Home | 7 ஆம் வகுப்பு | 7வது தமிழ் | இலக்கணம்: இலக்கியவகைச் சொற்கள்

பருவம் 2 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: இலக்கியவகைச் சொற்கள் | 7th Tamil : Term 2 Chapter 1 : Ariviyal aakam

   Posted On :  11.07.2022 08:56 pm

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல் ஆக்கம்

இலக்கணம்: இலக்கியவகைச் சொற்கள்

7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல் ஆக்கம் : இலக்கணம்: இலக்கியவகைச் சொற்கள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஒன்று

கற்கண்டு

இலக்கியவகைச் சொற்கள்



பூ, வா, அறம், புத்தகம் இச்சொற்களை நோக்குங்கள்.

இவற்றில் முதல் இரு சொற்கள் ஓரெழுத்தைக் கொண்டவை. அடுத்த இரண்டு சொற்களும் மூன்று, நான்கு எழுத்துகளைக் கொண்டவை. இவை அனைத்தும் பொருள் தருகின்றன.

இவ்வாறு ஓர் எழுத்து தனித்தும் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தும் வந்து பொருள் தருவது சொல் எனப்படும். மொழி, பதம், கிளவி என்பன சொல் என்னும் பொருள் தரும் வேறு சொற்களாகும்.

இலக்கண முறைப்படி பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் எனச் சொற்கள் நான்கு வகைப்படும் என்பதை முன் வகுப்பில் கற்றீர்கள். அதேபோல் இலக்கிய வகையில் சொற்களை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

இயற்சொல்

கடல், கப்பல், எழுதினான், படித்தான் ஆகிய சொற்களைக் கவனியுங்கள். இவற்றின் பொருள் இயல்பாகவே எளிதில் விளங்குகிறது. இவ்வாறு எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள்  இயற்சொற்கள் எனப்படும். இயற்சொல் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகையிலும் வரும்.

(எ.கா.) 

மண், பொன்       – பெயர் இயற்சொல் 

நடந்தான், வந்தான் – வினை இயற்சொல்

அவனை, அவனால் – இடை இயற்சொல்

 மாநகர்            – உரி இயற்சொல்

திரிசொல்

வங்கூழ், அழுவம், சாற்றினான், உறுபயன் ஆகிய சொற்களைக் கவனியுங்கள். இச்சொற்கள் இலக்கியங்களில் பயின்று வரும் சொற்களாகும். இவை முறையே காற்று, கடல், சொன்னான், மிகுந்த பயன் எனப் பொருள் தரும். இவ்வாறு கற்றோர்க்கு மட்டுமே விளங்குபையாகவும் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள் திரிசொற்கள் எனப்படும்.

திரிசொல் பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகையிலும் வரும்.

(எ.கா.)

அழுவம், வங்கம் - பெயர்த் திரிசொல்

இயம்பினான், பயின்றாள் - வினைத் திரிசொல்

அன்ன, மான - இடைத் திரிசொல்

கூர், கழி - உரித் திரிசொல்


திரிசொற்களை ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் எனவும், பல பொருள் குறித்த ஒரு திரிசொல் எனவும் இருவகைப்படுத்தலாம்.

வங்கம், அம்பி, நாவாய் - என்பன கப்பல் என்னும் ஒரே பொருளைத் தருவதால் ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் என்பர்.

இதழ் என்னும் சொல் பூவின் இதழ், உதடு, கண்இமை, பனையேடு, நாளிதழ் ஆகிய பல பொருள்களைத் தருவதால் பல பொருள் குறித்த ஒரு திரிசொல் என்பர்.

திசைச் சொல்

சாவி, சன்னல், பண்டிகை, இரயில் முதலிய சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை தமிழ்ச்சொற்கள் அல்ல. பிறமொழிகளில் இருந்து வந்து தமிழில் வழங்கி வருபவையாகும். இவ்வாறு வடமொழி தவிர, பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் திசைச்சொற்கள் எனப்படும்.

முற்காலத்தில் பாண்டிநாட்டைத் தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வழங்கிய கேணி(கிணறு), பெற்றம் (பசு) போன்ற சொற்களையும் திசைச்சொற்கள் என்றே வழங்கினர்.

வடசொல்

வருடம், மாதம், கமலம், விடம், சக்கரம் முதலிய சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை தமிழ்ச்சொற்கள் அல்ல. இவை வடமொழி எனப்படும் சமஸ்கிருத மொழிச்சொற்கள் ஆகும். இவ்வாறு வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் வடசொற்கள் எனப்படும்.

வடசொற்களைத் தற்சமம், தற்பவம் என இருவகையாகப் பிரிப்பர்.

கமலம், அலங்காரம் என வடமொழியில் இருப்பது போன்றே தமிழில் எழுதுவதைத் தற்சமம் என்பர். லக்ஷ்மி என்பதை இலக்குமி என்றும், விஷம் என்பதை விடம் என்றும் தமிழ் எழுத்துகளால் மாற்றி எழுதுவதைச் தற்பவம் என்பர்.


Tags : Term 2 Chapter 1 | 7th Tamil பருவம் 2 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ்.
7th Tamil : Term 2 Chapter 1 : Ariviyal aakam : Grammar: Ilakkiyavagai chorkal Term 2 Chapter 1 | 7th Tamil in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல் ஆக்கம் : இலக்கணம்: இலக்கியவகைச் சொற்கள் - பருவம் 2 இயல் 1 | 7 ஆம் வகுப்பு தமிழ் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல் ஆக்கம்