Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | இலக்கணம்: தொகைநிலைத் தொடர்கள்

இயல் 2 | 10 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: தொகைநிலைத் தொடர்கள் | 10th Tamil : Chapter 2 : Uyirin osai

   Posted On :  21.07.2022 09:05 pm

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை

இலக்கணம்: தொகைநிலைத் தொடர்கள்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை : இலக்கணம்: தொகைநிலைத் தொடர்கள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயற்கை

கற்கண்டு

தொகைநிலைத் தொடர்கள்



சொற்றொடர்

சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது "சொற்றொடர்" அல்லது "தொடர்" எனப்படும்.

எ.கா. நீர் பருகினான், வெண்சங்கு ஊதினான்.

 

தொகைநிலைத் தொடர்

பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் சேரும் தொடரின் இடையில், வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால் அதனைத் தொகைநிலைத்தொடர் என்று கூறுவர்.

எ.கா. கரும்பு தின்றான்.

மேற்கண்ட தொடர் கரும்பைத் தின்றான் என்னும் பொருளை உணர்த்துகிறது. இத்தொடரில் உள்ள இரண்டு சொற்களுக்கு நடுவில் ஐ என்னும் உருபு மறைந்து நின்று, அப்பொருளைத் தருகிறது. எனவே, இது தொகைநிலைத் தொடர் எனப்படும்.

தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். அவை வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என்பன ஆகும்.

 

வேற்றுமைத்தொகை

எ.கா. மதுரை சென்றார் இத்தொடர் மதுரைக்குச் சென்றார் என விரிந்து நின்று பொருள் தருகிறது. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களுக்கு இடையில் "கு" என்னும் வேற்றுமை உருபு இல்லை. அது தொக்கி நின்று பொருளை உணர்த்துகிறது.

இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் (ஐ, ஆல், கு, இன், அது, கண்) ஆகியவற்றுள் ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது வேற்றுமைத்தொகை எனப்படும்.

 

உருபும் பயனும் உடன்தொக்க தொகை

எ.கா. தேர்ப்பாகன் இத்தொடர் "தேரை ஓட்டும் பாகன்" என விரிந்து பொருளை உணர்த்துகிறது. கொடுக்கப்பட்டுள்ள தேர், பாகன் என்னும் சொற்களுக்கிடையில் "ஐ" என்னும் வேற்றுமை உருபும் "ஓட்டும்" என்னும் பொருளை விளக்கும் பயனும் மறைந்து வந்துள்ளன.

இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும். இதுவும் வேற்றுமைத் தொகையே ஆகும்.

தமிழ்த்தொண்டு (தமிழுக்குச் செய்யும் தொண்டு) நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை.

 

வினைத்தொகை

காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க, வினைப் பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடப்பது "வினைத்தொகை" எனப்படும். காலம் கரந்த பெயரெச்சமே வினைத்தொகையாகும்.

எ.கா. வீசுதென்றல், கொல்களிறு

வீசு, கொல் என்பவை வினைப்பகுதிகள். இவை முறையே தென்றல், களிறு என்னும் பெயர்ச்சொற்களோடு சேர்ந்து காலத்தை வெளிப்படுத்தாத பெயரெச்சங்களாயின. மேலும் இவை வீசிய காற்று, வீசுகின்ற காற்று, வீசும் காற்று எனவும் கொன்ற களிறு, கொல்கின்ற களிறு, கொல்லும் களிறு எனவும் முக்காலத்திற்கும் பொருந்தும்படி விரிந்து பொருள் தருகின்றன. காலம்காட்டும் இடைநிலைகள் இப்பெயரெச்சங்களில் தொக்கி இருக்கின்றன.

வினைப்பகுதியும் அடுத்துப் பெயர்ச்சொல்லும் அமைந்த சொற்றொடர்களிலேயே வினைத்தொகை அமையும்.

 

பண்புத்தொகை

நிறம், வடிவம், சுவை, அளவு முதலானவற்றை உணர்த்தும் பண்புப்பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் "மை" என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.

செங்காந்தள் - செம்மையாகிய காந்தள், வட்டத் தொட்டி - வட்டமான தொட்டி, இன்மொழி – இனிமையான மொழி.

 

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் 'ஆகிய' என்னும் பண்பு உருபு தொக்கி வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும்.

எ.கா. மார்கழித் திங்கள், சாரைப்பாம்பு.

திங்கள், பாம்பு ஆகிய பொதுப் பெயர்களுக்குமுன் மார்கழி, சாரை எனும் சிறப்புப் பெயர்கள் வந்து மார்கழி ஆகிய திங்கள் என்றும் சாரை ஆகிய பாம்பு என்றும் இருபெயரொட்டாக வந்துள்ளன.

 

உவமைத்தொகை

உவமைக்கும் பொருளுக்கும் (உவமேயம்) இடையில் உவமஉருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.


எ.கா. மலர்க்கை (மலர் போன்ற கை)

மலர் - உவமை, கை - உவமேயம் (பொருள்) இடையே 'போன்ற' என்னும் உவம் உருபு மறைந்து வந்துள்ளது.

 

உம்மைத்தொகை

இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் 'உம்' என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத்தொகையாகும். உம்மைத்தொகை எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வரும்.

எ.கா. அண்ணன் தம்பி, தாய் சேய்

அண்ணனும் தம்பியும், தாயும் சேயும் என விரிந்து பொருளை உணர்த்துகின்றன.

 

அன்மொழித்தொகை

வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அவை அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித் தொகை ஆகும்.

எ.கா. சிவப்புச் சட்டை பேசினார்

முறுக்கு மீசை வந்தார்

இவற்றில் சிவப்புச் சட்டை அணிந்தவர் பேசினார், முறுக்கு மீசையை உடையவர் வந்தார் எனத் தொகைநிலைத்தொடர் அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருகின்றன.

 

கற்பவை கற்றபின்...

வண்ணமிட்ட தொகைநிலைத் தொடர்களை வகைப்படுத்துக.

1. அன்புச்செல்வன் திறன் பேசியின் தொடுதிரையில் படித்துக்கொண்டிருந்தார்.

2. அனைவருக்கும் மோர்ப்பானையைத் திறந்து மோர் கொடுக்கவும்.

3. வெண்டைக்காய்ப் பொரியல் மோர்க்குழம்புக்குப் பொருத்தமாக இருக்கும்.

4. தங்கமீன்கள் தண்ணீர்த்தொட்டியில் விளையாடுகின்றன.

 

 

Tags : Chapter 2 | 10th Tamil இயல் 2 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 2 : Uyirin osai : Grammar: Thokainilai thodarkal Chapter 2 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை : இலக்கணம்: தொகைநிலைத் தொடர்கள் - இயல் 2 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை