Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

வரலாறு - ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் | 12th History : Chapter 13 : Imperialism and its Onslaught

   Posted On :  11.07.2022 05:55 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 13 : ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

பதினெட்டாம் நூற்றாண்டு முழுவதும் தொழிற்துறை நிலையான வளர்ச்சியை எதிர்கொண்டதோடு வணிக நடவடிக்கைகளும் தீவிரமடைந்தன.


கற்றலின் நோக்கங்கள்

கீழ்க்காணும் அம்சங்களோடு அறிமுகமாதல்

 

• சந்தையைக் கைப்பற்றும் நோக்கில் ஏகபோக தொழில்முறையும், நிதியும் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணியின் சூழலில் எழுந்த ஏகாதிபத்தியத்தைக் குறித்து அறிதல்

• காலனிகளை உருவாக்க ஏற்பட்ட போட்டியும் அதனால் நாடுகளுக்கிடையே எழுந்த முரண்போக்குகளும் முதல் உலகப்போருக்கு வழிவகுத்தல் பற்றி - அறிந்து தெளிதல்

• முதல் உலகப்போர் உருவானதற்கான காரணங்கள், போக்குகள், மற்றும் விளைவுகள் போன்ற கூறுகளை அலசி ஆராய்தல்

• ரஷ்ய புரட்சியையும் அதன் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ளல்

• 1930களின் பொருளாதாரப் பெருமந்தத்தை உள்ளார்ந்து உணர்தல்

• இத்தாலியிலும், ஜெர்மனியிலும் பாசிச எதிர் - புரட்சி நேர்ந்தமையை மதிப்பீட்டிற்கு உட்படுத்துதல்


அறிமுகம்

பதினெட்டாம் நூற்றாண்டு முழுவதும் தொழிற்துறை நிலையான வளர்ச்சியை எதிர்கொண்டதோடு வணிக நடவடிக்கைகளும் தீவிரமடைந்தன. இதன் விளைவாக ஐரோப்பா ஒரு ஆதிக்க சக்தியாக ஏற்றம் கொண்டதோடு ஆசியாவும் ஆப்பிரிக்காவும் காலனிகளாக மாற்றப்பட்டு சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டன. முதலாளித்துவத்தின் உலகளாவிய தலைமைபீடத்தை இங்கிலாந்து தக்கவைத்துக் கொண்டது போன்ற மெய்பிம்பம் ஐரோப்பாவினுள் எழுந்தது. போக்குவரத்திலும், தகவல் தொடர்பிலும் 1870 முதல் 1914 வரையிலான காலத்தில் ஏற்பட்ட புரட்சி உலகப் பொருளாதாரத்தை வளர்த்தெடுத்தது. நீராவிகப்பல்களும், தந்தி கம்பிகளும் கண்டங்களை ஒருபுறம் இணைக்க மறுபுறம் உட்பகுதிகளை துறைமுகங்களோடு இருப்புப்பாதைப் போக்குவரத்து இணைத்தது. ஐரோப்பாவிலிருந்தும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்தும் நிதி இடம்பெயர்ந்து உலக வணிகத்தை மேம்படுத்தியது. சந்தைகளுக்கும் மூலப்பொருள்களுக்குமான தேவை விரிவடைந்துகொண்டே சென்றதால் முதலாளித்துவ சக்திகளும் போட்டி மனப்பான்மையோடு சுரண்டலை முன்னிறுத்திய தங்களின் இராஜ்ஜியத்தை விரிவடையச் செய்ய களமிறங்கினார்கள். சந்தைகளுக்கான தேடுதலும் கடுமையான வியாபாரப் போட்டியும் அதிகமான காலனியப் பகுதிகளை கட்டுப்படுத்தும் முனைப்பில் விளைந்த சண்டைகளும், போட்டி நாடுகளை முரண்பாடுகளுக்குள் மூழ்கச் செய்தது.

தனது தகுதிக்கேற்ற சரியான மரியாதையைப் பிறநாடுகள் வழங்கவில்லை என்ற உணர்வு, அதிலும் குறிப்பாக பிரிட்டனைப் பொறுத்தமட்டில் ஜெர்மனியை சமரசப்படுத்த முடியாத போக்கைக் கொண்ட நாடாக்கியது. கடைசியில் பரஸ்பர நம்பிக்கையின்மையும், இறுக்கம் நிறைந்த சூழலும் முதல் உலகப்போருக்கு இட்டுச்சென்றது. போரில் ஜெர்மனியும், அதன் கூட்டு நாடுகளும் தோற்கடிக்கப்பட்டு அதன்பின் வெர்செய்ல்சில் (1919) அமைதி ஏற்படுத்தும் பொருட்டு ஒரு மாநாடு கூட்டப்பட்டது. தீர்வுகளில் சிறப்பான ஒன்றாக விளங்கியது பன்னாட்டு சங்கத்தை ஏற்படுத்தியதும் அதனூடாக எதிர்காலத்தில் உலக அமைதியை நிலைநிறுத்த உறுதி கொள்ளல் என்பதுமாகும். முதல் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் அதனால் ஏற்பட்ட பணவீக்கமும் உணவுப் பற்றாக்குறையும் ரஷ்யாவில் புரட்சியை வெடிக்கச் செய்தது. மற்றொருபுறம் அமைதி உடன்படிக்கை ஏற்படுத்திய அதிருப்தி, அரசியல் நிலையற்றத்தன்மை, பொருளாதார பெருமந்தத்தின் தாக்கம் ஆகியவை இத்தாலியிலும், ஜெர்மனியிலும் பாசிச அரசுகளின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது.

Tags : History வரலாறு.
12th History : Chapter 13 : Imperialism and its Onslaught : Imperialism and its Onslaught History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 13 : ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் : ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 13 : ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்