Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | இந்தியாவில் காந்தியடிகள் நடத்திய தொடக்ககால சத்தியாகிரகங்கள்

தேசியம் | காந்திய காலகட்டம் - இந்தியாவில் காந்தியடிகள் நடத்திய தொடக்ககால சத்தியாகிரகங்கள் | 10th Social Science : History : Chapter 8 : Nationalism: Gandhian Phase

   Posted On :  27.07.2022 05:03 am

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 8 : தேசியம் : காந்திய காலகட்டம்

இந்தியாவில் காந்தியடிகள் நடத்திய தொடக்ககால சத்தியாகிரகங்கள்

(அ) சம்பரான் சத்தியாகிரகம் (ஆ) ரௌலட் சத்தியாகிரகமும் ஜாலியன்வாலா பாக் படுகொலையும்

இந்தியாவில் காந்தியடிகள் நடத்திய தொடக்ககால சத்தியாகிரகங்கள்

முந்தைய இந்திய வருகைகளின் போது காந்தியடிகள் தான் சந்தித்த கோபால கிருஷ்ண கோகலே மீது பெரும் மரியாதை கொண்டு அவரையே தமது அரசியல் குருவாக ஏற்றார். அவரது அறிவுரையின்படி, அரசியலில் ஈடுபடுமுன் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் காந்தியடிகள் பயணம் மேற்கொண்டார். இதனால் மக்களின் நிலையை அவர் அறிந்துகொள்ள வழிபிறந்தது. இதுபோன்ற ஒரு பயணத்தின் போதுதான் தமிழகத்தில் தமது வழக்கமான ஆடைகளை விடுத்து சாதாரண வேட்டிக்கு அவர் மாறினார்.

 

(அ) சம்பரான் சத்தியாகிரகம்

பீகாரில் உள்ள சம்பரானில் 'தீன் காதியா' முறை பின்பற்றப்பட்டது. இந்த சுரண்டல் முறையில் இந்திய விவசாயிகள் தங்களின் நிலத்தின் இருப்பதில் மூன்று பங்கு பகுதியில் அவுரி (இண்டிகோ) பயிரிட வேண்டும் என்று ஐரோப்பியப் பண்ணையாளர்கள் அவர்களைக் கட்டாயப்படுத்தினர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் ஜெர்மானிய செயற்கை சாயங்களால், இண்டிகோ எனப்படும் நீலச்சாயம் சந்தையில் விற்கப்படுவது குறைந்தது. சம்பரானில் இண்டிகோ பயிரிட்ட ஐரோப்பியப் பண்ணையாளர்கள் நீலச்சாயம் பயிரிடும் கடமையிலிருந்து விவசாயிகளை விடுவிக்கும் தேவையை உணர்ந்து அந்த நிலைமையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள இந்தக் கடமையிலிருந்து விவசாயிகளை விடுவிக்கும் பொருட்டு சட்டத்துக்கு புறம்பான நிலுவைத்தொகைகளை வசூலித்ததோடு வாடகையையும் அதிகரித்தார்கள். எனவே எதிர்ப்பு வெடித்தது. இந்த வகையில் சிரமங்களைச் சந்தித்த சம்பரானைச் சேர்ந்த விவசாயியான ராஜ்குமார் சுக்லா, சம்பரானுக்கு வருகை புரியுமாறு காந்தியடிகளைக் கேட்டுக்கொண்டார். சம்பரானை காந்தியடிகள் சென்று சேர்ந்தவுடன், அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு காவல்துறையினர் அவரைக் கேட்டுக்கொண்டனர். அதற்கு அவர் மறுத்ததையடுத்து வழக்கைச்  சந்திக்குமாறு பணிக்கப்பட்டார். இந்தச் செய்தி காட்டுத்தீ போன்று பரவியதை அடுத்து ஆயிரக்கணக்கானோர் அந்த இடத்தில் காந்தியடிகளுக்கு ஆதரவாகக் கூடினர். நாடு முதன்முதலாக ஒத்துழையாமை இயக்கச் செயல்முறைப் பாடத்தைக் கற்றுக்கொண்டதாககாந்தியடிகள் தெரிவித்தார். இந்தியாவின் முதலாவது குடியரசுத்தலைவராக பின்னாளில் பொறுப்பேற்ற இராஜேந்திர பிரசாத்தும் வழக்குரைஞராக தொழில் செய்த பிரஜ்கிஷோர் பிரசாத்தும் காந்தியடிகளுக்குத் துணையாக செயல்பட்டனர். அதன்பிறகு துணைநிலை ஆளுநர் ஒரு குழுவை உருவாக்கினார் காந்தியடிகள் அக்குழுவில் ஒரு உறுப்பினர் ஆனார். இண்டிகோ பண்ணையாளர்கள் விவசாயிகள் மீது நடத்திய அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் தீன் காதியா முறையை ரத்து செய்ய அந்தக் குழு பரிந்துரைத்தது. 


    சம்பரான் சத்தியாகிரகம்

சம்பரான் சத்தியாகிரகத்தின் வெற்றியை அடுத்து 1918இல் அகமதாபாத் மில் வேலைநிறுத்தம், 1918இல் கேதா சத்தியாகிரகம் ஆகியன காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருவாக்கின. முந்தைய தலைவர்களைப் போலல்லாமல் நாட்டு மக்களை ஒன்றுதிரட்டும் பணியில் காந்தியடிகள் தம் திறமையை வெளிப்படுத்தினார்.

 

(ஆ) ரௌலட் சத்தியாகிரகமும் ஜாலியன்வாலா பாக் படுகொலையும் 

இந்தியர்களுக்கு உண்மையில் அதிகாரங்களை பரிமாற்றம் செய்யாததால் 1919ஆம் ஆண்டின் இந்திய அரசுச்சட்டம் ஏமாற்றத்தை அளித்தது. மேலும், அரசானது போர்க்காலக் கட்டுப்பாடுகளை நிரந்தரமாக விரிவுப்படுத்தி அமல்படுத்தத் தொடங்கியது. பிடி உத்தரவு இல்லாமல் கைது நடவடிக்கை, விசாரணை இல்லாமல் சிறையிலடைப்பது என காவல் துறையினருக்கு அதீத அதிகாரங்களை ரௌலட் சட்டம் வழங்கியது. இந்தச் சட்டத்தை கருப்புச் சட்டம் என்றழைத்த காந்தியடிகள் அதனை எதிர்த்து நாடு தழுவிய சத்தியாகிரகப் போராட்டத்துக்கு 1919 ஏப்ரல் 6இல் அழைப்புவிடுத்தார். இது உண்ணாவிரதமிருத்தல் மற்றும் பிரார்த்தனையுடன் கூடிய ஒரு அகிம்சை போராட்டமாக இருத்தல் வேண்டும். இது நாடு முழுவதும் பரவிய தொடக்ககால காலனிய எதிர்ப்பு போராட்டமாகும். ரௌலட் சட்டத்துக்கு எதிரான போராட்டம் பஞ்சாபில் குறிப்பாக அமிர்தசரஸ் மற்றும் லாகூரில் தீவிரமடைந்தது. காந்தியடிகள் கைது செய்யப்பட்டதுடன் பஞ்சாபிற்குள் நுழையவிடாமலும் தடுக்கப்பட்டார். ஏப்ரல் 9ஆம் நாள் டாக்டர். சைஃபுதீன் கிச்லு, டாக்டர். சத்யபால் என்ற இரண்டு முக்கிய உள்ளூர் தலைவர்கள் போராட்டத்திற்கு தலைமையேற்றதால் அமிர்தசரஸில் கைது செய்யப்பட்டனர்.

ஜெனரல் டயரின் கொடுங்கோன்மை

அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலா பாக்கில் 1919 ஏப்ரல் 13ஆம் நாள் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பைசாகி திருநாளில் (சீக்கியர்களின் பாட அறுவடைத்திருநாள்) இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான கிராம மக்கள் அங்கு கூடியிருந்தனர். இந்தக்கூட்டம் பற்றி அறிந்தவுடன் அந்த இடத்தை பீரங்கி வண்டி மற்றும் ஆயுதமேந்திய வீரர்களுடன் ஜெனரல் ரெஜினால்டு டயர் சுற்றி வளைத்தார். உயர்ந்த மதில்களுடன் அமைந்த அந்த மைதானத்துக்கு இருந்த ஒரே வாயில் பகுதியை ஆக்ரமித்த ஆயுதமேந்திய வீரர்கள் எந்தவித முன்னெச்சரிக்கையுமின்றி கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினார்கள். துப்பாக்கிகளில் குண்டுகள் தீரும் வரை தொடர்ந்து 10 மணித்துளிகளுக்கு இந்தத் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது. அதிகாரபூர்வ அரசு தகவல்களின் படி 379 பேர் இந்தத் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனர்; ஓராயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஆனால் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கையை ஓராயிரத்துக்கும் அதிகம் என்று தெரிவித்தது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு படைத்துறைச்சட்டம் அறிவிக்கப்பட்டு பஞ்சாப் குறிப்பாக, அமிர்தசரஸ் மக்கள்சவுக்கடி கொடுக்கப்பட்டு தெருக்களில் ஊர்ந்து செல்ல வைக்கப்பட்டனர். இந்தக் கொடுமைகள் இந்தியர்களை கொதித்தெழச்செய்தது. இரபீந்திரநாத் தாகூர் வீரத்திருமகன் (knighthood) என்ற அரசுப் பட்டத்தை திருப்பிக் கொடுத்தார். கெய்சர்-இ-ஹிந்த் பதக்கத்தை காந்தியடிகள் திருப்பிக்கொடுத்தார்.

 

(இ) கிலாபத் இயக்கம்

1918இல் முதலாவது உலகப்போர் முடிவுக்கு வந்தது. இசுலாமிய மதத்தலைவர் என உலகம் முழுவதும் போற்றப்பட்ட துருக்கியின் கலிபா கடுமையாக நடத்தப்பட்டார். அவருக்கு ஆதரவாக தோற்றுவிக்கப்பட்ட இயக்கமே கிலாபத் இயக்கம் என்றழைக்கப்பட்டது. மௌலானா முகமது அலி மற்றும் மௌலானா சௌகத் அலி எனும் அலி சகோதரர்கள் தலைமையில் இவ்வியக்கம் நடந்தது. இந்த இயக்கத்துக்கு ஆதரவளித்த காந்தியடிகள் இந்த இயக்கத்தை இந்து முஸ்லீம்களை இணைக்க ஒரு வாய்ப்பாகக் கருதினார். 1919ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தில்லியில் நடைபெற்ற அகில இந்திய கிலாபத் இயக்க மாநாட்டிற்கு அவர் தலைமையேற்றார். அல்லாஹூ அக்பர், வந்தே மாதரம், இந்து-முஸ்லீம் வாழ்க ஆகிய மூன்று தேசிய முழக்கங்களை முன்மொழிந்த சௌகத் அலியின் யோசனையை காந்தியடிகள் ஆதரித்தார். 1920 ஜூன் 9இல் அலகாபாத்தில் கூடிய கிலாபத் குழுவின் கூட்டம் காந்தியடிகளின் அகிம்சை மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தை ஏற்றுக்கொண்டது. ஒத்துழையாமை இயக்கம் 1920 ஆகஸ்டு முதல் நாள் தொடங்கியது.

 

 

Tags : India Nationalism: Gandhian Phase தேசியம் | காந்திய காலகட்டம்.
10th Social Science : History : Chapter 8 : Nationalism: Gandhian Phase : Gandhi’s Early Satyagrahas in India India Nationalism: Gandhian Phase in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 8 : தேசியம் : காந்திய காலகட்டம் : இந்தியாவில் காந்தியடிகள் நடத்திய தொடக்ககால சத்தியாகிரகங்கள் - தேசியம் | காந்திய காலகட்டம் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 8 : தேசியம் : காந்திய காலகட்டம்