Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | இலக்கணம்: அகப்பொருள் இலக்கணம்

இயல் 6 | 10 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: அகப்பொருள் இலக்கணம் | 10th Tamil : Chapter 6 : Nila muttram

   Posted On :  22.07.2022 02:19 am

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : நிலா முற்றம்

இலக்கணம்: அகப்பொருள் இலக்கணம்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : நிலா முற்றம் : இலக்கணம்: அகப்பொருள் இலக்கணம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கலை

கற்கண்டு

அகப்பொருள் இலக்கணம்


[தமிழாசிரியரை மாணவிகள் சந்திக்கின்றனர்]

மாணவிகள் : வணக்கம் அம்மா.

தமிழாசிரியர் : வணக்கம். என்னம்மா?

மாணவிகள் : முத்தமிழ் மன்றக் கட்டுரைப் போட்டிக்கு "அன்பின் ஐந்திணை" என்ற தலைப்பில் கட்டுரை அனுப்பச் சொல்லியிருக்கிறார்கள். அது குறித்த அடிப்படையான செய்திகளைச் சொல்லுங்கள். மேலும் அதுசார்ந்து நாங்கள் நூலகத்திற்குச் சென்று குறிப்புகளை எடுத்துக் கொள்கின்றோம்.

தமிழாசிரியர் : அப்படியா!

பொருள் என்பது ஒழுக்கமுறை. நம் தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்வியலை அகம், புறம் என வகுத்தார்கள். இதனைப் பொருள் இலக்கணம் விளக்குகிறது.

மாணவிகள் : மகிழ்ச்சியம்மா. அகப்பொருள் என்பது...

தமிழாசிரியர் : அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவுநிலைகளைக் கூறுவது அகத்திணை.

மாணவிகள் : அம்மா அகத்திணையில் வகைகள் உள்ளனவா?

தமிழாசிரியர் : குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை ஆகிய ஏழும் அகத்திணைகள் ஆகும். இவற்றுள் முதல் ஐந்தும் அன்பின் ஐந்திணைகள்.

மாணவிகள் : சரிங்க அம்மா.

தமிழாசிரியர் : முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியன ஐந்திணைகளுக்கு உரியன.

மாணவி 1: முதற்பொருள் என்பது எதைக் குறிக்கிறது அம்மா?

தமிழாசிரியர் : நிலமும் பொழுதும் முதற்பொருள் எனப்படும்.

மாணவி 2: நிலம் என்பது வயல்தானே?

தமிழாசிரியர் : பொறு. பொறு.. நிலம் ஐந்து வகைப்படும்.


ஐவகை நிலங்கள்

குறிஞ்சி மலையும் மலைசார்ந்த இடமும்

முல்லை காடும் காடு சார்ந்த இடமும்

மருதம் வயலும் வயல் சார்ந்த இடமும்

நெய்தல் கடலும் கடல்சார்ந்த இடமும்

பாலை சுரமும் சுரம் சார்ந்த இடமும்.

மாணவி 1 : சரி அம்மா. பொழுது என்பது...?

தமிழாசிரியர் : பொழுது, பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும்..

மாணவி 2: பெரும்பொழுது, சிறுபொழுது பற்றிக் கூறுங்கள்.

தமிழாசிரியர் : ஓராண்டின் ஆறு கூறுகளைப் பெரும்பொழுது என்று நம் முன்னோர் பிரித்துள்ளனர்.

பெரும்பொழுது (ஓராண்டின் ஆறு கூறுகள்)

1. கார்காலம் - ஆவணி, புரட்டாசி

2. குளிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை

3. முன்பனிக் காலம் - மார்கழி, தை

4. பின்பனிக் காலம் - மாசி, பங்குனி

5. இளவேனிற் காலம் - சித்திரை, வைகாசி

6. முதுவேனிற் காலம் - ஆனி, ஆடி

மாணவி 1: சிறுபொழுதுகள் அம்மா..

தமிழாசிரியர் : ஒரு நாளின் ஆறு கூறுகளைச் சிறு பொழுது என்று பிரித்துள்ளனர்.

சிறுபொழுது (ஒரு நாளின் ஆறு கூறுகள்)

1. காலை - காலை 6 மணி முதல் 10 மணி வரை

2. நண்பகல் - காலை 10 மணி முதல் 2 மணி வரை

3. எற்பாடு - பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை

4. மாலை - மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை

5. யாமம் - இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை

6. வைகறை - இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை.

மாணவி 2 : எற்பாடு என்றால்...

தமிழாசிரியர் : 'எல்' என்றால் ஞாயிறு, 'பாடு' என்றால் மறையும் நேரம். எல்+பாடு = எற்பாடு .

மாணவி 1: ஐந்து நிலங்கள் இருக்கின்றன அனைத்துக்கும் பொழுது ஒன்றுபோல வருமா அம்மா ?

தமிழாசிரியர் : நல்ல வினா...

ஒவ்வொரு நிலத்திற்கும், பெரும்பொழுதும் சிறுபொழுதும் ஒன்றுபோல வாரா.

மாணவி 2 : கருப்பொருள் என்றால் என்ன அம்மா?


தமிழாசிரியர் : ஒரு நிலத்தின் தெய்வம், மக்கள், தொழில், விலங்கு இவையெல்லாம் கருப்பொருள்கள். குறிஞ்சி நிலமிருக்கிறதல்லவா?

மாணவிகள் : ஆம் அம்மா !

தமிழாசிரியர் : குறிஞ்சி நிலத்திற்குத் தெய்வம் இருக்கும், மக்கள் இருப்பர், உணவு இருக்கும். இதே போல ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்தனியே தெய்வம் முதலாகத் தொழில் வரையில் தனித்தனியே இருக்கும். கவிதையில் உரிப்பொருளை இக்கருப்பொருள் பின்னணியில் அமைத்துப் பாடுவது நம் மரபு. ஒரு அட்டவணை தருகிறேன். நீங்கள் அதை வைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

மாணவிகள்: அகப்பொருள் பற்றிய அடிப்படைகளைத் தெரிந்துகொண்டோம். நன்றி அம்மா.


 

கற்பவை கற்றபின்....

பண்டைத் தமிழரின் திணைநிலை வாழ்க்கை முறையையும் இன்றைய தமிழரின் வாழ்க்கை முறையையும் ஒப்பிட்டு ஒவ்வொருவர் கருத்தையும் பதிவு செய்து பொதுக் கருத்தை அறிக.

 

Tags : Chapter 6 | 10th Tamil இயல் 6 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 6 : Nila muttram : Grammar: Ahapporul ilakkanam Chapter 6 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : நிலா முற்றம் : இலக்கணம்: அகப்பொருள் இலக்கணம் - இயல் 6 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 6 : நிலா முற்றம்