Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | அனைத்து இந்திய முஸ்லிம் லீக்கின் உருவாக்கம்

தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் - வரலாறு - அனைத்து இந்திய முஸ்லிம் லீக்கின் உருவாக்கம் | 12th History : Chapter 6 : Communalism in Nationalist Politics

   Posted On :  12.07.2022 04:35 am

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 6 : தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்

அனைத்து இந்திய முஸ்லிம் லீக்கின் உருவாக்கம்

அனைத்து இந்திய முஸ்லிம் லீக்கானது, முதல் முறையாக முஸ்லிம்களுக்கென பிரத்தியேகமாக மையப்படுத்தப்பட்ட ஓர் அரசியல் கட்சியாக இருந்தது. அதன் நோக்கங்கள் பின்வருமாறு :

அனைத்து இந்திய முஸ்லிம் லீக்கின் உருவாக்கம்

1906 அக்டோபர் 1இல் முஸ்லிம் பிரபுக்கள், ஆளும் வர்க்கத்தினர், சட்ட வல்லுநர்கள் மற்றும் சமூகத்தின் உயர்பிரிவினர் பெரும்பாலும் அலிகார் இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் ஆகிய 35 பங்கேற்பாளர்கள் ஆகாகான் தலைமையின் கீழ் சிம்லாவில் ஒன்று திரண்டு அப்போதைய அரசப்பிரதிநிதியான மிண்டோ பிரபுவிடம் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். அவர்கள் அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் சதவீதத்தை உயர்த்துதல், உயர்நீதி மன்றங்களில் முஸ்லிம் நீதிபதிகளின் நியமனம் மற்றும் அரச பிரதிநிதியின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த சிம்லா மாநாடு அரசப்பிரதிநிதியிடமிருந்து எந்த ஒரு நல்ல தீர்மானத்தையும் முஸ்லிம்களுக்கு வழங்கவில்லையென்றாலும், இது அகில இந்திய முஸ்லிம் லீக் உருவாவதற்கு ஒரு ஊக்கியாக செயல்பட்டது எனலாம். முஸ்லிம்களின் நோக்கங்களுக்கு ஒரு பாதுகாப்பினை 1907ஆம் ஆண்டில் வழங்கியது. இவ்வியக்கத்தில் பெரும் ஜமீன்தார்களும், முன்னாள் நவாப்புகளும் மற்றும் முன்னாள் அதிகாரத்துவவாதிகள் ஆகியோரும் இதில் உறுப்பினர்களாக இருந்து செயலாற்றினர். இந்த லீக்கானது, வங்காளப் பிரிவினை, முஸ்லிம்களுக்கான தனித்தொகுதி கோரிக்கை மற்றும் அரசுப்பணிகளில் முஸ்லிம்களுக்கான பாதுகாப்பினை வலியுறுத்துதல் போன்றவற்றில் ஒத்துழைப்பை நல்கியது.

அனைத்து இந்திய முஸ்லிம் லீக்கின் நோக்கங்கள்

அனைத்து இந்திய முஸ்லிம் லீக்கானது, முதல் முறையாக முஸ்லிம்களுக்கென பிரத்தியேகமாக மையப்படுத்தப்பட்ட ஓர் அரசியல் கட்சியாக இருந்தது. அதன் நோக்கங்கள் பின்வருமாறு :

• இந்திய முஸ்லிம்கள், பிரிட்டிஷ் அரசிடம் உண்மையுடனும், நன்றியுடனும் நடந்துகொள்ள வேண்டுமென்ற உணர்வை அவர்களிடம் ஏற்படுத்துதல், மேலும் இந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்து அரசுக்கு எழும் தவறான கருத்துக்களை நீக்குதல்.

• இந்திய முஸ்லிம்களின் விருப்பங்கள் மற்றும் அரசியல் உரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், மேலும் தங்களது தேவைகள், உயர்ந்த லட்சியங்களை கண்ணியமான முறையில் அரசுக்குத் தெரிவித்தல்.

• இந்திய முஸ்லிம்கள் மற்ற இனத்தவரிடம் எவ்விதப் பகைமை பாராட்டுவதையும் முன்விரோதம் கொள்வதையும் தடுத்தல்

தொடக்கத்தில் நகர்ப்புற மேல்தட்டு மக்களுக்கான ஒரு அமைப்பாகவே அனைத்து இந்திய முஸ்லிம் லீக் இருந்தது. இருந்தபோதிலும், பிரிட்டிஷ் அரசின் ஒத்துழைப்பைப் பெற்று இந்திய முஸ்லிம்களுக்கான தனிப்பட்ட பிரதிநிதித்துவ உறுப்பாக இது மாறியது. உருவாக்கப்பட்ட மூன்றே ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கான தனித்தொகுதி பெறுவதை வெற்றிகரமாக சாதித்தது எனலாம். இது முஸ்லிம்களுக்கு அரசமைப்பு சார்ந்த அடையாளத்தை வழங்கியது . லக்னோ ஒப்பந்தம் (1916), முஸ்லிம்களின் தனி அரசியல் அடையாளத்திற்கான அலுவல் முத்திரையை முஸ்லிம் லீக்கிற்கு வழங்கியது.

தனித் தொகுதி அல்லது வகுப்புவாரித் தொகுதி: இந்த வகையான முறையில் முஸ்லிம்கள் மட்டுமே முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும். 1909 ஆம் ஆண்டு மிண்டோ -மார்லி சட்டம், பேரரசு சட்டமன்றத்தில் அலுவலரல்லாத 27 உறுப்பினர்களுக்கான இடங்களில் எட்டு இடங்களை முஸ்லிம்களுக்கு வழங்கியது. மாகாண சட்டமன்றங்களின் இடங்களை முஸ்லிம் வேட்பாளர்களுக்குப் பின்வருமாறு ஒதுக்கியிருந்தது. அவையாவன: மதராஸ் 4; பம்பாய் 4; வங்காளம் 5.

தனித்தொகுதியும் வகுப்புவாதப் பரவலும்

பிரிட்டிஷ் இந்திய அரசு, வகுப்புவாதத்தை வளர்ப்பதற்கும் பரப்புவதற்கும் தனித்தொகுதி என்னும் முதன்மையான ஒரு நுட்பத்தை நடைமுறைப்படுத்தியது.

பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் லேடி மிண்டோ அவர்களுக்கு அனுப்பிய குறிப்பின் வாயிலாக பிரிட்டிஷார் உள்நோக்கத்துடனேயே இத்தகைய செயலைச் செய்ததை அறியமுடிகிறது. இன்று மிகப்பெரிய செயல் நடைபெற்றது என்பதை தங்களின் மேலான பார்வைக்கு நான் அனுப்புகிறேன். இத்தகைய ராஜதந்திர நடவடிக்கை இந்திய வரலாற்றில் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தும். இது 62 மில்லியன் மக்கள் தூண்டிவிடப்பட்ட எதிர் முகாமில் சேர்ந்துவிடாமல் இழுத்துப்பிடிக்கும் முயற்சி என்பதைத் தவிர வேறில்லை"

தனித்தொகுதி அறிவிப்பு மூலம் ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை என்ற கோட்பாடு அரசமைப்பு சட்டத்தில் முறையாக நுழைந்து இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களை முழுமையாக அந்நியப்படுத்தியது.

Tags : Communalism in Nationalist Politics | History தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் - வரலாறு.
12th History : Chapter 6 : Communalism in Nationalist Politics : Formation of All India Muslim League Communalism in Nationalist Politics | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 6 : தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் : அனைத்து இந்திய முஸ்லிம் லீக்கின் உருவாக்கம் - தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 6 : தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்