Home | 12 ஆம் வகுப்பு | 12வது அரசியல் அறிவியல் | இந்திய மற்றும் மண்டல அமைப்புகள்
   Posted On :  04.04.2022 01:10 am

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 9 : இந்தியாவும் உலகமும்

இந்திய மற்றும் மண்டல அமைப்புகள்

சார்க் அமைப்பு (தெற்காசிய நாடு மண்டல ஒத்துழைப்பு அமைப்பு -SAARC), தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN), பிரிக்ஸ் (BRICS). ,

இந்திய மற்றும் மண்டல அமைப்புகள் 



சார்க் அமைப்பு (தெற்காசிய நாடு மண்டல ஒத்துழைப்பு அமைப்பு -SAARC)

சார்க் அமைப்பானது 1985 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எட்டாம் தேதி, டாக்கா நகரில் சார்க் சாசனச் சட்டத்தில் கையெழுத்திட்டதின் மூலம் நிறுவப்பட்டது. சார்க் அமைப்பானது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, மக்கள் நலன் மற்றும் தெற்காசிய நாடுகளுக்கிடையே நெருக்கமாக வரலாற்று மற்றும் பண்பாட்டு தொடர்பை வளர்த்தெடுக்க உருவாக்கப்பட்டது.

சார்க் அமைப்பு எட்டு நாடுகளை உறுப்பினர்களாக கொண்டது. அவை ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூடான், நேபாளம், இந்தியா, மாலத்தீவு, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகும். இந்த அமைப்பின் செயலகம் 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் நாள் காத்மாண்டு நகரில் நிறுவப்பட்டது.


இந்த அமைப்பின் நோக்கங்கள் 

• தெற்காசிய மக்களின் நலன்களை வளர்த்தெடுத்தல் மற்றும் அவர்களின் தரமான வாழ்வை உயர்த்துதல்.

• இந்த மண்டலத்தில் பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் கலாச்சார மேம்பாட்டை முடுக்கி விடுதல் மற்றும் ஒவ்வொரு தனிநபரும் கண்ணியத்துடன் வாழவும் மற்றும் அவர்களின் முழுமையான ஆற்றலை உணரவும் வாய்ப்பளிப்பது. 

• தெற்காசிய நாடுகளுக்கு இடையே கூட்டு சுயநம்பிக்கை வளர்த்தெடுப்பதும், வலிமைப்படுத்துவதும். 

• பரஸ்பர நம்பிக்கைக்கு பங்களிப்பது, பிரச்சனைகளை ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வது, மதிப்பளிப்பது. 

• செயலாக்கமிக்க கூட்டு இணைவை வளர்த்தல் மற்றும் பொருளாதார, சமூக, கலாச்சார, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தளத்தில் பரஸ்பர உதவிகள்.

• சர்வதேச அரங்குகளில் தங்களுக்குள்ளாக ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்.

• அதே நோக்கங்களுடன், சர்வதேச மற்றும் மண்டல அளவிலான அமைப்புகளுடன் ஒத்துழைப்பை உருவாக்குதல்.

செயல்பாடு


உலகில், தெற்காசியப் பகுதியானது,மிகவும் குறைவான அளவே ஒன்றிணைந்த பகுதிகளாக உள்ளது ஏன்? என்ற கேள்விக்கு காரணம் இம்மண்டலத்தில் உள்ள நாடுகளுக்கு பொருளாதார இணைப்பு மிகவும் பலவீனமானதாகும். 

இதனை உன்னுடைய நண்பனுடன் விவாதிக்க.


அமைப்பு வடிவத்தில், சார்க் அமைப்பானது நான்கு அடுக்கு நிறுவனத்தை கொண்டிருக்கிறது, அதில் உச்சி மாநாடுகளும் அதில் அனைத்து தெற்காசிய நாடுகளின் தலைவர்களும் உறுப்பினர்கள் ஆவர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்கள் சந்திப்பர், அமைச்சரவை குழுவில் வெளியுறவு அமைச்சர்கள் இருப்பார்கள். சார்க் நாடுகளின் வெளியுறவுச் செயலாளர்கள் நிலைக்குழுவின் உறுப்பினர்களாக இருப்பர். தொழில்நுட்பக் குழு உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இருப்பர். இந்த ஒருங்கிணைப்பு குழுவானது, ஒவ்வொருவருடைய குறிப்பான ஒத்துழைப்பு விவகாரங்களிலும், திட்டங்களை ஒருங்கிணைப்பது, நடைமுறைப்படுத்துவது மற்றும் கண்காணிப்பது என்பது அதன் பொறுப்பாகும். இப்பொழுது வரை 18 உச்சி மாநாடுகள் உறுப்பு நாடுகளால் நடத்தப்பட்டுள்ளன.


நான்கு தரப்பு பாதுகாப்பு பேச்சுவார்த்தை (QUAD)

• இந்தோ -பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்வதற்காக, இந்தியா, அமெரிக்கா, மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அமைப்புசார வழிமுறை மூலம் இணைந்து கூட்டாக செயல்படுவது என விளக்கமளிக்கப்படுவது. 

• இந்த நான்கு தரப்பு பாதுகாப்பு பேச்சுவார்த்தை "குவாட் (QUAD) எனும் கருத்தானது உண்மையில் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேயைச் சாரும். 

• இது 2007 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது மற்றும் 2017 ஆம் ஆண்டில் மறுஆய்வு செய்யப்பட்டது.

தெற்காசியா பகுதிகளில் வளர்ந்து கொண்டிருக்கும் பொருளாதார நிலைமைகளில், சார்க் உறுப்பினர் நாடுகள், தெற்காசிய தடையில்லா வர்த்தக பகுதிகளாக உருவாக்கிக் கொண்டது. இந்த ஒப்பந்தம் 2006ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இது 1993ஆம் ஆண்டு சார்க் நாடுகளின் முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்திற்கு அடுத்த தொடர்ச்சியாகும். மேலும், தெற்காசிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் முதன்மையான நோக்கமானது, தெற்காசிய பகுதியில் உள்ள வளரும் நாடுகளுக்கு சிறப்பான மற்றும் சார்பு தன்மையுடன் நடத்த வேண்டியது அவசியம் என்பதை அங்கீகரிக்க வேண்டும் மற்றும் இப்பகுதி அனைத்தும் வளர்ச்சி பெறுவதற்கான கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்பதாகும்.


தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN)

இந்த ஆசியான் அமைப்பு 1967 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரத்தில் நிறுவப்பட்டது. ஆசியான் அமைப்பு கையெழுத்திடப்பட்டு புகழ்பெற்ற பாங்காக் பிரகடனம் என்று அழைக்கப்பட்டது. இதன் நிறுவன தலைவர்களாக இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து போன்றவை உள்ளன. ஆசியான் அமைப்பில் தற்போது பத்து உறுப்பு நாடுகள் உள்ளன. அவைகள் முறையே புருனேதருசாலம் 1984ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் நாளும், வியட்நாம் 1995ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் நாளும், லாவோஸ் மற்றும் மியான்மர் ஆகியவை 1997 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் நாளும், கம்போடியா 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதியும் இணைந்துகொண்டன. ஆசியான் அமைப்பானது கிட்டத்தட்ட ஆரம்பத்தில் பத்து உறுப்பினர் நாடுகளை கொண்டிருக்கும் அமைப்பாகும். கிழக்காசிய பகுதியில் மண்டல பொருளாதார ஒத்துழைப்பை ஒருங்கிணைக்கும் அமைப்பாகும். இந்த அமைப்பு கிழக்காசியாவில் பல்வேறு பொருளாதார ஒத்துழைப்பிற்கான துவக்கத்தை ஏற்படுத்தியதற்கும் பொறுப்பாகும்.

அவை; 

• ஆசியான் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (AFTA) 

• ஆசியான் சேவைப் பணிகளுக்கான கட்டமைப்பு ஒப்பந்தம் (AFAS) 

• ஆசியான் முதலீட்டு பகுதி (AIA)

இதன் உறுப்புகளான கிழக்கு ஆசிய நாடுகளுடன் இந்தியாவின் நட்புறவானது நூற்றாண்டு காலமாக தொடர்கிறது. இந்த புதிய துவக்கத்தை இந்தியா மேற்கொள்வதற்கு 1990 ஆம் ஆண்டுகளில், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான பொருளாதார உறவை தன்னுடைய "கிழக்கு நோக்கி கொள்கை" அடிப்படையிலிருந்து தொடங்கியதாகும். இதற்கிடையே சீனா மற்றும் இதர மேற்கு உலக நாடுகள் மற்றும் பிற ஆசிய நாடுகளும், இந்தியா ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு எனவும், அது மண்டல அளவில் தோற்றம் பெற்றுவரும் சக்தி எனவும், உணரத் தொடங்கின. இந்த புரிதலானது 1992ஆம் ஆண்டு இந்தியாவை ஆசியான் அமைப்பின் ஒரு பகுதியளவு கூட்டாளி என்ற வகையிலும், 1996 ஆம் ஆண்டுகளில் அதன் முழுமையான பேச்சு நடத்தும் அளவிற்கு உரிய கூட்டாளியாகவும் ஆக்கியது. "கிழக்கு நோக்கி கொள்கையானது" வளர்ச்சி அடைந்து செயல்திட்டம் சார்ந்த, "கிழக்கு நோக்கி செயல்பாடு" என்பதாக பெயர் மாற்றமடைந்தது. பன்னிரண்டாவது ஆசியான்இந்தியா உச்சி மாநாட்டின் போதும், நவம்பர் 2014இல், மியான்மரின் நே பை டா- நகரில் நடைபெற்ற கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டிலும், இந்திய பிரதமர் "கிழக்கு நோக்கி செயல்பாடு" என்ற கொள்கையை முறையாகத் தெளிவாக விளக்கினார். இந்தியாவுக்கும் ஆசியானுக்கும் உடனான உறவானது, இந்தியாவின் வெளியுறவு கொள்கையின் ஒரு முக்கிய தூணாக இருக்கிறது மற்றும் "கிழக்கு நோக்கி செயல்பாடு" (AEP) எனும் கொள்கையின் ஒரு அடித்தளமாக இருக்கிறது.

ஆசியான் அமைப்பு உடனான இந்தியாவின் முக்கியமான உறவுகளில், அரசியல்-பாதுகாப்பு ஒத்துழைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, சமூக-கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் இணைப்பு போன்றவைகளாகும். மேலும் கூடுதலாக, சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு நிதி உதவி அளிக்கும் திட்டங்களும் நிறுவப்பட்டுள்ளது.

ஆசிய மறு உறுதி துவக்கச் சட்டம் (ARIA)

• இதன் நோக்கம் இந்திய-பசிபிக் பகுதியில் அமெரிக்காவின் ராணுவ பாதுகாப்பு, இதன் பொருளாதார நலன் அதன் மதிப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்ற பன்முகத்தன்மை. 

• இந்த புதிய சட்டமானது, தென் சீனா கடல் பகுதியில் சீனா செய்துவரும் சட்டவிரோதக் கட்டுமானம் மற்றும் செயற்கையாக ராணுவமயமாக்கல் மற்றும் அச்சுறுத்தும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரம் அளிக்கிறது. 

• ஆசிய மறு உறுதி துவக்கச் சட்டம் (ARIA) என்பது இந்திய-அமெரிக்கா இடையேயான மிக அவசியமான யுத்த தந்திர ரீதியிலான நட்புறவை அங்கீகரித்தல் மற்றும் இந்திய பசிபிக் பகுதியில் அமைதி மற்றும் பாதுகாப்பை ஊக்குவிப்பது மற்றும் இரு நாடுகளுக்கு இடையே தூதரக, பொருளாதார மற்றும் பாதுகாப்பிற்கு அழைப்பு விடுத்தல் ஆகும். 

• சிறிது காலத்திற்கு முன்பு அமெரிக்கா முக்கியத்துவம் வாய்ந்த பசிபிக் பகுதி தலைமையை (PACOM) இந்திய-பசிபிக் தலைமை (COMMAND) பகுதி என பெயர் மாற்றம் செய்தது. இது அமெரிக்க அரசாங்கம், கிழக்கு ஆசியா மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் தனித்து போடும் பகுதியாகிறது, மற்றும் இந்திய போர்திறன் சார்ந்த திட்டமிடலில் ஒரு முக்கிய கூட்டாளியாகும். 

• அமெரிக்கா தன்னுடைய இந்திய - பசிபிக் பகுதிக்கு பொருளாதாரத் தூணாக இருப்பதற்காக இந்திய-பசிபிக் அமைப்பை நிறுவியது.


பிரிக்ஸ் (BRICS)


"பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா என்பதின் சுருங்கிய வார்த்தையான பிரிக்ஸ் (BRICS) என்பது 2001ஆம் ஆண்டு "கோல்டுமென் சாஸ்" என்ற அமைப்பை சார்ந்த "ஜிம் ஓ நீல்" (Jim O Neil) என்பவரால் உருவாக்கப்பட்டது. இது அடுத்த 50 ஆண்டுகளுக்கான பொருளாதார போக்குகளின் உலகளாவிய பொருளாதார மாதிரி வடிவத்தின் தொலைநோக்கு பார்வையின் விளைவாகும். அடுத்த 2050ஆம் ஆண்டுக்குள் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் "டாலர்" என்ற வகையில் மிகவும் தொழில் ரீதியாக வளர்ச்சி அடைந்த ஆறு நாடுகளைக் காட்டிலும் பெரிய நாடாக இருக்கும் என்றும், இது கடந்த 300 ஆண்டுகால " வல்லரசு" என்ற அடிப்படை இயக்கத்தையே முழுவதுமாக மாற்றி அமைக்க போகிறது என்று கணித்தார்.

பிரிக்ஸ் அமைப்பின் முதன்மையான ஒரு சாதனை என்பது புதிய வளர்ச்சி வங்கியினை நிறுவியது ஆகும். இது 2015ஆம் ஆண்டு ஜூலை 7 அன்று பிரிக்ஸ் நாடுகளில் மற்றும் இதர வளரும் நாடுகளின் உள்கட்டமைப்பு மற்றும் நீடித்த வளர்ச்சி ஆகியவற்றுக்காக வளங்களை திருடுவதை தனது கருத்தாக கொண்டு இயங்குவதற்கு வந்தது. இந்த புதிய வளர்ச்சி வங்கியானது தனது உறுப்பினர் நாடுகளில் உள்கட்டமைப்பு மற்றும் நீடித்த வளர்ச்சி ஆகியவற்றுக்காக வளங்களை ஏற்படுத்திக் கொள்வதில் உதவுகிறது. "அவசரகால நிதியிருப்பு ஒப்பந்தம்" என்பது பிரிக்ஸ் அமைப்பு ஏற்படுத்திய மற்றொரு முயற்சியாகும், இது பிரிக்ஸ் நாடுகளுக்கு ஏற்படும் நிதி நெருக்கடி உள்ளாகுமானால், அப்போது நிதி பாதுகாப்புக் கருவியாகப் பயன்படுகிறது. 

12th Political Science : Chapter 9 : India and the World : India and Regional Organisations in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 9 : இந்தியாவும் உலகமும் : இந்திய மற்றும் மண்டல அமைப்புகள் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 9 : இந்தியாவும் உலகமும்