Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | பேரழிவும் பின்விளைவும்

இரண்டாம் உலகப்போர் - பேரழிவும் பின்விளைவும் | 10th Social Science : History : Chapter 3 : World War II

   Posted On :  05.07.2022 01:00 am

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 3 : இரண்டாம் உலகப்போர்

பேரழிவும் பின்விளைவும்

ஹிட்லர் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் யூதர்கள் பலவழிகளில் கொடுமைப்படுத்தப்பட்டனர்.

பேரழிவும் பின்விளைவும்

ஹிட்லர் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் யூதர்கள் பலவழிகளில் கொடுமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கான சமூக உரிமைகள் மறுக்கப்பட்டன. அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் ‘கெட்டோக்கள்' எனப்படும் ஒதுக்குபுறமான பகுதிகளில் வாழ வற்புறுத்தப்பட்டனர். இவற்றைத் தொடர்ந்து நாசிகள் யூதர்களை முற்றிலுமாகக் கொன்று குவிப்பதற்காக ‘இறுதித் தீர்வு’ எனும் கருத்தை முன்வைத்தனர்.

இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மானியர்களால் ஆறு மில்லியன் யூத மக்கள் கொல்லப்பட்ட இனஅழிப்பை விளக்குவதற்கு பேரழிவுப்படுகொலை (Holocaust) என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஹிட்லர் மற்றும் நாசிகளுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலின் முக்கிய அம்சங்களின் ஒன்று யூதர்களை அழிப்பதாகும். ஜெர்மனியில் சாதாரணமாகவும் சொல்லப்போனால் ஐரோப்பா முழுவதும் ஏற்கனவே நிலவிவந்த யூத எதிர்ப்பு உணர்வுகளை ஹிட்லர் பயன்படுத்திக் கொண்டார். யூதர்கள் ஐரோப்பா முழுவதிலும் சிதறிக்கிடந்தனர். அவர்களில் பலர் வணிகத்துறையிலும் கலைகளிலும் தொழிற்துறைகளிலும் புகழ்பெற்று விளங்கினர். வட்டித்தொழில் யூதர்களிடையே முக்கிய வணிக நடவடிக்கையாக இருந்தது. இது அவர்களுக்கு எதிரான வெறுப்பை மேலும் வலுவடையச் செய்தது. ஷேக்ஸ்பியரின் வெனிஸ் நகர வணிகர் (Merchant of Venice) எனும் நாடகம் மக்களிடையே யூதர்களின் மீதிருந்த வெறுப்பையும் அவநம்பிக்கையையும் படம் பிடித்துக் காட்டியது.

மனித உரிமைப் பிரகடனம்

இத்தகையப் பேரழிவு நடைபெற்றபின், ஐக்கிய நாடுகள் சபை தன்னுடைய மனித உரிமை சாசனத்தில் இனம், பால், மொழி, மதம் ஆகிய வேறுபாடுகளின்றி அடிப்படைச் சுதந்திரமும் மனித உரிமைகளும் உலகளாவிய முறையில் கடைபிடிக்கப்படுவதை ஊக்குவிக்கப்போவதாக உறுதிமொழி மேற்கொண்டது. உலகளாவிய முறையில் மனித உரிமைகளைக் காப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபைமேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பால் உருவாக்கப்பட்ட குழு ஒன்றுக்கு மறைந்த குடியரசுத் தலைவர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட்டின் மனைவியார் எலினார் ரூஸ்வெல்ட் தலைமை வகித்தார். ஆணையக் குழுவில் உறுப்பினர்களாக சார்லஸ் மாலிக் (லெபனான்), P.C.சாங் (தேசியவாத சீனா), ஜான் ஹம்ப்ரி (கனடா), ரெனே காசின் (பிரான்ஸ்) ஆகியோர் இருந்தனர். மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனம் 30 கட்டுரைகளில் அடிப்படை மனித உரிமைகளை முன் வைக்கிறது. 1948 டிசம்பர் 10இல் ஐ.நா. சபை இந்த வரலாற்று சாசனத்தை ஏற்றுக் கொண்டது. இந்த நாள் (டிசம்பர் 10) உலகம் முழுவதும் மனித உரிமைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இப்பிரகடனத்தைப் பின்பற்றி 1948இல் தொடங்கி சுமார் 90 நாடுகளின் அரசியல் அமைப்புகளில் மனித உரிமைகள் தொடர்பான சரத்துக்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதாக நியூயார்க்கிலுள்ள ‘பிராங்கிளின் எலினார் ரூஸ்வெல்ட்’ நிறுவனம் கூறுகிறது.

இஸ்ரேல் நாட்டின் பிறப்பு

மேற்சொல்லப்பட்ட பேரழிவின் முக்கிய விளைவு யூத இன மக்களுக்கென இஸ்ரேல் எனும் நாடு உருவாக்கப்பட்டதாகும். வரலாற்று ரீதியாக, ரோமர்கள் காலத்திலிருந்து இதுவே இவர்களின் தாயகமாகும்.



Tags : World War II இரண்டாம் உலகப்போர்.
10th Social Science : History : Chapter 3 : World War II : Holocaust and Its Fallout World War II in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 3 : இரண்டாம் உலகப்போர் : பேரழிவும் பின்விளைவும் - இரண்டாம் உலகப்போர் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு - 3 : இரண்டாம் உலகப்போர்