Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | இலக்கணம்: குறியீடு

இயல் 8 | 12 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: குறியீடு | 12th Tamil : Chapter 8 : Ella uyirum thollum

   Posted On :  03.08.2022 04:18 am

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : எல்லா உயிரும் தொழும்

இலக்கணம்: குறியீடு

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : எல்லா உயிரும் தொழும் : இலக்கணம்: குறியீடு | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இனிக்கும் இலக்கணம்

ஆளுமை – அ

குறியீடு


கவிதைத் துறையில் மிகுதியும் வழங்கிவரும் 'குறியீடு' என்ற உத்தி, ஆங்கிலத்தில் symbol என ஆளப்படுகிறது. சிம்பல் என்பதற்கு ஒன்று சேர் என்பது பொருள். ஏதேனும் ஒரு வகையில் இரண்டு பொருள்களுக்கிடையே உறவு இருக்கும். அது உருவ ஒற்றுமையாக இருக்கலாம். அருவமான பண்பு ஒற்றுமையாக இருக்கலாம். பெண்ணை, விளக்கு என்று அழைப்பதற்கு, பண்பு காரணமாக இருக்கிறது. பறவையான வெண்புறா, சமாதானத்தின் குறியீடாக இருக்கிறது. கருவியான தராசு நீதியின் குறியீடாக இருக்கிறது. விலங்கான சிங்கம் வீரத்தின் குறியீடாக இருக்கிறது. இவ்வாறு மற்றொன்றைக் குறிப்பாக உணர்த்தும் பொருள் அல்லது சொல் 'குறியீடு' எனப்படுகிறது. குறியீட்டால் பொருளை உணர்த்துவது குறியீட்டியம் (symbolism) எனப்படுகிறது.

குறியீடு, பல துறைகளில் பயன்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டில் 'குறியீட்டியம்' ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது. பொதலேர், ரைம்போ, வெர்லேன், மல்லார்மே முதலானவர்கள் இக்கோட்பாட்டை விளக்கி வளர்த்தார்கள். குறியீடு பற்றிய கொள்கை 19ஆம் நூற்றாண்டில் தோன்றினாலும் அனைத்து மொழி இலக்கியங்களிலும் குறியீட்டைப் பயன்படுத்தும் வழக்கம், முன்பிருந்தே உள்ளது. தமிழைப் பொறுத்தவரை, தொல்காப்பியர் காலம் முதல் இப்பயன்பாட்டை அறிய முடிகிறது. சங்க இலக்கியத்தில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள், 'உள்ளுறை உவமம்' என்ற முதிர்ந்த குறிப்புப் பொருள் உத்தியில் இடம்பெற்றுள்ளன. தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப் பொருள் கோட்பாடு உருவானது என்று ஹார்ட் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் குறியீட்டு மரபு இன்றைய புதுக்கவிதைகளில் மிகுதியாகக் காணப்படுகின்றது.

உவமேயத்தைக் கேட்போர் ஊகித்துக்கொள்ளுமாறு விட்டு உவமையை மட்டும் கூறுவது உள்ளுறை உவமத்தின் அடிப்படை. இதுவே குறியீட்டின் அடிப்படையுமாகும். 

"உறுபுலி உருஏய்ப்பப் பூத்த வேங்கையைக் 

கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மதயானை 

நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய்த் தன் 

கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட ! கேள்"

கபிலர் (கலித்தொகை - 38:6-9)

"வேங்கை மரம் பூத்திருந்தது. அது புலிபோல் தோன்றியது. அதன் மீது சினம் கொண்டு மத யானை வேங்கையின் அடிமரத்தைத் தந்தத்தால் குத்தியது. ஆழப்பதிந்த தந்தத்தை அதனால் எடுக்க முடியவில்லை . மலையின் குகைகளில் எதிரொலி கேட்கும்படி அது முழங்கியது. இப்படி யானை முழங்கிடும் நாட்டை உடையவனே! கேள்!" இப்பாடலில் யானை, தலைவனுக்குக் குறியீடாக இடம்பெறுகிறது.

தலைவியுடனான திருமணத்தைத் தோழி வலியுறுத்தியதை விரும்பாத தலைவன் அக்கூற்றை மறுத்தற்கு, யானை வேங்கை மரத்தை குத்தியது குறியீடாகிறது. அவள் கூற்றை வேண்டாததாகக் கருதித் தலைவன் வருந்துதலுக்கு, தந்தத்தை எடுக்க இயலாது யானை தவிப்பது குறியீடாகிறது. 

"கோழிலை வாழைக் கோள்முதிர் பெருங்குலை 

ஊழுறு தீங்கனி, உண்ணுநர்த் தடுத்த 

சாரற் பலவின் சுளையொடு ஊழ்படுபு 

பாறை நெடுஞ்சுனை, விளைந்த தேறல் 

அறியாது உண்ட கடுவன் அயலது 

கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது 

நறுவீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் 

குறியா இன்பம், எளிதின் நின்மலைப் 

பல்வேறு விலங்கும் எய்தும் நாட!"

கபிலர் (அகநானூறு 2:1-9)

"தாமாகவே முதிர்ந்து பழுத்த இனிமையான வாழைக்கனிகள், உண்ணத் திகட்டும் இனிய பலாச்சுளைகள், நன்கு விளைந்த நறுந்தேன் ஆகிய மூன்றும் பாறைக்கண் அமைந்த பெரிய சுனை நீரில் விழுந்து, தேறலாக ( மயக்கம் தரும் கள்) மாறியுள்ளன. அச்சுனை நீரை அறியாது உண்ட ஓர் ஆண்குரங்கு மயங்கியது. பிறகு பக்கத்தில் இருந்த, மிளகுக் கொடிகள் படர்ந்துள்ள சந்தன மரத்தில் தாவி ஏறுவதற்கு முடியாமல், கீழே விழுந்து கிடந்த நறுமணமிக்க பூக்களாகிய படுக்கையில் விழுந்து களிப்புடன் படுத்து உறங்குகிறது. இவ்வாறு, தாம் எதிர்பாராத வகையில் இன்பத்தை நின் மலையகத்துப் பல்வேறு விலங்கினங்களும் எளிதாய்ப் பெற்று மகிழும் வளமுடைய மலைநாட்டுத்தலைவனே!” என்று தோழி கூற்றாகக் கபிலர் பாடுகிறார்”.

"கடுவனின் அறியாமை போன்றே, நீயும் களவிலே கூடி, திருமணம் செய்து கொள்ளாமல், இன்பத்திலேயே மயங்கிக் கிடக்கிறாய்" என்று தலைவனின் செயலைத் தோழி குறிப்பாகச் சுட்டிக் காட்டுகிறாள்.

இதில் ஆண்குரங்கின் செயல் தலைவனின் செயலுக்கும், சுனைநீர்த் தேறல் தலைவன் கொண்டுள்ள இன்பந்தரும் மயக்கத்திற்கும், சந்தன மரத்தில் ஏறுவதற்கு முடியாமல் பூக்களாகிய படுக்கையில் குரங்கு விழுந்து கிடக்கும் செயல், திருமணம் செய்துகொள்ளாமல் இன்பத்தை மட்டும் நுகர நினைக்கும் தலைவனது செயலுக்கும் குறியீடாக அமைந்துள்ளதை அறியலாம்.

புதுக்கவிதைகளில் தொன்மங்கள் குறியீடாக அமைந்து கருத்தை, அழுத்தமாக உணர்த்த உதவுகின்றன.


வியர்வை

இந்த 

ஆதிரைப் பருக்கைகள் 

வீழ்ந்ததும் 

பூமிப்பாத்திரம் 

அமுதசுரபி - (பால்வீதி, அப்துல் ரகுமான்) 

ஆதிரையிட்ட பருக்கையினால் அமுதசுரபியில் உணவு வளர்ந்துகொண்டே இருந்தது போல் உழைப்பால் உலகம் செழித்து வளர்கிறது என்ற கருத்து புலப்படுத்தப்படுகிறது. வியர்வைத்துளிக்கு ஆதிரைப் பருக்கை குறியீடாகிறது. செழிப்புக்கு அமுதசுரபி குறியீடாகிறது.


திட்டம்

வரங்கள் 

சாபங்கள் 

ஆகுமென்றால் இங்கே 

தவங்கள் எதற்காக? - (அப்துல்ரகுமான்)

திட்டங்கள் தீட்டினாலும் அவை நாட்டு நலனுக்குப் பயன்படாமல், எதிராகப் போய்விடுவதை இக்கவிதை உணர்த்துகிறது. வரம் திட்டத்திற்குக் குறியீடாகிறது. சாபம் அதன் பயனற்ற விளைவுக்குக் குறியீடாகிறது.

இவ்வாறு சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்லாமல் இன்னொன்றைக் கூறிக் குறிப்பால் உணர்த்துவது குறியீடு. இது புதிர் போல அமைந்து இன்பமளிக்கிறது; உணர்வளிக்கிறது; புரிதலை அளிக்கிறது. மறைத்துச் சொல்லவும், மிகுத்துச் சொல்லவும் அழுத்திச் சொல்லவும் \ குறியீடு பயன்படுகிறது. 

குறியீடு எனும் இவ்வுத்தியின் அடிப்படை இலக்கணங்களாவன: 

• சுட்டிய பொருளுக்கும் குறியீட்டுப் பொருளுக்கும் ஏதேனும் ஒரு தொடர்பு இருத்தல் வேண்டும் 

• சுட்டும் பொருள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாக இருத்தல் வேண்டும் 

• இத்தொடர் பின் வாயிலாகக் குறியீட்டுப்பொருள் நுண்ணிய முறையில் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

குறியீடு என்பது ஒரு புதிய வடிவம் அன்று. சங்க இலக்கியப் பாடல்களில் வரும் உள்ளுறை உவமம் என்னும் இலக்கிய உத்தியும் இன்றைக்குக் குறியீடு என்று நாம் குறிப்பிடும் உத்தியும் ஒன்றுதான். சங்ககாலந்தொட்டே தமிழர்க்குக் குறியீட்டுச் சிந்தனை இருந்ததை நம்மால் அறியமுடிகிறது. உள்ளுறை உவமம் அக இலக்கியங்களில் உரைக்க முடியாதவை, மறைக்கவேண்டுபவை ஆகியவற்றைக் குறிப்பாக உணர்த்தப் பயன்பட்டது. குறியீடு என்பது அகம், புறம் என எல்லாவகைக் கவிதைகளிலும் குறிப்பாக உணர்த்தப் பயன்படும் இலக்கிய உத்தியாகும்


Tags : Chapter 8 | 12th Tamil இயல் 8 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 8 : Ella uyirum thollum : Grammar: Kureedu Chapter 8 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : எல்லா உயிரும் தொழும் : இலக்கணம்: குறியீடு - இயல் 8 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : எல்லா உயிரும் தொழும்