Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | குப்தரின் நிர்வாக முறை

குப்தர் - வரலாறு - குப்தரின் நிர்வாக முறை | 11th History : Chapter 7 : The Guptas

   Posted On :  18.05.2022 05:33 am

11 வது வகுப்பு வரலாறு : அலகு 7 : குப்தர்

குப்தரின் நிர்வாக முறை

குப்தர் ஆட்சியில் அரசியல் அதிகாரப்படிநிலைகள் காணப்பட்டன. வழங்கப்பட்ட பட்டங்கள், மேலதிகாரம், கீழ்ப்படிதல் ஆகிய உறவுகளின் வழியாக அதிகாரப் படிநிலைகளை அறிய முடிகிறது.

குப்தரின் நிர்வாக முறை

 

அரசர்

குப்தர் ஆட்சியில் அரசியல் அதிகாரப்படிநிலைகள் காணப்பட்டன. வழங்கப்பட்ட பட்டங்கள், மேலதிகாரம், கீழ்ப்படிதல் ஆகிய உறவுகளின் வழியாக அதிகாரப் படிநிலைகளை அறிய முடிகிறது. அரசர்கள் மகாராஜாதிராஜ ,பரம் - பட்டாரக, பரமேஷ்வர போன்ற பட்டங்களை ஏற்றார்கள். பரம் - தைவத (கடவுளின் பரமபக்தன்), பரம் - பாகவத (வாசுதேவகிருஷ்ண னின் பரமபக்தன்) போன்ற அடைமொழிகளால் தம்மைக் கடவுளோடும் இணைத்துக் கொண்டனர். குப்த அரசர்கள் தாம் தெய்வாம்சம் பொருந்தியவர்கள் என்ற பிம்பத்தை முன்வைத்ததாகவும் சில வரலாற்றாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக அலகாபாத் கல்வெட்டுகளில் சமுத்திரகுப்தர் புருஷா (அனைவருக்கும் மேலானவர்) என்ற கடவுளுடன் ஒப்பிடப்படுகிறார். அரசருக்கு, ஒரு தெய்வீகத் தகுதி நிலையை நிறுவும் முயற்சிகளாக இவற்றைக் கருதலாம்.

 

அமைச்சர்கள், அதிகாரிகள்

முத்திரைகள், கல்வெட்டுகள் போன்றவற்றில் பதிவிடப்பட்டுள்ளவை அதிகாரிகளின் படிநிலைகளையும் அவர்களது பதவிகளையும் குறிப்பிட்டாலும், அவற்றின் தெளிவான பொருளைப் பல நேரங்களில் அறிய முடியவில்லை. குமாரமாத்யா என்ற சொல் ஆறு வைசாலி முத்திரைகளில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பதவி தனக்கெனத் தனியாக அலுவலகம் (அதிகரணா) உள்ள ஒரு உயரதிகாரியைக் குறிப்பிடுவது போல் உள்ளது. அமாத்யா என்ற சொல் பல முத்திரைகளில் காணப்படுகிறது. குமாரமாத்தியா என்பது அமாத்யாக்களில் மிக முக்கியமான பதவியாக, அரசகுல இளவரசர்களின் தகுதிக்குச் சமமானதாக இருக்கும் போல் தெரிகிறது. குமாரமாத்யாக்கள் அரசர், பட்டத்து இளவரசர், வருவாய்த்துறை, அல்லது ஒரு மாகாணம் என்று பலவற்றோடு தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். ஒரு லிச்சாவி முத்திரை லிச்சாவியர்களின் பட்ட மேற்பு விழாவிற்கான புனித குளத்திற்குப் பொறுப்பான ஒரு குமாரமாத்யா பற்றிக் குறிப்பிடுகிறது.

குமாரமாத்யா பொறுப்பில் உள்ளவர்கள் சில சமயங்களில் கூடுதல் பொறுப்புகளையும் பதவிப் பெயர்களையும் கொண்டிருந்தனர். இந்தப் பொறுப்புகள் வாரிசு அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக, அலகாபாத் பிரசஸ்தியை (மெய்க்கீர்த்தி அல்லது புகழுரைக் கல்வெட்டு) எழுதிய ஹரிசேனர் ஒரு குமாரமாத்யா, சந்திவிக்ரஹிகா, மஹாதண்டநாயகா ஆகிய பட்டங்களைக் கொண்டவராக இருந்துள்ளார். அவர் மஹாதண்டநாயகா துருவபூதியின் புதல்வர் ஆவார்.



ஹுணர்களின் தோற்றம் குறித்து உறுதியாக எதுவும் தெரியவில்லை . ரோமானிய வரலாற்றாளர் டாசிடஸின் கூற்றுப்படி, அவர்கள் காஸ்பியன் கடல் அருகில் வாழ்ந்த பழங்குடி இனக்குழுக்கள். ரோமாபுரிப் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தவர்கள். அட்டில்லாவின் தலைமையில் திரண்ட இவர்கள் ஐரோப்பாவில் கொடுங்கோண்மைக்குப் பெயர் பெற்றவர்கள். வெள்ளை ஹுணர்கள் என்று அழைக்கப்பட்ட ஹுணர்களின் ஒரு பிரிவு மத்திய ஆசியாவிலிருந்து இந்தியா நோக்கி நகர்ந்தது. இவர்களது படையெடுப்பு குஷாணர்கள் காலத்திற்கு நூறு ஆண்டுகளுக்குப் பின் ஆரம்பமானது.

 

அமைச்சர் குழு

 

குப்த அரசர்களுக்கு ஒரு அமைச்சர் குழு உதவி புரிந்தது. அலகாபாத் கல்வெட்டு சபா என்ற ஒரு குழு குறித்துக் கூறுகிறது. இது அமைச்சர் குழுவாக இருக்கலாம். மஹாசந்தி விக்ரஹா என்பவர் அமைச்சர்களில் உயர் நிலையில் இருந்துள்ளார். இவர் அமைதி மற்றும் போருக்கான அமைச்சர். இவர்தான் போர் தொடுத்தல், உடன்பாடு காணுதல், ஒப்பந்தங்கள் மேற்கொள்ளுதல் என்று பிற நாடுகளுடனான தொடர்புகளுக்குப் பொறுப்பானவர்.

நீதித்துறை, ராணுவம் ஆகியவற்றின் பொறுப்பு வகித்தவர் தண்டநாயகா அல்லது மஹாதண்டநாயகா என்றழைக்கப்பட்டுள்ளார். ஒரு முத்திரை அக்கினிகுப்தர் என்ற மஹாதண்டநாயகா குறித்துப் பேசுகிறது. அலகாபாத் கல்வெட்டு மூன்று மஹாதண்டநாயகாக்களைக் குறித்து கூறுகிறது. இவையனைத்தும் இந்தப் பதவிகள் எல்லாம் வாரிசுரிமையாக வருபவை என்பதைக் காட்டுகின்றன. மற்றொருவருக்கு மஹாஅஸ்வபதி (குதிரைப்படைத் தலைவர்) என்ற பதவி இருந்துள்ளது.

 

பேரரசின் பிரிவுகள்

குப்தர்களின் பேரரசு 'தேசம்' அல்லதுபுக்தி' எனப்படும் மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. உபாரிகா என்றழைக்கப்பட்ட ஆளுநர்களால் இவை நிர்வகிக்கப்பட்டன. உபாரிகாக்கள் அரசரால் நேரடியாக நியமிக்கப்பட்டனர். உபாரிகாக்கள் மாவட்ட தலைமை நிர்வாக அதிகாரிகளையும் வாரிய அதிகாரிகளையும் நியமித்தனர். உபாரிகாக்கள் நிர்வாக அதிகாரத்தோடு , யானைகள், குதிரைகள், வீரர்கள் என்று ராணுவ நிர்வாகத்தையும் கையில் வைத்திருந்தனர். தாமோதர்பூர் செப்பேடுகளில் மூன்று உபாரிகாக்களுக்கு மகாராஜா என்ற பட்டம் இருந்ததாகக் குறிப்பிடப்படுவதன் மூலம் நிர்வாகத்தில் இவர்களுக்கு இருந்த உயர்நிலை தெரிகிறது. குப்த ஆண்டு 165 என்று தேதியிடப்பட்டுள்ள புத்தகுப்தரின் ஏரான் தூண் கல்வெட்டு காளிந்தி மற்றும் நர்மதை நதிகளுக்கிடையிலான நிலங்களை ஆட்சிசெய்த லோக பாலா என்று மகாராஜா சுரஷ்மிசந்திரா என்பவரைக் குறிப்பிடுகிறது. இங்கு லோகபாலா என்பது மாநில ஆளுநரைக் குறிப்பிடுவதாகலாம்.

குப்தப் பேரரசின் மாநிலங்கள் விஷ்யபதி என்ற அதிகாரியின் கீழ் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன இவை விஷ்யா என அழைக்கப்பட்டன விஷ்யபதிகள் பொதுவாக மாநில ஆளுநரால் நியமிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சிலசமயங்களில் அரசரே நேரடியாக விஷ்யபதிகளை நியமித்தார். விஷ்ய பதியின் நிர்வாகக் கடமைகளுக்கு நகரத்தின் சில முக்கியமான மனிதர்கள் உதவி புரிந்தார்கள்.

 

மாவட்ட மட்டத்திற்குக் கீழே இருந்த நிர்வாக அலகுகள்

மாவட்ட மட்டத்திற்குக் கீழ் விதி, பூமி, பதகா, பீடா என்று பல்வேறு விதமான நிர்வாக அலகுகள் இருந்தன. ஆயுக்தகா, விதி - மஹாதரா எனப்படும் அதிகாரிகள் குறித்த குறிப்புகளும் காணப்படுகின்றன. கிராம மட்டத்தில் கிராமிகா, கிராம் அத்யக்ஷா போன்ற அதிகாரிகள் இருந்துள்ளனர். இவர்களை கிராம மக்களே தேர்ந்தெடுத்தனர். புத்தகுப்தர் காலத்து தாமோதர்பூர் செப்பேடு , மஹாதாரா என்பவர் தலைமையிலான அஷ்டகுல - அதிகாரனா (எட்டு உறுப்பினர் கொண்ட குழு) குறித்து குறிப்பிடுகிறது. மஹாதாரா என்பதற்கு கிராமப் பெரியவர், கிராமத் தலைவர், குடும்பத் தலைவர் என்று பல பொருள் உண்டு. இரண்டாம் சந்திரகுப்தர் காலத்து சாஞ்சி கல்வெட்டு பஞ்சமண்டலி என்பதைக் குறிப்பிடுகிறது. இது ஒரு குழும நிறுவனமாக இருக்கலாம்.

 

இராணுவம்

 

முத்திரைகள், கல்வெட்டுகள் ஆகியன பாலாதி கிருத்யா, மஹாபாலாதி கிருத்யா (காலாட்படை மற்றும் குதிரைப்படை தளபதி) போன்ற ராணுவப் பதவிகளைக் குறிப்பிடுகின்றன. வழக்கமாகப் பயன்படுத்தப்படும் சேனாபதி என்ற சொல் குப்தர் கல்வெட்டுகளில் காணப்படவில்லை. ஆனால் சில வாகடக கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. ஒரு வைசாலி முத்திரை ராணுவக்கிடங்கின் அலுவலகமான ரணபந்தகர் அதிகாரனாவைக் குறிப்பிடுகிறது. மற்றொரு வைசாலி முத்திரை, தண்டபாஷிகா என்ற அதிகாரியின் அலுவலகத்தைக் குறிப்பிடுகிறது. இது மாவட்ட அளவிலான காவல்துறை அலுவலகமாக இருக்கலாம்.

மஹாபிரதிஹரா (அரண்மனைக் காவலர்கள் தலைவர்), கத்யத பகிதா (அரச சமையலறைக் கண்காணிப்பாளர்) போன்ற அரண்மனையுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்த அதிகாரிகள் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஒரு வைசாலி முத்திரை மஹாபிரதிகராவாகவும் தாராவராகவும் இருந்த ஒருவரைப் குறித்துக் குறிப்பிடுகிறது. நிர்வாக அமைப்பின் மேல் மட்டத்தில் அமாத்தியா, சச்சிவா ஆகியோர் இருந்தார்கள். இவர்கள் பல்வேறு துறைகளுக்குப் பொறுப்பாக இருந்த நிர்வாக அதிகாரிகளாவர். துடகா என்றழைக்கப்பட்ட ஒற்றர்கள் கொண்ட உளவு அமைப்பும் இருந்தது. ஆயுக்தகா என்பது மற்றொரு உயர்மட்ட அதிகாரப் பதவியாகும்.

Tags : The Guptas | History குப்தர் - வரலாறு.
11th History : Chapter 7 : The Guptas : Gupta's Administrative System The Guptas | History in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 7 : குப்தர் : குப்தரின் நிர்வாக முறை - குப்தர் - வரலாறு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 7 : குப்தர்