Home | 12 ஆம் வகுப்பு | 12வது விலங்கியல் | மனித இனப்பெருக்க மண்டலம்
   Posted On :  22.03.2022 05:39 pm

12ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 2 : மனித இனப்பெருக்கம்

மனித இனப்பெருக்க மண்டலம்

ஓரிணை விந்தகங்கள், துணை நாளங்கள், சுரப்பிகள் மற்றும் புற இனப்பெருக்க உறுப்புகள் ஆகியவற்றின் தொகுப்பே ஆண் இனப்பெருக்க மண்டலம் ஆகும்

மனித இனப்பெருக்க மண்டலம்

ஓரிணை விந்தகங்கள், துணை நாளங்கள், சுரப்பிகள் மற்றும் புற இனப்பெருக்க உறுப்புகள் ஆகியவற்றின் தொகுப்பே ஆண் இனப்பெருக்க மண்டலம் ஆகும் (படம் 2.1).


விந்தகங்கள் ஆணின் முதன்மைபாலுறுப்புகள் ஆகும். இவை ஓரிணை முட்டை வடிவ அமைப்புகளாக விதைப்பையினுள் அமைந்துள்ளன (படம் 2.2) (அ). வயிற்றறையின் வெளிப்புறமாக அமைந்துள்ள தோலால் ஆன பை போன்ற அமைப்பு விதைப்பை ஆகும். இயல்பான மனித உடல் வெப்பத்தில் வீரியமான விந்தணுக்களை உற்பத்தி செய்ய இயலாது. எனவே, விதைப்பையானது வயிற்றறையின் வெளியில் அமைந்து இயல்பான உடல் வெப்பநிலையைவிட 2°C முதல் 3°C குறைவான வெப்பநிலையை விந்தகங்களுக்கு அளிக்கிறது. இவ்வாறு விதைப்பையானது ஒரு ‘வெப்ப நெறிப்படுத்தி’யாகச் (Thermo regulator) செயல் புரிவதால் விந்து செல் உருவாக்கம் (Spermatogenesis) நடைபெறுகிறது.


ஒவ்வொரு விந்தகமும் 'டியூனிகா அல்புஜினியா (Tunica albuginea) என்னும் நாரிழைத் தன்மை கொண்ட வெளிப்புற உறையால் மூடப்பட்டுள்ளது. ஒவ்வொரு விந்தகமும் தடுப்புச்சுவர்களால் 200 முதல் 250 கதுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதுப்பும் 2 முதல் 4 விந்தக நுண்குழல்களைக் (Seminiferous tubules) கொண்டுள்ளன. மிகுந்த சுருள் தன்மையுடன் காணப்படும் இவ்விந்தக நுண்குழல்கள் %80 விந்தகப் பொருட்களை உற்பத்தி செய்கின்ற விந்து உற்பத்தித் தளங்களாகும்.

மறை விந்தகம் (Cryptorchism)  விந்தகங்களுள் ஏதேனும் ஒன்றோ அல்லது இரண்டுமோ விதைப்பையினுள் இறங்காமல் உடலுக்குள்ளேயே தங்கிவிடும் நிகழ்ச்சிக்கு மறை விந்தகம் (‘விந்தக உள் தங்கல்') (Cryptorchism: Crypto = மறைக்கப்பட்ட + Orchis = விந்தகம்) என்று பெயர். பிறந்த ஆண் குழந்தைகளுள் 1% முதல் 3% குழந்தைகளில் இந்நிலை காணப்படுகிறது. இத்தகைய குழந்தைகள் பிற்காலத்தில் விந்தணு உற்பத்தி செய்ய இயலாமல் மலட்டுத்தன்மை கொண்டவர்களாகலாம். இளம் வயதிலேயே அறுவை சிகிச்சை செய்து இக்குறைபாட்டைச் சரி செய்யலாம்.


விந்தக நுண் குழலில் காணும் அடுக்கு எபிதீலியம் இருவகை செல்களைக் கொண்டுள்ளது. அவை, செர்டோலி செல்கள் (Sertoli cells) அல்லது செவிலிச்செல்கள் (Nurse cells) மற்றும் விந்து உற்பத்தி செல்கள் (Spermatogonic cells) ஆகும். நீண்ட பிரமிடு வடிவம் கொண்ட செர்டோலி செல்கள் விந்தணுவாக்கத்தின் போது விந்துக்கள் முதிர்ச்சியடையும் வரை அவற்றிற்கு உணவூட்டம் அளிக்கின்றன. மேலும் விந்து செல் உற்பத்தியின் போது இவை இன்ஹிபின் (Inhibin) என்னும் ஹார்மோனைச் சுரந்து எதிர்மறை பின்னூட்ட கட்டுப்பாட்டை மேற்கொள்கின்றன. விந்து உற்பத்தி செல்கள் குன்றல் பகுப்படைந்து முதிர்ந்த விந்து செல்களாக வேறுபாடு அடைகின்றன.

விந்து நுண் குழல்களைச் சூழ்ந்துள்ள மென்மையான இணைப்புத்திசுவினுள் இடையீட்டு செல்கள் (Interstitial cells) அல்லது லீடிக் செல்கள் (leydig cells) பொதிந்து காணப்படுகின்றன. இச்செல்கள் விந்து செல்லாக்கத்தைத் தொடங்கும் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரோன் (Testosterone) எனும் ஆண் இன ஹார்மோனைச் (Androgens) சுரக்கின்றன. நாளமில்லாச் சுரப்பித் தன்மையைப் பெற்றுள்ள இச்செல்கள் பாலூட்டிகளில் உள்ள விந்தகங்களின் முக்கியப் பண்பாக விளங்குகிறது. நோய்த்தடைகாப்புத் திறன் பெற்ற பிற செல்களும் காணப்படுகின்றன.

ரீட் டெஸ்டிஸ் (Rete testis), விந்து நுண் நாளங்கள் (Vasa efferentia), விந்தக மேல் சுருண்ட குழல் (epididymis) மற்றும் விந்து நாளங்கள் (Vas deferens) ஆகியவை ஆண் இனப்பெருக்க மண்டலத்தோடு தொடர்புடைய துணை நாளங்களாகும் (படம் 2.2) (ஆ). விந்தகக் கதுப்பிலுள்ள விந்தக நுண் குழல்கள் (Seminiferous tubules) ஒன்று சேர்ந்து டியூபுலஸ் ரெக்ட்டஸ் எனும் விந்து நேர் நுண் கால்வாயாக மாறி (Tubulus rectus) விந்து செல்களை ரீட் டெஸ்டிஸ் என்னும் பகுதிக்குள் அனுப்புகின்றன. ரீட் டெஸ்டிஸ் என்பது விந்தகத்தின் பின் பகுதியில் அமைந்துள்ள நுண்குழல்களாலான வலைப்பின்னல் போன்ற அமைப்பாகும். இப்பகுதியிலிருந்து வெளியேறும் விந்து செல்கள் விந்து நுண் நாளங்கள் வழியாக விந்தக மேல் சுருள் குழலுக்குள் நுழைகின்றன. மிகவும் சுருண்டு காணப்படும் இந்த ஒற்றைக் குழலில் விந்து செல்கள் தற்காலிகமாகச் சேமித்து வைக்கப்படுகின்றன. இங்கே அவை செயலியல் ரீதியாக முதிர்ச்சியடைந்து, அதிக இயங்குதிறனையும், கருவுறச் செய்யும் திறனையும் பெறுகின்றன.

விந்தக மேல் சுருண்ட குழலின் முடிவுப்பகுதி விந்து நாளத்திற்குள் திறக்கிறது. அங்கு விந்துப்பை நாளத்துடன் (Duct of seminal vesicle) இணைந்து விந்து உந்து நாளத்தை (Ejaculatory duct) உருவாக்குகிறது.


விந்து உந்து நாளமானது புரோஸ்டேட் சுரப்பியை ஊடுருவிச் சென்று சிறுநீர் வடிகுழாயில் (Urethra) திறக்கிறது. இது ஆண் இனப்பெருக்க மண்டலத்தின் முடிவுப் பகுதி ஆகும். இதன் மூலம் வெவ்வேறு நேரங்களில் சிறுநீர் மற்றும் விந்து திரவங்கள் தனித்தனியாக வெளியேறுகின்றன. சிறுநீர் வடிகுழாய் சிறுநீர்ப்பையில் தொடங்கி, ஆண் குறி (Penis) வழியாகச் சென்று அதன் நுனியில் அமைந்துள்ள சிறுநீர்ப் புறத்துவாரத்தின் (Urethral meatus) வழியாக வெளியில் திறக்கிறது.

ஆண் இனப்பெருக்க மண்டலத்தில் ஓரிணை விந்துப்பைகளும் (Seminal vesicles), கௌப்பர் சுரப்பிகள் (Cowper's gland) என அழைக்கப்படும் ஓரிணை பல்போயுரித்ரல் (Bulbourethral gland) சுரப்பிகளும் மற்றும் ஒற்றை புரோஸ்டேட் சுரப்பியும் (Prostate gland) துணை சுரப்பிகளாக உள்ளன. விந்துப்பைகள் 'செமினல் பிளாஸ்மா (Seminal plasma) என்னும் காரத்தன்மையுள்ள திரவத்தைச் சுரக்கின்றன. இத்திரவத்தில் ஃப்ரக்டோஸ், அஸ்கார்பிக் அமிலம், புரோஸ்டகிளான்டின்கள் மற்றும் விந்து திரவத்தை உறைய வைக்கும் நொதியான ‘வெஸிகுலேஸ்’ (Vesiculase) போன்றவை காணப்படுகின்றன. இந்நொதி, விந்து செல் இயக்கத்தை துரிதப்படுத்துகிறது. புரோஸ்டேட் சுரப்பியின் கீழ்ப்புறமாக பல்போயுரிதரல் சுரப்பிகள் காணப்படுகின்றன. இவை வழவழப்பான உயவுப் பொருளைச் சுரக்கின்றன. புரோஸ்டேட் சுரப்பியானது சிறுநீர்ப்பையின் அடியில், சிறுநீர் வடிகுழாயைச் சூழ்ந்தமைந்துள்ளது. இது இலேசான அமிலத்தன்மை கொண்ட திரவத்தைச் சுரக்கிறது. இத்திரவத்தில் சிட்ரேட், பலவித நொதிகள் மற்றும் புரோஸ்டேட் சுரப்பிக்கே உரிய குறிப்பிட்ட ஆன்டிஜென்கள் ஆகியவை காணப்படுகின்றன. விந்துப்பைகள், புரோஸ்டேட் சுரப்பி மற்றும் பல்போயுரித்ரல் சுரப்பிகளிலிருந்து சுரக்கும் விந்துக்கள் மற்றும் செமினல் பிளாஸ்மா  ஆகியவற்றைக் கொண்ட பால் போன்ற வெண்மை நிற திரவமே 'விந்து திரவம்’ (Semen or Seminal fluid) எனப்படும். இது விந்து செல்களைக் கடத்தும் ஊடகமாகவும், உணவூட்டமளிப்பதற்கும் பயன்படுகிறது. மேலும், விந்து செல்களைப் பாதுகாப்பிற்கும், அவற்றின் இயக்கத்திற்கும் தேவையான வேதிப்பொருட்களையும் கொண்டுள்ளது.

ஆண்குறி (Penis) என்பது ஆணின் கலவி உறுப்பாகச் செயல்படும் புற இனப்பெருக்க உறுப்பாகும். இது விறைப்புத்தன்மைக்கு உதவிபுரியும் சிறப்புவகைத் திசுக்களால் ஆக்கப்படுள்ளதால் விந்து உள்ளேற்றம் எளிதாகின்றது. ஆண்குறியின் பருத்த முனைப்பகுதி கிளான்ஸ் பீனிஸ் எனப்படும். இது நுனித்தோல் (Fore skin) அல்லது முனைத்தோல் (Prepuce) என்ற தளர்வான தோலால் மூடப்பட்டுள்ளது.

ஆண் இனப்பெருக்க மண்டலத்தைவிட சிக்கலான அமைப்பாக பெண் இனப்பெருக்க மண்டலம் உள்ளது. ஏனெனில், இனச்செல் உருவாக்கம் தவிர வளர்கருவை உணவூட்டி பராமரிக்க வேண்டிய பணியும் இவ்வமைப்புக்கு உள்ளது. ஓரிணை அண்டகங்கள் (Ovaries), ஓரிணை அண்ட நாளங்கள் (Oviducts), கருப்பை (Uterus), கருப்பை வாய் (Cervix), பெண் கலவிக் கால்வாய் (Vagina) மற்றும் இடுப்புப் பகுதியில் அமைந்துள்ள புற இனப்பெருக்க உறுப்பு / பெண்குறி (Vulva) போன்றவற்றை உள்ளடக்கியது பெண் இனப்பெருக்க மண்டலமாகும் (படம் 2.3) (அ). இவையும் பால் சுரப்பிகளும் இணைந்து அண்டம் வெளியீடு, கருவுறுதல், கர்ப்பம், மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு போன்ற செயல்பாடுகளுக்கு அமைப்பு ரீதியாகவும் செயல் ரீதியாகவும் ஆதரவளிக்கின்றன.


பெண் இனச்செல்லான ‘அண்ட செல்லை’ உருவாக்கும் உறுப்பான அண்டகங்கள் தான் பெண் பாலுறுப்புகளுள் முதன்மையானதாகும். அடிவயிற்றின் இரண்டு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக அண்டகங்கள் அமைந்துள்ளன. அண்டகம் 2 முதல் 4 செ.மீ நீளம் கொண்ட நீள் வட்ட அமைப்பாகும். ஒவ்வொரு அண்டகமும் மெல்லிய கனசதுர வடிவ எபிதீலிய செல்களால் ஆன இனச்செல் எபிதீலியத்தினால் (Germinal Epithelium) சூழப்பட்டுள்ளது. இதற்குள் அமைந்த அண்டகப் பகுதி ‘அண்டக இழைய வலை’ (Ovarian strona) ஆகும். இந்த இழைய வலை வெளிப்புற புறணி (கார்டெக்ஸ்) மற்றும் உட்புற மெடுல்லா ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. இனச்செல் எபிதீலியத்தின் அடிப்பகுதியில் 'டியூனிகா அல்புஜீனியா' (Tunica albuginea) எனும் அடர்த்தியான இணைப்புதிசு உள்ளது. பல்வேறு வளர்ச்சி நிலைகளில் அண்டக நுண்பை செல்கள் காணப்படுவதால் கார்டெக்ஸ் பகுதியானது அடர்த்தியாகவும், துகள்களை உடைய அமைப்பு போன்றும் தோற்றமளிக்கிறது. அபிரிமிதமான இரத்தக் குழல்களையும், நிணநீர் நாளங்களையும் நரம்பிழைகளையும் கொண்ட தளர்வான இணைப்புத் திசுவால் மெடுல்லா பகுதி ஆக்கப்பட்டுள்ளது. 'மீசோவேரியம்' (mesovarium) எனும் தசை நாரினால் இடுப்புச் சுவர்ப் பகுதியுடனும் கருப்பையுடனும் அண்டகம் இணைக்கப்பட்டுள்ளது.

ஃபெல்லோப்பியன் நாளங்கள், (கருப்பை நாளங்கள் அல்லது அண்ட நாளங்கள்), கருப்பை மற்றும் கலவிக் கால்வாய் ஆகியவை பெண் இனப்பெருக்க மண்டலத்தின் துணை உறுப்புகளாகும். ஒவ்வொரு ஃபெல்லோப்பியன் குழாயும் அண்டக விளிம்பிலிருந்து கருப்பை வரை நீண்டு காணப்படுகிறது. ஃபெல்லோப்பியன் குழாயின் முன் முனைப்பகுதியில் புனல் வடிவிலான 'இன்ஃபன்டிபுலம்' (புனலுரு) என்னும் அமைப்பு காணப்படுகிறது. புனலுருவின் விளிம்பில் விரல் போன்ற 'நுண் நீட்சிகள்' (fimbriae), அமைந்துள்ளன. அவை அண்ட வெளியீட்டின் போது (Ovulation) விடுபடும் அண்டத்தைத் தன்னை நோக்கி இழுப்பதற்குப் பயன்படுகின்றன. புனலுருவின் வாய்ப்பகுதி அகன்று ஆம்புல்லா எனும் மையப்பகுதியாக விரிவடைகிறது. ஃபெல்லோபியன் குழாயின் கடைசிப் பகுதியான இஸ்த்ம ஸ் (Isthmus) குட்டையானதாகவும் தடித்த சுவரைக் கொண்டும் காணப்படுகிறது. இது ஆம்புல்லாவையும் புனலுருவையும் கருப்பையுடன் இணைக்கிறது (படம் 2.3 (அ) & 2.3 (ஆ).

உள்ளீடற்ற, தசையாலான தடித்த சுவரைக் கொண்ட, இரத்தக்குழாய்கள் நிறைந்த, தலைகீழான பேரிக்காய் வடிவத்துடன் காணப்படும் உறுப்பான கருப்பை, இடுப்பு குழியினுள் சிறுநீர்ப்பைக்கும் மலக்குடலுக்கும் இடையில் அமைந்துள்ளது.கருப்பையின் பெரும்பாலான பகுதி ‘உடல்' என்றும் அதன் மேற்புற கோள வடிவப் பகுதி (குவிந்த பகுதி) ‘குவிமுகடு’ (fundus) என்றும் அழைக்கப்படும். கருப்பையானது ஒரு குறுகிய கருப்பை வாயின் (Cervix) வழியாக கலவிக் கால்வாயினுள் திறக்கிறது. கருப்பை வாயினுள் காணப்படும் வெற்றிடம் ‘கருப்பை வாய் கால்வாய்’ (Cervical canal) எனப்படும். இக்கால்வாய் கலவிக்கால்வாயினுள் புறத்துளை (External orifice) வழியாகவும் கருப்பையினுள் உட்துளை (Internal orifice) வழியாகவும் திறக்கிறது. கருப்பைக் கால்வாய், கலவிக்கால்வாய் இரண்டும் சேர்த்து பிறப்புக் கால்வாய் (birth canal) எனப்படும்.


கருப்பைச் சுவரானது மூன்று அடுக்கு திசுக்களால் ஆனது. அவை, வெளிப்புற மெல்லிய அடுக்கான 'பெரிமெட்ரியம்' (Perinctrium) என்னும் ஊனீர் சவ்வு, தசையாலான தடித்த நடு அடுக்கான 'மையோமெட்ரியம்' (Myometrium) மற்றும் உட்புற சுரப்பு அடுக்கான ‘என்டோமெட்ரியம்’ (Endometrium) ஆகும். மாதவிடாய் சுழற்சியின் போது என்டோமெட்ரியம் பல சுழற்சி மாற்றங்களுக்கு உட்படுகிறது. குழந்தை பிறப்பின் போது வலுவான சுருக்கங்களை ஏற்படுத்துவதில் மையோமெட்ரியம் ஈடுபடுகிறது.

கருப்பை வாய்ப்பகுதியிலிருந்து வெளிப்புறம் வரை நீண்டுள்ள தசைநாரிழைகளாலான பெரிய குழாய் ‘கலவிக் கால்வாய்' (Vagina) எனப்படும். இதுவே, பெண் கலவி உறுப்பாகும். பேரிதழ்கள் (Labia majora), சிற்றிதழ்கள் (Labia minora), கன்னித்திரை (hymen) மற்றும் சுமரி (Clitoris) ஆகியவற்றை உள்ளடக்கிய புற இனப்பெருக்க உறுப்பு (Vulva) கலவிக்கால்வாய்க்கு வெளியே காணப்படுகிறது. 

கலவிக்கால்வாய்த் திறப்பின் பின்புறமாக வலது மற்றும் இடது புறங்களில் அமைந்துள்ள சுரப்பிகள் 'பர்த்தோலின் சுரப்பிகள்' (Bartholin's glands) (பெரிய வெஸ்டிபியூலார் சுரப்பிகள்) ஆகும். இவை வழவழப்பான கோழை திரவத்தை உயவுப் பொருளாக கலவிக் கால்வாயினுள் சுரக்கிறது. இவை ஆண்களில் உள்ள பல்போயுரித்ரல் சுரப்பிகளுக்கு ஒப்பானவை. கலவிக்கால்வாயின் முன்புறச்சுவரிலும் மற்றும் சிறுநீர் வடிகுழாயின் முனையைச் சூழ்ந்தும் காணப்படும் மற்றொரு சுரப்பி ஸ்கீன்ஸ் சுரப்பி (Skene's gland) ஆகும். இதுவும் உயவுத் தன்மையுள்ள திரவத்தைச் சுரக்கின்றது. இவை செயற்பாட்டில், ஆண்களில் உள்ள புரோஸ்டேட் சுரப்பிக்கு ஒப்பானவை.

உங்களுக்குத் தெரியுமா?

மனித உடலில் உள்ள வலுவான தசைகளில் பெண்ணின் உடலில் உள்ள கருப்பைத் தசையும் ஒன்றாகும்.

கலவிக்கால்வாயின் வெளிப்புறத் துளையின் ஒரு பகுதியானது ஒரு மெல்லிய வளைய வடிவத்திசுவினால் மூடப்பட்டுள்ளது. இது கன்னித்திரை எனப்படும். பெரும்பாலும் முதல் கலவியின் போது இது கிழிந்து விடும். இருப்பினும் சில பெண்களில் இது சிதைவுறாமலும் இருக்கலாம். கீழே விழுதல், குலுங்கல், மிதிவண்டி ஓட்டுதல், குதிரைச் சவாரி செய்தல் போன்ற உடல் சார்ந்த நிகழ்வுகளினாலும் பெண்களின் கன்னித்திரைச் சவ்வு பாதிக்கப்படலாம். எனவே, கன்னித்திரை ஒரு பெண்ணின் கன்னித்தன்மையை எடுத்துக்காட்டுவதாக அமையாது.


ஆண், பெண் இருபாலரிலும் காணப்படும் பால் சுரப்பிகள் (Mammary glands) மாறுபாடடைந்த வியர்வைச் சுரப்பிகள் ஆகும். ஆண்களில் இவை அளவில் குறைந்து செயலற்ற எச்ச உறுப்பாகவும், பெண்களில் இயல்பான, செயல்படும் உறுப்பாகவும் காணப்படுகிறது. மார்புப் பகுதியில் ஓரிணை பால் சுரப்பிகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பால் சுரப்பியிலும் சுரப்பித் திசுக்களும் வேறுபட்ட அளவுகளில் கொழுப்பும் உள்ளன. மார்பகங்களின் மத்தியில் பால்காம்பு அமைந்துள்ளனது. இதனைச் சுற்றி நிறமிகளாலான ஏரியோலா என்னும் வட்ட வடிவ பரப்பு காணப்படுகிறது. ஏரியோலர் பகுதியின் மேற்பரப்பில் ஏரியோலார் சுரப்பிகள் எனப்படும் பல எண்ணெய்ச் சுரப்பிகள் உள்ளன. இவை பால்காம்பின் மேற்புறத்தில் உள்ள தோலில் வெடிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கின்றன. ஒவ்வொரு பால் சுரப்பியின் உட்புறத்திலும் கொழுப்பு மற்றும் இணைப்புத்திசுக்களால் பிரிக்கப்பட்ட 2 முதல் 25 கதுப்புகள் (lobes) காணப்படுகின்றன (படம் 2.4). ஒவ்வொரு கதுப்பிலும் பல நுண் கதுப்புகள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் எபிதீலிய செல்களால் சூழப்பட்ட பல மீச்சிறு கதுப்புகள் (acini or alveoli) உள்ளன. இச்செல்கள் பாலைச் சுரக்கின்றன. மீச்சிறு கதுப்புகள், பால் நுண் குழல்களுக்குள் (Mammary tubules) திறக்கின்றன. ஒவ்வொரு கதுப்பிலிருந்தும் வரும் பால் நுண்குழல்கள் ஒன்றிணைந்து பால் நாளமாக (Manmary duct) மாறுகின்றன. பல பால் நாளங்கள் ஒன்று கூடி அகன்ற பால் விரிமுனைகளை (Mammary ampulla) உருவாக்குகின்றன. இவை பால் காம்பில் காணப்படும் பால் உந்து நாளங்களோடு (Lactiferous duct) இணைக்கப்பட்டுள்ளன. பால் காம்பின் கீழ் ஒவ்வொரு பால் உந்து நாளமும் பால்குழி (lactiferous sinus) யாக விரிவடைகின்றது. இது பாலைத் தேக்கி வைக்கும் இடமாகச் செயல்படுகிறது. ஒவ்வொரு பால் உந்து நாளமும் பால் காம்பின் நுனிப்பரப்பில் உள்ள நுண்ணிய துளை வழியே தனித்தனியாக வெளியே திறக்கின்றன.

பெண்களில், இயல்பான மார்பக வளர்ச்சி பூப்பெய்துதலில் தொடங்கி ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின் போதும் முன்னேற்றமடைகிறது. கருவுறாத பெண்களில் பால் சுரப்பிகள் சரியாக வளர்ச்சியடைந்திருப்பதில்லை. மேலும் மார்பக அளவானது அதில் படிந்துள்ள கொழுப்புப் படிவுகளைப் பொறுத்து அமைகிறது. மார்பகத்தின் அளவிற்கும் பால் சுரப்புத் திறனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை .


12th Zoology : Chapter 2 : Human Reproduction : Human reproductive system in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 2 : மனித இனப்பெருக்கம் : மனித இனப்பெருக்க மண்டலம் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 2 : மனித இனப்பெருக்கம்