Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | இலக்கணம்: புறப்பொருள் இலக்கணம்

இயல் 7 | 10 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: புறப்பொருள் இலக்கணம் | 10th Tamil : Chapter 7 : Vithai nel

   Posted On :  22.07.2022 02:47 am

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : விதைநெல்

இலக்கணம்: புறப்பொருள் இலக்கணம்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : விதைநெல் : இலக்கணம்: புறப்பொருள் இலக்கணம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

நாடு

கற்கண்டு

புறப்பொருள் இலக்கணம்


(முதுகலைத் தமிழ் இலக்கியம் பயிலும் கிள்ளிவளவனும்,  பத்தாம் வகுப்பு மாணவன்  சேரலாதனும் உரையாடுகின்றனர்).

கிள்ளிவளவன் : வா! சேரலாதா.. வா..

சேரலாதன் : வணக்கம் அண்ணா. எனக்கு நீங்கள் உதவ வேண்டும்.

கிள்ளிவளவன் : வணக்கம். நீ வந்தாய் என்றாலே தமிழ் இலக்கிய, இலக்கண உரையாடலுக்குத்தான் வருவாய். அப்புறம் என்ன உதவி என்கிறாய்!

சேரலாதன் : ஆமாம்மண்ணே! புறப்பொருள் பற்றிய செய்திகள் அறிய வந்தேன்.

கிள்ளிவளவன் : அகப்பொருள் பற்றி வேண்டாமா?

சேரலாதன் : வேண்டாம்மண்ணே! சென்ற திங்களில் தமிழாசிரியர் அகப்பொருள் பற்றி அருமையாகக் கூறினார்.

கிள்ளிவளவன்: அகப்பொருள் பற்றி நீ புரிந்து கொண்டதைக் கூறு.

சேரலாதன்: அகப்பொருள் அன்பின் ஐந்திணை பற்றியது அண்ணே.

கிள்ளிவளவன்: மகிழ்ச்சி. புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது புறத்திணை. புறத்திணைகள், வெட்சி முதலாகப் பன்னிரண்டு வகைப்படும்.

சேரலாதன் : வெட்சியென்றால் என்ன?

கிள்ளிவளவன்: மக்கள் சிறு குழுக்களாக வாழ்ந்த காலத்தில், ஆநிரைகளைச் (மாடுகளை) சொத்தாகக் கருதினர். ஒரு குழுவினரிடமிருந்து மற்றொரு குழுவினர் ஆநிரைகளைக் கவர்தல் வழக்கமாக இருந்தது. ஆநிரைகளைக் கவர்ந்துவர வெட்சிப் பூவினைச் சூடிக்கொண்டு செல்வர். எனவே, ஆநிரை கவர்தல் வெட்சித் திணை எனப்பட்டது.


அழகுச்செடியாக வீட்டுத் தோட்டங்களிலும் பூங்காக்களிலும் வளர்க்கப்படுகிற சிவந்த நிறமுடைய வெட்சிப்பூ, இட்லிப்பூ என்று அழைக்கப்படுகிறது.

சேரலாதன்: அழகு. அடுத்த திணை என்ன?

கிள்ளிவளவன்: கரந்தைத் திணை. கவர்ந்து செல்லப்பட்ட தம் ஆநிரைகளை மக்கள் மீட்கச்செல்வர். அப்போது கரந்தைப் பூவைச் சூடிக்கொள்வர். அதனால் கரந்தைத் திணை என்று பெயர் பெற்றது.


சிறிய முட்டை வடிவில் கொத்தாகப் பூக்கக் கூடிய கரந்தை ஒரு சிறிய செடி. நறுமணம் மிக்க இது செம்மை, நீலம், இளஞ்சிவப்பு, நீலம் கலந்த சிவப்பு ஆகிய நிறங்களில் பூக்கின்றது. இதனைக் 'கொட்டைக் கரந்தை’ என்றும் கூறுவர்.

சேரலாதன்: அடுத்ததாக....

கிள்ளிவளவன்: வஞ்சித்திணை. மண் (நாடு) சொத்தாக மாறிய காலத்தில் மண்ணைக் கவர்தல் போராயிற்று. மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்குச் செல்வது வஞ்சித்திணை.


பளபளப்பான, மெல்லிய பூவின் இதழ்களில் வெள்ளிய பஞ்சு போன்ற நுண்மயிர் அடர்ந்துள்ளது வஞ்சி.

சேரலாதன்: அடுத்தது என்னண்ணே !

கிள்ளிவளவன்: காஞ்சித் திணை. தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு, காஞ்சிப் பூவைச் சூடி எதிர்த்துப் போரிடல் காஞ்சித்திணை.


கொத்துக் கொத்தாகப் பூக்கும் நீலநிற மலர்கள் கொண்ட அழகான மணமுள்ள காஞ்சி என்பது ஒருவகைக் குறுமரம்.

சேரலாதன் : ஓ… அப்படியா! அடுத்து..

கிள்ளிவளவன்: நொச்சித்திணை. மண்ணைக் காக்கக் கோட்டைகள் கட்டப்பட்டன. கோட்டையைக் காத்தல் வேண்டி, உள்ளிருந்தே முற்றுகையிட்ட பகையரசனோடு நொச்சிப்பூவைச் சூடிப் போரிடுவது நொச்சித்திணை.


மருத நிலத்துக்குரிய நொச்சி, கொத்துக் கொத்தான நீலநிறப் பூக்கள் கொண்டது. இதில் மணிநொச்சி, கருநொச்சி, மலைநொச்சி, வெண்ணொச்சி எனப் பலவகைகள் உள்ளன.

அடுத்தது உழிஞைத் திணை தம்பி. மாற்றரசனின் கோட்டையைக் கைப்பற்ற உழிஞைப் பூவைச் சூடிய தன் வீரர்களுடன் அதனைச் சுற்றி வளைத்தல் உழிஞைத்திணை.


வேலிகளில் ஏறிப்படரும் நீண்ட கொடியே உழிஞைக் கொடி. இதன் கூட்டிலைகளும் மலர்களும் சிறியவை; மலர்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதனை முடக்கத்தான் (முடக்கொற்றான்) எனக் கூறுகின்றனர்.

சேரலாதன்: இனி என்ன இருக்கு அண்ணே!

கிள்ளிவளவன்: தும்பைத் திணை. பகைவேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட, தம் வீரர்களுடன் தும்பைப் பூவைச்சூடிப் போர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது தும்பைத் திணை. போரிடுகின்ற அரசர்கள் இருவரும் தும்பைப் பூ மாலையையே சூடியிருப்பார்கள். போர்த்திணைகள் படிப்படியாக வளர்ந்த நிலையில், போரைத் தொடங்கும் நிகழ்வாக ஆநிரை கவர்தல் மேற்கொள்ளப்பட்டது.

சேரலாதன்: சிறப்பு... மிகச் சிறப்பு! அடுத்து...


எல்லா இடங்களிலும் வளரக் கூடிய தூய வெண்ணிற மலர்களைக் கொண்ட சிறிய செடி தும்பை.

கிள்ளிவளவன்: வாகைத்திணை. போரிலே வெற்றிபெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது, வாகைத்திணை. வாகை என்றாலே வெற்றிதானே!


மங்கிய வெண்ணிற நறுமணம் கொண்ட கொத்துக் கொத்தாக மலரும் வாகை பூ.

சேரலாதன்: எப்படி முறையாகப் போர் புரிந்திருக்கிறார்கள். தமிழனின் மாண்பே மாண்பு.

கிள்ளிவளவன்: பாடுவதற்குத் தகுதியுடைய ஓர் ஆளுமையாளரின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது, பாடாண்திணை (பாடு+ஆண்+திணை = பாடாண்திணை).

சேரலாதன்: ஆமாம், போரை மட்டும் சொல்லாது பிற மாண்புகளையும் பாடுகிறது இத்திணை. அருமை! அருமை!!

கிள்ளிவளவன்: அடுத்து ... வெட்சி முதல் பாடாண்வரை உள்ள புறத்திணைகளில் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது, பொதுவியல் திணை.

சேரலாதன் : கேட்கக் கேட்க இனிமை பயக்கிறது.

கிள்ளிவளவன்: கைக்கிளை என்பது ஒருதலைக் காமம்.

சேரலாதன்: அடுத்தது என்ன?

கிள்ளிவளவன்: பெருந்திணை. இது பொருந்தாக் காமத்தைக் குறிக்கிறது.

சேரலாதன்: அடடா.... எப்படியெல்லாம் திணைகளை வகுத்திருக்கிறார்கள் மகிழ்ச்சி அண்ணே! நன்று அண்ணே!

கிள்ளிவளவன்: மகிழ்ச்சி தம்பி...

 

 

 

Tags : Chapter 7 | 10th Tamil இயல் 7 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 7 : Vithai nel : Grammar: Puraporul ilakkanam Chapter 7 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : விதைநெல் : இலக்கணம்: புறப்பொருள் இலக்கணம் - இயல் 7 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 7 : விதைநெல்