Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | பணவீக்கம்: பொருள், இலக்கணம், வகைகள், காரணங்கள், விளைவுகள், கட்டுப்பாடு

பணவியல் பொருளியல் - பணவீக்கம்: பொருள், இலக்கணம், வகைகள், காரணங்கள், விளைவுகள், கட்டுப்பாடு | 12th Economics : Chapter 5 : Monetary Economics

   Posted On :  13.05.2022 04:53 pm

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 5 : பணவியல் பொருளியல்

பணவீக்கம்: பொருள், இலக்கணம், வகைகள், காரணங்கள், விளைவுகள், கட்டுப்பாடு

பொருளாதாரத்தில் பணவீக்கம், பண வாட்டம் ஆகியன இரு பெரும் பொருளாதார சிக்கல்கள் ஆகும்.ஆகவே, இவைகளை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம் ஆகும்.

பணவீக்கம்

பொருளாதாரத்தில் பணவீக்கம், பண வாட்டம் ஆகியன இரு பெரும் பொருளாதார சிக்கல்கள் ஆகும். ஆகவே, இவைகளை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம் ஆகும்.



1. பணவீக்கம் என்பதன் பொருள்

பணவீக்கம் என்பது தொடர்ச்சியான மற்றும் குறிப்பிடும்படியான பொது விலைமட்ட அதிகரிப்பு ஆகும். சற்று விளக்கமாக கூறினால் பணவீக்கம் என்பது பண்டங்கள் மற்றும் பணிகளில் பொதுவிலைமட்ட அதிகரிப்பு விகிதத்தையும், அதன் விளைவாக பணத்தின் வாங்கும் சக்தி குறைவதையும் காட்டுகிறது.


இலக்கணங்கள்

“குறைந்த அளவு பண்டங்களை அதிக அளவு பணம் துரத்தும் நிலை"

- கோல்பர்ன்

“வாங்கும் சக்திக்கான அளவின் அசாதாரண குறைவு நிலையாகும்”

- கிரிகெரி



2. பணவீக்கத்தின் வகைகள் 

பணவீக்க வேகத்தின் அடிப்படையில்


பணவீக்கம் வேகத்தின் அடிப்படையில் தவழும் பணவீக்கம் (Creeping Inflation), நடக்கும் பணவீக்கம் (Walking Inflation), ஓடும் பணவீக்கம் (Running Inflation), தாவும் பணவீக்கம் (Galloping Inflation) அல்ல து உயர் பணவீக்கம் (Hyper Inflation) என நான்காக வரைபடம் 5.2ல் குறிக்கப்பட்டுள்ளது.

i) தவழும் பணவீக்கம்

தவழும் பணவீக்கம் மிக குறைவான மற்றும் எளிமையான விகித்தில் பணவீக்க விகிதம் இருப்பதாகும். நீண்ட காலத்தில் விலைவாசி உயர்வதை மக்கள் எளிதாக உணர முடியாத அளவில் இருக்கும் பணவீக்கமே தவழும் பணவீக்கம் எனப்படுகிறது. இது மிதமான பணவீக்கம் (Mild Inflation) எனப்படுகிறது.

ii) நடக்கும் பணவீக்கம்

பணவீக்கம் மிதமான வேகத்தில் ஒற்றை இலக்கத்தில், அதாவது 3 முதல் 9 சதவிகிதத்தில், இருந்தால் அது நடக்கும் பணவீக்கம் அல்லது நகரும் பணவீக்கம் (Trolling Inflation) என்றழைக்கப்படுகிறது.

iii) ஓடும் பணவீக்கம்

ஆண்டு பணவீக்க விகிதம் 10 முதல் 20 சதவிகிதத்திற்குள் இருந்தால் அது ஓடும் பணவீக்கம் எனப்படுகிறது. வேகமான விலைவாசி அதிகரிப்பை ஓட்டத்துடன் உவமைப்படுத்தி சொல்வதால் அது ஓடும் பணவீக்கம் எனப்படுகிறது.

iv) தாவும் பணவீக்கம்

தாவும் பணவீக்கம் அல்லது உயர் பணவீக்கம் என்பது சமாளிக்க முடியாத அளவிற்கு இரண்டு அல்லது மூன்று இலக்க சதவிகிதத்தில் உள்ள பணவீக்கம் ஆகும். மிக அதிகமான உயர் பணவீக்கம் இருக்கும்பொழுது ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் ஆண்டிற்கு 20 முதல் 100 வரை சதவிகிதமாக இருக்கும். கீன்ஸ் இதனை உண்மையான பணவீக்கம் என குறிப்பிடுகின்றார்.

21ஆம் நூற்றாண்டின் முதல் உயர் பணவீக்கம் முன்னெப்பொழுதும் இல்லாத அளவாக ஜிம்பாப்வே நாட்டில் ஆண்டிற்கு 3714 சதவிகிதமாக ஏப்ரல் 2007 இறுதியில் உயர்ந்தது.


தேவை இழுப்பு எதிர் செலவு உந்து பணவீக்கம் 

i) தேவை-இழுப்பு பணவீக்கம்

எப்பொழுதுமே தேவை மற்றும் அளிப்பு ஆகியன பணவீக்கத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அளிப்பு நிலையாக உள்ள நிலையில், பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும் பொழுது விலைவாசி உயருகின்றது. இது தேவை – இழுப்பு பணவீக்கம் என்றழைக்கப்படுகிறது.


ii) செலவு-உந்து பணவீக்கம்

உற்பத்தியில் மூலப்பொருட்கள் மற்றும் இதர இடுபொருட்களுக்கான செலவு உயருகின்றது பொழுது உற்பத்தி செலவு கூடி பொருட்களுக்கான விலை அதிகரிக்கின்றது. இவ்வகை பணவீக்கம் செலவு-உந்து பணவீக்கம் எனப்படுகிறது.

கூலி - விலை சுழல்

கூலி - விலை சுழல் மூலம் கூலி உயர்வுக்கும் பணவீக்கத்திற்கும் இடையேயான காரண-விளைவு உறவு விளக்கப்படுகிறது. கூலி உயரும் பொழுது செலவிடத்தகுந்த வருவாய் உயருகிறது; இதனால் பொருட்களுக்கான தேவை உயருகின்றது; தொடர்ந்து பொருட்களுக்கான விலையும் உயருகின்றது; இதன் விளைவாக பணவீக்கம் ஏற்படுகிறது; விலைவாசி உயர்வின் காரணமாக தொழிலாளர்கள் கூலி உயர்வினை கோருவார்கள்; இது உற்பத்திச் செலவினை மீண்டும் உயர்த்தி பொருட்களின் விலையை மீண்டும் மேல்நோக்கி உயர்த்த தூண்டும் ஒரு சுழலை ஏற்படுத்துகிறது.

இதர காரணிகள் (தூண்டும் அடிப்படையில்) 

i) காகிதப்பண பணவீக்கம் (Currency Inflation)

அளவுக்கு அதிகமான காகிதப் பணத்தை மையவங்கி பயன்பாட்டிற்கு விடுவிக்கும் பொழுது ஏற்படும் விலைவாசி உயர்வு காகிதப் பணவீக்கம் எனப்படுகிறது.

ii) கடன்பண பணவீக்கம் (Credit Inflation)

வணிக வங்கிகள் தாராளமாக கடனை அளிக்கும் பொழுது ஏற்படும் விலைவாசி உயர்வினை கடன்பண பணவீக்கம் ஆகும்.

iii) வரவு-செலவு பற்றாக்குறை தூண்டல் பணவீக்க ம் (Deficit Induced Inflation)

வரவு - செலவுத் திட்டத்தினால் ஏற்படும் பற்றாக்குறையை (Budget Deficit) சரிசெய்யும் நிதியாக்க முறைகளில் ஒன்றாக, மையவங்கி மூலம் கூடுதல் காகிதப்பணத்தினை அச்சிட்டு பயன்பாட்டிற்கு விடப்படுகிறது. இக்கூடுதல் பணத்தினால் ஏற்படும் விலைவாசி உயர்வினை வரவு - செலவு பற்றாக்குறை தூண்டல் பணவீக்கம் என்கிறோம்.

iv) இலாபத் தூண்டல் பணவீக்கம் (Profit Induced Inflation)

அதிக இலாபத்தினை பெறும் நோக்கில் பொருட்களின் விலையில் உயர் இலாப விகித்தை சேர்ப்பதால் பொருட்களின் விலை அதிகரிக்கின்றது. இதுவே இலாபத் தூண்டல் பணவீக்கம் ஆகும்.

v) பொருள் பற்றாக்குறை தூண்டல் பணவீக்கம் (Scarcity Induced Inflation)

விவசாயம் போன்ற துறைகளில் இயற்கை இடர்ப்பாடுகள் மற்றும் இதர காரணங்களால் உற்பத்தி பாதிக்கப்படும்பொழுது பொருள் பற்றாக்குறை ஏற்படும். மேலும், பதுக்கல் நடவடிக்கையினாலும் கருப்புச் சந்தையினாலும் பொருள் பற்றாக்குறை ஏற்படும். இப்பற்றாக்குறைகளினால் ஏற்படும் விலைவாசி உயர்வினை பொருள் பற்றாக்குறை தூண்டல் பணவீக்கம் என்கிறோம்.

vi) வரி தூண்டல் பணவீக்கம் (Tax Induced Inflation)

மறைமுக வரிகளான கலால் வரி, சுங்கவரி மற்றும் விற்பனைவரி ஆகியவற்றில் ஏற்படும் உயர்வு காரணமாக விலைவாசி உயர்ந்து செல்வது வரி தூண்டல் பணவீக்கம் எனப்படுகிறது. உதாரணத்திற்கு பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்கள் மீதான வரி உயர்வு பணவீக்கத்தை தூண்டுகிறது. இவ்வகையான பணவீக்கத்தை வரிவீக்கம் (Taxflation) எனவும் அழைக்கிறோம்.



3. பணவீக்கத்திற்கான காரணங்கள்

இந்தியாவில் பல்வேறு காரணங்களால் பணவீக்கம் ஏற்படுகிறது. அது ஏற்படுவதற்கான காரணங்கள் பின்வருமாறு அமைந்துள்ளன:

i) பண அளிப்பு உயர்வு

காகித பண அளிப்பு உயர்வினால் மொத்த தேவை அதிகரித்து பணவீக்கம் ஏற்படுகிறது. பெயரளவு பண அளிப்பு (nominal money supply) உயர்வு பணவீக்கத்தை அதிகரிக்கின்றது.

ii) செலவிடத் தகுந்த வருவாயில் (Disposable Income) உயர்வு

மக்களின் செலவிடத் தகுந்த வருவாய் அதிகரிக்கும் பொழுது அவை பொருட்கள் மற்றும் பணிகளுக்கான தேவையை தூண்டுகின்றன. செலவிடத் தகுந்த வருவாய் உயர்வு, தேசிய வருவாய் அதிகரிப்பினாலோ அல்லது வரிவிகித குறைப்பினாலோ ஏற்படும். இதன் காரணமாக பணவீக்கம் ஏற்படும்.

iii) உயர்ந்து வரும் பொதுச் செலவுகள்

வளர்ச்சி மற்றும் சமுதாய நலத் திட்டங்களை அமல்படுத்துதல் போன்றவற்றில் அரசின் செயல்பாடுகள் விரிவடைந்து வருவதால் பொதுச் செலவுகளின் அளவு கூடி வருகிறது. இதன் காரணமாகவும் பணவீக்கம் ஏற்படுகிறது.

iv) நுகர்வோர் செலவு அதிகரித்தல்

தவணை கொள்முதல் போன்ற கடன் கொள்முதல் முறைகள் அமல்படுத்தப்படுவதால் நுகர்ச்சிப் பொருட்கள் மற்றும் பணிகளுக்கான தேவை அதிகரித்து அதன் காரணமாக விலைவாசி அதிகமாகி பணவீக்கம் ஏற்படுகிறது.

v) மலிவு பணக் கொள்கை (Cheap Money Policy)

மைய வங்கியின் மலிவுப் பணக்கொள்கை பொருளாதாரத்தில் கடன் அளவை அதிகப்படுத்தும். இக்கடன் அதிகரிப்பு, பொருட்கள் மற்றும் பணிகளுக்கான தேவையை உயர்த்துவதால் ஏற்படும் விலைவாசி உயர்வு பணவீக்கத்தை ஏற்படுத்துகிறது.

vi) பற்றாக்குறை நிதியாக்கம்

தொடர்ந்து பொதுச் செலவுகள் கூடிவருவதால், அரசின் வரவு-செலவு திட்டத்தில் பற்றாக்குறைக்குறை ஏற்படுகிறது. இப்பற்றாக்குறையை ஈடு செய்ய கடன் வாங்குதல், புதிய காகிதப் பணம் அச்சடித்தல் என பற்றாக்குறை நிதியாக்க முறைகளில் அரசு ஈடுபடுகிறது. இதன் விளைவாக தொகு அளிப்பைவிட தொகு தேவையின் அளவு அதிகரித்து, விலைவாசி உயர்ந்து பணவீக்கம் ஏற்படுகிறது.

vii) கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள், நடவடிக்கைகள் மற்றும் கறுப்புப் பணம்

இலஞ்சம் மற்றும் வரிஏய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கறுப்புப் பணம் மற்றும் கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் உருவாகின்றன. மேற்கண்ட நடவடிக்கையில் ஈடுபடுவோர் பகட்டாக செலவு செய்வதால் தொகு தேவை அதிகரிக்கின்றது. அதே சமயம் கருப்புச் சந்தையும், பதுக்கலும் தொகு அளிப்பினை குறைக்கின்றது. இவைகளின் காரணமாக விலைவாசி உயர்ந்து பணவீக்கம் ஏற்படுகிறது.

viii) பொதுக்கடனை மீளச் செலுத்துதல்

உள்நாட்டில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பொதுக்கடனை அரசு திரும்பச் செலுத்தும்பொழுது மொத்த பண அளிப்பில் அதிகரிப்பு ஏற்படுகிறது. இது தொகு தேவையினை அதிகரித்து பணவீக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

ix) ஏற்றுமதி உயர்வு

ஏற்றுமதியை ஊக்கப்படுத்தும் பொழுது உள்நாட்டில் பொருள் அளிப்பு குறைந்து, விலைவாசி உயர்வு ஏற்படுகிறது. இதன் காரணமாக பணவீக்கம் ஏற்படுகிறது.



4. பணவீக்கத்தின் விளைவுகள்

பணவீக்கத்தின் விளைவுகள் இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது.

1) உற்பத்தியின் மீதான விளைவு. 

2) பகிர்வின் மீதான விளைவு.



1) உற்பத்தியின் மீதான விளைவுகள்

மிதமான பணவீக்கம் உற்பத்தியாளார்கள் மற்றும் வணிகர்களுக்கு ஒரு ஊக்கக் காரணியாக செயல்படும். மிதமான விலைவாசி உயர்வினால் ஏற்படும் இலாபத்தினால் தூண்டப்பட்டு உற்பத்தி மற்றும் வணிகத்தின் மீதான முதலீடுகள் அதிகரிக்கும். தொடர்ந்து வேலைவாய்ப்பும் வருமானமும் அதிகரிக்கும். ஆனால், மேற்சொன்ன கூற்றுகள் உற்பத்திக் காரணிகள் முழுவேலைவாய்ப்பை எய்தாத நிலையில் மட்டுமே சரியாக இருக்கும்.

i) அதேசமயம் உயர் பணவீக்கம் பணத்தின் மதிப்பினை குறைப்பதன் மூலம், மக்களின் சேமிப்பை குறைக்கும்.

ii) பணவீக்கத்தின் காரணமாக பணத்தின் மதிப்பு குறிப்பிடத் தகுந்த அளவு குறைவதால் நாட்டில் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கும் வெளிநாட்டு மூலதனங்கள் திரும்பிச் செல்லும்

iii) மேற்கண்ட நடடிக்கையின் காரணமாக மூலதன திரட்சி குறையும். இது புதிய முதலீட்டில் பின்னடைவை ஏற்படுத்தி நாட்டின் உற்பத்தியின் மீது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். தொழில் முனைவோர் மற்றும் வணிகர்களின் இடர் ஏற்றல் பணியினை ஊக்கமிழக்கச் செய்வதாக அமையும்.

iv) பதுக்கல்காரர்களும் நுகர்வோரும் பொருட்களை பதுக்கி வைக்க பணவீக்கம் காரணமாக அமைகிறது. இது தொடர்ந்து, உயர் பணவீக்கத்திற்கு வழிவகுக்கிறது.

v) பணவீக்கமானது பொருள் உற்பத்தியை அதிகரிப்பதைவிட, ஊக வாணிப செயல்பாடுகளை அதிகரிக்கின்றது. ஊக வாணிபம் என்பது இலாப நோக்கில் பங்குகள் அல்லது பொருட்கள் விலை குறையும் என காத்திருந்து, அது குறையும்பொழுது வாங்கி விலை அதிகரிக்கும்பொழுது விற்பனை செய்வது ஆகும். இதனால் நிகர உற்பத்தியோ, நிகர வேலைவாய்ப்போ அதிகரிப்பதில்லை.



2) பகிர்வின் மீதான விளைவுகள்

தேசிய வருவாய் பகிர்வில் உள்ள பல்வேறு தரப்பினரையும் பணவீக்கம் பல்வேறு வகையில் பாதிக்கின்றது. அவைகள் கீழே தரப்பட்டுள்ளன.

i. கடன் பெற்றோர் கடன் வழங்கியோர்

பணவீக்க காலத்தில் கடன் பெற்றோர் ஆதாயமும், கடன் வழங்கியோர் இழப்பையும் சந்திக்கின்றனர். எவ்வாறெனில், கடன் வாங்கியபொழுது பணமதிப்பு உயர்வாகவும், பணவீக்க காலத்தில் திருப்பிச் செலுத்தும் பொழுது பணமதிப்பு குறைவாக இருப்பதனால் கடன் வாங்கியோர் ஆதாயம் பெறுகிறார். இதே காரணத்தால் கடன் வழங்கியோர் கூடுதலான பண மதிப்பு இருக்கும்பொழுது கடன் வழங்கி, பணவீக்க காலத்தில் குறைந்த பண மதிப்பில் பணத்தை மீளப் பெறும்பொழுது இழப்பு ஏற்படுகிறது.

ii) நிலையான வருவாய் பிரிவினர்

நிலையான வருவாயை உடைய பிரிவினர் பணவீக்கத்தினால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் ஏனெனில், விலைவாசி உயர்வினால் ஏற்படும் வாழ்க்கைச் செலவு உயர்வுடன், நிலையான வருவாய் பொருந்திச் செல்வதில்லை . (உ.ம்) ஒரே மாதிரியான மாதச் சம்பளம் அல்லது கூலி பெறுவோர், ஓய்வூதியம் பெறுவோர், வட்டி பெறுவோர், வாடகை பெறுவோர் ஆகியோர் மிகவும் பாதிக்கப்படுவார்.

iii) தொழில் முனைவோர்கள்

உற்பத்தியாளர், வணிகர் என்று தொழில் முனைவோர் போன்று எவ்வகையானவராக இருந்தாலும், அவர்களுக்கு பணவீக்கம் ஒரு வரமாகும். ஏனெனில், பணவீக்கம் அவர்களுக்கு ஒரு ஊக்க சக்தியாக விளங்குகிறது. கிடங்கில் இருக்கும் பொருள் இருப்புக்களின் விலையேற்றத்தால் அவர்களுக்கு எதிர்பாரா ஆதாயம் (Windfall gian) கிடைக்கும். 

iv) முதலீட்டாளர்கள்

கடன் பத்திரங்களில் முதலீடு செய்தோருக்கு நிலையான வட்டியை பெறுவதால் அவர்கள் பணவீக்க காலத்தில் இழப்பினை சந்திப்பார்கள். மாறாக, பங்கு முதலீட்டாளர்கள் நல்ல இலாப ஈவு மற்றும் பங்கு மதிப்பேற்றம் போன்ற ஆதாயங்களை பெறுவார்கள்.



5. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

கீன்ஸ் மற்றும் மில்டன் ப்ரீட்மேன் பணவீக்கத்தினை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கருத்துக்களின் அடிப்படையில் மூன்றாக பிரிக்கலாம் என்கின்றனர். அவைகள்

1) பணவியல் முறைகள்; 

2) நிதியியல் முறைகள்; (J.M. கீன்ஸ்); மற்றும் 

3) இதர முறைகள்

1. பணவியல் முறைகள்

பணவியல் முறைகள் நாட்டின் மைய வங்கியினால் அமல்படுத்தப்படும் முறையாகும். அவைகள் :

i) வங்கி விகிதத்தை உயர்த்துதல்,

ii) வெளிச்சந்தையில் அரசு பத்திரங்களை விற்றல்,

ii) ரொக்க இருப்பு விகிதத்தை உயர்த்துதல் மற்றும் சட்டபூர்வ நீர்மை விகிதத்தை உயர்த்துதல், 

iv) நுகர்வோர் கடனை கட்டுப்படுத்துதல்,

v) கடன் விளிம்பு நிலையினை உயர்த்துதல்,

vi) மீள் வாங்கல் விகிதம் (Repo Rate) மற்றும் திருப்ப மீள் வாங்கல் விகிதம் (Reverse Repo Rate) ஆகியவற்றினை உயர்த்துதல் ஆகும்.

2. நிதியியல் நடவடிக்கைகள்

பணவீக்க சூழ்நிலையை கட்டுப்படுத்துவதில் நிதிக் கொள்கையும் அதன் கருவிகளும் முக்கிய பங்கு வகிப்பது உணரப்பட்டுள்ளது. பணவீக்கத்திற்கு எதிரான நிதியியல் நடவடிக்கைகளாவன அரசு செலவினங்களை குறைப்பது, பொதுமக்களிடமிருந்து கடன்களை பெறுவது மற்றும் வரிவிதிப்புகளை விரிவாக்குவது.

3. இதர நடவடிக்கைகள்

இதர நடவடிக்கைகள் குறுகியகால நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன.

i) குறுகியகால நடவடிவக்கைகள்

குறுகியகால நடவடிக்கையாக பொதுவிநியோக முறையின்கீழ் நியாயவிலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பங்கீடு செய்து வழங்குதல் ஆகும். இந்தியாவில் எப்பொழுதெல்லாம் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் பொருட்களை இறக்குமதி செய்து விலையேற்றம் ஏற்படா வண்ணம் தடுக்கப்படுகிறது.

ii) நீண்டகால நடடிவக்கைகள்

நீண்டகால நடவடிக்கையாக பொருளாதார வளா;ச்சியை துரிதப்படுத்துவது, குறிப்பாக பொதுவிலைமட்டத்துடனும் வாழ்க்கைச் செலவுடனும் நேரடி தொடர்பைக் கொண்டிருக்கும் கூலிப் பொருட்களின் உற்பத்தியின் வளர்ச்சியை துரிதப்படுத்துவது ஆகும். நீண்டகால பொருளாதார வளர்ச்சியை அடையும் நோக்கினில் சேமிப்பு  முதலீடுகளை மேம்படுத்தும் விதமாக நடப்பிலுள்ள சில நுகர்ச்சிகளை கட்டுப்படுத்துதலும் உள்ளடங்கும்.


Tags : Monetary Economics பணவியல் பொருளியல்.
12th Economics : Chapter 5 : Monetary Economics : Inflation: Meaning, Definitions, Types, Causes, Effects, Control Monetary Economics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 5 : பணவியல் பொருளியல் : பணவீக்கம்: பொருள், இலக்கணம், வகைகள், காரணங்கள், விளைவுகள், கட்டுப்பாடு - பணவியல் பொருளியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 5 : பணவியல் பொருளியல்