Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | இந்தோ –கிரேக்க உறவுகளின் தொடக்கம்

மௌரியருக்குப் பிந்தைய காலம் - வரலாறு - இந்தோ –கிரேக்க உறவுகளின் தொடக்கம் | 11th History : Chapter 6 : Polity and Society in Post-Mauryan Period

   Posted On :  18.05.2022 05:29 am

11 வது வகுப்பு வரலாறு : அலகு 6 : மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்

இந்தோ –கிரேக்க உறவுகளின் தொடக்கம்

அலெக்சாண்டர் வடமேற்கு இந்தியாவின் மீது படையெடுத்து (பொ.ஆ.மு. 327-325), பஞ்சாப் பகுதியைக் கைப்பற்றியதிலிருந்து கிரேக்கர்களுடனான இந்தியத் தொடர்பு தொடங்கியது.

இந்தோ –கிரேக்க உறவுகளின் தொடக்கம்

அலெக்சாண்டர் வடமேற்கு இந்தியாவின் மீது படையெடுத்து (பொ.ஆ.மு. 327-325), பஞ்சாப் பகுதியைக் கைப்பற்றியதிலிருந்து கிரேக்கர்களுடனான இந்தியத் தொடர்பு தொடங்கியது. அவர், தனது படையுடன் மேற்கு நோக்கி திரும்பிச் செல்லத் தொடங்கியபோது, வென்ற பகுதிகளை மாகாண ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் விட்டுச் சென்றார். சந்திரகுப்த மௌரியரின் தொடக்ககாலப் படையெடுப்புகளில் ஒன்று, இந்த அயல்நாட்டு படையெடுப்பாளர்களுக்கு எதிரானதாகும்.

அலெக்சாண்டரின் திறமைமிக்க தளபதிகளுள் ஒருவரான செலியுகஸ் நிகேடர், பொ.ஆ.மு. 311 க்குப் பிறகு பிரிஜியா (துருக்கி) தொடங்கி சிந்து நதி வரையிலுமான ஒரு மிகப்பெரிய பரப்பில் வெற்றிகரமாக தனது ஆட்சியை நிறுவினார். பொ.ஆ.மு. 305 வாக்கில், சந்திரகுப்தர் செலியுகளை எதிர்த்துப் போரிட்டு அவரைத் தோற்கடித்தார். இருப்பினும், இது அலெக்சாண்டரின் ஏனைய ஆளுநர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற கொடூரமான தோல்வி அல்ல. மாறாக, சந்திரகுப்தர் செலியுகஸுடன் ஓர் அமைதி உடன்படிக்கை செய்துகொண்டார். சிந்து வரையிலும் தான் வெற்றி கொண்டிருந்த நிலப்பரப்பை ஒப்படைத்த செலியுகஸ், அதற்குப் பதிலாக 500 போர் யானைகளைப் பெற்றுக்கொண்டார். மேலும் ஒரு திருமண ஒப்பந்தம் பற்றிய குறிப்பும் கிடைக்கின்றது. கிரேக்கர்களுக்கும் மௌரியப் பேரரசருக்கும் இடையே அரச உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதற்கும் அந்த உடன்படிக்கை வழி செய்தது. மேலும், கிரேக்க நாட்டுத் தூதராக மெகஸ்தனிஸ், மௌரியரின் தலைநகரான பாடலிபுத்திரத்துக்குக் அனுப்பப்பட்டார். இந்தியாவிற்கு வந்த முதல் அயல்நாட்டு தூதுவர் மெகஸ்தனிஸ் ஆவார்.

சந்திரகுப்தரின் மகன் பிந்துசாரர், மேற்காசியாவிலிருந்த கிரேக்க அரசுகளோடு தொடர்ந்து நட்புறவைப் பேணினார். எகிப்தின் இரண்டாவது தாலமி தூதர்களை அனுப்பியது பற்றியும் சிரியாவின் ஆன்டியோகஸுடனான பிந்துசாரரின் கடிதப் போக்குவரத்து குறித்தும் கிரேக்க வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். அசோகரும் அதே மரபின்படி கிரேக்க அரசுகளுடன் நட்புறவு கொண்டிருந்தார். அவரது பாறைக் கல்வெட்டு ஆணை (13) ஐந்து யவன அரசர்களைக் குறிப்பிடுகிறது. அவர்கள் சிரியாவின் இரண்டாவது ஆன்டியோகஸ் தியோஸ், எகிப்தின் இரண்டாவது தாலமி பிலடெல்பஸ், மாசிடோனியாவின் ஆன்டிகோனஸ் கொனடாஸ், சைரீனின் மகஸ், கொரிந்தின் அலெக்சாண்டர் என்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது, கிரேக்கருடனான அசோகரின் தொடர்புகள், மேற்காசியாவுக்கு அப்பால் கிரீஸின் மையப் பகுதி வரை விரிவடைந்ததைக் குறிப்பிடுகிறது.

இந்தியா முழுவதும் கிரேக்கர்களைக் குறிப்பிடப்பயன்படுத்தப்பட்ட யவன (அல்லதுயோன) என்ற சொல்லை இப்போது பார்ப்போம். இச்சொல், பாரசீக மொழியில் கிரேக்கர்களைக் குறிக்கும் ‘யயுனா’ என்னும் சொல்லிருந்து பெறப்பட்டதாகும். இந்தியாவில் இச்சொல்லானது கலப்பின மக்கள் உட்பட கிரேக்கத்தை பிறப்பிடமாகக் கொண்ட அனைவரையும் மேலும் பொனீசியர்களைக்கூடக் குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த முறையான தூதுவப் பரிமாற்றமும் கடிதப் போக்குவரத்தும் கூடவே ஆஃப்கானிஸ்தான் வரையிலான மௌரியப் பேரரசின் விரிவாக்கமும் இந்தியாவிலிருந்து மேற்கே எகிப்து வரையில் முறையான வணிகம் நடைபெறுவதற்கு உதவி புரிந்தது. தரை வழி வணிகமானது, வட மேற்கு ஆஃப்கானிஸ்தான் (பாக்ட்ரியா) வழியாக மேற்கொள்ளப்பட்டது; கூடவே ஓரளவு பாரசீக வளைகுடா, செங்கடல் வழியே கடல்வழி வணிகமும் நடைபெற்றது. தந்தம், ஆமை ஓடுகள், முத்துகள், அவுரி முதலிய சாயங்கள், விளாமிச்சை வேர்த் தைலம் அல்லது மிச்சை (கங்கைப் பகுதியைச் சேர்ந்த ஒரு நறுமணத் தைலம்), தாளிசபத்திரி (ஒரு வாசனைப் பொருளாகப் பயன்படும் இலவங்கப்பட்டை இலை) மற்றும் அரிய மரங்கள் உள்ளிட்ட பல்வகையான ஆடம்பரப் பொருள்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன.

கிரேக்கர்களின் பண்பாட்டுத் தாக்கம், பாடலிபுத்திரத்திலுள்ள நினைவுச் சின்னங்களிலிருந்து தெரியவருகிறது. மேலும் மௌரியப் பேரரசின் விரிவான நிர்வாக அமைப்புகளுக்குப், பாரசீகர்கள், கிரேக்கர்கள் ஆகியோரின் நிர்வாக அமைப்பு முறைகளே தூண்டுகோலாக இருந்திருக்கும் என்று பல வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். இறுதியாக, மேற்கு இந்தியாவில் இந்தோ-கிரேக்க அரசாட்சிகள் தோன்றியமை, மாறுபட்ட பண்பாட்டின் தாக்கங்களை வலுப்படுத்தியதோடு ஒரு வேறுபட்ட, தனித்தன்மை கொண்ட கலைச்சிந்தனைப் போக்கையும் தோற்றுவித்தது.

இந்தோ - கிரேக்க அரசர்கள்

வடக்கு ஆஃப்கானிஸ்தான் (பாக்ட்ரியா) தொடங்கிசிரியாவரையிலும் விரிந்திருந்த செலுசியப் பேரரசு, பொ.ஆ.மு. 250க்குப் பிறகு வலுவிழந்து சிதையத் தொடங்கியது. பாக்ட்ரியாவின் ஆளுநர் டியோடோடஸ், இரண்டாம் ஆன்டியோகஸை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து, பாக்ட்ரியாவின் சுதந்திர அரசரானார். பொ.ஆ.மு. 212இல் இருந்த பாக்டிரிய அரசர், யூதிடெமஸ் ஒரு கிரேக்கராவார். செலுசியப் பேரரசர் மூன்றாம் ஆன்டியோகஸால் இவரை அடிமைப்படுத்த முடியவில்லை. மேலும், மேற்கில் தனது ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டியதாக இருந்ததால் ஆன்டியோகஸ், அவருடன் ஓர் உடன்படிக்கைச் செய்துகொள்ள ஒப்புக்கொண்டார். எனினும் மூன்றாம் ஆன்டியோகஸ், காபூல் நதி வரையிலும் வந்து, சுபக்சேனா என்றறியப்பட்ட பூர்விக இந்திய அரசரைத் தோற்கடிக்க இயன்றது. இவ்வரசனைக் குறித்து மேலதிக விபரங்கள் தெரியவில்லை. இந்தப் பகுதியிலிருந்த ஒரு சுதந்திரமான அரசர் என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் கொண்டு அசோகர் இறந்த பிறகு மௌரியப் பேரரசின் மையப்படுத்தப்பட்ட அதிகாரம் வலுவிழந்ததன் ஓர் அடையாளமாக இதைக் கொள்ளலாம்

டெமிட்ரியஸ்

யூதிடெமஸைத் தொடர்ந்து அவரது மகன் (சுமார் பொ.ஆ.மு. 200இல்) டெமிட்ரியஸ் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தார்; மேலும், மற்றொரு டெமிட்ரியஸ், உத்தேசமாக இரண்டாம் டெமிட்ரியஸ்தான் (சுமார் பொ.ஆ.மு.175), அறியப்பட்ட முதல் இந்தோ -கிரேக்க அரசராவார். இந்தோகிரேக்க அரசர்களின் நேர்த்திமிக்க நாணயங்களே அவர்களின் ஆட்சியை வேறுபடுத்திக் காட்டுகிற அம்சமாகும். கிரேக்க வெள்ளி நாணயங்களின் பாணியில் வடிக்கப்பட்டிருந்த அவை, ஒரு பக்கத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அரசரின் உருவத்தையும், பெயரையும் தாங்கி இருந்தன. இவ்வாறாக அந்த நாணயங்கள், பல வகையான தலைக் கவசங்களோடு சித்திரிக்கப்பட்டுள்ள, கூடவே தனித்த முக மற்றும் உடல் கூறுகளையும் கொண்ட அரசர்களின் உருவத்தை நமக்குக் காட்டுகின்றன. இக்காலகட்டத்தைச் சேர்ந்த நாணயங்கள் பெருமளவில் சேகரிக்கப்பட்டுள்ளன; இவற்றைப் பயன்படுத்தி அரச வம்சாவளியை உறுதிப்படுத்துவது சாத்தியமாயிற்று.


அக்காலகட்ட இந்திய வரலாற்றுக் குறிப்புகள், அயோத்தி (சாகேதம்), அதனினும் கிழக்கேயுள்ள மகதம் ஆகிய பகுதிகள் மீதும் யவனர்கள் படையெடுத்து வந்ததைக் கூறுகின்றன. இருப்பினும், கிரேக்கர்கள் தமக்கிடையிலான உட்பூசல்களால் குழப்பத்திலிருந்ததாகத் தெரிவதால், இந்தப் பகுதிகள் எதையும் அவர்கள் கைப்பற்றி தங்கள் வசம் வைத்திருக்கவில்லை. மாறாக, கடைசி மௌரிய அரசனுக்குப் பிறகு ஆட்சியைக் பறித்துக்கொண்ட சுங்கப் பேரரசர் புஷ்யமித்ரனுக்கு நிலங்களை விட்டுக் கொடுத்தனர். டெமிட்ரியஸ் இந்தியாவோடு கொண்டிருந்த தொடர்புகளை நாணயச் சான்றுகளும் நிரூபிக்கின்றன. அவர் வெளியிட்ட சதுர வடிவ இருமொழி நாணயங்களில், முகப்புப் பக்கத்தில் கிரேக்கத்திலும் பின் பக்கத்தில் (வட மேற்குப் பாகிஸ்தானின் உள்ளூர் மொழியான) கரோஷ்டியிலும் பொறிக்கப்பட்டுள்ளது.

சுமார் பொ.ஆ.மு. 165 வாக்கில் பாக்ட்ரியா பார்த்தியர் மற்றும் சாகர் வசமானது. இதன் பின்னர் மத்திய மற்றும் தெற்கு ஆஃப்கானிஸ்தான் பகுதிகள், வடமேற்கு இந்தியா ஆகிய இடங்களில் யவனர்களின் ஆட்சி தொடர்ந்தது. இருப்பினும் ஆட்சி அதிகாரத்துக்கான மோதல்கள் கிரேக்கர் இடையே நீடித்ததால் குழப்பம் தொடர்ந்தது; மேலும், முப்பதுக்கும் அதிகமான அரசர்களின் பெயர்களை அவர்களது நாணயங்களிலிருந்து அடையாளம் காணமுடிகிறது. அவர்கள் அனைவருமே முழுவுரிமை பெற்ற ஆட்சியாளர்களாகச் சிறிய பகுதிகளைச் சுதந்திரமாக ஆட்சி செய்ததோடு, தங்களின் சொந்த நாணயங்களை வெளியிட்டிருப்பதும் சாத்தியமே.

மினாண்டர்

இந்தோ - கிரேக்க அரசர்களிலேயே நன்கறியப்பட்டவரான மினாண்டர் (சுமார் பொ.ஆ.மு. 165/145-130), நாட்டின் வட மேற்கில் ஒரு பெரிய பகுதியை ஆட்சி செய்ததாகத் தெரிகிறது. அவரது நாணயங்கள், காபூல், சிந்து நதிகளின் சமவெளிகளிலிருந்து மேற்கு உத்திரப் பிரதேசம் வரையிலுமான விரிந்து பரந்த பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன; மேலும் இது அவரது ஆட்சிப் பரப்பு குறித்த ஒரு நல்ல குறிப்பைத் தருகிறது. அவரது நாணயங்களில் காணப்படுவது போல் அவர் ஒரு மாபெரும், வீரதீரம் பொருந்திய படையெடுப்பாளராகத் தெரியவில்லை என்றபோதிலும் அவர் பாஞ்சாலம் மதுரா அரசர்களோடு சேர்ந்து கங்கைப் பகுதியைச் சூறையாடியதாகக் கூறப்படுகிறது. அவரைக் கலிங்க (ஒடிஷா) அரசர் காரவேலனால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று ஹதிகும்பா கல்வெட்டு கூறுகின்றது. பாடலிபுத்திரத்தை மினாண்டர் வெற்றிகரமாகத் தாக்கிய போதிலும் தனது வெற்றியை நிலைப்படுத்திக்கொள்ளாமல் பின்வாங்கினார். அவரது நாணயங்களில் அவர் ஓர் “அரச”ராக, இரட்சகராக, மீட்பராக விவரிக்கப்பட்டுள்ளாரே தவிர ஒரு மாபெரும் வெற்றி வீரனாக விவரிக்கப்படவில்லை.

மிலிந்த - பன்ஹா (மிலிந்தவின் வினாக்கள்) எனும் பௌத்தப் பிரதியில்தான் மினாண்டர் ஒரு பெருமைக்குரிய தலைவராக அறியப்படுகிறார். அதில் ஆசிரியர் நாகசேனருடன் பௌத்தம் குறித்த ஒரு கேள்வி - பதில் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் ஒரு பௌத்தராகி, பெளத்தத்தை ஊக்குவித்ததாக நம்பப்படுகிறது.


இந்தோ - கிரேக்க அரசர்களில் நன்கு அறியப்பட்ட மற்றொருவர் ஆன்டியால் சைடஸ் அல்லது ஆன்டியால் கிடாஸ் (சுமார் 110 ஆம் ஆண்டு) குறித்த தகவல்களை நாம் அறிவதற்கு இவரது தூதர் ஹீலியோடோரஸ் என்பவரே காரணம். இவர் பாகபத்ர அரசரின் அரசவைக்குத் தூதராக அனுப்பப்பட்டார். ஹீலியோடோரஸ் அங்கு ஒரு தூணை நிறுவினார். தூணின் தலைப் பகுதி கருட உருவத்தை கொண்டது. கருட - துவஜ என்று அழைக்கப்பட்ட, வைணவக் கடவுள் கிருஷ்ணனுக்கு மரியாதை செய்யும் விதமாக இத்தூண் அமைக்கப்பட்டது. ஹீலியோடோரஸ் வைணவராக மாறியதாய் தெரிகிறது. (மத்திய பிரதேசம், விதிஷாவில் திறந்தவெளி மைதானத்தின் நடுவே அந்தத் தூண் காணப்படுகிறது).

கிரேக்கருடனான இந்தியத் தொடர்பு வெறும் இந்தோ - கிரேக்க அரசர்களுடனானது மட்டுமல்ல. மாறாக, துணைக்கண்டம் முழுவதும் கிரேக்கர் பிரபலமாகி இருந்தனர். அவர்களது இருப்பு குறித்த தகவல்கள் துணைக்கண்டம் முழுவதும் பதிவாகியுள்ளன. கிரேக்க வணிகர்கள், மாலுமிகள், மற்றும் பிறர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டனர். அதனால் கிரேக்கர்களுடனான தொடர்பு தொடர்ந்தது.

Tags : Post-Mauryan Period | History மௌரியருக்குப் பிந்தைய காலம் - வரலாறு.
11th History : Chapter 6 : Polity and Society in Post-Mauryan Period : Indo-Greek Relations Post-Mauryan Period | History in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 6 : மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும் : இந்தோ –கிரேக்க உறவுகளின் தொடக்கம் - மௌரியருக்குப் பிந்தைய காலம் - வரலாறு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 6 : மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்