பணவியல் பொருளியல் - பணத்தின் பணிகள் | 12th Economics : Chapter 5 : Monetary Economics

   Posted On :  15.03.2022 06:29 pm

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 5 : பணவியல் பொருளியல்

பணத்தின் பணிகள்

பணத்தின் முக்கிய பணிகள் நான்கு நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன:

பணத்தின் பணிகள் (Functions of Money)

பணத்தின் முக்கிய பணிகள் நான்கு நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன:


 


1. முதன்மை பணிகள்


i) பணம் ஓர் பரிவர்த்தனை கருவியாக: இது பணத்தின் அடிப்படை பணியாகும். பணம் பொது ஏற்புத் தன்மையைக் கொண்டது. மேலும், இது அனைத்து பரிவர்த்தனைகளிலும் தவறாது இடம் பெறுகிறது. பணத்தை பயன்படுத்தி செய்யும் பரிவர்த்தனைகளை இரு பகுதிகளாக பார்க்கலாம். முதலில் மற்றொருவருக்கு பொருட்களை வழங்கும் பொழுது பணம் பெறப்படுகிறது. இந்த செயல் விற்பனை எனப்படுகிறது. இரண்டாவதாக, பொருட்களை நாம் வாங்கும்பொழுது பணம் செலுத்தப்படுகிறது. இது கொள்முதல் எனப்படுகிறது. ஆகவே, நவீன பரிவர்த்தனைகளில் பணம் ஒரு இடையீட்டு கருவியாக செயல்பட்டு வருகிறது.

ii) பணம் ஓர் மதிப்பின் அளவுகோலாக: பொருட்கள் மற்றும் பணிகளை மதிப்பளவை செய்வது பணத்தின் இரண்டாவது முக்கிய பணியாகும். பொருட்கள் மற்றும் பணிகளின் மதிப்புகளை பண அலகில் விலைகளாக வெளிப்படுத்தப்படுகிறது. ஆகவே, பணம் ஒரு பொது அளவுகோலாக பார்க்கப்படுகிறது. இதனால் சமுதாயத்திலுள்ள பல்வேறு பொருட்களுக்கான பாரிவர்த்தனை விகிதங்களை எளிதாக தீர்மானிக்க உதவுகிறது.



2. இரண்டாம் நிலை பணிகள்

i) பணம் ஒரு மதிப்பு நிலைக்கலனாக: பொருட்களை சேமிப்பாக வைத்திருந்தால் அது நிலைத்திருக்காது. ஆனால் பணம் கண்டுபிடிக்கப்பட்டபின் பொருள் மற்றும் பணியினை சேமித்து வைப்பதில் உள்ள சிக்கல்கள் மறைந்துவிட்டன. பணம் நீர்மைத்  தன்மையைக் கொண்டிருப்பதனால், அதை எப்பொழுது வேண்டுமானாலும் நிலம், இயந்திரம் மற்றும் தளவாடம் என எளிதாக சந்தைப்படுத்தப்படும் சொத்துக்களாக மாற்றிக்கொள்ளலாம். அவ்வகை சொத்துக்களை மீண்டும் பணமாகவும் மாற்றிக் கொள்ள இயலும். ஆகவே, பணம் மிக சிறந்த மதிப்பின் நிலைக்கலனாக செயல்படுகிறது. அதேசமயம், பணத்தின் மதிப்பு ஓரளவுக்கு நிலைத்தன்மை கொண்டதாக இருந்தால் தான் இவ்வகையில் தனது பணியை சிறப்பாக செய்யமுடியும்

ii) பணம் வருங்கால செலுத்துதல்களுக்கான ஓர் அடிப்படை: பண்டமாற்று முறையில் கடன் வாங்குவதிலும் திருப்பிச் செலுத்துவதிலும் சிக்கல் நிறைந்திருந்தது. கடனுக்குப் பெறப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகளை திருப்பிச் செலுத்தும் பொழுது மதிப்பு மாற்றத்தினால் எந்த அளவு பொருட்களை, பணிகளை திருப்பிச் செலுத்துவது என்ற சிக்கல் இருந்தது. ஆனால், இன்றைய நவீன பொருளாதாரத்தில் கடன்களை பெறுவதையும், திரும்பச் செலுத்துவதையும் பணம் எளிதாக்குகிறது. அதாவது பணம் வருங்கால செலுத்துதல்களுக்கு இடையீட்டுக் கருவியாக செயல்படுகின்றது.

iii) பணம் வாங்குதிறனை மாற்றிக்கொள்ளும் ஒரு கருவியாக: பொருளாதார வளர்ச்சியினை ஒட்டி பரிவர்த்தனை விரிவடைந்து செல்கிறது . தூரப்பகுதிகளுக்கு இடையிலும், எல்லை கடந்தும் பரிவர்த்தனைகள் நடைபெறகிறது. இதனால், ஓரிடத்திலிருக்கும் வாங்குதிறன் மாற்றொரு இடத்திற்கு மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பணம் என்ற கருவி எளிதாகவும் இந்த பணியினை விரைவாகவும் செய்கிறது.



3. துணைப்பணிகள்

i) கடனுக்கான அடிப்படை : கடன்முறைக்கு அடிப்படையாக பணம் அமைந்துள்ளது. வணிக பரிவர்த்தனைகள் ரொக்கத்திலோ அல்லது கடனிலோ நடைபெறுகிறது. உதாரணத்திற்கு, வங்கி வைப்பினை வைத்திருக்கும் ஒருவர் அவர் கணக்கில் போதிய அளவு ரொக்க பண இருப்பு இருக்கும்பொழுது மட்டுமே காசோலைகளை பயன்படுத்துவார். வணிக வங்கிகள் வாடிக்கையாளர் கணக்குகளிலுள்ள ரொக்க இருப்பின் அளவை பொறுத்தே கடன்களை உருவாக்கின்றன. ஆகவே, ரொக்க பணமே கடனுக்கான அடிப்படையாக அமைகிறது.

ii) பணம் தேசிய வருவாய் பங்கீட்டிற்கு உதவுகிறது: பண்டமாற்று முறையில் தேசிய வருவாய் பங்கீடானது மிகச்சிக்கலான ஒன்றாகும். ஆனால், பணம் என்ற கருவி கண்டறியப்பட்ட பின் வாரம், கூலி, வட்டி மற்றும் இலாபம் என காரணிகளுக்கான வருமானத்தை, அதாவது தேசிய வருவாயை எளிதாக பகிர்ந்தளிக்க முடிகிறது.

iii) இறுதி நிலைப் பயன்பாடுகளை ஒப்பிடவும், இறுதிநிலை உற்பத்தி திறன்களை ஒப்பிடவும் பணம் பயன்படுகிறது: நுகர்வோர் தனது மொத்த பயன்பாட்டினை உச்சநிலைப்படுத்தும் நோக்கில் தான் நுகரும் பல்வேறு பொருட்களின் இறுதிநிலைப் பயன்பாடுகளை பணத்தின் துணையுடன் சமப்படுத்த வேண்டியதாகிறது. ஏனெனில், பொருட்களின் விலை பணத்தில் உள்ள நிலையில் இறுதி நிலைப் பயன்பாடுகள் பணத்தின் அலகுகளில் வெளிப்படுத்தும்பொழுதான் அவைகளை ஒப்பிட்டு பயன்பாட்டினை உச்சநிலைப்படுத்த முடியும். அதேபோல், உற்பத்தியாளர் தனது இலாபத்தினை உச்சநிலைப்படுத்த பல்வேறு காரணிகளின் இறுதிநிலை உற்பத்தி திறனை பண அளவுகளில் ஒப்பிட வேண்டியுள்ளது.

iv) பணம் மூலதனத்தின் உற்பத்தி திறனை உயர்த்துகிறது: மூலதனம் பல்வகை வடிவங்களில் காணப்படுகிறது. பணம் நீர்மைத்தன்மை கொண்ட ஒரு மூலதனமாகும். அதாவது, பணம் மூலதனத்தை எளிய முறையில் பிறவகை மூலதனமாக மாற்றலாம். பிறவகை மூலதனங்களை பணமாகவும் மாற்றலாம். ஆகவே, உற்பத்தியில் குறைந்த இறுதிநிலை உற்பத்தி திறன் கொண்ட ஒரு மூலதனத்தை மாற்றி, அந்த இடத்தில் அதிக இறுதிநிலை உற்பத்தித் திறன் கொண்ட மற்றொரு மூலதனத்தை கொணர பணம் துணை செய்கின்றது.



4. இதர பணிகள்

i) திரும்பச் செலுத்தும் திறனை தக்கவைக்க பணம் உதவுகிறது : பணம் பொது ஏற்புத்தன்மை கொண்ட ஒரு சாதனமாகும். நிறுவனங்கள் தங்களின் செலுத்துதல்களை மேற்கொள்ள எப்பொழுதும் குறிப்பிட்ட அளவு ரொக்க பணத்தை தயார் நிலையில் வைத்திருக்கும். இதேபோல், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களும்கூட தங்களது திரும்பச் செலுத்தும் திறனை தக்கவைத்துக்கொள்ள பணத்தை தயார் நிலையில் வைத்திருக்கும்.

ii) பணம் பொதுமைப்படுத்தப்பட்ட வாங்கு திறனை குறிக்கிறது: பணம் என்ற வாங்குதிறன் கொண்ட சாதனத்தைக்கொண்டு எதை வாங்குவதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காக அந்த பணம் என்ற வாங்குதிறன் சேமித்து வைக்கப்பட்டதோ, அதை மட்டுமே வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

iii) பணம் மூலதனத்திற்கு நீர்மைத் தன்மையை தருகிறது : பணம் என்பது நீர்மைத் தன்மை கொண்ட ஒரு மூலதனமாகும். இதன் துணையுடன் அனைத்து இடுபொருட்களை வாங்குவதன் மூலம் எந்த ஒரு செய்பொருளையும் உற்பத்தி செய்ய இயலும்.

Tags : Monetary Economics பணவியல் பொருளியல்.
12th Economics : Chapter 5 : Monetary Economics : Functions of Money Monetary Economics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 5 : பணவியல் பொருளியல் : பணத்தின் பணிகள் - பணவியல் பொருளியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 5 : பணவியல் பொருளியல்