Posted On :  04.04.2022 02:10 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : இந்தியாவும் அண்டை நாடுகளும்

இந்திய-சீன உறவுகள்

நவீன வரலாற்று பின்னணி கொண்ட இந்தியா சீனா உறவுகள் சீனா 1949 இல் கம்யூனிச நாடாக மாறியதிலிருத்து தொடங்குகிறது.

இந்திய-சீன உறவுகள்


நவீன வரலாற்று பின்னணி கொண்ட இந்தியா சீனா உறவுகள் சீனா 1949 இல் கம்யூனிச நாடாக மாறியதிலிருத்து தொடங்குகிறது. சீனா மக்கள் குடியரசை அங்கீகரித்த முதல் நாடும் இந்தியாவே ஆகும். எனினும் 1950ஆம் ஆண்டு திபெத்தை சீன ராணுவம் ஆக்கிரமித்த போது இந்தியா அதனை சந்தேகத்துடன் பார்த்த போது, இந்த ஆரம்ப கால நல்லுறவு நீண்ட காலம் நீடிக்கவில்லை . இந்தியரும்-சீனரும் சகோதரர்கள் என்ற அங்கீகாரம் இந்தியாவின் அச்சத்தை சிறிதளவு போக்கியது, இந்த எல்லா முன்னேற்றங்களும் 1962ஆம் ஆண்டு சீனா போரின் மூலம் தொலைந்து போயின. இந்திய-சீன உறவுகளை நாம் விரிவாக மூன்று அம்சங்களைக் கொண்டதாக வகைப்படுத்தலாம். அவைகள், எல்லைப் பிரச்சனை, பொருளாதார நலன் மற்றும் சர்வதேச விவகாரங்களில் ஒத்துழைப்பு என்பதாகும்.

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டும் மிக நீண்ட வரலாற்று பின்னணிக் கொண்ட நாகரிகரீதியான (Civilization) சக்திகள் ஆகும். புத்த மார்க்கமானது நூல் வடிவத்திலும், பண்பாட்டு வடிவிலும் இந்தியாவில் இருந்து சீனா சென்றது. பாஹியான், யுவான் சுவாங் போன்றவர்கள் பண்டைய இந்தியாவை ஆய்வு செய்ய வந்த புகழ்பெற்ற சீனப் பயணிகள் ஆவர்.


எல்லைப் பிரச்சனை


இந்தியா மற்றும் சீனா ஏறத்தாழ 4056 கிலோ மீட்டர் நீள எல்லையைப் பகிர்ந்துக் கொள்கின்றன. இந்த எல்லை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை, கிழக்கு பூடானுடனான எல்லை , உத்திரப்பிரதேசம், பஞ்சாப் ஹிமாச்சலப் பிரதேசங்களுடனான மைய எல்லை மற்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளான சின்கியாங் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகள் போன்றவையாகும். இந்தியசீன எல்லையானது மெக்மோகன் கோடு(McMohon) என்ற எல்லைக்கோட்டினால் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெயர் பிரிட்டிஷ் அமைச்சரவையில் இந்தியாவிற்கான வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஹென்ரி மெக் மோகன் என்பவர் நினைவாக வைக்கப்பட்டது. இந்த எல்லை வரையறையானது 1914ஆம் ஆண்டு சிம்லாவில் நடைபெற்ற மாநாட்டில் பிரிட்டிஷ் இந்தியா, சீனா மற்றும் திபெத் பிரதிநிதிகளால் தீர்மானிக்கப்பட்டது. இந்த எல்லைக்கோடானது வடக்கே திபெத் பீடபூமி மற்றும் தெற்கே இந்திய குன்றுகள் ஆகியவற்றிக்கிடையே ஊடுருவிச் செல்லும் இயற்கையான எல்லைக்கோடு என்பதைக் கருத்திற் கொண்டு வரையப்பட்டதாகும். இந்த எல்லைக்கோடானது அனைத்துப் பிரதிநிதிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இருந்தபோதிலும் சீனா, பிற்காலத்தில் இது ஒரு ஏகாதிபத்திய எல்லைக்கோடு என்று கண்டித்தது. இந்தியா இதனை சீனாவுடனான எல்லைக்கோடு என்று தொடர்ந்து ஏற்றுக் கொண்டிருக்கிறது.

இந்திய-சீன எல்லைப் பிரச்சனை ஒரு நூற்றாண்டு காலமுடையதாக இருந்தது. அதன் உடனடிக் காரணம் 1950ஆம் ஆண்டு சீனா திபெத்தை இணைத்து கொண்டதாகும். சீனா திபெத்தை ஆக்கிரமிப்பு செய்ததற்கான காரணம், வரலாற்று அடிப்படையிலான இணைப்பு மற்றும் முதன்மையானதாக, ராணுவம் சார்ந்த கணக்கீட்டின் அடிப்படையில் (Strategic Calculation) எடுத்துக் கொள்ளப்பட்டது என்றும் தெரிகிறது.


திபெத் எப்பொழுது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதோ, அன்று முதல் சீனா இந்தியாவின் பல பகுதிகளை தங்களுடையது என கேட்க ஆரம்பித்தது. 1950ஆம் ஆண்டுகளில் இருந்து இரண்டு நாடுகள் பேசி வந்தபோதிலும், எல்லைகளைப் பற்றித் தெளிவான அடையாளத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.

அதுமட்டுமல்லாமல், அடிக்கடி எல்லைத் தாண்டிய ஊடுருவல் இருப்பதாக தகவல் இருக்கிறது. 1961ஆம் ஆண்டுக்குள்ளாக எல்லைகளை உறுதியாக நிறுவுவது மற்றும் "முன்னெடுக்கும் கொள்கையை" ஆரம்பித்து வைத்தது, பிரச்சனைக்குரிய பகுதிகளில் ராணுவ (காவல்) நிலைகளை நிறுவுவது என இந்தியாவால் தீர்மானிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கையால் சீனாவுடன் இணக்கமாக இணைந்து செல்ல முடியவில்லை . 1962ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் சீனா லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் மீது மிகப் பெரிய தாக்குதல் நடத்தியது. இந்தப் போரானது 31 நாட்கள் மட்டுமே நீடித்தது. இருந்தபோதிலும், இந்தியாவிற்கு நீண்டகால அவமானத்தை ஏற்படுத்தியது.

நீண்ட உள்நாட்டுப்போர் 1949ஆம் ஆண்டில் முடிவடைந்தவுடன், சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியானது நிறுவப்பட்டது. சீனாதிபெத்தை என்றும் தனது மாகாணமாக கருதியது மற்றும் அதனை செஞ்சீனத்துடன் இணைக்க முற்பட்டது. கம்யூனிஸ்ட் ஆட்சியானது அதனை ஒரு தன்னாட்சி மாகாணமாக நடத்தியது. இறையாண்மை அரசாகிய திபெத் சோசலிச சீனாவுடன் இணக்கமாகச் செல்ல முடியவில்லை. திபெத்திய பிரச்சினை, குறிப்பாக திபெத்திய தலைவர் தலாய்லாமா மற்றும் அவரது மக்களுக்கு புகலிடம் வழங்குவது இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான பிளவுக்கு ஒரு காரணமாக இருந்தது.


இந்திய-சீனப் போர் 1962

• சீனா திபெத்தை ஆக்கிரமிக்கும் என்று அறிவித்தவுடன் இந்தியா, நடக்க இருக்கும் திபெத் சிக்கல் பற்றி பேச்சுவார்த்தைக் குறித்த எதிர்ப்பு கடிதம் ஒன்றை அனுப்பியது. மேலும் சீனா இன்னும் அதிகப் படைகளை அஷாய்சின் எல்லையில் மிகவும் மூர்க்கமாக குவித்தது 

• 1954ஆம் ஆண்டு இந்தியாவும் சீனாவும் பரஸ்பர அமைதியாக இணைந்திருப்பது என்ற ஐந்து கோட்பாடுகளைகையெழுத்திட்டு ஏற்றுக் கொண்டன. அந்த விதிகளின் அடிப்படையில் திபெத்தில் சீனாவின் ஆட்சியை இந்தியா ஒத்துக்கொண்டது. 

• ஜுலை மாதம் 1954ஆம் ஆண்டில் நேரு இந்தியா வரைபடத்தில் திருத்தம் செய்வது குறித்து எல்லா எல்லை பகுதிகளின் தீர்க்கமான எல்லைகளைக் கேட்டு ஒரு நினைவூட்டும் கடிதத்தை எழுதியிருந்தார். எனினும் கிட்டத்தட்ட 1,20,000 சதுர கிலோ மீட்டர் இந்திய எல்லை வரைப்படத்தில் பிழையிருப்பதாக, சீன மக்கள் குடியரசின் முதல் பிரதமரான சூ-யென்-லாய் பதிலளித்தார். 

• மார்ச், 1959ஆம் ஆண்டு தலாய்லாமா தப்பி ஒடியதால் இந்தியா அவருக்கு அடைக்கலம் கொடுத்து வைத்ததை சீனா மக்கள் குடியரசின் தலைவர், மாசேதுங் அவமானப் படுத்தப்பட்டதாகக் கருதினார். திபெத்தில் உள்ள லாசா கிளர்ச்சிக்கு இந்தியாதான் காரணம் என்று மாவோ கூறியபோது, இரு நாடுகளுக்கு இடையே பதட்டம் அதிகரித்தது.


• திபெத்தில் சீனாவின் கட்சிக்கு இந்தியா அச்சுறுத்தலாக உள்ளது என்று எண்ணமானது இந்திய - சீனப் போருக்கு மிக முக்கியமான காரணமாகும். 

• கொங்கா கணவாயில் அக்டோபர், 1959ஆம் ஆண்டு இரண்டு இராணுவத்தினருக்கு இடையே நடந்த சண்டையில் பல இந்திய காவல் துறையினர் கொல்லப்பட்டனர். இதன் மூலம் போரின் ஆற்றல் இந்தியாவிற்கு இன்னும் முழுமையாக வரவில்லை என்பதை நேரு உணர்ந்தார். நமது நாடு பிரச்சினைகளை பாதுகாக்கும் பொருட்டு எல்லையில் இருந்து பின்வாங்கியது.

• 1962ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி, லடாக் பகுதியில் சீன மக்கள் விடுதலைப்படை படையெடுத்து, அது வடக்கு கிழக்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மெக்மோகன் எல்லைக்கோட்டைக் கடந்தது.

• போர் ஆரம்பிக்கும் தருவாய் வரை, இந்தியத் தரப்பு போர் துவங்காது என்று நம்பியிருந்தது, மற்றும் அது சிறிய அளவு தயாரிப்புடனே இருந்தது. அப்பகுதியில் இந்தியா இரண்டு படைப் பிரிவுகளை மட்டும் நிறுத்தியிருந்தது. சீனாவோ மூன்று படைப்பிரிவுகளை நிறுத்தியிருந்தது. 

• 1962ஆம் ஆண்டில், உலகின் இரண்டு அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு நாடுகள் போரில் குதித்தன. இந்திய-சீனப்போர் 2000 உயிர்களை பலிவாங்கியது. காரகோரம் மலையின் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 4270 மீட்டர் (14,000 அடி) உயரத்தில் இந்த துன்பகரமான சம்பவம் நடைபெற்றது. 

• நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்து போன பிறகு, இந்தியாவின் சார்பாக அமெரிக்கார தலையிடும் அச்சுறுத்தல் காரணமாக, இருதரப்பும் 1962ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி போர் நிறுத்தத்தை முறையாக அறிவித்தன. "சீனா தற்சமயம் வைத்துள்ள மெக்மோகன் எல்லையில் வடக்கு பகுதியிலிருந்து விலகி கொள்வதாக அறிவித்தது".

இவ்வாறு 1962ஆம் ஆண்டு இந்தியாசீனப்போர் முடிவுக்கு வந்தது. இந்த பிரச்சினையை சுமூமாகத் தீர்க்க அணிசேரா நாடுகள் கொழும்புவில் மாநாடு நடத்தப்பட்டது.

இன்றைய நாட்களில் கூட 1962ஆம் ஆண்டு இந்திய - சீனப் போர் விரிவான விவாதத் தலைப்பாகவே இருக்கிறது. இந்தப் போரின் விளைவாக இந்திய-சீனாவிற்கு இடையே ஒரு புதிய எல்லைக்கோடு தோன்றியது, இது உண்மையான கட்டுப்பாடு கோடு (LAC) எனப்படுகிறது. 1993ஆம் ஆண்டு, உண்மையான எல்லைக்கோடு நெடுகிலும் அமைதியையும், சமாதானத்தையும் பராமரிக்க, இந்திய-சீன எல்லைப் பகுதியின் மீது, பிரதமர் நரசிம்ம ராவ் சீனப் பயணத்தின் போது ஒரு உடன்படிக்கையானது கையெழுத்தானது.


ஆறு நாடுகள் அடங்கிய கொழும்பு மாநாடு (டிசம்பர் 10,1962) 

• இந்திய-சீனா இடையே தொடரும் போர் பற்றி பேசுவது தொடர்பாக சிறிமாவோ பண்டாரா நாயக்கா கூட்டிய கூட்டம்தான் கொழும்பு மாநாடு என்பதாகும். இது பர்மா, கம்போடியா, எகிப்து, கானா, மற்றும் இந்தோனேஷியா நாட்டுத்தலைவர்கள் அனைவரையும் ஒன்றாகக் கொண்டுவந்து, இரண்டு நாடும் ஆசிய நாடுகளுக்கிடையே உள்ள சிக்கல்களை தீர்க்க ஏற்பாடு செய்தது. 

• இந்தியா பேச்சுவார்த்தைகளை துவங்குவதின் ஆரம்பத்தில் கொழும்பு மாநாட்டின் கோட்பாடுகளை அதன் ஆரம்பம் முதல் கோட்பாடு ரீதியாக ஏற்றுக்கொண்டது.


பொருளாதார உறவுகள்

1980ஆம் ஆண்டுகளின் மத்தியிலிருந்து, நெருக்கமான இருதரப்பு பொருளாதார உறவுகள், இந்திய-சீனாவிற்கு இடையே ஆரம்பமானது. இரண்டு நாடுகளின் அரசாங்கங்களும் துவக்கி வைத்த பேச்சுவார்த்தை செயல்முறை, பொதுவான வர்த்தக நலன்களைப் பற்றி கண்டறிய உதவியாக இருந்தது. இந்தியாவும்-சீனாவும் 1984ஆம் ஆண்டு ஒரு வர்த்தக உடன்படிக்கையினை எட்டின, இது அவைகளுக்கு இடையே "மிகவும் சாதகமான தேசம்" (MFN) என்ற தகுதியினை அளித்தது. 1992ஆம் ஆண்டு முதல் இந்திய மற்றும் சீனா முழு அளவிலான வர்த்தக உறவில் ஈடுபட்டுவருகிறது.

சீனப் பொருள்கள் ஏற்றுமதியாவதற்கு இந்தியா ஏழாவது மிகப் பெரிய நாடாகவும், சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதில் இந்தியா 27வது பெரிய நாடாகவும் இருக்கிறது. சீனாவிற்கு ஏற்றுமதியாவதில் முதன்மையாக இருக்கும் பொருள்கள் வைரம், பருத்தி இழை, இரும்புத் தாது, தாமிரம் மற்றும் கரிம வேதிப் பொருள்கள் போன்றவையாகும். இந்தியாவிற்கு ஏற்றுமதியாகும் சீனாவின்முக்கியமானவைகள் மின்னனு எந்திரங்கள், உபகரணங்கள், உரங்கள், சீன கரிமப் பொருள்கள் உள்ளிட்டனவையாகும். 2017ஆம் ஆண்டு மார்ச் வரையிலான மொத்த சீன முதலீடானது 4.91 பில்லியன் அமெரிக்கா டாலராகும் மற்றும் சீனாவில் இந்தியாவின் 2017ஆம் ஆண்டு, மார்ச் வரையிலான மொத்த முதலீடு 705 மில்லியன் அமெரிக்கா டாலரை எட்டியது.


சர்வதேச ஒத்துழைப்பு

சர்வதேச அரங்கத்தில், இந்தியா-சீனா ஆகிய இரண்டும் வளங்களுக்கான போட்டியாளர்கள் ஆவர். புதிய சக்தியாக தோன்றி வரும் இந்த இரண்டு ஆசிய நாடுகள், வளரும் நாடுகளில் செய்யப்படும் முதலீடுகள் எல்லாம் இந்திய-சீனப் பொருளாதாரத் தேவைகளை எதிர்கொள்வதற்கே ஆகும். பரவலான போட்டி இருந்த போதிலும், இந்தியாவும் சீனாவும் தங்களின் உண்மையான நலன்களை ஒன்றுக்கொன்று பேணிக்கொண்டன. இரண்டு நாடுகளும் பல்-முனை உலக ஒழுங்கை ஆதரிக்கின்றன மற்றும் வெளியுறவுக் கொள்கையில் மேற்கத்திய நாடுகளின் தலையீட்டை எதிர்க்கின்றன. இதனோடு, சீனாவும்-இந்தியாவும் மிகப் பரந்த அளவிலான குறிப்பாகப் பருவநிலை மாற்றம், வர்த்தகப் பேச்சுவார்த்தை, ஆற்றல் பாதுகாப்பு, உலக நிதி நெருக்கடி போன்றவற்றின் மீதான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கின்றன. இந்தியாவும்-சீனாவும் உலக வர்த்தக அமைப்பில் வளர்ந்த நாடுகளிடம் இருந்து வளரும் நாடுகளுக்கு அனுகூலமான கூடுதல் ஆதாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.


செயல்பாடு


ஆசிரியரின் துணையுடன் விவாதம்

ஆசிரியர் வகுப்பை இரண்டு குழுக்களாகப் பிரிக்கவும், அவர்களை இந்து மின்-நாளிதழை பார்க்கச் சொல்லவும் (27.01.2018-The Hindu Explained) அதோடு இந்தியன் எக்ஸ்பிரஸ் (28.08.2018 – டோக்லாம் சண்டை முடிந்து ஓராண்டிற்கு பிறகு) இந்த இரண்டு கட்டுரைகளையும் மாணாக்கர்கள் வாசித்த பிறகு ஆசிரியர் வகுப்பறையில் ஒரு விவாதத்தை தொடங்கவும். 

1. டோக்லாம் பிரச்சனை என்பது முழுவதும் எதைப்பற்றியது? 

2. அப்படி என்றால் என்ன? (டோக்லாம் பிரச்சனை) 

3. அது ஏன் ஒரு விவகாரமாயிருக்கிறது? 

4. பூடான் சீனாவுடன் தன்னை வளர்த்து கொள்ளுமா? 

5. எங்கு இந்த சண்டை துவங்கியது? ஏன்? 

6. இந்தியாவின் கருத்து என்னவாக இருந்தது? 

7. இந்த சண்டையை தீர்ப்பதற்கு இந்தியசீனாவிற்கு இடையே பேச்சுவார்த்தை எப்பொழுது துவங்கியது? 

8. இந்தப் பேச்சு வார்த்தையில் இந்தியா என்ன விவாதத்தை முன்மொழிந்தது? 

9. முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது எது? 

10. இதற்கு முன்னதாக சீனா டோக்லாமிற்குள் நுழைந்துள்ளதா?

இந்த இன்றியமையாத பணிகளுடன், கூடுதலாக இந்தியாவும், சீனாவும் மிக முதன்மையான சர்வதேச அமைப்புகளான "பிரிக்ஸ்" (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ) ஈ.ஏ.ஸ் (E.A.S) (தென் கிழக்கு ஆசிய உச்சிமாநாடு), எஸ்.சி.ஒ (S.C.O) (ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு) ஆசியான் (தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு) ஆகியவற்றில் ஒரு உறுப்பினராக இருக்கின்றது. 


12th Political Science : Chapter 10 : India and It’s Neighbours : India-China Relations in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : இந்தியாவும் அண்டை நாடுகளும் : இந்திய-சீன உறவுகள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 10 : இந்தியாவும் அண்டை நாடுகளும்