Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | இந்திய-பூடான் உறவுகள்
   Posted On :  04.04.2022 02:27 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : இந்தியாவும் அண்டை நாடுகளும்

இந்திய-பூடான் உறவுகள்

இந்தியாவுடன் பூடானின் நட்பு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. முற்றிலுமாக நிலம் சூழ்ந்த நாடாக இருப்பதால் பெருமளவில் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளுக்கும் இந்தியாவையே சார்ந்திருக்கும் சூழ்நிலை நிலவுகிறது. இந்தியாவும் தன்னாலான உதவிகளை பூடானுக்கு செய்வதால், இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லுறவு நட்பு நாடுகளாக நட்பு பாராட்டி வருகின்றன.

இந்திய-பூடான் உறவுகள்


இந்தியாவுடன் பூடானின் நட்பு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. முற்றிலுமாக நிலம் சூழ்ந்த நாடாக இருப்பதால் பெருமளவில் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளுக்கும் இந்தியாவையே சார்ந்திருக்கும் சூழ்நிலை நிலவுகிறது. இந்தியாவும் தன்னாலான உதவிகளை பூடானுக்கு செய்வதால், இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லுறவு நட்பு நாடுகளாக நட்பு பாராட்டி வருகின்றன.


1968-லிருந்து இந்தியாவுடனான பூடானின் நட்பு வெகு நேர்த்தியாக வளர்ந்து வருகிறது. திம்புவில் இந்தியாவின் நிரந்த பிரதிநிதி பணியமர்த்தப்பட்ட பிறகு கூடுதலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பாக சிக்கிமிலிருந்த அரசியல் அதிகாரியின் மூலம் இந்திய உறவுகள் மேம்படுத்தப்பட்டது.

இந்தியாவின் அணுகுமுறையால், 1965இல் பூடான் கொழும்பு திட்டத்திலும் 1969இல் உலக தபால் பணி குழுவிலும் சேர்ந்தது. இறுதியாக பூடான் உறுப்பினராவதற்கு 1971இல் இந்தியா சிபாரிசு செய்தது. அணிசேரா இயக்கத்துடனான பூடானின் உறவுகளுக்கும் இந்தியா முயற்சிகள் மேற்கொண்டது.


கால வரிசை நிகழ்வுகளும் 

1. புனக்ஷா ஒப்பந்தம் (1910): பிரிட்டிஷ் இந்தியாவின் மற்றொரு பாதுகாப்பான அரசாக பூடான் விளங்கியது. இதன் மூலம் உள் சுதந்திரத்தை பெற்று இருந்ததே தவிர வெளி சுதந்திரத்தை பெறவில்லை. 

2. நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் ஒப்பந்தம் : இந்தியாவும் பூடானும் அமைதி மற்றும் நட்புறவு உடன்படிக்கையை 1949,ஆகஸ்டு 8-இல் டார்ஜிலிங்கில் கையெழுத்திட்டன.



• இந்த உடன்படிக்கையானது 1910 ஆம் ஆண்டு ஆங்கிலேயே-பூடானிய உடன்படிக்கையின் தொடர்ச்சியாக கருதப்படுகிறது. இதன் மூலம் இமலாயப் பகுதி இந்தியப் பாதுகாப்பின் அடிப்படையாகக் கருதப்படுகிறது. 

• பூடான் அயல்நாட்டு கொள்கையில் இந்திய-பூடான் உடன்படிக்கை ஒரு மைல் கல்லாகவே செயல்படுகிறது. 

மறுசீரமைக்கப்பட்ட உடன்படிக்கை (2007) 

• பூடான் வேண்டிகொண்டதன் மூலம் இந்தியா தமது நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கையை மறுசீரமைத்தது. 

• இம்மறு சீரமைப்பின்படி இந்தியா வழிநடத்தும், பங்குதாரரின் நிலையிலிருப்பது மற்றும் நெருங்கிய நட்புறவாகவும், சமபங்குதாரராகவும் செயல்பட வழிவகுப்பது. 

• மேலும் புதியதாக இராணுவம் தொடர்பான பொருள்கள் இறக்குமதி செய்வதற்கு இந்தியாவின் அனுமதி பெறத்தேவையில்லை. 

• வெளிநாடுகளுடனான உறவுகளில் சுதந்திரமும் ஆனால் அதே சமயம் இந்தியாவின் பாதுகாப்புமும் அச்சுறுத்தும் வகையில் செயல்படாத வகையில் உறவுகளை மேற்கொள்ளுமாறு சீரமைக்கப்பட்டது. 

3. இந்திய-பூடான் வாணிபம் மற்றும்பரிமாற்ற ஒப்பந்தம் (1972) 

* பூடான் ஏற்றுமதி பொருள்கள் எவ்வித வரியுமின்றி வெளிநாடுகளுக்கு செல்லும் வகையில் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. 

* நீர் மின்திட்ட கூட்டுறவு ஒப்பந்தம் (2006): இந்த ஒப்பந்தத்தின்படி 2020 ஆம் ஆண்டு வரை பூடான் 10,000 மெகாவாட் அளவு மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு இந்தியா உதவி புரிவதாகவும், தேவைக்கும் அதிகமான மின்சாரம் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் கையெழுத்திடப்பட்டது.

ஒத்துழைப்பிற்கான பகுதிகள் நீர்மின்திட்டம் ஒத்துழைப்பு 

• இந்தியா பூடானில் மூன்று நீர்மின் திட்டங்களை நிறுவியுள்ளது. இவை அனைத்தும் மொத்தமாக 1416 மெகாவாட் மின்சாரத்தை உருவாக்குகின்றன.

• நீர் மின்சாரம் ஏற்றுமதியின் மூலம் பூடானிற்கு 40% உள் நாட்டு வருவாயும் அதன் மூலம் 25% மொத்த உள்நாட்டு உற்பத்தி பெருக்கமும் அடைகிறது. 

• தற்போது மூன்று நீர் மின்நிலையங்கள் இரு அரசாங்கங்களுக்கிடையே திட்டமிடப்பட்டு கட்டுமான பணியில் உள்ளது. 

பாதுகாப்பு ஒத்துழைப்பு 

• இரு நாடுகளும் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக கூட்டு பயிற்சி இராணுவ நடவடிக்கையை நடத்தி உள்ளது. 

• 2004 இல் நடைபெற்ற இராணுவ பயிற்சி குறிப்பிடத்தக்கதாகும். பூடான் இராணுவம் உல்ஃபா தீவிரவாத குழுவிற்கு எதிராக நடத்தியது. 

தூதரக ஒத்துழைப்பு 

• இரு நாடுகளுக்கிடையேயான உயர்மட்ட அரசாங்க பிரதிநிதிகளின் சந்திப்பு ஆரம்பக்காலத்திலிருந்தே வழக்கமாக இருந்து வந்துள்ளது. 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமரானவுடன் முதல் பயணமாக பூடான் பயணம் அமைந்தது. 

• இந்தியா தன்னுடைய தூதரக அதிகாரிகளை பூடானுக்கு அனுப்பி தூதரக உறவு மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

• தெற்கு ஆசியா மண்டல ஒத்துழைப்பு அமைப்பின் உருவாக்கத்தில் உறுப்பினராக பூடான் விளங்குகிறது. மேலும் பிம்ஸ்டெக், உலக வங்கி, ஐ.எம் எஃப், ஜி-77 போன்ற பன்னாட்டு கழங்களிலும் உறுப்பினராக பூடான் விளங்குகிறது.

பொருளாதார ஒத்துழைப்பு 


• பூடானின் நாணயம் குல்ட்ரம் (Ngultrum) இந்திய ரூபாயுடன் இணைக்கப்பட்டுள்ளது.  

• பூடானின் மிகப்பெரிய வர்த்தக நாடாக இந்தியா விளங்குகிறது.

• 2016இல் புதிய வாணிப ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி இரு நாடுகளுக் கிடையேயான பொருளாதார உறவுகளில் குறைந்த அளவு ஆவணங்களுக்கும் மிகுதியான வாணிப நிலையங்களும் அமைப்பதற்கு ஏதுவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

• மேலும் இந்தியா பூடானிற்கு சுங்கவரி நீக்கப்பட்ட வர்த்தக சலுகை அளித்துள்ளது. இது இரு நாடுகளும் வர்த்தகத்தை மேம்படுத்த வசதியளித்துள்ளது.

ஒட்டுமொத்த தேசிய மகிழ்ச்சி

1972இல் பூடானின் நான்காம் மன்னரான ஜிக்மே சிங்கே வாங்சுக் "ஒட்டுமொத்த தேசிய மகிழ்ச்சி" என்ற கருத்தை பிரகடனம் செய்தார்.

கல்வி மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு 

• எண்ணிலடங்கா பூடான் மாணாக்கர்கள் இந்தியாவின் பல்கலைக்கழகங்களில் இளநிலைக் கல்வியை சுயநிதியை அடிப்படையாகக் கொண்டு பயின்று வருகிறார்கள். 

• 2003-ல் இந்திய-பூடான் கழகம் உருவாக்கப்பட்டு இரு நாடு மக்களுக்கிடையேயான ஒத்துழைப்பு கலாச்சாரம், கல்வி, மற்றும் சுற்றுப்புற சூழ்நிலை போன்றவைகளின் வளர்ச்சிக்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. 

பிரச்சனைப் பகுதிகள் 

• 2015இல் பங்களாதேஷ், பூடான், இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கிடையேயான மோட்டார் வாகன ஒப்பந்தத்தை பூடானின் மேலவை சுற்றுபுற காரணியை மையமாக வைத்து தடை செய்தது. 

• சரிசமமற்ற வர்த்தக வளர்ச்சியானது இந்தியாவிற்கே ஆதரமாக உள்ளது. இந்திய சேவை மற்றும் பொருள்கள் வரி, ஏற்றுமதிக்குக் குறைவாகவும், இறக்குமதிக்கு அதிகமாகவும் உள்ளதால், பூடானின் வர்த்தகக் குறைபாடு மேலும் சங்கடத்தை சந்திக்க நேருகிறது. 

• பூடான் தன்னுடைய ஏற்றுமதி வரியை அதிகரிக்கும் நிலையில் உள்ளது. உற்பத்தி விலையை விட வரி குறைவாக இருப்பதால் பூடான் பாதிப்படைகிறது. 

• தேசிய குடியரசு கிளர்ச்சி கழகங்களான போடோலான்ட் (NDFB), உல்பா (ULFA), மற்றும் சம்பத்பர் விடுதலை அமைப்பு (KLO) போன்றவை எளிதாக நுழையும்படி பூடான் இருப்பதால், வடகிழக்கு பகுதியின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. 

டோக்லாம் பிரச்சனை

டோக்லாம் என்பது இந்தியா பூடான் மற்றும் சீனா நாடுகளுக்கு இடையேயான 100 கி.மீ-க்கும் குறைவாக உள்ள ஒரு பீடபூமி மற்றும் பள்ளத்தாக்கை உள்ளடக்கியதாகும். இப்பகுதியாவது திபெத்தின் அம்பி பள்ளத்தாக்கு மற்றும் பூடானின் உஹா பள்ளத்தாக்காலும் சிக்கிமாலும் சூழப்பட்டுள்ளது.


தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் சீனா மற்றும் பூடானிடையே நடைபெற்றிருந்தாலும், டோக்லாம் பிரச்சினை முடிவற்றதாக அமைந்துள்ளது. 2017இல் இப்பிரச்சினை வலுப்பெற்று சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட காரணமாயிருந்தது. இப்பகுதியில் சீனா சாலையை நிறுவ தயார் ஆகும்போது இந்திய இராணுவத்தினர், பூடானிற்கு ஆதரவாக தடை ஏற்படுத்தினர்.

டோக்லாம் இந்தியாவின் சிலிகுரி பகுதிக்கு நெருக்கமாக இருப்பதால், இந்தியாவிற்கும் வடகிழக்கு பகுதிக்கும் இடையே முக்கியமான அங்கம் வகிக்கிறது. இப்பகுதி இரு நாடுகளுக்கிடையேயான குறுகிய நிலப்பரப்பாக அமைந்துள்ளது. சமீப காலத்தில் அம்பி பள்ளதாக்கில் சீனா பெருமளவில் படைகளை குவித்து வருகிறது. ஆனால் இராணுவப் படை ரீதியாக அனுகூலமற்ற நிலையே காணப்படுகிறது. இந்த பள்ளதாக்கைச் சுற்றிலும் இந்தியா மற்றும் பூடான் துருப்புகள் அதிகம் உள்ளன. 

நீர்மின்திட்டப் பிரச்சினைகள் 

• பூடான் இந்தியாவிற்கு குறைந்த விலையில் மின்சாரம் அனுப்புகிறது. 

• கூட்டு நீர் மின் நிலைய திட்டங்களின் மேலாண்மையில் இந்தியா அதிக பங்கு பெற விரும்புவதாக பூடான் நம்புகிறது. 

• எல்லை கடந்த வாணிபத்தில் மின்னாற்றல் அமைச்சகத்தின் மூலம் நிர்வகிக்கப்பட்டு இந்தியாவை ஒரே பங்குதாரராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நீர்மின் நிலைய முதலீட்டில் பூடானின் சுதந்திரத்தை பாதிக்கிறது. 

• நீர் மின் நிலையங்கள் சுற்றுபுறச் சூழலும் இணைந்து பார்க்கப்படுகிறது. 

ஒத்துழைப்பிற்கான நடவடிக்கைகள்

• இரு நாடுகளுக்கிடையேயும் நட்பு ரீதியான சந்திப்புகள் அடுக்கு நிகழ்வுகளாக நடைபெறுகிறது. 

• பூடானின் 20 மாவட்டங்களுக்கான மின்னணுத்திட்டம் இந்தியாவால் மேம்பாடு அடைகிறது. 

 • தற்போதைய பிரதமரால் "B-to-B என்று (பாரத்-டு-பூடான்) கொள்கை உருவாக்கப்பட்டு நாடுகளுக்கிடையான உறவுகள் வலுப்படுத்தப்படுகிறது.

• இந்திய வெளிநாட்டுக் கொள்கையில் அதிகம் உதவிகளை பெரும் நாடாக பூடான் விளங்குகிறது. 

• நிரந்தரமாகவே 1000 வீரர்கள் கொண்ட இந்திய இராணுவ பயிற்சி குழு (IMTRAT) மேற்கு பூடானில் செயல்படுகின்றது. இக்குழு பூடான் படைக்கு பயிற்சி அளிக்கிறது. ஏனைய மற்ற இந்திய படைக்கும் ராயல் பூடான் படைக்கும் உதவி புரிகின்றன.

எதிர்கால ஒத்துழைப்பு 

• இந்திய-பூடான் உறவுகள் நீருக்கும் பாலுக்குமான உறவாகும். இரண்டையும் பிரிக்க முடியாததாக உறவு அமைந்துள்ளது. 

• இந்தியா, கிடப்பில் போடப்பட்டிருக்கும் சில நீர் மின் நிலைய திட்டங்களை விரைந்து முடித்தல் வேண்டும். போதுமான நிதியில்லாதது காரணமாக கூறப்படுகிறது. 

• இந்தியாவிற்கும், பூடானிற்கும் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கிறது. ஆனால் இது சீனா பல்வேறு எல்லை பிரச்சனைகளை கொடுக்கின்றது. இந்தியாவுடான ஒத்துழைப்பை பூடான் நன்றாக பயன்படுத்தி சீனாவின் தவறான கணக்கீட்டிற்கு தகுந்த பதிலடி அளித்தல் வேண்டும்.

• பூடானுடனான வடகிழக்கு தொடர்பை இந்தியா மண்டல பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். 

• பூடானின் மொத்த தேசிய மகிழ்ச்சியை இந்தியா தன்னுடைய பொருளாதார வளர்ச்சியோடு இணைத்து மகிழ்ச்சி மற்றும் நட்பு பகிர்தலை மேற்கொள்ள வேண்டும். 


12th Political Science : Chapter 10 : India and It’s Neighbours : India - Bhutan Relations in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : இந்தியாவும் அண்டை நாடுகளும் : இந்திய-பூடான் உறவுகள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : இந்தியாவும் அண்டை நாடுகளும்