Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | இலக்கணம்: நால்வகைப் பொருத்தங்கள்

இயல் 2 | 12 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: நால்வகைப் பொருத்தங்கள் | 12th Tamil : Chapter 2 : Poiyana paiyum malai

   Posted On :  01.08.2022 02:49 am

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : பெய்யெனப் பெய்யும் மழை

இலக்கணம்: நால்வகைப் பொருத்தங்கள்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : பெய்யெனப் பெய்யும் மழை : இலக்கணம்: நால்வகைப் பொருத்தங்கள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இனிக்கும் இலக்கணம்

இயற்கை – உ 

நால்வகைப் பொருத்தங்கள்


ஒரு மொழியின் எழுத்துகளிலோ சொல்லமைப்பிலோ தொடரமைப்பிலோ சொற்பொருள் அமைப்பிலோ காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்படும். தற்காலத் தமிழிலும் இவ்வகையான மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இம்மாற்றங்களை எல்லாம் தழுவிக்கொள்கிற வகையில் காலத்திற்கேற்ற இலக்கணம் நமக்குத் தேவை. மொழி வளர்ச்சியும் இலக்கணத்தின் தேவையும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமான தொடர்புடையவை.

திணை, பால், எண், இடம்:

திணை, பால், எண், இடம் ஆகியவை மொழியின் அடிப்படைப் பண்புகள்; இவை சொற்றொடர் அமைப்பை விளங்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவும். தமிழ்மொழியில் பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களும் திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்துகின்றன. எழுவாய் உள்ள தொடர்களில் அதன் வினைமுற்று எழுவாயுடன் திணை, பால், எண், இடம் ஆகிய நால்வகைப் பொருத்தங்கள் உடையதாய் அமைகிறது. பெரும்பாலான தொடர்களில் எழுவாயை வைத்துக்கொண்டே வினைமுற்றின் திணை, பால், எண் ஆகியவற்றைச் சொல்லிவிடலாம்.

      முருகன் நூலகம் சென்றான்.

இத்தொடரில், முருகன் என்னும் எழுவாய் அதன் திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்திவிடுகிறது. மேலும் இந்த எழுவாய் தான் பெற வேண்டிய வினைமுற்றை உயர்திணை, ஆண்பால், ஒருமை, படர்க்கை எனப் பொருத்தமுடன் அமையுமாறு வேண்டி நிற்கிறது. இதன் மூலம் எழுவாய்க்கும் பயனிலைக்கும் நெருங்கிய இயைபு இருத்தலை அறியலாம்


திணைப்பாகுபாடு

உலக மொழிகள் அனைத்திலும் பெயர்ச் சொற்களே மிகுதி என்பர். பெயர்ச்சொற்களைத் திணை அடிப்படையில் உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர் என்று இருவகையாகப் பிரிப்பர். இவ்வாறு பாகுபடுத்தும் முறை எல்லா மொழிகளிலும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை . தமிழில் பொருட்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு இருதிணைப் பாகுபாடு அமைந்துள்ளதை இலக்கண நூல்களால் அறியலாம்.

" உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே 

அஃறிணை என்மனார் அவரல பிறவே" (தொல். சொல் 1)

எனவரும் தொல்காப்பிய நூற்பா, மக்கள் என்று சுட்டப்படுவோர் உயர்திணை; அவரல்லாத பிற அஃறிணை என்று கூறுகிறது. இவ்வகைப் பாகுபாடு ஆங்கிலம் முதலிய பிற மொழிகளில் இல்லை.

இன்றைய தமிழில் யார்? எது? போன்ற வினாச் சொற்களைப் பயனிலையாக அமைத்துத் திணை வேறுபாடு அறியப்படுகிறது.

அங்கே நடப்பது யார்?

அங்கே நடப்பது எது?

என்னும் தொடர்கள் பொருட்குறிப்பின் அடிப்படையில் யார் என்ற பயனிலை உயர்திணையையும் எது என்ற பயனிலை அஃறிணையையும் உணர்த்துகின்றன.

குழந்தை, கதிரவன் போன்றவை இருதிணைக்கும் பொதுவாக வரும் பெயர்கள். இப்பெயர்கள் எழுவாயாக அமையும்போது அவற்றின் வினைமுடிபு இருதிணை பெற்றும் வருகின்றது.

குழந்தை சிரித்தான் - குழந்தை சிரித்தது

கதிரவன் உதித்தான் - கதிரவன் உதித்தது

பேச்சு வழக்கில் அஃறிணை முடிபைப் பெற்று வருவதே பெருவழக்காக உள்ளது.


பால் பாகுபாடு

தமிழில் பால்பகுப்பு இலக்கண அடிப்படையிலேயே அமைந்துள்ளது. தன்மை, முன்னிலை இடத்தைத் தவிர, தமிழில் உள்ள பெயர்கள், படர்க்கை இடத்தில் வரும். பயனிலை விகுதிகளான ஆன், ஆள், ஆர், அது, அன் முதலியவை பால் பகுப்பைக் காட்டுகின்றன.

.பழந்தமிழில் ஐம்பால்களுள் பலர்பால்சொல் பன்மையிலும் உயர்வு கருதிச் சிலவேளைகளில் ஒருமையிலும் வந்துள்ளன.

மாணவர் வந்தனர் (பன்மை ) - ஆசிரியர் 

வந்தார் (ஒருமை)

இக்காலத் தமிழில் பலர்பாலை உணர்த்தும் சொல் பன்மைப் பொருளை உணர்த்தாமல் ஒருமைப் பொருளை மட்டுமே உணர்த்துகிறது. பன்மைப் பொருள் உணர்த்துவதற்குக் கள் என்னும் விகுதி உதவுகிறது.

அவர் வந்தார் ( ஒருமை )

அவர்கள் வந்தார்கள் (பன்மை)

தமிழில் உயர்திணையில் ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் உரிய பொதுப்பெயர்கள் உண்டு. இப்பெயர்கள் தொடர்களில்அமையும்போது வினைமுற்றைப் பொறுத்தே பால் அறியப்படுகிறது.

தங்கமணி பாடினான்  -

தங்கமணி பாடினாள்

பால் காட்டும் விகுதிகள் இன்றியும் உயர்திணைப் பெயர்ச்சொற்கள் தத்தம் பால் உணர்த்துகின்றன.

ஆண் - பெண் ;

தம்பி - தங்கை ;

அப்பா - அம்மா;

தந்தை – தாய்

அஃறிணை எழுவாயில் ஆண் பெண் பகுப்புமுறை மரபில் இருந்தாலும் வினைமுற்றில் அவற்றை வேறுபடுத்தும் பால் காட்டும் விகுதிகள் இல்லை . எனவே ஒருமை, பன்மை அடிப்படையிலேயே ஒன்றன்பால் பலவின்பால் என்பன அறியப்படுகின்றன.

காளை உழுதது, பசு பால் தந்தது.

ஆகிய தொடர்களில் காளை ஆண்பாலாகவும் பசு பெண்பாலாகவும் உள்ளன. ஆனால் வினை முற்று, பால் பாகுபாட்டிற்குரிய விகுதிகளைப் பெறாமல் ஒன்றன்பால் விகுதி பெற்று முடிந்துள்ளது

தற்காலத்தில் அஃறிணை எழுவாய் மாற்றம் அடைந்துள்ளது. மாட்டினத்தில் பெண்பாலைக் குறிக்க பசுமாடு எனவும் ஆண்பாலைக் குறிக்க காளைமாடு (எருது) எனவும் சொற்கள் வழங்கப்படுகின்றன. பிற விலங்குகளைக் குறிக்கையில் ஆண்குரங்கு, பெண் குரங்கு எனவும் எழுவாய்ப் பொதுப்பெயருடன் ஆண் பெண் என்னும் பால் பாகுபாட்டுப் பெயர்கள் முன்சேர்த்து வழங்கப்படுகின்றன.


எண் பாகுபாடு

இக்காலத் தமிழில் உயர்திணைப் பன்மைப் பெயர்கள் பன்மை விகுதி பெற்று வருகின்றன.

இரண்டு மனிதர்கள்

அஃறிணைப் பன்மைப் பெயர்கள் பன்மை விகுதி பெறுவது கட்டாயமில்லை.

பத்துத் தேங்காய்

இவற்றைப் பத்துத் தேங்காய்கள் என்று எழுதுவதில்லை.

இக்காலத் தமிழில் அஃறிணைப் பன்மைக்கெனத் தனி வினைமுற்றுகள் இல்லை. ஆனால், ஒருமை பன்மை வேறுபாடு எழுவாயிலேயே வெளிப்படுகிறது.

ஒரு மரம் வீழ்ந்தது

பத்து மரம் வீழ்ந்தது

தற்காலத் தமிழில் பேச்சிலும் எழுத்திலும் காணப்படுகிற ஒருமை - பன்மை பற்றிய குழப்பங்களுள் ஒன்று 'ஒவ்வொரு என்னும் சொல்லைப் பற்றியதாகும்.

ஒவ்வொரு வீடுகளிலும் நூலகம் உள்ளது.

போன்ற தொடர்களைப் பேசவும் எழுதவும். காண்கிறோம்.

ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் உள்ளது.

ஒவ்வொரு பள்ளியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

என்றே பேசவும் எழுதவும் வேண்டும். (ஒவ்வொரு -ஒருமை)


இடப்பாகுபாடு

இடம் தன்மை, முன்னிலை. படர்க்கை என மூவகைப்படும். பெயர்ச்சொற்களில் இடப்பாகுபாடு வெளிப்படாது. அவன், அவள், அவர், அது, அவை முதலான பதிலிடு பெயர்களிலும் வினைமுற்றுகளிலுமே வெளிப்படும். பேசுபவன், முன்னிருந்து கேட்பவன், பேசப்படுபவன் அல்லது பேசப்படும் பொருள் ஆகிய மூன்றும் முறையே தன்மை, முன்னிலை, படர்க்கை என அழைக்கப்படும்.

தமிழில் தன்மையிலோ முன்னிலையிலோ ஒருமை பன்மை பாகுபாடு உண்டே தவிர ஆண்பால், பெண்பால் பாகுபாடு இல்லை. சான்றாக, நான் புத்தகம் கொடுத்தேன் என்னும் தொடரில் பேசியவர் ஒருவர் என்று கூற முடியுமே ஒழிய ஆணா பெண்ணா என்று கூற முடியாது. முன்னிலையிலும் இவ்வாறே பால்பாகுபாட்டை அறிய முடியாது

தன்மைப் பன்மையில் உளப்பாட்டுத் தன்மைப் பன்மை, உளப்படுத்தாத் தன்மைப் பன்மை என இருவகை உண்டு

பேசுபவர் (தன்மை) முன்னிலையாரையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பேசுவது உளப்பாட்டுத் தன்மைப் பன்மை ஆகும்.

நாம் முயற்சி செய்வோம் (உளப்பாட்டுத் தன்மைப் பன்மை)

இத்தொடரில் நாம் என்பது தன்மை முன்னிலையில் உள்ள அனைவரையும் குறிக்கிறது.

பேசுபவர் முன்னிலையாரைத் தவிர்த்துத் தன்மைப் பன்மையில் பேசுவது உளப்படுத்தாத தன்மைப் பன்மை ஆகும். நாங்கள் முயற்சி செய்வோம்(உளப்படுத்தாத் தன்மைப் பன்மை)

நாம் தமிழ்மொழியைப் பல்வேறு நிலையில் பல்வேறு நோக்கில் பயன்படுத்துகிறோம். பழையனவற்றைத் தவிர்ப்பதற்கும் புதியனவற்றை ஏற்பதற்கும் நாம் தயங்கியதே இல்லை. கால ஓட்டத்தில் இலக்கணங்களும் இலக்கணக் கூறுகளும் தம்மைத்தாமே புதுப்பித்துக் கொள்கின்றன.

ஒரு மொழியில் அடிப்படை அறிவு என்பது அந்த மொழியில் உள்ள எழுத்துகளையும் சொற்களையும் அவற்றின் பொருளையும் வாக்கிய அமைப்புகளையும் தெரிந்திருப்பதே. மேலே குறிப்பிட்ட நான்கையும் உள்ளடக்கியது ஒரு மொழியின் இலக்கணம்.

- தமிழ் நடைக் கையேடு


Tags : Chapter 2 | 12th Tamil இயல் 2 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 2 : Poiyana paiyum malai : Grammar: Naalvagai poruthangal Chapter 2 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : பெய்யெனப் பெய்யும் மழை : இலக்கணம்: நால்வகைப் பொருத்தங்கள் - இயல் 2 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : பெய்யெனப் பெய்யும் மழை