பசுமைப் புரட்சியின் முக்கிய தாக்கங்கள் , முக்கியபின்னடைவுகள், சாதனைகள் - பசுமைப் புரட்சி | 12th Political Science : Chapter 8 : Planning and Development Politics

   Posted On :  04.04.2022 12:23 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 8 : திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும்

பசுமைப் புரட்சி

இந்தியாவின் பொருளாதாரச் செயல்பாடுகளில் வேளாண்மைத் தொழில்தான் மிகவும் அடர்த்தியாகச் செயல்படும் தொழிலாக உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மையின் பங்கு 12-15% ஆகும்.

பசுமைப் புரட்சி 

அறிமுகம் 

இந்தியாவின் பொருளாதாரச் செயல்பாடுகளில் வேளாண்மைத் தொழில்தான் மிகவும் அடர்த்தியாகச் செயல்படும் தொழிலாக உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மையின் பங்கு 12-15% ஆகும். அதிகரித்துவரும் மக்கள் தொகைப் பெருக்கத்தால் அதிகரித்துவரும் உணவு தானியங்களின் தேவையைத் தொடர்ந்து நிறைவு செய்வதற்காக மட்டுமல்லாமல் மிகப்பெரும் எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழிலாகவும், உணவுப் பொருள்கள் உற்பத்தியின் மூலமாக வேளாண் தொழில்கள் பெருகவும், ஏற்றுமதி மூலம் அன்னிய செலவாணி ஈட்டவும் பெரும் பங்களிப்பு ஆற்றுகிறது. வேளாண்மை என்பது வெறும் உணவு தானிய விளைச்சலை மட்டும் குறிக்கவில்லை; மாறாக, தென்னை வளர்ப்பு, தோட்டங்கள், முந்திரி, காபி, தேயிலை, மிளகு, காய்கனிகள் என பணப் பயிர்கள் வளர்ப்பையும் உள்ளடக்கியது ஆகும்.

இந்தியா விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப இந்திய வேளாண் துறையை வளர்ப்பதன் அவசியம் குறித்து உணரப்பட்டது. இருந்தபோதும் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட 1 முதல் 12 ஐந்தாண்டுத் திட்டங்களிலும் வேளாண் துறைக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் வேறுபாடானவை ஆகும். ஏனெனில், விடுதலையைத் தொடர்ந்த தொடக்க ஆண்டுகளில் புதிய தொழில்கள் தொடங்கவும் தொழிற்துறையைப் பலப்படுத்தவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. விடுதலையை அடுத்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை ஆண்டுக்கு 2.5% அதிகரித்து வந்தது. இதனால் பாரம்பரிய முறை விவசாயம் மூலம் உணவுப் பொருள்கள் தேவையை ஈடுகட்ட முடிந்தது. ஆனால், 1960-களில் மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப உணவுத் தேவையை ஈடுகட்டுவதில் பற்றாக்குறை ஏற்பட்டதைத் தொடர்து பசுமைப் புரட்சி உருவானது.


இந்தியாவில் பசுமைப் புரட்சி

இந்தியா அடிப்படையில் ஒரு வேளாண்மை நாடு என்பதும் அதிகரித்துவரும் மக்கள் தொகை வேளாண்மையைச் சார்ந்துள்ளது என்பதும் நாம் அறிந்ததே. நாட்டின் முதல் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் அளித்த அனுபவங்கள் காரணமாக வேளாண்மையில் நிலவும் தீவிரமான பற்றாக்குறை உணரப்பட்டது. அவை வருமாறு:

மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க இயலவில்லை 

பாரம்பரிய விவசாய முறைகளே பின்பற்றப்பட்டதால் இந்த பற்றாக்குறை ஏற்பட்டது.

பாரம்பரிய வேளாண்மை முறைகளைப் பின்பற்றியதோடு மட்டுமல்லாமல் நீண்ட கால சாகுபடி முறையையே விவசாயிகள் தேர்ந்தெடுத்தனர். இதனால் விளைச்சல் காண அதிக நாள்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. 

இந்தியா ஒரு பருவமழை சார்ந்த நாடு என்பதால் மழைப்பொழிவைப் பொருத்தே விளைச்சல் இருந்தது. மழைப் பற்றாக்குறை ஏற்பட்டபோது வறட்சி உருவாகி, உணவு தானிய விளைச்சலைப் பாதித்தது. இதனால் பஞ்சம், பட்டினி, இறப்பு ஏற்பட்டன.

செயல்பாடு

* ஏதேனும் ஒரு கிராமத்தினைத் தேர்வு செய்து அங்குசென்று வேளாண் நடவடிக்கைகளைப் பார்வையிடவும். நில உரிமை, குத்தகை முறை, பாசனம், பயிரிடுதல் போன்ற நடவடிக்களைக் கவனித்தும் கேட்டறிந்தும் புரிந்து கொள்ளலாம். 

* மாடித் தோட்டங்கள் அமைத்தல், செங்குத்து தோட்டம் அமைத்தல், அங்கக வேளாண்மை ஆகியன குறித்து புரிந்து கொண்டு ஏதேனும் ஒன்றை முயற்சிக்கலாம்.

1960-களின் போது ஃபோர்ட் அறக்கட்டளை பரிந்துரைகள் அடிப்படையில் புதிய வேளாண் கொள்கை உருவாக்கப்பட்டது. 'இந்தியாவின் உணவு நெருக்கடியும் அதை எதிர்கொள்ளும் வழிகளும்' எனும் தலைப்பில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளை இந்திய அரசு 1959 - 60 ஆம் ஆண்டு ஏற்று வேளாண் சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தது. இச்சீர்திருத்தங்கள் ஒரு கலப்புத்திட்டமாக அமைந்தன; ஏற்கனவே நடைமுறையில் உள்ள பாசன முறைகளுடன் புதிய பாசன வசதிகள் ஏற்படுத்துவது உரமிடல் முறை, அதிக மகசூல் தரும் வீரிய விதைகள் அறிமுகம், பூச்சுக்கொல்லிகள் போன்ற இடுபொருள்கள் அறிமுகம் ஆகியனவற்றை உள்ளடக்கியதாக சீர்திருத்தங்கள் அமைந்தன. பசுமைப்புரட்சி என அழைக்கப்படும் இத்திட்டம் வேளாண் அறிவியலாளர் M.S. சுவாமிநாதன் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதனால் இவர் இந்தியாவின் "பசுமைப் புரட்சியின் தந்தை" என அழைக்கப்படுகிறார். சுருக்கமாகக் கூறினால் பாசன வசதிகள் அதிகரிப்பு, புதிய உரங்களின் பயன்பாடு ஆகியனவே இந்திய பசுமைப் புரட்சி என அறியப்படுகிறது. பசுமைப் புரட்சியின் மூலம் 1967-78இல் வேளாண் உற்பத்தி 50% அதிகரித்தது.

முதல் கட்டமாக, 1960இல் ஏழு மாநிலங்களில் ஏழு மாவட்டங்கள் முன்மாதிரி மாவட்டங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அடர்த்தியான பகுதி மேம்பாட்டுத் திட்டம் (IADP) எனும் பெயரில் செயல்படுத்தப்பட்டது. இதன் விளைவுகள் திருப்தியாக இருந்ததால் பிற மாநிலங்களுக்கும் மாநிலத்துக்கு ஒரு மாவட்டம் என விரிவுப்படுத்தப்பட்டது. இது 1965இல் 144 மாவட்டங்கள் என மேலும் விரிவடைந்தது.

தொடக்கத்தில் 2 மில்லியன் ஹெக்டேர் நிலங்களில் செயல்படுத்தப்பட்டது. படிப்படியாக மேலும் விரிவுபடுத்தப்பட்டு 70 மில்லியன் அதாவது 7கோடி ஹெக்டேர் நிலங்களில் செயல்படுத்தப்பட்டது. இது, இந்தியாவின் மொத்த நிலங்களில் 40% ஆகும். இந்த மாபெரும் வெற்றியே பசுமைப்புரட்சியாக எழுச்சி கண்டது. இதன் விளைவாக ஆண்டு முழுவதும் வேளாண் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆண்டுக்கு ஒரு போகம் என்ற நிலை மாறி இரண்டு போகம், மூன்று போகம் மகசூல் காணப்பட்டன. மேலும் ஊடு பயிரிடும் முறையும் பின்பற்றப்பட்டன. இதனால் நெல், கோதுமை போன்ற பாரம்பரிய பயிர்கள் மட்டுமல்லாமல் மற்ற பயிர்களும் அறிமுகம் செய்யப்பட்டன. நாட்டின் பல பகுதிகளில் மாறுபட்ட தட்ப வெட்ப நிலைகள் நிலவும் நாட்டில் மாறுபட்ட பயிரிடும் முறைகள் பின்பற்றப்படுகின்றன. கோதுமை விளைவிக்கும் பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் நல்விளைவுகள் காணப்பட்டன; நெல் பயிரிடும் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகம், போன்ற மாநிலங்கள் குறைவான வெற்றி காணப்பட்டன. இருப்பினும், ஒட்டுமொத்தமாக விளைச்சல் அதிகரித்து உணவுப் பற்றாக்குறை சிறப்பாகக் குறைக்கப்பட்டது.



பசுமைப் புரட்சியின் முக்கிய தாக்கங்கள் 

வேளாண் உற்பத்தி தொடர் அதிகரிப்பு 

1950- களில் காலக்கட்டத்தோடு ஒப்பிடுகையில் வேளாண் உற்பத்தி இரண்டிலிருந்து மூன்றுமடங்குகள் அதிகரித்தது. 1950-களில் நிலவிய உணவு பற்றாக்குறை காரணமாக உணவு தானியங்களை PL140 திட்டத்தின் கீழ் அமெரிக்காவிலிருந்து உணவுத் தானியங்களை இந்தியா இறக்குமதி செய்யவேண்டியிருந்தது. அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக இன்று நிலைமை மாறியது. மேலும் வெளிசந்தையிலும் விவசாய உற்பத்திப் பொருள்கள் தாராளமாக கிடைக்கின்றன.

வேளாண் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு

ஆண்டு முழுவதும் விவசாய நடவடிக்கைகள் தொடர்ந்தால் விவசாய வேலைவாய்ப்புக்கான தேவை அதிகரித்தது. இந்த தேவை இரண்டு குழுக்களில் உணரப்பட்டது. முதலாவதாக, விவசாய நிலங்களில் பாரம்பரிய முறைகளில் பணியாற்றும் திறனற்ற விவசாய தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் அதிகரித்தன. இரண்டாதாக, அறிவியல் முறையில் வேளாண் உற்பத்தியில் ஈடுபடுவதற்கு தகுதி பெற்ற வேளாண் பொறியாளர்களின் தேவையும் அதிகரித்தது.

வேளாண்மை தொழிற்துறை சந்தை

இந்தியாவில் கொண்டுவரப்பட்ட பசுமைப் புரட்சியின் விளைவாக வேளாண் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது மட்டுமல்லாமல் சந்தைக்கும் தொழிற்துறைக்கும் இடையிலான ஆரோக்கியமான உறவுகள் ஏற்பட்டது. அறிவியல் முறை, வேளாண்மை, டிராக்டர்கள், போன்ற பண்ணை உபகரணங்கள் வேளாண் பொறியியல் சார்ந்து இருந்ததால் அதிகரித்து வரும் தேவையை உணர்ந்த தொழிற்துறையும் இத்தகைய வேளாண் உபகரணங்களை குறைந்த விலைக்கு உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டினர். அதேபோல், வேளாண் உற்பத்திப் பொருள்களை நுகர்வோருக்கு கொண்டு சேர்க்கும் வகையில், பதப்படுத்துதல் மற்றும் விநியோகத்தில் சந்தையும் தனது பங்கினை திறம்பட ஆற்றத் தொடங்கியது.

மாநிலங்களுக்கிடையிலான பரிமாற்றம் மற்றும் சந்தைமுறை

பசுமைப் புரட்சியின்போது இந்தியாவில் பல மாநிலங்கள் எதிர்கொள்ள நேர்ந்த முக்கிய பிரச்சனை என்பது மண் வளமிக்க மாநிலங்களில் மட்டுமே பசுமைப் புரட்சி பயனளிக்கக்கூடியதாக இருந்தது என்பதாகும். இதனால் உபரி உற்பத்தி அடைந்த மாநிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட விதர்பா பகுதி மற்றும், தெலங்கானா மாநிலத்திற்கு தங்கள் உபரியை விநியோகித்தனர். இதன்மூலமாக நுகர்வு தேவையை நிறைவு செய்யும் வண்ணம் மாநிலங்களுக்கிடையேயான வேளாண்மை சந்தை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் உணவுத் தானியங்களை இறக்குமதி செய்யும் நிலை குறைந்தது. 

சிறு விவசாயிகள், பெரிய விவசாயிகள் இடையேயான ஏற்றத்தாழ்வு

சிறு விவசாயிகள் நிதி வசதியின்மை , உள்கட்டமைப்பு வசதியின்மை, சந்தையை அணுகும் ஆற்றலின்மை காரணமாக சிறு விவசாயிகளால் பெரிய விவசாயிகளுடன் போட்டியிட இயலவில்லை. இதனால் சிறு விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டனர். சிறு விவசாயிகளும், புதிய வேளாண் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்ட இயலவில்லை . இதனால் வேளாண் பொருளாதாரத்தைப் பொருத்தவரை மாநிலங்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு ஏற்பட்டது போன்றே விவசாயிகள் மத்தியிலும் ஏற்றத்தாழ்வுகள் உருவாயின.

வெகுமக்கள் இயக்கம்

பசுமைப் புரட்சியால் இந்தியாவின் பெரும்பான்மை வேளாண் சமுதாயம் தனிப்பட்ட மற்றும் தேசிய சமூகப்பொருளாதார நலன்களுக்காக ஒன்றுப்படுத்தப்பட்டனர். இதனால் விவசாய உற்பத்தி அதிகரித்ததுடன் விவசாய சமுதாயத்தின் வருவாயும் அதிகரித்தது. விவசாய சந்தைகளில் ஏற்பட்ட போட்டிகளின் காரணமாக விவசாய விளைப்பொருள்களுக்கு நல்ல விலை கிடைத்தது. இதனால் இந்தியாவின் ஒட்டு மொத்த வேளாண் சமுதாயமும் பசுமைப் புரட்சியில் பங்கெடுத்தது. தொழிற்துறை போல் அல்லாமல் வேளாண்மைத்துறை குறுகிய கால வளர்ச்சியும் இலாபமும் பெற்றது. இதனால் விவசாய சமுதாயத்தினர் மத்தியில் பசுமைப் புரட்சியில் பங்கெடுப்பது புரட்சிகரமாகப் பார்க்கப்பட்டது.


பசுமைப்புரட்சியின் முக்கியபின்னடைவுகள்

இந்தியாவில் நிலவிய புவி-காலநிலை அம்சங்கள் காரணமாக கீழ்க்காணும் பின்னடைவுகள் ஏற்பட்டன. 

பகுதி சார்ந்த, மகசூல் சார்ந்த, பண்ணைமுறை சார்ந்த வேறுபாடுகள். ஏழை, பணக்கார விவசாயிகளிடம் காணப்பட்ட நீண்ட இடைவெளி 

வேளாண் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தேவையான தொடக்க முதலீடு, சிறு விவசாயிகளிடம் இல்லாதது. 

மகசூலை அதிகரிப்பதற்காக கேடு விளைவிக்கும் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகமாக பயன்படுத்தியது. 

புதிய தொழில்நுட்பப் பயன்பாட்டை சமூக மயப்படுத்துவதிலும் முன் தயாரிப்பிலும் பின்னடைவு. 

மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த இயலாததால் இதில் ஒரு முடிவில்லா செயல்முறையாக நீண்டது. 


பசுமைப் புரட்சியின் சாதனைகள்

உணவுத் தானிய பற்றாக்குறை முடிவுக்கு வந்தது.

உயர் மகசூல் அளிக்கும் விதைகளும் பயிரிடும் முறைகளும் விவசாயிகளுக்கு ஊக்கமளித்தன. 

நீலம், மஞ்சள், வெண்மைப் புரட்சிகளின் மூலமாக மீன் வளம், கோழி வளர்ப்பு மற்றும் பால்பண்ணை தொழில்கள் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டன. 

பணப்பயிர்கள் மற்றும் நறுமணப் பொருள்கள் உற்பத்திக்கும் சம முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் பணப்பயிர்களை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதிச் செய்யும் நாடாக இந்தியா உருவானது. இதனால் அந்நிய செலவாணி வரவு அதிகரித்தது. இருந்தபோதும், கரும்பு, எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள் போன்ற பயிர்கள் பயிரிடுவதில் விவசாயிகள் போதிய ஆர்வம் காட்டவில்லை. இதன் முக்கியத்துவம் 1970-களிலும் 1980-களின் தொடக்கத்திலும் உணரப்பட்டது. 


Tags : Major impacts, Major Shortfalls, Achievements, in India பசுமைப் புரட்சியின் முக்கிய தாக்கங்கள் , முக்கியபின்னடைவுகள், சாதனைகள்.
12th Political Science : Chapter 8 : Planning and Development Politics : Green Revolution Major impacts, Major Shortfalls, Achievements, in India in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 8 : திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும் : பசுமைப் புரட்சி - பசுமைப் புரட்சியின் முக்கிய தாக்கங்கள் , முக்கியபின்னடைவுகள், சாதனைகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 8 : திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும்