாண்மை நுட்பங்களை அறிமுகம் செய்தது மேலும் இந்தியாவுக்கு பன்னாட்டு சந்தையில் நுழையும் வாய்ப்பையும் உருவாக்கியது.

வெளிநாட்டு மூலதனத்தால் பலனடைந்த இந்தியத் துறைகள்

(i) நிதித் துறை 

(i) காப்பீடு 

(iii) தகவல் தொடர்பு 

(iv) சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை 

(v) மருந்து உற்பத்தி 

(vi) மென்பொருள் மற்றும் தகவல் தொழில் நுட்பம்

இந்தியாவில் வெளிநாட்டு மூலதனம் தடை செய்யப்பட்டத் துறைகள்

(i) போர்க்கருவிகள் மற்றும் ஆயுத உற்பத்தி 

(ii) அணு ஆற்றல் 

(iii) தொடர்வண்டி போக்குவரத்து

(iv) நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி 

v) இரும்புத் தாது, மாங்கனீசு, கிரோம், ஜிப்சம், சல்பர், தங்கம், வைரம், தாமிரம் போன்ற தாது சுரங்கத் துறை

வெளிநாட்டு நேரடி மூலதனம் இந்தியாவுக்குள் 97 மில்லியன் அளவுக்கு 1990-91ல் வந்தது. இது 5,535 மில்லியனாக 2004-05ல் இருந்தது. இது 2011-12 32,955 ஆக உயர்ந்தது. UNCTAD உலக முதலீட்டு அறிக்கை 2018ன்படி 2016ல் 44 பில்லியனாக இருந்த வெளிநாட்டு நேரடிமூலதனம் 2017ல் 40 பில்லியனாக குறைந்துள்ளது.




தொகுப்புரை

பன்னாட்டுப் பொருளியல் பொருள், பணிகள், மூலதனம் மற்றும் பண பரிவர்த்தனைகளை விவரிக்கும் பாடப்பிரிவாகும். நாடுகள் பன்னாட்டு வாணிகத்தில் ஏன் ஈடுபடுகின்றன மற்றும்  அதன் விளைவுகள் என்ன என்பதை விளக்கும் கோட்பாடுகளில் மூன்று கோட்பாடுகளை பயின்றோம். பன்னாட்டு வாணிகத்தின் பலன்கள், வாணிப வீதம், அயல்நாட்டுச் செலுத்துநிலை போன்றவைப் பற்றியும் அவற்றின் சமநிலை மாறினால் மீண்டும் சமநிலையை அடைவதற்கான வழிமுறைகளையும் கற்றுக்கொண்டோம்.

இரண்டு விதமான பண மாற்று வீத நிர்ணய முறைகள் மற்றும் வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் நன்மை தீமைகளையும் விவாதித்தோம்.

பன்னாட்டு பொருளாதார அமைப்புகளான IMF, IBRD, WTO மற்றும் வாணிப் பகுதிகளான SAARC, ASEAN, BRICS போன்ற அமைப்புகள் பன்னாட்டு வாணிபத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பதை பற்றி அடுத்த பாடத்தில் பார்ப்போம்.




சிந்தித்து செயலாற்றுதல்

1. இந்தியப் பணம், - அமெரிக்க டாலரிடையேயான செலாவணி விகிதம் இது $1 = ₹65 என வைத்துக்கொள்வோம். இது $1 = ₹55 என மாறினால், எப்பணத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது. எப்பணத்தின் மதிப்பு குறைந்துள்ளது?

2. நம்மாநிலத்தின் முக்கிய நபரின் ஆரோக்கியத்தைச் சோதித்தறிய இங்கிலாந்திலிருந்து ஒரு மருத்துவர் அழைக்கப்படுகிறார் எனக் கொள்வோம். இம்மருத்துவருக்கு வழங்கப்படும் கட்டணங்கள் வாணிபச் செலுத்துச் சமநிலைக் கணக்குகளில் எக்கணக்கில் பதிவுசெய்யப்படும்?






அருஞ்சொற்பொருள்



* பன்னாட்டுப் பொருளியல் : பன்னாட்டு வாணிகத்தின் அடிப்படைகளை படிப்பதற்கான பொருளியலின் பாடப் பிரிவாகும்

* உள்நாட்டு வாணிகம் : ஒரு நாட்டின் புவி எல்லைகளுக்குள் நடைபெறும் வாணிகம்

* பன்னாட்டு வாணிகம் : ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையிலான வாணிகம். இது ஒரு நாட்டின் புவி மற்றும் அரசியல் எல்லைகளைக் கடந்து நடைபெறும் வாணிகமாகும்.

* முழு செலவு வேறுபாடுகள்(Absolute cost): ஒரு பண்டத்தினை உற்பத்தி செய்ய ஆற்றப்படும் உண்மைச் செலவுகளில் இரு நாடுகளிடையே காணப்படும் வேறுபாடு.

* ஒப்புமைச் செலவு வேறுபாடுகள் : இரு பண்டங்களை உற்பத்தி செய்வதில் ஆற்றப்படும் முழுச் செலவுகளில் இரு நாடுகளிடையேயான வேறுபாடு

* உற்பத்திக் காரணி கிடைக்கும் அளவு (Factor Endowment) : ஒரு நாடு ஒரு குறிப்பிட்ட காலத்தில் உற்பத்திக் காரணிகளைப் பெற்றுள்ள அளவு

* வாணிக வீதம் : ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமிடையிலான விகிதம்

* வாணிபக் கொடுப்பல் நிலை : பொருள் ஏ ற் று ம தி க் கு ம் இறக்குமதிக்குமிடையிலான கழித்தல் (Subtraction) வேறுபாடு. பொருள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பின் நிகர மதிப்பு என்றும் புரிந்து கொள்ளலாம்.

* அயல்நாட்டுச் செலுத்துநிலை : ஒரு நாடு உலக நாடுகளுடன் மேற்கொள்ளும் பொருளதார பரிவர்த்தனைகளை கணக்கியல் முறையில் தொகுத்தளிக்கும் அறிக்கையே அயல்நாட்டுச் செலுத்து நிலை

* பண மதிப்பிறக்கம் : ஒரு நாட்டின் பணத்தை மற்ற நாடுகளின் பணமாக மாற்றும் வீதத்தை அந்நாட்டின் மைய வங்கி குறைத்து நிர்ணயம் செய்தல்

* அந்நிய செலாவணி : ஒரு நாட்டின் மைய வங்கியின் இருப்பில் உள்ள தங்கம் மற்றும் பிறநாடுகளின் பணம்

* பண மாற்று வீதம் : ஒரு நாட்டின் பணத்தின் ஒரு அலகை மற்ற நாடுகளின் பணத்தில் எத்தனை அலகுகளுக்கு பரிமாற்றிக்கொள்கிறோம் என்ற வீதம்

* மாறா பண மாற்று வீதம் : ஒரு நாட்டின் மைய வங்கியால் பண மாற்று வீதத்தை நிர்ணயம் செய்யம் மறை

* மாறுகின்ற பணமாற்று வீதம் : அந்நிய செலாவணி சந்தை விசைகளான அந்நிய செலாவணி தேவையளவும் அளிப்பினளவும் தன்னிச்சையாக செயல்பட்டு நிர்ணயமாகும் பண மாற்று வீதமே மாறுகின்ற பணமாற்று வீதம்

* வெளிநாட்டு நேரடி மூலதனம் : ஒரு நாட்டில் வேறுநாட்டு நிறுவனம் உற்பத்தி துறையில் முதலீடு செய்வதையே வெளிநாட்டு நேரடி மூலதனம் என்கிறோம்.

Tags : International Economics பன்னாட்டுப் பொருளியல்.
12th Economics : Chapter 7 : International Economics : Foreign Direct Investment (FDI) and Trade International Economics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 7 : பன்னாட்டுப் பொருளியல் : அந்நிய நேரடி மூலதனமும் (FDI) பன்னாட்டு வாணிகமும் - பன்னாட்டுப் பொருளியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 7 : பன்னாட்டுப் பொருளியல்